Showing posts with label ஏன் இஸ்லாம். Show all posts
Showing posts with label ஏன் இஸ்லாம். Show all posts

Thursday, September 9, 2010

"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்"



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

            சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 


ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ். 

இது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.... 
  

"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.   

அல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.

நான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன். 

என் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும்?, ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்?

என் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள். 

இப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?"  

சிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.  

இறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன். 

இஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம். 

தன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது. 

இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.     

சுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.    

குரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன். 
  
சந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது. 

இங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது. 

மத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். 

இருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.  

அதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.  

இஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம். 

நான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.   

இன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....

ஏஞ்சலா கொலின்ஸ்"     


சகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ். 


இஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        

இத்தளத்தில் உள்ள இஸ்லாத்தை தழுவியவர்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் காண <<இங்கே>> சுட்டவும்.   

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Original article published as: 
1. Why I decided to Submit - Angela Colins, dated 9th September 2006 on islamicity.com. 

Tamil translation of the meanings of the original article written by:
1. Aashiq Ahamed. A

My Sincere thanks to:
1. Youtube.

Reference:
1. Choosing Islam: My Life as a convert - Sandra Marquez, People Magazine dated 4th September 2006. 


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ 







Wednesday, June 9, 2010

ஏன் இஸ்லாம்? - III



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

     சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி கார்டியன் (The Guardian)", இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.


"கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள். 

இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு...  


"கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு. 

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள் "கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)" என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர்.

அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர். இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும்; ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.

நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம், தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீக ரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான். 

அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.



நான் நேர்க்காணல் செய்த பெண்களோ, இஸ்லாம், தங்களுக்கு மிகுந்த கண்ணியத்தை அளித்துள்ளதாகவும், பெண்களை அழகு பொருட்களாக காணும் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய தகவல், இவர்களில் பலர், இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு கிருத்துவத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். சர்ச்சுக்கு செல்பவர்களாகவோ அல்லது சர்ச்சுடன் தொடர்புடையவர்களை உறவினர்களாகவோ கொண்டவர்கள்.  இது இஸ்லாத்தை ஏற்கும் வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இஸ்லாத்தை தழுவும் பல வெள்ளையர்கள் அதற்கு முன் எந்த ஒரு மார்க்கத்தின் மீதும் பற்று இல்லாதவர்களாகத் தான் இருப்பர்.     

அதுபோல நான் அறிந்துக்கொண்ட ஒரு சுவாரசியமான விஷயம், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களை, குறிப்பாக ஆண்களை, பார்க்க வைத்ததில் மால்கம் எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றார். நான் பேசிய பலருடைய மனதிலும் மால்கம் எக்ஸ் என்ற அந்த சகோதரர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். (மால்கம் எக்ஸ் குறித்த கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)

அமெரிக்காவைப் போன்று பிரிட்டனிலும், கறுப்பின முஸ்லிம்கள், குற்றவாளிகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படி திருத்தப்பட்ட பலர், தங்களை நல்வழிப்படுத்திய கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதில் மும்முரமாக இருக்கின்றனர். இதில் அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.     

இறுதியாக நான் சொல்ல விரும்புவது, வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு கிருத்துவத்தில் பதிலில்லாத போது, அதனை முன்வைத்தவர்களுக்கு சரியான மாற்றாக இருப்பது இஸ்லாம்.

சிலர், தங்கள் ஹீரோக்ககளை பார்த்து இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தங்களை தேடி முடிவில் இஸ்லாத்தை வந்தடைகின்றனர்.

எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை"


சுபானல்லாஹ்....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

   
My Sincere Thanks To:
1. The Guardian Newspaper.

Original Article written by:
1. Br.Richard Reddie.

Extract of the article translated by:
1. Aashiq Ahamed A

Reference: 
1. Why are black people turning to Islam? - The Guardian, dated 5th October 2009.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Wednesday, May 5, 2010

உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.   

டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் "Masters in Divinity" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார். 


பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர். 

இவரைப்பற்றி நான் ஏற்கனவே "அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்" என்ற தலைப்பிலான பதிவில் குறிப்பிட்டுள்ளேன். 

இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை. 

அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்

சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். சுப்ஹானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.      

இந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்....                 


"நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன். இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன்.  ஆனால், ஏசு (அலை) அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை. ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.

என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991. அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது. அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.        

எங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார். அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து,

"நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா?" என்று கேட்டார்.

உளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

முஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம். ஜமால் அவ்வப்போது குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார். நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.

ஆனால் ஜமால் அவர்களின் தாவாஹ் மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை. அவருடைய தாவாஹ் என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர். வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.

காலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது. Wa'el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.   

இப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்,

"என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது?, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம்?, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது? "

நான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.   

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன். அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை. அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.    

குரானைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur'an).

அதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன். நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது. இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).

இந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன். குரான் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டங்கள் ஆரம்பித்தன.         

இது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.


அது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி,

"உங்கள் மதம் என்ன?"

"கிருத்துவன்" என்று பூர்த்தி செய்தேன்.

சிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,

"மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்?" 

இந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.

"என்ன கேள்வி இது?, நாமென்ன முஸ்லிமா?, நாம் கிருத்துவர்கள் தானே?" என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.                  

நான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார். இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.

  • அப்படி என்ன டென்ஷன் எனக்கு? 
  • அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன். 
  • இதையெல்லாம் விட, நான் ஏன் "நாமென்ன முஸ்லிமா?" என்று கேட்க வேண்டும். 

எது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.

பிறகு என் மனைவி சொன்னார், "இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்".           

பிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குரான் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன். இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன. இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.

அதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன். அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.

ஆக, குரானைப் படிக்கிறேன், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன், ஐவேலை தொழுகிறேன், ஆனால் முஸ்லிமில்லை. உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது. ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் இன்னும் கிருத்துவன் தான்.           
  
என்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை திறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான மஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார். 

சில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார். அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து, 

"நீங்கள் முஸ்லிமா?" என்று பணிவுடன் கேட்டார். 

ஆனால் நானோ மிகக் கடுமையாக,

"NOoooooooooooooooooooooooooo............."

என்று எரிச்சலுடன் கத்திவிட்டேன். இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர். 

ஆனால், என்ன ஆயிற்று எனக்கு?, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்?, அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர்?. இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று?         

இப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன். சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

"உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன். இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.

நீங்கள் என்னிடம், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்"

நான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.

என்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும். 

"ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்" என்று சொல்லி விடைபெற்றார் அவர். 

நிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே ஆங்கிலத்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன். ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை. இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

பிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம். அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன். 

இப்போது நான், 

  • ஈசா (அலை) அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை.  
  • இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன். 
  • முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன். 
  • ஐந்து வேலை தொழுகிறேன். 
  • நோன்பு நோற்கிறேன்...

இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.

என்னைப் பார்த்து "நீங்கள் முஸ்லிமா?" என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது. 

இப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.

ஒரு பாலஸ்தீன முதியவருடன், பாலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. 

எதிரே வந்த அந்த சகோதரர் சலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார். 

எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள.

ஆம். அதே கேள்விதான்.

"நீங்கள் முஸ்லிமா?" 

இப்போது என்ன சொல்வது?. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது. 

எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,

  • ஒன்று "நாம்" (N'am, அரபியில் "ஆம்" என்று அர்த்தம்), 
  • மற்றொன்று "லா" ( La, "இல்லை" என்று அர்த்தம்).  

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை. 

இப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,

"திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்" 
ஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?
   
அல்ஹம்துலில்லாஹ்...சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது....

"நாம்".......................

இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்..."


சுப்ஹானல்லாஹ். இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை. அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர். 

இன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர். 

முஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர், அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்). 


அந்த புத்தகம் மட்டுமல்லாமல் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் அவர்.

டர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, "Islam Our Choice: Portraits of Modern American Muslim Women" என்ற புத்தகத்தை எழுதியவர்.


அதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,
  • இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம், 
  • ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள், 
  • தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் 
என்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது. 


இறைவன் இந்த தம்பதியருக்கு, மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்

டெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம், "Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam".


இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது.  

இதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல. ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர். தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட  புத்தகம் தான் இது.

இதில்,
  • முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை, 
  • பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை, 
  • எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள் 
என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.      

CNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களில் பெண்களே அதிகம். இந்த எண்ணிக்கை எப்போதும் போல  அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ். பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.  

இறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக...ஆமின்
  
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere Thanks To,
1. Brother Eddie of thedeenshow.com.
2. The Islamic Bulletin, San Francisco, CA.

References:
1. Dr.Jerald Dirks' Interview with Br.Eddie for thedeendhow. 
2. A Christian Minister's Conversion to Islam - welcome-back.org


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
            






Tuesday, March 9, 2010

யூசுப் எஸ்டஸ்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...  

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.       

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.    

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது... 

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.    

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?


ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.                 

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன். 

  
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான். 

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம். 

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.   

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல். 

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்... 

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா? 

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்? 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா? 

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன். 

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.                

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 



பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார், 

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...   

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது. 

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன? 

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...                           

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்.. 

என் மனைவி என்னை நம்பவில்லை. 

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார். 

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன். 

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுப்ஹானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன். 

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான். 

dad,..... அப்போ நீங்கள்? 

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்? 

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம், 

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது? 

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்... 

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுப்ஹானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர். 

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.  
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Monday, March 1, 2010

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்   

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 
  
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப்  படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...

சிறையிலிருந்த போது... 

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?


இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..


என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?


இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"                

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே,  மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.

"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"



இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.   

"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். 

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்                           

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...

அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.

தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.

பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...

"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"

ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.
  • அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
  • ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"      

ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"  

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...

இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...

யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.  

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" 

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...

"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"    

அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்... 


References:
1. Sister Yvonne Ridley's Speech at Reverts Meeting, New Zealand, 2005
2. Sister Yvonne Ridley's Interview at "The Hour", Canadian Broadcasting Corporation TV   
3. Sister Yvonne Ridley's interview with BBC, dated 21st Spetember 2004.
4. Sister Yvonne Ridley's Interview with Rachel Cooke, The Guardian dated 6th July 2008.
5. How I come to love the Veil, interview with Sister Yvonne Ridley, The Washington Post dated Oct 22, 2006

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ     
        






Wednesday, February 17, 2010

ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி --- பகுதி 2


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


சென்ற பதிவின் தொடர்ச்சி....முதல் பகுதியை வாசிக்க <<இங்கே>> சுட்டவும்... 


இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே. ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம். 

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது. 

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாஹ்வை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்துக் கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்... 

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராயத் தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துக் கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
 "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36       
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்.    

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.  
    " நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"  
அதற்கு அவரது தாய் "அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா............. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுப்ஹானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.  

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21-ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. 
  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.  
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். 
இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.


                                        


சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். 

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். 

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.

"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு"  --- குரான் 11:11    
 " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9  


குறிப்பு:

ஆமினா அவர்களின் சொற்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யூடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.


References:
1. Interview with Rebecca Simmons of  The Knoxville News-Sentinel in Tennessee
2. islamreligiondotcom
3. youtubedotcom
4. famousmuslimsdotcom



உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ