Saturday, February 27, 2010

நாங்கள் முஸ்லிம்கள்....அவ்வளவுதான்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின் 

சமீபத்தில் வெளியான ப்யு ஆய்வறிக்கையில் (PEW REPORT) நான் கண்ட ஒரு சுவாரசியமான தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்து  கொள்ளவிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்....

முதலில் ப்யு ஆய்வறிக்கையைப்  பற்றி சில தகவல்கள்...

இந்த அறிக்கை அக்டோபர், 2009ல் வெளியானது. உலக முஸ்லிம்களின் மக்கட்தொகையைப்  பற்றியது. பெரும்பாலான ஊடகங்களால் நம்பத்தகுந்த அறிக்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கி இருப்பதாக அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.    

உலக முஸ்லிம்களின் மக்கட்தொகை 157 (1.57 பில்லியன்) கோடி என்றும், இது உலக மக்கட்தொகையில் 23% எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் நால்வரில் ஒருவர் முஸ்லிம்.

இதற்கு முன் நாம் அறிந்திருந்த தகவலின் படி, உலகில் 19% முஸ்லிம்கள். ஆக, ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருந்த நிலை போய் இப்போது நான்கில் ஒருவர் முஸ்லிம்.                


இந்த அறிக்கையின் சிறு பகுதியை பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. நீங்களும் படித்திருக்கலாம். 

முன்பு நான் குறிப்பிட்ட அந்த சுவாரசியமான தகவல் ஷியா-சன்னி முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது. 

ப்யு அறிக்கை, உலக முஸ்லிம்களின் தொகையை துல்லியமாக தந்துள்ளதாக சொன்ன போதிலும், இந்த ஷியா-சன்னி மக்கட்தொகையை பற்றிய அவர்களது கணிப்பு துல்லியமானது அல்ல. இதை அவர்களே அந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.      


அதாவது, அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற 157 கோடி என்ற முஸ்லிம்களின் மக்கட்தொகை சரியானது. ஆனால் அதில் 10-13% ஷியாக்கள் என்றும், 87-90% சன்னிகள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது சரியானது இல்லை. 

இதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் சுவாரசியமானது, அதாவது, அவர்களால் ஷியா-சன்னி மக்கட்தொகையை சரியாக சொல்லமுடியாததற்க்கு காரணம், கணக்கெடுப்பிற்காக  முஸ்லிம்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, பலரும் "நாங்கள் முஸ்லிம்கள், அவ்வளவுதான்" என்று கூறியதே.

அதாவது பலரும் தங்களை ஷியா என்றோ சன்னி என்றோ வகைப்படுத்த விரும்பவில்லை என்பதுதான்...அட...  

இதைப் பற்றி, ப்யு ஆய்வறிக்கை அதன் 38 வது பக்கத்தில் கூறுவதாவது, 
"முஸ்லிம்களில் பலர் தங்களை சன்னி என்றோ ஷியா என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.அதனால் நாங்கள் கொடுத்திருக்கும் ஷியா-சுன்னி தகவல் துல்லியமானது இல்லை, இதனை படிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" 
அப்புறம் எப்படி கணக்கெடுத்தார்கள்? வேறு சில முந்தைய தகவல்களை வைத்து தான். ஆனால் அந்த தகவல்களும் எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை என்றும் கூறிவிட்டார்கள். இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ப்யு அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.   

அவர்களின் அறிக்கைப்படி ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்வது ஈரான், ஈராக், பாகிஸ்தான் மற்றும் இந்தியா.         

என்ன இந்தியாவா? நான் ஆச்சரியப்பட்டேன். 

ஒருவேளை, நம்மூருக்கு வந்து, தர்காக்களுக்கு போகும் நம்மாட்களை பார்த்துவிட்டு அவர்களையும் ஷியா கணக்கில் சேர்த்து விட்டார்களோ என்னவோ... 

என் வலைப்பதிவை படிப்பவர்களில் ஷியாக்கள் யாராவது இருந்தால் நான் அவர்களை கேட்டுக்கொள்வது, நன்றாக ஆராய்ந்து உங்கள் கொள்கைகளை திருத்திக்கொள்ள  முன்வாருங்கள் என்பதுதான். சொல்ல வேண்டியது எங்களின் கடமை, ஏற்றுக்கொள்வது உங்கள் இஷ்டம்.


அந்த ஆய்வறிக்கையில் நான் கண்ட வேறு சில தகவல்கள்...

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு ரஷ்யா. சுமார் 1 கோடியே 64 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், அதற்கடுத்து ஜெர்மனியில் சுமார் 40 லட்சம் முஸ்லிம்களும், பிரான்சில் 35 லட்சம் முஸ்லிம்களும், பிரிட்டனில் 16 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். 

தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினாவில் சுமார் 7 லட்சம் முஸ்லிம்களும்,  பிரேசில் நாட்டில் சுமார் 2 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். வட அமெரிக்க நாடுகளான  கனடாவில் சுமார் 6.5 லட்சம் முஸ்லிம்களும், அமெரிக்காவில் 24.5 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.



உலகிலேயே ஒரு நாட்டில் முஸ்லிம்கள் வாழும் சதவிதம் அதிகமிருப்பது அப்கானிஸ்தானில் தான், இங்கு வாழக்கூடிய மக்களில் 99.7% பேர் முஸ்லிம்கள். 

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இந்த அறிக்கையில் உள்ள மக்கட்தொகை கணக்கெடுப்பு, சில நாடுகளில் 2000,2001,2002 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை. மற்ற நாடுகளிலோ 2005, 2006 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை. 

இந்த வருட இறுதியில், மற்றுமொரு ஆய்வறிக்கை இதே நிறுவனத்தால் வெளியாகப்போகிறது. அது, எதிர்காலத்தில் முஸ்லிம்களின் மக்கட்தொகை எப்படி இருக்கும் என்பது பற்றியது. 

இறைவன் நன் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Reference:
1. Mapping the global population - A report on the size and distribution of world's Muslim population, released by PEW research center on October,2009.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
    






Thursday, February 25, 2010

யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்? - II



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

இந்த பிரச்சனையை பற்றி தெளிவாக உணர, இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

பதிவிற்குள் செல்வோம்...

  • எப்படி பிடிக்கிறார்கள்? 
  • எப்படி பணம் பெறுகிறார்கள்? 
  • பிடித்தவர்களை எப்படி நடத்துகிறார்கள்?  
  • எப்போது இது முடிவுக்கு வரும்?

இந்த கேள்விகளுக்கான பதிலை நான் சொல்லுவதைவிட அவர்களில் ஒருவரான சாஇத் (saaid, Nick name) பிரபல இஸ்லாம் ஆன்லைன் தளத்திற்கு தந்த பேட்டி உங்கள் பார்வைக்காக...

நீங்கள் எப்படி இதில்?

நான் கடற்காவலனாக (Coastal Guard) ஆவதற்கு முன்பு, சோமாலியாவின் முடக் (Mudug) பகுதியில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் மீனவனாக இருந்தவன்.

சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நாங்களே போராட முடிவெடுத்தோம்.  அதுமட்டுமல்லாமல், எங்கள் மீன்பிடி இயந்திரங்களை நாசமாக்கிய வெளிநாட்டு கயவர்களிடமிருந்து எங்கள் இயற்கை வளங்களை காப்பதற்காகவும் போராட முடிவெடுத்தோம்.

இப்படி சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிக்கும் கப்பல்கள் எங்களுக்கென்று எதையும் மிச்சம் வைத்ததில்லை. சில சமயங்களில் எங்கள் கடற்கரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவிலேயே மீன்பிடிப்பார்கள். அப்போது எங்களிடம் AK-47 துப்பாக்கிகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவிலான மோட்டார் படகுகள் (Skiffs) நிறைய இருந்தன.

ஒரு வெளிநாட்டு மீன்பிடி கப்பலை, சுமார் 200 படகுகளுடன் சென்று சுற்றிவளைப்போம், ஒவ்வொரு சிறிய படகிலும் AK-47 தாங்கிய மூன்று ஆட்கள் இருப்பார்கள். அந்த காலங்களில் யாரும் எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியதில்லை.

இப்படி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் மட்டுமில்லாமல், இங்கே விஷக்கழிவுகளை கொட்டும் வெளிநாட்டு கப்பல்களையும் பார்த்திருக்கிறோம். இவைகள் தான் எங்கள் கடலில் மீன்கள் இறப்பதற்கும் எங்கள் மக்கள் உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்க்கும் காரணம். அதனால் இவர்கள் கழிவுகளை கொட்டுவதற்க்குள் பிடித்துவிட முடிவெடுத்தோம்.

இதுவரை எத்தனை மீன்பிடி படகுகளை இழந்திருப்பீர்கள்?

சோமாலியா ஒரு பெரிய நாடு. அதனால் எத்தனை படகுகளை நாங்கள் அனைவரும் இழந்திருப்போம் என்ற சரியான கணக்கு என்னிடம் கிடையாது. ஆனால் என்னுடைய அனுபவத்தை கூற முடியும். ஒருமுறை நாங்கள் 61 மீன்பிடி படகுகளுடன் சென்றிருந்தோம்.

நள்ளிரவு நேரம், எங்களில் சிலர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு நடுவே ஒரு பெரிய கப்பல் கடந்து சென்றது. அதனால் ஏற்பட்ட கடல் மாற்றத்தால், எங்களில் சிலர் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். 61 படகுகளில், ஒன்பது மட்டுமே மிஞ்சின. மிக துயரமான சம்பவம் அது.  

இது எனக்கு ஏற்பட்ட அனுபவம், இதுபோல நாடு முழுவதும் எங்கள் மீனவர்கள் படக்கூடிய கஷ்டங்களை யூகித்து கொள்ளுங்கள்.         

கப்பல்களை கடத்துவதற்கு எம்மாதிரியான உக்திகளை கையாள்கிறீர்கள்?

ஒரு பெரிய படகு மற்றும் இரு சிறிய அதிவேக படகுகளுடன் செல்வோம். சிறிய படகுகள் ஒவ்வொன்றிலும் ஐந்து பேர் இருப்பார்கள். அவர்களிடம் RPG (Rocket Propelling Granades) போன்ற ஆயுதங்களும், GPS (Global Positioning System) மற்றும் தானியங்கி தகவல் தரும் (AIS, Automated Information Systems) கருவிகள் போன்ற அதிநவீன கருவிகளும் இருக்கும்.

பக்கத்தில் சரக்கு கப்பல் வருவதாக தெரிந்தால், எங்கள் படகுகளுடன் சென்று அந்த கப்பலை முற்றுகையிட ஆரம்பிப்போம். எங்களின் இரு சிறு படகுகள் அந்த கப்பலை தாக்க ஆரம்பிக்கும். பெரிய படகோ அந்த சிறு படகுகளுக்கு பின்னாலிருந்து உதவிபுரியும். நாங்கள் கப்பலின் கேப்டன் இருக்கும் பகுதியைத்தான் தாக்குவோம். சில கேப்டன்கள் எங்கள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து விடுவார்கள், மற்றவர்களோ தங்கள் கப்பல்களை வேகமாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவார்கள்.

நாங்கள் கப்பலை பிடித்தால், அதன் கேப்டனிடம் பக்கத்திலுள்ள கடற்படை தளத்திற்கு, நாங்கள் அந்த கப்பலை பிடித்துவிட்டதாக தகவல் அனுப்ப சொல்வோம். பிறகு அந்த கப்பலை சோமாலிய கடற்கரையை நோக்கி எடுத்துச்  செல்வோம்.


நீங்கள் அந்த கப்பலில் உள்ளவர்களிடம் எப்படி நடந்துக்கொள்வீர்கள்? அவர்களின் பொருட்களை எடுத்துக்கொள்வீர்களா ?

கடத்தப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் வரைமுறைகள் (Code of Conduct) வைத்திருக்கிறோம். நாங்கள் அவர்களை மதிக்கிறோம். அவர்களின் பொருட்களையோ அல்லது கப்பலின் சரக்கையோ நாங்கள் தொடமாட்டோம். அவர்களை கட்டவோ அல்லது அவர்களிடம் பணமோ கேட்கமாட்டோம்.

எங்களுடைய அணுகுமுறையெல்லாம் அந்த கப்பலின் உரிமையாளரிடம்தான். எங்களுக்கு வேண்டியது பணம், அதை அந்த உரிமையாளரிடம் இருந்து மட்டும் தான் பெற நினைப்போம்.

நீங்கள் கேட்ட பணம் உங்களுக்கு எப்படி வந்தடைகிறது?             

நாங்கள் பணத்தை இரு வழிகளில் பெற்றுக்கொள்கிறோம். ஒண்ணரை மில்லியன் (15 லட்சம்) அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான தொகையாக இருந்தால், கடத்தப்பட்ட கப்பல் எந்த நாட்டைச்சேர்ந்ததோ அந்த நாட்டின் கடற்படை கப்பல்கள் மூலமாக பெற்றுக்கொள்வோம்.

அதற்கு குறைவான தொகையாய் இருந்தால், வேறு முறைகளில் பெற்றுக்கொள்வோம், உதாரணத்துக்கு ஹவாலா போன்றவை.

பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொள்வீர்கள்?

கப்பலை பிடித்தவர்கள் 50 சதவீதமும், இந்த கடத்தலுக்கு பொருளாதார உதவி புரிந்தவர்கள் 40 சதவீதமும், கப்பலை பாதுகாப்பது மற்றும் பேரம் பேசுவதற்கு உதவியவர்கள் 10 சதவிதமும் எடுத்துக்கொள்வார்கள்.


கப்பலின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துவிட்டால்?

இதற்கு இரு வழிகளை கையாள்வோம். ஒன்று அந்த கப்பலில் உள்ளவர்களை, கேப்டனையும் சேர்த்து, கரைகளுக்கு அழைத்துச்  சென்று, நாங்கள் கேட்ட பணம் கிடைக்கும் வரை வைத்திருப்போம்.

இல்லையென்றால் கப்பலில் உள்ளவர்களை விடுவித்துவிட்டு அந்த கப்பலை வேறு கப்பல்களை கடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வோம்.

உங்களுக்கு யார் பண உதவிகளை செய்வது?

குறிப்பிடும்படி யாரும் கிடையாது. எங்களுக்குள் பல பிரிவுகள் (Umbrella Groups)  உள்ளது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம்.

நீங்கள் எங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறீர்கள்?

சோமாலியாவிலேயே எல்லா நாட்டு ஆயுதங்களும் கிடைக்கும். பெரும்பாலும் நாங்கள் பக்கத்திலிருக்கும் நாடுகளில் இருக்கும், சட்டவிரோதமாக செயல்படும் ஆயுத வியாபாரிகளிடம் இருந்து வாங்குவோம்.

குறிப்பாக எந்த நாடு?

ஏமன்.

நீங்கள் சந்தித்த பெரிய ஆபத்தான சூழ்நிலை என்ன ?

ஒரு முறை நாங்கள் ஒன்பது பேர் ஒரு படகில் சோமாலிய கடற்கரையில் இருந்து 1000 மைல் தாண்டி சுமார் ஒரு மாதம் மூன்று நாட்களுக்கு மேலாக சென்றிருந்தோம். ஒன்றும் கிடைக்காததால் திரும்பி வந்துக்கொண்டிருந்தோம்.

சோமாலிய கடற்கரையிலிருந்து சுமார் 120௦ மைல் தூரத்தில் வந்துக்கொண்டிருக்கையில், கடலில் ஒரே புகைமண்டலம், பறவைகளின்  காட்டு கூச்சல் வேறு. கடல்நீரில் ஒரு வித மாற்றம், திடீரென்று எங்கள் படகு கடலில் பாதியளவு மூழ்கிவிட்டது, ஒருவரை தவிர அனைவரும் கடலில் விழுந்து விட்டோம், அந்த ஒருவர் தான் எங்களை காப்பாற்றினார்.

பிறகுதான் தெரிந்தது, அந்த புகைமண்டலம், விஷக்கழிவுகளை ஒரு கப்பல் அப்போது கொட்டிச்சென்றதால் ஏற்பட்டது என்று.

இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை கப்பல்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அவர்கள் இங்கே சண்டைப் போடத்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்கள் எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்போம். 

அவர்களை நாங்கள் நடுக்கடலில் சந்தித்தால், எங்களில் சிலர் ஆயுதங்களை கடலில் எரிந்து விட்டு, தாங்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் (illegal immigrants) என்று சொல்லுவார்கள்.

வேறு சிலரோ அவர்களுடன் சண்டை புரிவார்கள், மற்றவர்களோ தப்பித்து ஓடுவார்கள். மூன்று படகு சென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தப்பித்து செல்லும். கடற்படை ஒன்றை துரத்த மற்ற இரண்டும் தப்பித்துவிடும்.
       

உங்களுக்கென்று தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? நீங்கள் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துழைத்து கொள்கிறீர்கள்?

நாங்கள் பல பிரிவுகளை சார்ந்தவர்கள், ஆனால் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்வோம். குறிப்பாக சொல்லப் போனால் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று பண்ட்லாண்டிலும் (Puntland) மற்றொன்று தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவிலும் இருக்கின்றன. நான் முதலாவது பிரிவைச் சேர்ந்தவன்.

நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம், நல்ல தொடர்பு வைத்திருக்கிறோம். உதாரணத்துக்கு எங்களில் ஒரு பிரிவு ஒரு கப்பலை கடத்தி பணம் பெற்றால் அதை மற்றொரு பிரிவுக்கும் பகிர்ந்தளித்து விடுவோம்.

சோமாலியாவின் அருகிலுள்ள துறைமுகங்களில் உங்களுக்கு உளவு சொல்ல உளவாளிகள் இருக்கிறார்களா?

இல்லை. அப்படி யாரும் கிடையாது.   

இது எப்போது முடிவுக்கு வரும்?

சோமாலியாவில் சட்டஒழுங்கு சீர்ப்படும்போதும், உண்மையிலேயே இந்த உலகம் எங்கள் கடற்பகுதிகளை காக்க நினைக்கும்போதும், விஷக்கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படும்போதும் எங்கள் செயல்கள் முடிவுக்கு வந்துவிடும்.  எங்கள் நாட்டில் உள்ள சர்வதேச கடற்ப்படை கப்பல்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும். இவையெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் செயல்கள் தொடரத்தான் செய்யும்.                                             

நான் சொல்ல வருவது, ஒரு பக்கம் எங்கள் கடற்பகுதிகளை சீரழித்துவிட்டு, மறுபக்கம் தரைப்பகுதியில் அமைதி கொண்டு வருவதாக நாடகமாடக்கூடாது என்பதுதான்.

........End of Interview........

This extract of the interview was taken through Bro. Abdul karim Mohamed Jimale, freelance journalist for islamonline.net...
தமிழாக்கம்: ஆஷிக் அஹ்மத் அ...


சோமாலிய கடல் பகுதி மிகப் பெரியது, அதில் ஒருபுறம் விஷக்கழிவுகளையும், அணுக்கழிவுகளையும் கொட்டி கடலையும் மக்களையும் நாசமாக்கும் கொடுமை, மறுபுறமோ கிடைத்த மீன்களையெல்லாம் கொள்ளையடிக்கும் கும்பல். இந்த சூழ்நிலை தான் இவர்களை ஆயுதமேந்த வைத்திருக்கிறது. 


அமைதி ஏற்ப்படுத்துவதாக உள்ளே நுழைந்து உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்க்காயும் சில நாடுகள் ஒருபுறம், தங்கள் வாழ்வாதாரமான கடலை அழித்துக்கொண்டிருக்கும் மனிதநேயமற்ற செயல்கள் மறுபுறம், நடுவில் சோமாலிய மக்கள். நினைக்கும் போதே நெஞ்சம் தடுமாறுகிறது. 


இன்னும் எவ்வளவு காலம் தான், பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்று பார்த்து அதை தீர்க்காமல், பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்த போகிறதோ உலகம்?   

குற்றவாளிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்... 




My Sincere thanks to:
1. Islamonline.net
2. Reuters 

Reference: 
1. Islam online article titled "A Somali Pirate in Action Talks to IOL - Unraveling the Piracy Career Story", dated 4th January, 2010.



உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ






Wednesday, February 24, 2010

யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...  

சோமாலிய கடற்கொள்ளையர்கள்...கடந்த சில வருடங்களாகவே மீடியாவில் அடிக்கடி தென்படக்கூடிய இரண்டு வார்த்தைகள்...

"நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)" 

ஆம். இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பின்னால் ஒரு மாபெரும் சோகக்கதையே இருக்கிறது. ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்? 

இந்த பதிவில் இவர்கள் இன்றைய நிலைக்கு வந்த காரணங்களை காணவிருக்கிறோம்...இன்ஷா அல்லாஹ்...

சோமாலியா 98.5% முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு. வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது, மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்பது மில்லியன் (90 லட்சம்). மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு. இந்திய கடலையும், எடேன் வளைகுடாவையும் (Gulf of Aden) கொண்ட நாடு. 1991 முதல் கடுமையான சிவில் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடு. மீன்பிடி தொழில் தான் அவர்களது முக்கியமான தொழில். அந்த தொழிலுக்கே ஆபத்து வந்தால்? 



சுனாமி பேரலைகளால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்க அந்த அலைகள் தான் சோமாலியாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்தன. அதாவது, அந்த அலைகள் சோமாலிய கடலில் கொட்டப்பட்டிருந்த விஷக்கழிவுகளை வெளிக்கொண்டுவந்தன. இந்த விஷக்கழிவுகள் பெரிய கண்டைனர்களிலும் பேரல்களிலும் ஒழுகிய நிலையில் இருந்தன. கொஞ்சநஞ்சமல்ல, பெரிய அளவில் கழிவுகள். ஐ.நா சுற்றுசுழல் அமைப்பு அதிர்ச்சியில் உறைந்தது.                        

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், மிக நீண்ட காலங்களாகவே, அதாவது 1989 முதலே, ஐரோப்பிய நாட்டு தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சோமாலியா நாட்டு கடலில் கொட்டுகின்றன என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது.


இப்போது சுனாமி அலைகள்  தெள்ளத்தெளிவாக அந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிட்டன . இதில் என்ன பெரிய கொடுமை என்றால், அந்த கழிவுகளில் அணுக்கழிவுகளும் இருந்ததுதான். 

நீண்ட காலங்களாக சோமாலியா கடற்கரை பகுதி மக்கள் அனுபவித்து வந்த உடல்நிலை கோளாறுகளுக்கும் விடை அளித்துவிட்டது சுனாமி. கேட்பவர் நெஞ்சை நொறுக்கும் செய்தி இது. ஒருவனை அழித்து இன்னொருவன் வாழ்வது...

பின்னர் இது சம்பந்தமான உண்மைகள், ஆதாரங்கள் வெளிவந்தன. ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு இதற்கெல்லாம் காரணம் சில ஐரோப்பிய தொழிற்சாலைகள்தான் என்று வெளிப்படையாக கூறியது.

இந்த கொடுமையெல்லாம் போதாது என்று, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுளில் இருந்து வரக்கூடிய கப்பல்கள் சோமாலிய கடற்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக மீன்பிடித்தன. இது சோமாலியர்களுக்கு மாபெரும் பிரச்சனை. ஏனென்றால் இவர்களிடம் இருப்பதோ சிறிய படகுகள் மற்றும் கப்பல்கள், அவை அந்த கப்பல்களுக்கு எந்த விதத்திலும் நிகராகாது. 



இப்படி ஒரு புறம் கழிவுகளாலும், மறுபுறம் சட்டவிரோத மீன்பிடி நிகழ்வுகளாலும் சின்னா பின்னமாகி போனார்கள் சோமாலியர்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்பதற்க்கு நிலையான அரசாங்கம் கிடையாது. இந்த சூழ்நிலை தான், சில சோமாலியர்களை மீடியாக்கள் கூறுவது போல் கொள்ளையர்கள் ஆக்கியது. 

இவர்கள் என்ன கூறுகிறார்கள் இதைப்பற்றி?

தாங்கள் கொள்ளை அடிப்பது சீரழிந்து போயிருக்கும் சோமாலிய கடற்பகுதியை மேம்படுத்துவதற்க்காகவும், மேற்கொண்டு கப்பல்கள் எந்த அசம்பாவிதத்தையும் செய்யாமல் காப்பதற்காகவும் தான் என்பது. 

இன்றளவும் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற வருடம் ஒரு ஸ்பெயின் நாட்டு கப்பலை இவர்கள் கடத்தி சென்றதாக செய்திகளில் பார்த்திருப்போம். அந்த கப்பலை இவர்கள் கடத்தியதற்கு இவர்கள் கூறிய காரணம், அந்த கப்பல் சோமாலிய கடற்பகுதியில் மீன்பிடித்தது என்பது தான்.

இதனால் தான் இவர்கள் தங்களை கடற்காவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். 

அதுசரி எப்படி இத்தனை கப்பல்கள் இவர்களிடம் மாட்டுகின்றன? இதற்கு நாம் சோமாலியாவின் பூலோக வரைப்படத்தை பார்த்தால் விடைச்சொல்லி விடலாம். ஐரோப்பாவில் இருந்து சூயஸ் கால்வாய் வழியாக வந்து வளைகுடா நாடுகளை தாண்டிசெல்லும் கப்பல்கள் எல்லாம் இவர்களது நாட்டையொற்றிய  எடேன் வளைகுடாவை கடந்து தான் செல்லவேண்டும். அங்கே தான் மடக்குகிறார்கள். 

எப்படி பிடிக்கிறார்கள்? எப்படி பணம் பெறுகிறார்கள்? பிடித்தவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பணத்தை என்ன செய்கிறார்கள்? எப்போது இது முடிவுக்கு வரும்?  இன்ஷா அல்லாஹ்...அடுத்த பதிவில்...                                  

இதையெல்லாம் விடுங்கள், சமீபத்தில் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் தெரியுமா இவர்கள்? நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்கள் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை...

அதாவது, சமீபத்தில் ஹைய்தி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு தாங்கள் ஒரு பெரிய தொகையை தருவதாகவும்,  அந்த தொகை எப்படியாவது அம்மக்களுக்கு சென்று விடும் என்று அறிவித்ததும் தான். 

அதுசரி, சோமாலியா  நாட்டை சீரழித்துவரும் சிவில் யுத்தத்திற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்...நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?

இன்ஷா அல்லாஹ்...இன்றுமுதல் நம்முடைய துஆக்களில் சோமாலிய மக்களையும் சேர்த்துக் கொள்வோம்...

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. United Nations Environment programme (UNEP) report on Somalia toxic wastage crisis.
2. Al-Jazeera report on Somalia's Toxic waste, dated 11th October 2008.
3. Agence France-Presse (AFP) report on Somalia's illegal fishing and Waste Dumping, dated 25th July 2008.
4. The Times Report on Toxic waste washed ashore by Tsunami, dated 4th March 2005.
5. Somali land Press report on Pirates donate Haitii people, dated 31st January 2010.
6. The Pew Report on Somalia population released on Oct 2009.   

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ          







Tuesday, February 23, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...II


அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)...

அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு பிந்தைய முஸ்லிம்களின் வரலாற்றை சென்ற பதிவில் பார்த்தோம்..

இன்ஷா அல்லாஹ், கொலம்பஸ்சுக்கு முந்தைய வரலாற்றை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்...

கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர்.

வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களின்படி நமக்கு கிடைக்கக்கூடிய முதல் தகவல், 

1. க்ஹஷ்க்ஹஷ் இப்ன் சையித் இப்ன் அஸ்வாத் அல் குர்துபி (khash khash ibn said ibn aswad al-qurtuby) என்பவர் தன் ஆட்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் (Muslim Andalusia, இன்றைய ஸ்பெயின்) உள்ள பலோஸ் (Port Palos) துறைமுகத்தில் இருந்து மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டு, இன்றைக்கு கரீபிய தீவுகள் இருக்கக்கூடிய நிலப்பகுதியை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர் "தெரியாத நிலம்" (The Unknown Land). அதுமட்டுமல்லாமல், தான் சென்ற வழியை வைத்து ஒரு வரைப்படத்தையும் தயாரித்து கொண்டார். அங்கிருந்து வரும்போது ஸ்பெயினிற்கு பெரும் பொருள்களையும் கொண்டு வந்தார். இது அப்போதைய ஸ்பெயின் மக்கள் மிக நன்றாக அறிந்த செய்தி. 

ஆக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற தகவலின்படி அமெரிக்க பகுதிகளை முஸ்லிம்கள் முதன்முதலில் அடைந்தது 889 இல். 



2. அதன்பிறகு பிப்ரவரி 999 இல், முஸ்லிம் அண்டளுசியாவின் கிரனடா பகுதியை சேர்ந்த இப்ன் பாரூக் (ibn Farukh) என்பவர் தற்போதைய ஸ்பெயினில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து அட்லாண்டிக் கடலை கடந்து இரண்டு தீவுகளை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர்கள், காப்ரரியா (Capraria) மற்றும் ப்ளுஈடினா (Pluitina) என்பதாகும். அதே ஆண்டு மே மாதம் அவர் ஸ்பெயின் திரும்பினார்.

3. பனிரெண்டாம் நூற்றாண்டின்   முற்பகுதியில், வரலாற்றில் மிக பிரபலமான அல்-இத்ரீசி (Al-Idrisi) என்பவர், எட்டு நபர்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் இருந்து மேற்கில் பயணம் செய்து கரீபிய தீவுக்கூட்டங்களை அடைந்தார். அங்கு இந்தியன்ஸ்சிடம் (பூர்வீக குடிமக்கள்) மாட்டிக்கொண்டனர். 



இங்கு சிறிது நேரம் நிறுத்தி, அல்-இத்ரீசி என்பவர் யார் என்று பார்ப்பது மிக அவசியம். இவர் ஒரு மிகச்சிறந்த கடல்வழி ஆராச்சியாளர், பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டவர். சிசிலி (இந்த சிசிலி இத்தாலியில் உள்ளது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது, மத்திய தரைக்கடலில் மிகப்பெரிய தீவு இதுதான்) அரசருக்கு ஆலோசகராகவும் இருந்தவர். இவர் வரைந்த உலகவரைப்படத்தை தான் கொலம்பஸ் தன் பயணத்தில் பயன்படுத்தினார். 

பதிவிற்கு செல்வோம், மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் இந்தியன்ஸ்சிடம் இவரும் இவரது ஆட்களும் மாட்டிக்கொண்டனர். அப்போது இவர்களுக்கும் இந்தியன்ஸ்களுக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தது ஒரு இந்தியன்.

என்ன? ஒரு இந்தியன் இவ்விருவருக்கும் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தாரா?, அதாவது ஒரு இந்தியனுக்கு அரபி தெரிந்திருந்ததா? அரபி கற்றுக்கொள்ளும் அளவிற்கிற்கு அவருக்கு முஸ்லிம்களுடன் தொடர்பிருந்ததா?  ஆம் உண்மைதான். அவர்தான் அல்-இத்ரீசிகும் அவரது ஆட்களுக்கு விடுதலை வாங்கித்கொடுத்தார். இது மிக தெளிவாகவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. 

ஆக நாம் மேலே கண்ட மூன்று பயணங்களும் முஸ்லிம் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டவை.

இதன்பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய தகவல், 1291 இல் மொரோக்கோவில் இருந்து ஷேக் ஜைனடீன் அலி மேற்கில் அட்லாண்டிக் கடலை கடந்து "புது உலகை" அடைந்தார் என்பது. புது உலகா? இப்படிதான் வரலாறு அந்த நிலங்களை குறிப்பிடுகின்றது.  

இதெல்லாம் விட சுவாரசியமான தகவல், மாலி (Mali, a muslim country situated in north africa) நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பாகும். மாலியின் மேன்டிங்கோ (Mandingo) அரசின் மன்னரான அபு-புகாரி (Abu-Bhukari), 1310 இல் இரண்டு படைகளை சுமார் 2200 கப்பல்களுடன் மேற்குலகில் புதிய நிலங்களை கண்டுபிடிக்க அனுப்பினார். இவர்களும் தற்போதைய அமெரிக்க நிலத்திற்கு வந்து சேர்ந்தனர். 


இன்றளவும் தென் அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகள் (southern american Indian tribe) இந்த மேன்டிங்கோ வடிவங்களை (Mandingo idiograms) கொண்டு   எழுதுகின்றனர். அதுபோல வட அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகளும் மேன்டே மொழியின்  (மேடிங்கோக்களின் மொழி) வார்த்தைகளை பயன்படுத்துக்கின்றனர். ஆக மாலியில் இருந்து வந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்த மக்களுடன் தங்கிவிட்டனர். அந்த புது நிலங்களில தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர். 

ஆக கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வரைப்படத்தை (Map) 1513-இல் வரைந்தவர் துருக்கியின் பிரி முஹீத் டின் ரீஸ் (Piri Muhyid Din Re'is), துருக்கி கடற்படையின் தளபதியாக இருந்தவர். கடல் வழி ஆராச்சியாளரும் கூட.  அவர் வரைந்து துருக்கி சுல்தான் செலீமிடம் (Selim I)சமர்ப்பித்து விட்டார். கொலம்பஸ் அப்போது அமெரிக்காவிற்கு வந்து விட்ட போதும், அந்த வரைப்படத்தில் இருந்த அமெரிக்க பகுதிகள் கொலம்பஸ்சினால் கண்டுபிடிக்கப்படாதவை. மிக தெளிவாகவே அவை வரையப்பட்டிருந்தன. ஆக அந்த தளபதிக்கு அமெரிக்காவின் நிலப்பரப்பை பற்றிய தெளிவான பார்வை இருந்திருக்கிறது.          இது வியப்பான தகவல்... 

இன்னும் பல ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம், பதிவின் நீளம் கருதி அவை விடப்படுகின்றன.

ஆக கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்களுடனான அமெரிக்க தொடர்பு மறுக்கமுடியாதது. ஆனால் இந்த தகவல்களெல்லாம் சிறிது காலத்திற்கு முன் வரை வெளிவரவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக கூறப்படும் ஒரு காரணம், இந்த தகவல்கள் பெரும்பாலும் அரபி மொழியில் இருந்ததுதான் (மேடிங்கோவை தவிர்த்து).      

எவ்வளவு நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? கடந்த சிலபல வருடங்களாக இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. 

அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டுவந்துவிட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கர்கள். 

அதில் ஒருவர் அரேபிய குதிரைகளை பற்றி ஆராய அரபி கற்று, பின்னர் அந்த அரபி அறிவை வைத்து குரானை கற்க, வியந்து போய் முஸ்லிமாக மாறியவர். பின்னர் தன் அரபி அறிவை கொண்டு பழங்கால அரபி நூல்களை புரட்ட வியப்பின் மேல் வியப்பு. முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்துவிட்டார். Dr.ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald F.Dirks) தான் அவர். இவரைப்போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்த உண்மைகள் யாராலும் மறுக்கமுடியாதவை.    

ஆக அல்லாஹ் அமெரிக்கர்களை வைத்தே உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...

அமெரிக்காவின் வரலாற்று செய்திகளை மாற்றப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்ஷா அல்லாஹ்..மாற்றப்படும்...  

அதெல்லாம் சரி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக படித்திருக்கிறோமே?இதற்கு முன் பத்தியை மறுபடியும் படித்துக்கொள்ள வேண்டியதுதான்...   

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. More about Al-idrisi - clarklabsdotorg
5. Muslims discovered America long before Columbus - Mathaba news agency.

My Sincere thanks to:
1. Br.Eddie of thedeenshowdotcom



 உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

              
          






Monday, February 22, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்... I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது. 

மேற்கொண்டு பதிவிற்கு...

முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.

அதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.


இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.

ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம்  மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).

கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.

உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும்?, அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?

கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria)  தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்

1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.

இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño). கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில்  மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.

1492-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார்.


சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.

இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.

இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது, இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.

ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.

இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  


அதற்கு அடுத்த வருடம், 1493-இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.

இம்முறை அவர் இறங்கியது ப்யுர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன... காலனி ஆதிக்கந்தான்.  ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.

அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.    

ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.

இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,      
  • அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
  • பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
  • அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்  (1776-1789).
  • அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).  
  • அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).

இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.    

ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.

கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?

இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.

கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?

இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.
       
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டுங்கள்..


அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக...ஆமின்...

References:
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. History of United States - endotwikipediadotorg
5. Islamic Spain - British Broadcasting Service (BBC)
6. Isabella I of castile - endotwikipediadotorg.
7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg
8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotuk

My sincere thanks to
1. Br.Eddie of thedeenshowdotcom


உங்கள் சகோதரன்...
ஆஷிக் அஹ்மத் அ     






Friday, February 19, 2010

குர்ஆன் = ஆச்சர்யங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக..

குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குரானும் ஒன்று.

குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.


1. குரானை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான். நீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா? அப்படியெனில் நீங்கள் குரானின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள். 

ஏன்? இந்த பதிவின் முடிவில் அறிந்துக்கொள்வீர்கள்.  

குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.

அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.

நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது. 

நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.

இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை. 

நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.

மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...

ஏன்?

இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.          



ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது. 

இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.

குரானின் தனித்துவம் என்ன தெரியுமா?

ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).

எளிமையாக சொல்லப்  போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.

குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான். 

இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும்? சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். 

இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் மொழிப்பெயர்ப்புகளின் மூலம் குரானின் முழு அழகையும்/அற்புதத்தையும் உணர முடியாது? 

விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான், அதனால் தான் குரானின் வார்த்தைகளை மொழிப்பெயர்க்காமல் அதன் அர்த்தங்களை மட்டுமே மொழிபெயர்க்க முயல்கின்றார்கள்), சத்தங்களை?     

Qur'an is the most difficult book on the face of earth to translate...


2. குரான் அருளப்பட்ட சமயம், நான் ஏற்கனவே கூறியது போல் அரபி மொழி அதன் உச்சத்தில் இருந்த நேரம். அப்பொழுது அரபி மொழி இலக்கணம் மூன்றாக அறியப்பட்டிருந்தது,
a. கவிதைநடை (poetry), அரபியில் "பிஹார்" எனப்படும்.
b. உரைநடை (common speech), அரபியில் "முர்ஸல்" எனப்படும்.
c. கவிதையும் உரையும் சேர்த்த நடை (combination of both poetry and common speech), அரபியில் "சாஜ்" எனப்படும். 
அரேபிய மக்களோ அல்லது இலக்கியவாதிகளோ ஒன்றை சொல்ல அல்லது எழுத நினைத்தால், அது மேற்கூறிய ஒன்றில் அமைந்து விடும்.

ஆனால் குரானை பார்த்து இந்த அரேபிய இலக்கியவாதிகள் அதிர்ந்ததற்கு மற்றுமொரு காரணம் குரானின் வசனங்கள் மேற்கூறிய எந்த நடையிலும் இல்லை என்பதுதான். குரானின் நடை அவர்கள் இதுவரை கண்டிராதது, கற்பனை செய்ய முடியாதது.

சாதாரண மக்களுக்கோ, அந்த வசனங்களின் நெஞ்சை ஊடுருவச்செய்யும் பொருளும், அந்த பொருளை தாங்கி வந்த சொற்களின் அசாதாரண நடையும், அந்த சொற்கள் உச்சரிக்கப்பட்ட விதமும் மனதை கொள்ளைக்கொண்டன.

இன்று வரை குரான் போன்றை ஒன்றை எவராலும் உருவாக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

குரான் அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் அதிசயமாக பார்ப்பது குரானை மட்டுமே.  நம்முடைய பலமும் அதுதான்.

அன்றும் சரி இன்றும் சரி குர்ஆன் ஆச்சர்யங்கள் அளிப்பதில் தவறியதில்லை, ஆனால் இதையெல்லாம் ஆராயாத, காதில் போட்டுக்கொள்ளாத சிலர் இருப்பதுதான் ஆச்சர்யம்.

"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்" - (குர்ஆன் 4:82)

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


My sincere thanks to:
1. Br.Nouman Ali Khan, founder and CEO of Bayyinah Institute.
2. Br.Eddie of thedeenshow.com.
3. Dr.Sabeel Ahmed, Director of Outreach, Gainpeace.com, ICNA
4. Dr.Lawrence Brown, Canadian Dawah Association.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
.
  






Wednesday, February 17, 2010

ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி --- பகுதி 2


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


சென்ற பதிவின் தொடர்ச்சி....முதல் பகுதியை வாசிக்க <<இங்கே>> சுட்டவும்... 


இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே. ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம். 

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது. 

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாஹ்வை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்துக் கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்... 

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராயத் தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துக் கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
 "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36       
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்.    

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.  
    " நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"  
அதற்கு அவரது தாய் "அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா............. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுப்ஹானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.  

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21-ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. 
  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.  
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். 
இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.


                                        


சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். 

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். 

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.

"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு"  --- குரான் 11:11    
 " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9  


குறிப்பு:

ஆமினா அவர்களின் சொற்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யூடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.


References:
1. Interview with Rebecca Simmons of  The Knoxville News-Sentinel in Tennessee
2. islamreligiondotcom
3. youtubedotcom
4. famousmuslimsdotcom



உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ