Thursday, January 31, 2013

விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

விஸ்வரூபம் படம் தொடர்பாக ஊடகங்களில் நிலவிவரும் பல்வேறு கருத்துக்களுக்கு விடையளிக்குமாறு இருந்தது முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆங்கிலத்தில் அமைந்த அந்த உரையின் தமிழாக்கம் பின்வருகின்றது. 

"விஸ்வரூபம் படத்தை கண்ட முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பான மனுவை தலைமை செயலரிடம் கொடுத்தார்கள். கூட்டமைப்பு சார்பாகவும், கூட்டமைப்பில் இல்லாத சில அமைப்புகள் சார்பாகவும், படம் வெளிவந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உளவுத்துறையின் அறிக்கையும் இதையே பிரதிபலித்தது. இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியது என் கடமையாகின்றது. 

படம் வெளிவர வேண்டும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று வாதாடப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையை அறிந்துக்கொண்டால் இதுப்போன்ற கருத்துக்களுக்கு இடம் இருக்காது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகவிருந்தது. தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கை (காலியிடங்களை தவிர்த்து) 91,807 ஆகும். இதில் பல்வேறு பணிகளுக்கும் போக மீதமுள்ள போலீசாரின் எண்ணிக்கை 9,226 மட்டுமே. மூன்று ஷிப்ட்களில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு 56,440 போலீசார் தேவைப்படுவர். இது சாத்தியப்படாத சூழ்நிலையாகும். 

அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்தின் கடமை என்பது, மாநிலத்தில் அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு தடுப்பது அல்ல. சூழ்நிலைகளின் தன்மைகளை புரிந்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். 

தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. தமிழ்நாடு சினிமா சட்டம் 1955-ல், 7-ஆம் பிரிவில் இதற்கான அனுமதி உண்டு. டேம் 999 படம் இந்த சட்டபிரிவை பயன்படுத்தியே தடை செய்யப்பட்டது. விஸ்வரூபம் விவகாரத்தில் இந்த பிரிவை கூட தமிழக அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். பிரச்சனையின் வீரியத்தை குறைக்க, சற்றே ஆறப்போட 144 தடையுத்தரவு மட்டுமே கொண்டுவரப்பட்டது.        

கமல் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட ஆதாயம் இருப்பதாக பல்வேறு ஊடகங்களும் கருத்து தெரிவித்திருக்கின்றன. அதில் அவர்கள் குறிப்பிடுவது, ஜெயா டிவியில் விஸ்வரூபம் திரைப்படத்தை குறைந்த விலைக்கு கேட்டதாகவும், கமல் கொடுக்க மறுத்ததால் தமிழக அரசு இப்படியாக செயல்படுவதாகவும் விமர்சிக்கப்படுகின்றது. ஜெயா டிவி அதிமுகவை ஆதரிக்கின்றது. இதை தவிர்த்து எனக்கோ, என் கட்சிக்கோ ஜெயா தொலைக்காட்சியுடன் தொடர்பில்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தொடர்பாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், இன்னொரு விமர்சனத்தையும் கூறுகின்றார்கள். வெள்ளை வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வர வேண்டும் என்று கமல் கூறியதற்காக நான் இப்படி செயல்படுகின்றேன் என்கின்றார்கள். தன்னுடைய அரசியல் ரீதியான கருத்தை கூற கமலுக்கு உரிமை உண்டு. இதில் எனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? முப்பது வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். கமல் கூறியதால் மட்டும் ஒருவர் பிரதமராக வந்துவிட முடியாது என்பதை நான் அறியமாட்டேனா? அப்படி தனி மனித விரோதம் தான் காரணம் என்றால் கருணாநிதியின் குடும்பத்தினர் எடுக்கும் படங்களுக்கு நான் பல தடங்கல்களை கொடுத்திருக்க வேண்டுமே? அவர்களுடைய படங்கள் வெளியாகிக்கொண்டு தானே இருக்கின்றன? 

1980-களில், கமலை பற்றி எம்.ஜி.ஆரிடம் கடிதம் வழியாக நான் புகார் செய்ததாக கருணாநிதி அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். 1980-களில் நாம் அதிமுக-வின் எம்.பியாவும், கொள்கைப்பரப்பு செயலாளராகவும் இருந்தேன். தினமும் எம்.ஜி.ஆரை சந்திப்பேன். தினமும் சந்திக்கும் போது கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? 

தன்னுடைய சொத்துக்களை விற்று படம் எடுத்ததாக கமல் கூறுகின்றார். அவர் அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கின்றார். விவரம் அறியாதவரல்ல அவர். இப்படியான ரிஸ்க்கை எடுப்பதால் வரக்கூடிய பிரச்சனைகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். இதற்கு இந்த அரசாங்கம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. 

நடந்துள்ள பிரச்சனைகளுக்கு கமலே பொறுப்பு. படம் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்பே, படத்தை தங்களுக்கு திரையிட்டுகாட்ட வேண்டும் என்று கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்த போது, அரசின் உதவியுடன் கமலின் இல்லத்தில் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதே படம் திரையிடப்பட்டிருந்தால் இந்த பிரச்சனை முன்னமே முடிந்திருக்கும். ஆனால் கமலோ, படத்தின் தேதி தள்ளிபோவதாக கூறி கூட்டமைப்பினர் படம் பார்ப்பதை தள்ளிவைத்து விட்டார். படம் வெளியாகும் நேரம் இந்த படத்தை கூட்டமைப்பினர் பார்த்ததால் பிரச்சனை வெகுவாக வளர்ந்து விட்டது. 

படம் வெளியான பின்பும் கூட அரசை அணுகி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு கமல் சம்மத்தித்து இருந்தால் இந்த விவகாரம் விரைவாக முடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கமலோ, படத்தில் மாற்றங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்திற்கு சென்றதால் விவகாரம் உச்சத்திற்கு சென்றுவிட்டது. 

இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒவ்வொரு அமைப்பிலும் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தில் மட்டுமே 7.5 லட்சம் உறுப்பினர்கள் உண்டு. இப்படியான சமுதாய குரலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 

தமிழக அரசு மட்டுமே தடை செய்தது போல விமர்சனங்கள் வருவது தவறு. சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமீரகம், கத்தார் போன்ற நாடுகளிலும், கர்நாடகம் புதுச்சேரி ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது கவனிக்கப்பட வேண்டியது. அங்கெல்லாம் என்னுடைய அரசா நடக்கின்றது?

சில இஸ்லாமிய அமைப்புகள் நேற்று கமலை சந்தித்ததாகவும், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன. இஸ்லாமிய தலைவர்களும், கமலும் கலந்து பேசி சமரசத்திற்கு முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும். இஸ்லாமிய தலைவர்களின் ஒப்புதலுக்கு பிறகு படம் வெளியாகும்."

இவ்வாறு முதல்வரின் பேட்டி அமைந்திருந்தது. 

இது தொடர்பாக இயக்குனர் அமீர் சமரச முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகின்றது. இன்று மாலை இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் அமீர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று செய்திகள் வருகின்றன. 

சிறு கூட்டம் என்றும், கலாச்சார தீவிரவாதிகள் என்றும் கூறிய கமல் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது மகிழ்ச்சி. தன்னுடைய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முகப்பக்கத்தில் கருத்துகளை காண முடிந்தது. அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இதுப்போன்ற படங்களை எடுத்து எதிர்காலத்தில் எங்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என்பதை மட்டும் அவரும் அவர் சார்ந்த திரைப்பட துறையினரும் உணர்ந்தால் போதும். 

இந்த விஸ்வரூப விவகாரம் எந்த முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றதோ அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பிரச்சனைகள் அடிப்படையிலாவது அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற என்னுடைய/பலருடைய நீண்ட நாளைய விருப்பம் இன்று நிறைவேறி உள்ளதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன். பிஜே அவர்கள் இஸ்லாமிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கு கட்டுபடுவோம் என்று அறிவித்தது மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்ற நம்பிக்கை மற்றும் ஒற்றுமை எதிர்காலத்தில் நிலைத்திருக்க இறைவனிடம் அதிகம் அதிகம் பிரார்த்திக்கின்றேன். 

விஸ்வரூபம் இந்த பார்வையை ஏற்படுத்தியது தான் அது செய்த பெரிய சாதனை.

எல்லாம் வல்ல இறைவன் கமல் போன்றவர்களுக்கு முஸ்லிம்களின் உள்ளத்தை புரிந்துக்கொள்ளும் தன்மையை கொடுக்கட்டும். இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.


குறிப்பு: 
வார்த்தைக்கு வார்த்தையான மொழிப்பெயர்ப்பு அல்ல. தவறான வார்த்தை பயன்பாடுகள் மற்றும் விடுபட்டவைகள் குறித்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் திருத்திக்கொள்கின்றேன்..

Reference:
1. Sun News coverage taken from youtube. link 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


Thursday, January 10, 2013

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். 

ஒவ்வொரு முயற்சிக்கும் விதை எங்கிருந்தாவது தூவப்பட வேண்டும். எங்களுக்கான விதை என்றால் அது உம்மத் குழுமம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, இணையத்தில் நிலவும் தவறான இஸ்லாமிய புரிதல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. அப்படியான தருணத்தில் சில பதிவர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழுமம். 

இஸ்லாம் என்னும் அற்புத வழிமுறை இருந்ததால் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதில் சிரமம் இருக்கவில்லை. சில பதிவர்களுடன் துவங்கிய இந்த முயற்சி இன்று பல பதிவர்களுடன் ஆரோக்கியமான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நபிமொழி தொகுப்பான சஹிஹ் முஸ்லிமை மின்னூல் வடிவில் கொண்டுவந்தததில் தொடங்கி ஒரு கட்டுக்கோப்பான பதிவர் வட்டத்தை எட்டியது வரை இந்த குழுமம் நடத்திக்காட்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் பல. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. 

அப்படியான முயற்சிகளில் ஒன்றை தான் நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றீர்கள்.  முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று. இன்று அது சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம். இம்மாதிரியான எதிர்கால முயற்சிகளுக்கு நிச்சயம் இந்நூல் முன்னோடியாக இருக்கும் என்று கூறிக்கொள்ளும் இத்தருணத்தில் சிலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியத்தில் சகோதரர்கள் சிராஜ், நிஜாம் மற்றும் சகோதரி ஆமினா முஹம்மத் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. அடுத்ததாக, உம்மத் குழும சகோதர சகோதரிகள். இவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த பணியை முன்னெடுத்து சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. கட்டுரைகளை தொகுக்க குழு அமைத்ததில் தொடங்கி, நேர்த்தியான திட்டமிடல் வரை இவர்களின் உழைப்பு அலாதியானது. இவர்கள் அனைவரின் கல்வி ஞானத்தையும் இறைவன் அதிகரித்து தருவானாக என்று பிரார்த்தித்தவனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.       

ஒரு தரமான படைப்பாக இந்நூல் உங்கள் உள்ளத்தினை ஆக்கிரமிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.   சகோதரத்துவத்துடன், 
ஆஷிக் அஹமத் அ, 
உம்மத் பதிவர் குழுமம்.

----------------

இன்னும் சில தினங்களில் (இன்ஷா அல்லாஹ்) வெளிவர இருக்கும் முஸ்லிம் பதிவர்களின் நூலுக்காக எழுதப்பட்ட இந்த முன்னுரையே உங்களுக்கு பல தகவல்களை தந்திருக்கும். 


பதிவுலகம் என்பது சவால்கள் நிறைந்த பகுதி. இங்கு நிலைப்பதற்கும் சரி, சிறப்பாக செயல்படுபதற்கும் சரி கடுமையான பொறுமையும், சிறப்பான செயல்பாடுகளும் அவசியம். அதிலும் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை களையவதென்பதே நோக்கம் என்றால் அதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அந்த வகையில் இன்றைய முஸ்லிம் பதிவர்களின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தியையே தருகின்றன. 

இஸ்லாம் குறித்த பல தவறான புரிதல்கள் இன்று ஆக்கப்பூர்வமாக எதிர்க்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு, தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்து, முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று வலுப்பெற்று வருகின்றது. இதுவொரு மிக ஆரோக்கியமான முன்னேற்றம். 

ஆனால் இது போதுமா என்றால், இல்லை. ஆம், தமிழ் பேசும் ஒவ்வொரு வீட்டிற்கும் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு "எதிர்க்குரல்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். 

நூலில் இருந்து சில க்ளிப்ஸ் 

கடந்த சில மாதங்களாக, இந்த தளத்திற்கு, குர்ஆன் கேட்டு வரும் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளின் கோரிக்கைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்தகைய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த நூல் இருக்கும். 

இணையத்தில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்து பலருக்கும் சேர்க்க வேண்டும் என்ற எங்களின் தொலை நோக்கு பார்வை இன்று சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

எதிர்வரும் சென்னை புத்தக கண்காட்சியின் போது வெளிவரும் இந்த நூல் குறித்த மேலதிக தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் இடங்கள்:நூல் விற்பனையாளர்கள்:

சஜிதா புக் சென்டர்,
248, தம்பு செட்டி தெரு,
முதல் தளம்,
பாரிமுனை,
சென்னை- 600 001
044 - 25224821


Sajitha Book Centre,
248, Thambu Chetty Street,
Ist Floor,
Parrys,
Chennai 600 001.
044 - 25224821


தொடர்புக்கொள்ள:

ஆஷிக் அஹமத் : 90432 99006
சகோதரர் சிராஜ்: 99415 85566

இந்த தளம் மூலம் நேரடியாக நூலை பெறவிரும்புவோர், எத்தனை புத்தகம் தேவை, முகவரி உள்ளிட்ட தகவல்களை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கின்றேன். 

எங்கள் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள் இந்த பணிக்கும் உங்களின் மேலான ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள் - குர்ஆன் 05:02

இறைவன் என்றென்றும் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ