Showing posts with label அமெரிக்காவில் முஸ்லிம்கள். Show all posts
Showing posts with label அமெரிக்காவில் முஸ்லிம்கள். Show all posts

Monday, August 2, 2010

முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 

இதற்கான பதில் - 
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   

காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....


1. இனப் பின்னணி: 

முஸ்லிம் அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..


2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், முஸ்லிம் அமெரிக்கர்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம் அமெரிக்கரில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்க இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.

80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக  கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.


3. பெண்கள் 

யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.

அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.


முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.


4. மற்றவைகள்: 

  • 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
  • அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.  
  • மது அருந்துவோரின் சதவிதம் மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.     
  • முஸ்லிம் அமெரிக்க பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
  • கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%)வெள்ளையர்களும் (72%) வருகின்றனர். 

காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB). 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


My Sincere Thanks to: 
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.

Reference: 
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.  

One can download the complete document from: 
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.







Tuesday, February 23, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...II


அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)...

அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு பிந்தைய முஸ்லிம்களின் வரலாற்றை சென்ற பதிவில் பார்த்தோம்..

இன்ஷா அல்லாஹ், கொலம்பஸ்சுக்கு முந்தைய வரலாற்றை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்...

கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர்.

வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களின்படி நமக்கு கிடைக்கக்கூடிய முதல் தகவல், 

1. க்ஹஷ்க்ஹஷ் இப்ன் சையித் இப்ன் அஸ்வாத் அல் குர்துபி (khash khash ibn said ibn aswad al-qurtuby) என்பவர் தன் ஆட்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் (Muslim Andalusia, இன்றைய ஸ்பெயின்) உள்ள பலோஸ் (Port Palos) துறைமுகத்தில் இருந்து மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டு, இன்றைக்கு கரீபிய தீவுகள் இருக்கக்கூடிய நிலப்பகுதியை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர் "தெரியாத நிலம்" (The Unknown Land). அதுமட்டுமல்லாமல், தான் சென்ற வழியை வைத்து ஒரு வரைப்படத்தையும் தயாரித்து கொண்டார். அங்கிருந்து வரும்போது ஸ்பெயினிற்கு பெரும் பொருள்களையும் கொண்டு வந்தார். இது அப்போதைய ஸ்பெயின் மக்கள் மிக நன்றாக அறிந்த செய்தி. 

ஆக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற தகவலின்படி அமெரிக்க பகுதிகளை முஸ்லிம்கள் முதன்முதலில் அடைந்தது 889 இல். 



2. அதன்பிறகு பிப்ரவரி 999 இல், முஸ்லிம் அண்டளுசியாவின் கிரனடா பகுதியை சேர்ந்த இப்ன் பாரூக் (ibn Farukh) என்பவர் தற்போதைய ஸ்பெயினில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து அட்லாண்டிக் கடலை கடந்து இரண்டு தீவுகளை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர்கள், காப்ரரியா (Capraria) மற்றும் ப்ளுஈடினா (Pluitina) என்பதாகும். அதே ஆண்டு மே மாதம் அவர் ஸ்பெயின் திரும்பினார்.

3. பனிரெண்டாம் நூற்றாண்டின்   முற்பகுதியில், வரலாற்றில் மிக பிரபலமான அல்-இத்ரீசி (Al-Idrisi) என்பவர், எட்டு நபர்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் இருந்து மேற்கில் பயணம் செய்து கரீபிய தீவுக்கூட்டங்களை அடைந்தார். அங்கு இந்தியன்ஸ்சிடம் (பூர்வீக குடிமக்கள்) மாட்டிக்கொண்டனர். 



இங்கு சிறிது நேரம் நிறுத்தி, அல்-இத்ரீசி என்பவர் யார் என்று பார்ப்பது மிக அவசியம். இவர் ஒரு மிகச்சிறந்த கடல்வழி ஆராச்சியாளர், பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டவர். சிசிலி (இந்த சிசிலி இத்தாலியில் உள்ளது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது, மத்திய தரைக்கடலில் மிகப்பெரிய தீவு இதுதான்) அரசருக்கு ஆலோசகராகவும் இருந்தவர். இவர் வரைந்த உலகவரைப்படத்தை தான் கொலம்பஸ் தன் பயணத்தில் பயன்படுத்தினார். 

பதிவிற்கு செல்வோம், மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் இந்தியன்ஸ்சிடம் இவரும் இவரது ஆட்களும் மாட்டிக்கொண்டனர். அப்போது இவர்களுக்கும் இந்தியன்ஸ்களுக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தது ஒரு இந்தியன்.

என்ன? ஒரு இந்தியன் இவ்விருவருக்கும் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தாரா?, அதாவது ஒரு இந்தியனுக்கு அரபி தெரிந்திருந்ததா? அரபி கற்றுக்கொள்ளும் அளவிற்கிற்கு அவருக்கு முஸ்லிம்களுடன் தொடர்பிருந்ததா?  ஆம் உண்மைதான். அவர்தான் அல்-இத்ரீசிகும் அவரது ஆட்களுக்கு விடுதலை வாங்கித்கொடுத்தார். இது மிக தெளிவாகவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. 

ஆக நாம் மேலே கண்ட மூன்று பயணங்களும் முஸ்லிம் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டவை.

இதன்பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய தகவல், 1291 இல் மொரோக்கோவில் இருந்து ஷேக் ஜைனடீன் அலி மேற்கில் அட்லாண்டிக் கடலை கடந்து "புது உலகை" அடைந்தார் என்பது. புது உலகா? இப்படிதான் வரலாறு அந்த நிலங்களை குறிப்பிடுகின்றது.  

இதெல்லாம் விட சுவாரசியமான தகவல், மாலி (Mali, a muslim country situated in north africa) நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பாகும். மாலியின் மேன்டிங்கோ (Mandingo) அரசின் மன்னரான அபு-புகாரி (Abu-Bhukari), 1310 இல் இரண்டு படைகளை சுமார் 2200 கப்பல்களுடன் மேற்குலகில் புதிய நிலங்களை கண்டுபிடிக்க அனுப்பினார். இவர்களும் தற்போதைய அமெரிக்க நிலத்திற்கு வந்து சேர்ந்தனர். 


இன்றளவும் தென் அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகள் (southern american Indian tribe) இந்த மேன்டிங்கோ வடிவங்களை (Mandingo idiograms) கொண்டு   எழுதுகின்றனர். அதுபோல வட அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகளும் மேன்டே மொழியின்  (மேடிங்கோக்களின் மொழி) வார்த்தைகளை பயன்படுத்துக்கின்றனர். ஆக மாலியில் இருந்து வந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்த மக்களுடன் தங்கிவிட்டனர். அந்த புது நிலங்களில தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர். 

ஆக கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வரைப்படத்தை (Map) 1513-இல் வரைந்தவர் துருக்கியின் பிரி முஹீத் டின் ரீஸ் (Piri Muhyid Din Re'is), துருக்கி கடற்படையின் தளபதியாக இருந்தவர். கடல் வழி ஆராச்சியாளரும் கூட.  அவர் வரைந்து துருக்கி சுல்தான் செலீமிடம் (Selim I)சமர்ப்பித்து விட்டார். கொலம்பஸ் அப்போது அமெரிக்காவிற்கு வந்து விட்ட போதும், அந்த வரைப்படத்தில் இருந்த அமெரிக்க பகுதிகள் கொலம்பஸ்சினால் கண்டுபிடிக்கப்படாதவை. மிக தெளிவாகவே அவை வரையப்பட்டிருந்தன. ஆக அந்த தளபதிக்கு அமெரிக்காவின் நிலப்பரப்பை பற்றிய தெளிவான பார்வை இருந்திருக்கிறது.          இது வியப்பான தகவல்... 

இன்னும் பல ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம், பதிவின் நீளம் கருதி அவை விடப்படுகின்றன.

ஆக கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்களுடனான அமெரிக்க தொடர்பு மறுக்கமுடியாதது. ஆனால் இந்த தகவல்களெல்லாம் சிறிது காலத்திற்கு முன் வரை வெளிவரவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக கூறப்படும் ஒரு காரணம், இந்த தகவல்கள் பெரும்பாலும் அரபி மொழியில் இருந்ததுதான் (மேடிங்கோவை தவிர்த்து).      

எவ்வளவு நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? கடந்த சிலபல வருடங்களாக இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. 

அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டுவந்துவிட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கர்கள். 

அதில் ஒருவர் அரேபிய குதிரைகளை பற்றி ஆராய அரபி கற்று, பின்னர் அந்த அரபி அறிவை வைத்து குரானை கற்க, வியந்து போய் முஸ்லிமாக மாறியவர். பின்னர் தன் அரபி அறிவை கொண்டு பழங்கால அரபி நூல்களை புரட்ட வியப்பின் மேல் வியப்பு. முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்துவிட்டார். Dr.ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald F.Dirks) தான் அவர். இவரைப்போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்த உண்மைகள் யாராலும் மறுக்கமுடியாதவை.    

ஆக அல்லாஹ் அமெரிக்கர்களை வைத்தே உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...

அமெரிக்காவின் வரலாற்று செய்திகளை மாற்றப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்ஷா அல்லாஹ்..மாற்றப்படும்...  

அதெல்லாம் சரி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக படித்திருக்கிறோமே?இதற்கு முன் பத்தியை மறுபடியும் படித்துக்கொள்ள வேண்டியதுதான்...   

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. More about Al-idrisi - clarklabsdotorg
5. Muslims discovered America long before Columbus - Mathaba news agency.

My Sincere thanks to:
1. Br.Eddie of thedeenshowdotcom



 உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

              
          






Monday, February 22, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்... I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது. 

மேற்கொண்டு பதிவிற்கு...

முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.

அதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.


இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.

ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம்  மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).

கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.

உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும்?, அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?

கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria)  தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்

1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.

இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño). கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில்  மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.

1492-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார்.


சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.

இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.

இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது, இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.

ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.

இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  


அதற்கு அடுத்த வருடம், 1493-இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.

இம்முறை அவர் இறங்கியது ப்யுர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன... காலனி ஆதிக்கந்தான்.  ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.

அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.    

ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.

இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,      
  • அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
  • பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
  • அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்  (1776-1789).
  • அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).  
  • அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).

இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.    

ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.

கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?

இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.

கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?

இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.
       
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டுங்கள்..


அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக...ஆமின்...

References:
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. History of United States - endotwikipediadotorg
5. Islamic Spain - British Broadcasting Service (BBC)
6. Isabella I of castile - endotwikipediadotorg.
7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg
8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotuk

My sincere thanks to
1. Br.Eddie of thedeenshowdotcom


உங்கள் சகோதரன்...
ஆஷிக் அஹ்மத் அ