நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
நேற்று பிபிசி ரேடியோ தளத்தில் வெளியான டாகின்ஸ் கலந்துக்கொண்ட உரையாடல் படுசுவாரசியமாக இருந்தது.
கிருத்துவத்தை விமர்சிக்க போய் தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொண்டார் டாகின்ஸ். பரிணாமத்திற்கு எதிரான தளங்கள் தற்போது இந்த ரேடியோ உரையாடலை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன.
அந்த உரையாடலின் பின்னணி இதுதான்.
ரிச்சர்ட் டாகின்ஸ் நிறுவனத்திற்காக பிரிட்டனில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஆய்வின் முடிவின்படி, பிரிட்டனில் 54% மக்கள் கிருத்துவத்தை நம்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெயரளவிற்கு தான் கிருத்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்களே ஒழிய (உண்மையான) கிருத்துவர்கள் கிடையாதாம் (????).
டாகின்ஸ் ஒரு நாத்திகர் அல்லவா? அவர் நிறுவனத்திற்காக இப்படியான ஒரு ஆய்வு நடத்தப்படுகின்றது என்றால் நாம் படு கவனமாக தான் இதனை பார்க்கவேண்டும். காரணம், நிச்சயம் இதில் ஏதேனும் உள்அர்த்தம்/பாகுபாடு இருக்கலாம்.
அதெப்படி இவர்கள் (உண்மையான) கிருத்துவர்கள் இல்லை என்று கண்டுபிடித்தார்கள்?
எப்படி என்றால், இவர்கள் சர்ச்சுக்கு செல்வது கிடையாது, பைபிளை படிப்பது கிடையாது, ஏசுவை கடவுளின் மகன் என்று ஏற்பது கிடையாது. இவ்வளவு ஏன், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் பெயர் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆகையால் டாகின்ஸ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். கிருத்துவ நம்பிக்கையின் முக்கியமானவற்றை இவர்கள் பின்பற்றாததால்/தெரியாததால் இவர்கள் கிருத்துவர்கள் கிடையாது.
மொத்தத்தில், இவர்கள் தங்களை கிருத்துவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களே. பிரிட்டன் ஒரு கிருத்துவ தேசம் என்று கூறிக்கொண்டு தான் அங்கே நம்பிக்கை சார்ந்த பள்ளிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. இப்போது இப்படியான முடிவுகள் வந்திருப்பதால், பிரிட்டன் ஒரு கிருத்துவ நாடு என்ற நிலை பரிசீளிக்கப்பட வேண்டும். இது தான் டாகின்ஸ் சொல்ல வருவது.
நீங்கள் மேலே பார்த்தவற்றை தான் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார் டாகின்ஸ்.
தன் வாயால் கெடும் என்று எதையோ பார்த்து சொல்வார்களே, அது போல தான் அமைந்தது அடுத்தடுத்த நிகழ்வுகள்.
இந்த உரையாடலில் டாகின்ஸ்சுடன் சேர்ந்து கலந்துக்கொண்டார் Reverend ஜைல்ஸ் ப்ரேசர். கிருத்துவம் குறித்து பலருக்கு பலவிதமான பார்வை இருக்கின்றது என்றும், தங்களை கிருத்துவர்கள் என்று மக்கள் அடையாளப்படுத்திக்கொண்டனர் என்றால் அத்தோடு விட்டுவிடுவதே சரியானது என்றும் வாதிட்டார் அவர். அதனைத் தாண்டி, சில குழப்பம் ஏற்படுத்தும் முட்டாள்தனமான கேள்விகளை கேட்டு, அதனை கொண்டு ஒரு முடிவிற்கு வருவதெல்லாம் தேவையற்றது என்று கூறினார் அவர்.
உரையாடலின் நடுவே டாகின்ஸ்சை நோக்கி ஒரு பிடி போட்டார் பாருங்கள் ப்ரேசர்.
இதோ அந்த உரையாடல்,
"ரிச்சர்ட், (டார்வினின்) origin of species புத்தகத்தின் முழு பெயரை சொல்லுங்களேன். நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்"
"ஆம், என்னால் முடியும்.."
"சொல்லுங்க.."
"on the origin of species...அ.......on the origin species....அ........பிறகு ஒரு உப தலைப்பு வரும்...பாதுகாக்கப்பட்ட இனங்கள் குறித்து அது பேசும்...."
கடைசி வரை புத்தகத்தின் முழு பெயரை சொல்லவில்லை டாகின்ஸ். டார்வினின் புத்தகத்தின் முழு பெயர் "On the origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favored Races in the Struggle for Life"......
ஆஹா....டார்வினின் புத்தகத்தின் பெயர் டாகின்ஸ்சுக்கு தெரியவில்லை. ஆகையால் அவர் வாதப்படி அவர் பரிணாமத்தை (முழுமையாக) நம்பவில்லை. :) :)
இதனையே பிரதிபலித்தார் ப்ரேசர்..
"ரிச்சர்ட், டார்வினிசத்தின் பெரிய நம்பிக்கை நீங்கள். பரிணாமத்தை நம்பும் மக்களிடம் போய் டார்வினின் புத்தகத்தின் பெயர் கேட்டு, 2% மக்கள் மட்டுமே சரியான பதில் சொல்லிருப்பார்களேயானால், பரிணாமத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிடலாமா? இம்மாதிரியான கேள்விகள் நியாயமில்லாதவை...."
ஒருவர் சரிவர தன் நம்பிக்கையை பின்பற்றவில்லை என்பதற்காக அவரை நம்பிக்கையாளர் இல்லை என்று கூறிவிட முடியுமா - ப்ரேசேரின் இத்தகைய கேள்விகள் தெளிவாக இருந்தன.
டாகின்ஸ் சிக்கி திணறிய அந்த பகுதியை கீழே கேட்கலாம். முழுமையாக கேட்க விரும்புபவர்கள் பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பிபிசி லின்க்கை சுட்டுங்கள்.
அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்போம். பரிணாம நம்பிக்கையாளர்களிடம் போய்,
- டார்வினின் புத்தகத்தின் பெயர் என்ன?
- டார்வினின் புத்தகத்தை படித்திருக்கிண்றீர்களா?,
- அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன?
- பரிணாமம் என்றால் என்ன?
இப்படியாக கேள்வி கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்?? அதனை வைத்து இவர்கள் சும்மாச்சுக்கும் தான் பரிணாமத்தை நம்புகின்றார்கள் என்று கிருத்துவர்கள் சொன்னால் டாகின்ஸ் கூடாரம் ஏற்றுக்கொள்ளுமா?
என்னவோ போங்க...
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்..
References:
2. Richard Dawkins's English Inquisition - Evolution News. 14th Feb 2012. link
வஸ்ஸலாம்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ