Tuesday, April 27, 2010

ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத இரகசியங்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...  

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..  

ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத உண்மைகளை பார்ப்பதற்கு முன்னால், பரிணாம கோட்பாட்டை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? 
b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா? 

உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவரால் பிரபலமான கோட்பாடும் தான் பொறுப்பு. 

அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான். 

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார். 

ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர். 

ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கருத்துக்கள் இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. 

குரங்கினத்திற்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும், ஆஸ்திரேலிய பழங்குடியினரையும் வைத்த அவரது செயல்,
  • ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர், 
  • பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள், 
  • அதனால் அவர்களே மேம்பட்டவர்கள் 
என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம்.  

டார்வின் இன வெறியரா ?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.

உதாரணத்துக்கு, 1830-களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும்விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy-யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து அவர் எழுதும் போது:
"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! It makes one’s blood boil, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" --- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.
ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா? 

ஆம். உண்மைதான். 

நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).

முதலில் மற்ற இனத்தவரை டார்வின் எப்படி அணுகினார் என்று பார்ப்போம். 

தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.
"At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla" --- Charles Darwin in his book "The Descent of Man", p-201 

மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,
"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற  (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்" 
என்று கூறுகிறார். 

அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை.

அதே பத்தியின் கடைசியில் அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான்.

ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை.

அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கீழ்க்காணும் பத்தியில் கூறுகின்றார்.
"Their mental characteristics are likewise very distinct; chiefly as it would appear in their emotional, but partly in their intellectual faculties" --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343
இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே? 

டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...      
  
டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல்படுத்த நினைத்தாரோ ஹிட்லர்? 

எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.

ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.

"Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live" --- Adolf Hitler, at his third public speech after taking power.
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power  

இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார். 

உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:  
"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, to establish an evolutionary higher stage of being, may thus be rendered futile" ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.
இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.     
ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு  இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக்கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய உயர்ந்த (SUPERIOR) இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.  

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, " The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life"


பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது. 

ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.
The leader of Germany is an evolutionist not only in theory, but, as millions know to their cost, in the rigor of its practice. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front” --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. 
"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.    

பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர். இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.

இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமத்தை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,

  • ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா? 
  • ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?  

இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

அப்படியானால், இனிமேலும் தயவுக்கூர்ந்து "உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...

நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?

என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks To:
1. British Broadcasting Corporation (BBC)
2. New Scientist Website.

References:
1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life  --- Charles Darwin, 1859.
2. The Descent of Man --- Charles Darwin, 1971.
3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy ---  Charles Darwin, 1845.
4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.
5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.
6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler
7. Scientific Racism - Wikipedia.
8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ







Friday, April 23, 2010

Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அது பல கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. அது உண்மையா, பொய்யா என்கின்ற விவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன. 

அதெல்லாம் சரி, மக்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? எத்தனை பேர் இந்த கோட்பாட்டை ஏற்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்?. 

இது சார்பாக மக்களிடம் நடத்தப்பட்ட சில ஆய்வு (Survey) முடிவுளைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இன்ஷா அல்லாஹ்...


ஆய்வு 1:

சென்ற ஆண்டு, பத்து நாடுகளில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு குறித்து மக்களின் எண்ணங்களை திரட்டியது பிரிட்டிஷ் கவுன்சில் (British Council). அந்த நாடுகள் Argentina, China, Egypt, India, Mexico, Russia, South Africa, Spain, Great Britain and USA. 

பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில், சுமார் 54% மக்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடுக்கு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

அதிலும், இந்த பத்து நாடுகளில் நான்கில் (USA, South Africa, Russia and Egypt) இந்த கோட்பாட்டை பற்றி சந்தேகத்தில் இருப்பவர்களே மெஜாரிட்டி. உதாரணத்துக்கு சொல்லப்போனால், ரஷ்யாவில் மட்டும் சுமார் 48% பேர் இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ள தகுந்த ஒன்று இல்லை, ஆதாரங்களை பற்றிய சந்தேகம் (Skeptical) இருக்கிறது  என்று தெரிவித்துள்ளனர். 

ஆய்வு 2:

2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 34 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

Iceland, France, Denmark மற்றும் swedan நாடுகளைச் சேர்ந்த சுமார் 80% மக்கள், பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை ன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அதே சமயம், Poland, Croatia, Austria, Romania, Greece, Bulgaria, Lithuania மற்றும் Latvia நாடுகளைச் சேர்ந்த 45-55% மக்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

மிக ஆச்சர்யமாக, அமெரிக்காவில் 40% மக்கள் மட்டுமேந்த கோட்பாட்டை உண்மை என்று நம்புகின்றனர். 

ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளிலேயே மிக அதிக மக்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்கவில்லை என்றால் அது துருக்கி மக்கள்தான். சுமார் 75% பேர் இந்த கோட்பாடு உண்மையல்ல என்று நிராகரித்துள்ளனர். இது பரிணாம வளர்ச்சி கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. காரணம், மெத்த படித்த மக்கள் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளில் துருக்கியும் ஒன்று  என்பதுதான்.        


ஆய்வு 3: 

அமெரிக்கர்களிடம், 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 
  • சுமார் 44% மக்கள், கடவுள் மனிதனை இப்போதுள்ள நிலையிலேயே படைத்தார் என்றும்; 
  • சுமார் 36% மக்கள், உயிரினங்கள் மாறி மாறி மனிதன் வந்திருக்கலாம், ஆனால் அதற்கு பின்னால் கடவுள் இருக்கிறார் என்றும்; 
  • சுமார் 14% மக்கள் மட்டுமே, மனிதன் கடவுள் துணையில்லாமல் பரிணாம வளர்ச்சி அடைந்தான் 
என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆச்சர்யமாக, கடந்த 25 ஆண்டுகளாக இதே போன்று தான் அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


ஆய்வு 4: 

ஆய்வாளர்களுக்கு, இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தான் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. 

2008 ஆம் ஆண்டு, Egypt, Pakistan, Malaysia, Indonesia, Turkey மற்றும் Kazakhstan நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8% எகிப்தியர்கள், 11% மலேசியர்கள், 14% பாகிஸ்தானியர்கள், 16% இந்தோனேசியர்கள் மற்றும் 22% துருக்கியர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையாக இருக்கலாம் அல்லது நிச்சயமாக உண்மை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 



கஜகஸ்தான் நாட்டில் சுமார் 28% மக்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையல்ல என்று கூறியிருக்கின்றனர். அதேசமயம் அந்த கோட்பாடு உண்மை என்றும் பெரும்பாலானோர் கூறவில்லை. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை அல்லது தெரியாது என்ற பதிலே பெரும்பான்மை. 

ஆக, பரிணாம வளர்ச்சி கோட்பாடு மிகப்பெரிய அளவில் முஸ்லிம் நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 


மொத்தத்தில், மக்களிடையே உள்ள இந்த கருத்து வேற்றுமை, பரிணாமவியல் அறிவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சவுதி அரேபியா மற்றும் சூடான் நாடுகளின் பள்ளிக்கூடங்களில் பரிணாமவியல் பாடங்கள் கற்பிக்க மறுக்கப்படுவதும், மேலும் பல நாடுகளில் அதிகரித்து வரும் பரிணாமவியலுக்கு எதிரான கோஷங்களும் அவர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.             

இந்த மாற்றங்களுக்கு அவர்கள் கூறும் காரணம்,
  • பரிணாமவியல், பள்ளிகளில் சரியாக கற்பிக்கப்படுவதில்லை. 
  • அறிவியலை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதில்லை. 
  • அடிப்படைவாத மத நம்பிக்கைகள்.
  • மதம் சார்ந்த அரசியல்.


இதற்கு பரிணாமவியலை மறுப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்? 
  • பரிணாமவியல், Scientific Method டை பின்பற்றவில்லை. 
  • அதனை ஆதரிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. 
  • நிரூபிக்கப்படாத கோட்பாடு பள்ளிகளில் கற்பிக்கப்பட கூடாது. 
  • அப்படியே அது கற்பிக்கப்பட்டாலும், அதனுடன் கடவுள் உருவாக்கினார் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இரண்டையும் படித்து எது உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


எது எப்படியோ, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்களுக்கு, அவர்கள் முன்னே மாபெரும் சவால் இருக்கிறதென்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
These Results Should be troubling for Science Educators at all levels --- Miller Et Al, Public Acceptance of Evolution, 2006. p.766 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...       


My Sincere Thanks To:
1. Austrian Academy of Sciences. 

References: 
1. Public Acceptance of Evolution - Austrian Academy of Sciences, wwwdotoeaw.ac.at.
2.The British Council Survey - Submitted on 30th June, 2009 at World Council of Science  Journalists. wwwdotbritishcouncil.org.  
3. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily tracking, surveyed on May 8-11, 2008. wwwdotgallup.com    
4. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll Daily tracking, surveyed on Feb 6-7,2009.
5. Creation-Evolution Controversy - Wikipedia. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ           
  






Tuesday, April 20, 2010

புரியாதப் புதிர்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும், 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்


1.கடவுள் இல்லையென்பதற்கு ஆதாரமாக நாத்திகர்களில் கணிசமானவர்களால்  முன்வைக்கப்படும் ஆதாரங்களில் முக்கியமானது பரிணாம வளர்ச்சி கோட்பாடு (Evolution Theory). இது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் ஒன்று. ஏனென்றால், அந்த கோட்பாடு கடவுளை மறுக்கிறதாயென்றால், இல்லை என்று தெள்ளத்தெளிவாக சொல்லுகிறது Talk Origins தளம். நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த தளம் பரிமாண வளர்ச்சி கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் பிரபல தளங்களில் ஒன்று. 

நீங்கள் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால், அதை மறுப்பதற்கு நாத்திகர்கள் துணையாகக்கொள்ளும் தளங்களில் ஒன்று. பலரும் இந்த தளத்தின் சுட்டியை கொடுப்பதை பார்க்கலாம்.



சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் ஒரு கேள்வி, அது: 
பரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கிறதா? 
Does Evolution deny the existence of God? 

இதற்கு என்ன தெரியுமா விடையளிக்கிறது அந்த தளம்?
No. See question 1. There is no reason to believe that God was not a guiding force behind evolution. While it does contradict some specific interpretations of God, especially ones requiring a literal interpretation of Genesis 1, few people have this narrow of a view of God.
There are many people who believe in the existence of God and in evolution. Common descent then describes the process used by God. Until the discovery of a test to separate chance and God this interpretation is a valid one within evolution.  
அதாவது, இந்த தளத்தை பொறுத்தவரை, கடவுள் இல்லை என்றெல்லாம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டால் கூறமுடியாது அல்லது மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், கடவுள் இந்த பரிணாம வளர்ச்சியை பின்னாலிருந்து இயக்குகிறார் என்பதை மறுப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.

கடைசியாய் சொல்லி இருப்பதுதான் இன்னும் சூப்பர். அதாவது, கடவுளையும், எல்லாம் தானாக ஏற்ப்பட்டது (chance) என்பதையும் பிரிக்கும் ஒரு உக்தி கண்டிபிடிக்கப்படும்வரை, கடவுள் இல்லை என்று மறுக்க முடியாது. 

அட, நல்லாத்தான் இருக்கு. 

இதுமூலமாக நான் அந்த கணிசமான மக்களை கேட்க விரும்புவதெல்லாம், 
  • கடவுளை மறுக்காத ஒரு கோட்பாட்டை கொண்டு வந்து நீங்கள் எப்படி கடவுளை மறுக்கிறீர்கள்? 
  • நீங்கள் குரானையோ அல்லது பைபிளையோ கடவுளின் வார்த்தைகள் இல்லை என்று மறுக்கலாம், வாதிக்கலாம். ஆனால் கடவுளே இல்லை என்று எப்படி சொல்லுவீர்கள்?                      
இந்த தளம், பரிணாம வளர்ச்சியில் நன்கு புலமைப் பெற்றவர்களால் நடத்தப்படுவதாக தெரிகிறது. அவர்கள் சொல்லுகிறார்கள் இப்படி.

ஆக, 
  • கடவுள் இல்லையென்பதற்கு இந்த கோட்பாடை உதவிக்கு கொண்டுவருபவர்கள் இந்த கோட்பாட்டைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்களா? 
  • அவர்களுக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றிய தெளிவான புரிதல் இல்லையா? 

புரியாதப் புதிர்தான்...


2. அடுத்து, நான் ஏற்கனவே ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுடைய "The God Delusion" புத்தகத்தை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். மிக பரபரப்பாய் விற்பனையான புத்தகம் அது. அதில், தன் புத்தகத்தின் முக்கிய புள்ளிகள் என்று சிலவற்றை 157-158 பக்கங்களில் குறிப்பிடுகிறார் அவர். அதில் என்னை ஆச்சர்யமூட்டியது பின்வரும் தகவல். 
"We should not give up the hope of a better explanation arising in physics, something as powerful as Darwinism is for biology"

அதாவது, அவர் என்ன சொல்லவருகிறாரென்றால், உயிரினங்கள் பூமியில் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்குவதற்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு இருக்கிறது (???), அதுபோல இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியான விளக்கத்தை கண்டுபிடிப்பதில் நாம் சோர்ந்துவிடக்கூடாது என்பது. 



சுருக்கமாக சொல்லப்போனால், இந்த பூமி எப்படி இவ்வளவு perfect ஆக வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியாக தெளிவான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படி அது கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகமாக கடவுளை மறுக்கலாம் என்பது.             
             
இதை படித்தவுடன் மிகுந்த ஆச்சர்யம். நான் அவரிடம் (அதுமூலமாக நாத்திகர்களிடமும்) கேட்க விரும்புவது: 

"மிஸ்டர் டாகின்ஸ், 
  • இது உங்களுக்கு குருட்டு நம்பிக்கையாக (Blind Faith) தெரியவில்லை?
  • சரியான காரணங்கள் இல்லாமலேயே நீங்கள் கடவுளை மறுக்கிறீர்களா? 
  • உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவில்லாத போது அதை எப்படி நீங்கள் சரி என்று சொல்ல முடியும்? "       

புரியாதப் புதிர்தான்... 

அதனால் தான் "டாகின்சுடைய இந்த புத்தகத்தால் ஒரு நாத்திகன் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்" என்று மைக்கல் ரூஸ் (Michael Ruse) கூறினார் போலும்...

"...unlike the new atheists, I take scholarship seriously. I have written that The God Delusion made me ashamed to be an atheist and I meant it. Trying to understand how God could need no cause, Christians claim that God exists necessarily. I have taken the effort to try to understand what that means. Dawkins and company are ignorant of such claims and positively contemptuous of those who even try to understand them, let alone believe them. Thus, like a first-year undergraduate, he can happily go around asking loudly, "What caused God?" as though he had made some momentous philosophical discovery.” --- Michael Ruse, Atheist Philosopher of Science. 

சும்மா சொல்லக்கூடாது, டாகின்சை நல்லா தான் கேட்டிருக்கிறார் ரூஸ்...



டாகின்ஸ் அவர்கள், நமக்கு பதில் சொல்லுவது இருக்கட்டும், ரூஸ் போன்ற அவரது சக தோழர்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்...       

இதையெல்லாம் விட, டாகின்ஸ், முடிவாக ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார் பாருங்கள்....

God Almost Certainly Does not Exist. 
கடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை

அடடா, கடவுள் இல்லை என்று உறுதியாக சொல்லாமல் ஏன் இப்படி மழுப்பலாக சொல்லியிருப்பார்?, ஒரு வேலை கடவுள் இருந்திட்டா என்ன பண்றது என்ற ஒரு safetyக்காக இருக்குமோ?.

என்னவென்று சொல்வது, இதைத் தான் தெளிவாக குழப்புவது என்று சொல்லுவார்களோ?  

புரியாதப் புதிர்தான்.   


இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் மேலும் பல புரியாதப் புதிர்களை எதிர்காலத்தில் எடுத்து வைக்க முயல்வோம். 

ஆக இந்த பதிவின் மூலம், நான் என் நாத்திக சகோதரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்:

  • உங்களால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் (அது உண்மையாக இருந்தாலும் கூட) மூலம் கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாது. அல்லது டாகின்ஸ் சொன்னது போன்று இயற்பியல் ரீதியாகவும் கடவுளை மறுப்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது.
  • "கடவுள் இருந்தால் உலகில் அநியாயம் நடக்குமா?" என்பது போன்ற கேள்விகள் உளவியல்  (Psychological Question) ரீதியான கேள்விகள் தானே தவிர, அறிவியல் ரீதியாக இந்த கேள்விகள் ஒத்து வராது. இது போன்ற கேள்விகள் "கெட்ட கடவுள்" என்று சொல்லத்தான் வழி வகுக்குமே தவிர, கடவுள் இல்லை என்று மறுப்பதற்கு எந்த விதத்திலும் பயன்படாது.            

ஆக, கடவுளை மறுப்பதற்கு உங்களிடம் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடையாது. அதே சமயம், ஒரு வேலை கடவுள் இருக்கலாமோ என்று ஒரு சதவிதம் சந்தேகம் வந்தாலும் அதைப் பற்றி ஆராய்வது தான் சிந்திப்பவர்களின் செயல். சொல்லவேண்டியது எங்கள் கடமை. மேற்கொண்டு ஆராய்வது உங்கள் கடமை/இஷ்டம். 

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளை பரவ விட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன" --- குர்ஆன் 2:164.                       
   
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


First Picture Taken from:
1. Atlas of Creation, First Volume - Page No.20.

My Sincere Thanks To:
1. Br.Hamza Andreas Tzortzis.
2. Br.Michael Ruse. 

References:
1. Talk Origins Website - talkoriginsdotorg. 
2. "The God Delusion" - Richard Dawkins, page number 157-158.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 







Thursday, April 15, 2010

இவரெல்லாம் சிலருக்கு தெரிய மாட்டார்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்   

"ஒரு உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" 
 "As a devout Muslim I could not accept it"

இது, நியூயார்க்கைச் சேர்ந்த டாக்சி ஓட்டுனரான சகோதரர் முஹம்மது முகுல் அவர்கள், தன் டாக்சியில் ஒருவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய தொகையை திருப்பி கொடுத்தபோது, அதனைப் பாராட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்த பணத்தை தொலைத்தவர், பரிசாக கொடுக்க முன்வந்த போது சொன்ன வார்த்தைகள்.     

சுமார் நான்கு மாதங்கள் காலம் கடந்த செய்தி என்றாலும் இவருடைய செயல் நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது. 

அது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம். சகோதரர் முஹம்மது முகுல் அசாதுஉஸ்மான் (Muhammed Mukul Azaduzzaman) அவர்கள் நியூயார்கில் மருத்துவம் பயின்று வருகிறார். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இவர் பகுதி நேர வேலையாக டாக்சி ஒட்டி வந்தார். 


கிறிஸ்துமசுக்கு முதல் நாள் அவருடைய காரில் பயணம் செய்த இத்தாலியைச் சேர்ந்த பிளிசியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 21,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை விட்டுச் சென்று விட்டனர். 

தாம் பணத்தை தொலைத்து விட்டதை உணர்ந்த பிளிசியா, காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது குடும்பத்தினரோ "இது நியூயார்க், இங்கு நிச்சயமாக தொலைத்த பணம் கிடைக்காது" என்று கூறினார்கள். 

இங்கே தன் காரில் ஒரு பையைக் கண்ட முஹம்மதுக்கு அதிர்ச்சி. பையைத் திறந்தார். அதில் இரண்டு கட்டு யூரோக்கள். ஆனால் அவர் தேடியதோ தொலைத்தவருடைய விலாசம், மொபைல் நம்பர் என்று ஏதாவது ஒன்றை. ஒரு விலாசத்தைக் கண்டெடுத்தார். அந்த விலாசம் அவர் இருக்கும் இடத்திலிருந்து சுமார் அறுபது மைல்கள் தூரம். 

தன் நண்பருடன் அந்த இடத்திற்கு சென்ற அவர் கண்டது பூட்டிய வீட்டை. அந்த வீட்டின் வெளியே ஒரு காகிதத்தில் தன் மொபைல் நம்பரையும் மற்றும் ஒரு வாசகத்தையும் எழுதி வைத்தார். அது,
"வருத்தப்படாதீர்கள், உங்கள் பணம் பாதுகாப்பாய் இருக்கிறது"   

பின்னர் தன் வீட்டிற்கு திரும்பினார். அவரது கைப்பேசி ஒலித்தது. ஆம் அது பிளிசியா அவர்கள். மறுபடியும் நீண்ட தூரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்தார். அப்போது அந்த குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.    

அந்த மகிழ்ச்சியில் சகோதரர் முஹம்மதுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு பெரும் தொகையை அவர்கள் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்து சகோதரர் முஹம்மது சொன்ன வார்த்தைகள், 
"ஒரு உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" 

இந்த பணத்தை திருப்பி கொடுக்க மட்டும் சுமார் 240 மைல்கள் பயணம் செய்திருக்கிறார் அவர். 

நான் அந்த பணத்தை பார்த்தபோது, அதை, கஷ்டப்படும் எனக்கு இறைவன் கொடுத்ததாக நினைக்கவில்லை. ஆம், எனக்கு பணம் தேவைதான். ஆனால் நான் பேராசைக்காரன் அல்ல (Yes, I am needy but not greedy). என் தாய் சொல்லுவார், "நீ நேர்மையாய் இரு, கடினமாக உழை, நிச்சயம் முன்னேறுவாய்" என்று. அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. 

நிச்சயம் இவருடைய செயலில் மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினை இருக்கிறது. என் சகோதரன் என்ற பெருமையும் மிஞ்சுகிறது. 

ஆனால் இந்த செய்தி பெரும்பாலான அமெரிக்க மக்களுக்கு போய் சேரவில்லை. இதைச் சொன்ன சில ஊடகங்களில் பலவும் இவரது பெயரின் முதல் வார்த்தையை தவிர்த்தன, AP wire service ஊடகத்தை தவிர. என்ன காரணமோ இறைவனே அறிவான். ஆனால் உண்மையை மறைக்கவும் முடியாது, அது நீண்ட காலத்திற்கு மறைந்திருக்கவும் செய்யாது. 

பங்களாதேஷ்சை சேர்ந்த ஒருவர் இப்படி செய்வது இது முதல் தடவையல்ல. 2007 ஆம் ஆண்டு சகோதரர் உஸ்மான் அவர்கள் சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வைரங்களை தன் காரில் தொலைத்தவரிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்... 

சகோதரர் முஹம்மது போல, சகோதரர் உஸ்மான் போல எந்த ஒரு சூழ்நிலையிலும் இறை அச்சம் உள்ள நல்லோராக இறைவன் நம்மை வைத்திருப்பானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere Thanks to:
1. Br.Mahmoud El-Yousseph, Retired USAF veteran. 

References: 
1. The Muslim cabbie who saved christmas - Iviews, dated 20th January 2010.
2. Bangladeshi cabbie in Newyork returns cash left in Taxi - BBC, dated 13th January 2010.
3. NY cabbie drives 200 miles to return 13,000 euros left in taxi by tourist - The Telegraph, dated 12th January 2010. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 






Sunday, April 11, 2010

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.            


"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது. 

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,

"நீ பைபிளை படித்திருக்கிறாயா"

எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"

"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"  

நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"

அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.  

பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"

சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?

உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ.................
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா? 
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்? 
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்? 

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,

"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...

அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"         

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?


என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.


1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.    


கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.




சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.    

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.                                                  

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"

பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே?

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,

"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..

"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.

"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"    

"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"  

"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"

"ஆம், அதனால் என்ன?" 

"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"

"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா" 

"ஜும்மாஹ் என்றால்?"

"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)

"எங்கே இருக்கிறது மசூதி?"

அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.  

அவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.

என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா? இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.  

அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...

"அடக் கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.                                

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?  

குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

"தொழ போகிறோம்"

"யாரை"

"இறைவனை"

"எந்த இறைவன்?"

"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
      
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.

சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.    

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,

"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"

"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"

"அதை நான் படிக்கலாமா"

"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.

முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.

திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.

என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.

தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.              

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.   

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"


அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழே கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Brother Yusha Evans Official website:
1. http://yushaevansdotcom

This Article translated from:
1. Br.Yusha Evans speach "How the Bible Led Me to Islam" on 6th Feb,2009 at Masjid Omar Al Farouk, Islamic Institute of Orange county, Anaheim, California.

Video downloaded from:
1. youtubedotcom

My Sincere Thanks to:
1. IIOC Internet committee reproduction.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.