Tuesday, February 28, 2012

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

மீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.  

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள். 

துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள். 

ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.  

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது. 


இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள். 


இந்த தகவல்களை கொண்டு எந்த முடிவிற்கும் வருவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது. 

அதுபோல, யாரை நோக்கி 'பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது. 

தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

My Sincere thanks to:
1. Brother Garibaldi of Loonwatch.

References:
1. Women in national parliaments - Inter-Parliamentary Union (situation as of Nov, 2011). link
2. Women in Parliament: Islamists in Tunisia Field More Women as Candidates than the Percentage of Women in the US Congress - Loonwatch. link
3. Inter-Parliamentary Union - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, February 15, 2012

பிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்




நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

நேற்று பிபிசி ரேடியோ தளத்தில் வெளியான டாகின்ஸ் கலந்துக்கொண்ட உரையாடல் படுசுவாரசியமாக இருந்தது.

கிருத்துவத்தை விமர்சிக்க போய் தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொண்டார் டாகின்ஸ். பரிணாமத்திற்கு எதிரான தளங்கள் தற்போது இந்த ரேடியோ உரையாடலை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. 

அந்த உரையாடலின் பின்னணி இதுதான். 

ரிச்சர்ட் டாகின்ஸ் நிறுவனத்திற்காக பிரிட்டனில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஆய்வின் முடிவின்படி, பிரிட்டனில் 54% மக்கள் கிருத்துவத்தை நம்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெயரளவிற்கு தான் கிருத்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்களே ஒழிய (உண்மையான) கிருத்துவர்கள் கிடையாதாம் (????). 

டாகின்ஸ் ஒரு நாத்திகர் அல்லவா? அவர் நிறுவனத்திற்காக இப்படியான ஒரு ஆய்வு நடத்தப்படுகின்றது என்றால் நாம் படு கவனமாக தான் இதனை பார்க்கவேண்டும். காரணம், நிச்சயம் இதில் ஏதேனும் உள்அர்த்தம்/பாகுபாடு இருக்கலாம். 

அதெப்படி இவர்கள் (உண்மையான) கிருத்துவர்கள் இல்லை என்று கண்டுபிடித்தார்கள்? 

எப்படி என்றால், இவர்கள் சர்ச்சுக்கு செல்வது கிடையாது, பைபிளை படிப்பது கிடையாது, ஏசுவை கடவுளின் மகன் என்று ஏற்பது கிடையாது. இவ்வளவு ஏன், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் பெயர் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆகையால் டாகின்ஸ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். கிருத்துவ நம்பிக்கையின் முக்கியமானவற்றை இவர்கள் பின்பற்றாததால்/தெரியாததால் இவர்கள் கிருத்துவர்கள் கிடையாது. 

மொத்தத்தில், இவர்கள் தங்களை கிருத்துவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களே. பிரிட்டன் ஒரு கிருத்துவ தேசம் என்று கூறிக்கொண்டு தான் அங்கே நம்பிக்கை சார்ந்த பள்ளிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. இப்போது இப்படியான முடிவுகள் வந்திருப்பதால், பிரிட்டன் ஒரு கிருத்துவ நாடு என்ற நிலை பரிசீளிக்கப்பட வேண்டும். இது தான் டாகின்ஸ் சொல்ல வருவது. 

நீங்கள் மேலே பார்த்தவற்றை தான் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார் டாகின்ஸ். 

தன் வாயால் கெடும் என்று எதையோ பார்த்து சொல்வார்களே, அது போல தான் அமைந்தது அடுத்தடுத்த நிகழ்வுகள். 

இந்த உரையாடலில் டாகின்ஸ்சுடன் சேர்ந்து கலந்துக்கொண்டார் Reverend ஜைல்ஸ் ப்ரேசர். கிருத்துவம் குறித்து பலருக்கு பலவிதமான பார்வை இருக்கின்றது என்றும், தங்களை கிருத்துவர்கள் என்று மக்கள் அடையாளப்படுத்திக்கொண்டனர் என்றால் அத்தோடு விட்டுவிடுவதே சரியானது என்றும் வாதிட்டார் அவர். அதனைத் தாண்டி, சில குழப்பம் ஏற்படுத்தும் முட்டாள்தனமான கேள்விகளை கேட்டு, அதனை கொண்டு ஒரு முடிவிற்கு வருவதெல்லாம் தேவையற்றது என்று கூறினார் அவர். 

உரையாடலின் நடுவே டாகின்ஸ்சை நோக்கி ஒரு பிடி போட்டார் பாருங்கள் ப்ரேசர்.  

இதோ அந்த உரையாடல், 

"ரிச்சர்ட், (டார்வினின்) origin of species புத்தகத்தின் முழு பெயரை சொல்லுங்களேன். நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்" 

"ஆம், என்னால் முடியும்.." 

"சொல்லுங்க.." 

"on the origin of species...அ.......on the origin species....அ........பிறகு ஒரு உப தலைப்பு வரும்...பாதுகாக்கப்பட்ட இனங்கள் குறித்து அது பேசும்...."

கடைசி வரை புத்தகத்தின் முழு பெயரை சொல்லவில்லை டாகின்ஸ். டார்வினின் புத்தகத்தின் முழு பெயர் "On the origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favored Races in the Struggle for Life"......

ஆஹா....டார்வினின் புத்தகத்தின் பெயர் டாகின்ஸ்சுக்கு தெரியவில்லை. ஆகையால் அவர் வாதப்படி அவர் பரிணாமத்தை (முழுமையாக) நம்பவில்லை. :) :)

இதனையே பிரதிபலித்தார் ப்ரேசர்..

"ரிச்சர்ட், டார்வினிசத்தின் பெரிய நம்பிக்கை நீங்கள். பரிணாமத்தை நம்பும் மக்களிடம் போய் டார்வினின் புத்தகத்தின் பெயர் கேட்டு, 2% மக்கள் மட்டுமே சரியான பதில் சொல்லிருப்பார்களேயானால், பரிணாமத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிடலாமா? இம்மாதிரியான கேள்விகள் நியாயமில்லாதவை...."

ஒருவர் சரிவர தன் நம்பிக்கையை பின்பற்றவில்லை என்பதற்காக அவரை நம்பிக்கையாளர் இல்லை என்று கூறிவிட முடியுமா - ப்ரேசேரின் இத்தகைய கேள்விகள் தெளிவாக இருந்தன.  

டாகின்ஸ் சிக்கி திணறிய அந்த பகுதியை கீழே கேட்கலாம். முழுமையாக கேட்க விரும்புபவர்கள் பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பிபிசி லின்க்கை சுட்டுங்கள்.


அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்போம். பரிணாம நம்பிக்கையாளர்களிடம் போய், 
  • டார்வினின் புத்தகத்தின் பெயர் என்ன? 
  • டார்வினின் புத்தகத்தை படித்திருக்கிண்றீர்களா?, 
  • அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன?
  • பரிணாமம் என்றால் என்ன?

இப்படியாக கேள்வி கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்?? அதனை வைத்து இவர்கள் சும்மாச்சுக்கும் தான் பரிணாமத்தை நம்புகின்றார்கள் என்று கிருத்துவர்கள் சொன்னால் டாகின்ஸ் கூடாரம் ஏற்றுக்கொள்ளுமா? 

என்னவோ போங்க...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்..

References:
1. Majority of Christians 'tick the box' - BBC Radio 4, 14th Feb 2012. link
2. Richard Dawkins's English Inquisition - Evolution News. 14th Feb 2012. link

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Tuesday, February 7, 2012

உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன் 

APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது. 

சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.

உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.

இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது (இதுப்போன்ற மேலும் சில கட்டுரைகளை வேறு சில அறிவியல் தளங்களிலும் பார்த்திருக்கின்றேன்).

தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?

டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது. 

சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது. 

இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர். 

பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது. 

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள். 

ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும். 

எப்படி சோதிப்பது? 

யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது. 

வேறு வழி?....  ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும். பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை ரீதியாக கடினமான ஒன்றே. 

இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்தது. 

எப்படி? 

C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254 நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள் என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள். 

இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence) ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை. 

பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின் குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும். 

கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன. 

ஆஹா...

பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. 

ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும். 

ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம், அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே தெளிவான பார்வை கிடைக்கும். 

அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன. 

சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும். துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். இப்போது என்ன செய்வது?

Fine...நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால், உங்கள் மருத்துவரை தீவிரமாக கன்சல்ட் செய்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை அதனை அகற்றாமல் மாற்று வழியில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். சில ஆய்வுகள், ஆண்டிபயாடிக் மூலமாக வீக்கத்தை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. 

பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லையா? வீக்கத்தை குறைக்கும் வேறு வழிகள் கண்டுபிடிக்கப்படும் வரை அதனை அகற்றுவதை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியில்லை. 

இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Pictures taken from:
1. Scientific American Blog.
2. Physorg.com

Translation of technical terms helped by:
1. dictionary.tamilcube.com

My sincere thanks to:
1. Scientific American

References:
1. Your Appendix Could Save Your Life - Scientific American blog, January 2, 2012. link
2. Duke University Medical Center highlights importance of the appendix in human body - News Medical, August 21, 2009. link
3. Scientists may have found appendix’s purpose - AP news service report. 5th Oct, 2007. link
4. Scientists: Appendix Protects Good Germs - Physorg, 6th Oct 2007. link
5. Vermiform appendix - Wikipedia. link
6. Appendicitis - PubMed health, last reviewed 22nd July 2011. link
7. What organ does a rat not have that humans have? - answers.com. link
8. Gut - Biology Online. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Sunday, February 5, 2012

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன் 

==========

                              முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி (ஸல்) அவர்களைப் போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே சில மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.

ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ 'முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்வ‌து ஹ‌ராம்' அப்ப‌டின்னு ஒரு ஃப‌த்வா(1) சொன்ன‌தாக‌ எங்க‌ பார்த்தாலும் செய்தி ப‌ர‌வி கிட‌ந்த‌து. முஸ்லிம் பெண்கள் ப‌டிப்ப‌தோ, வேலைக்கு செல்வ‌தோ எந்த‌ இட‌த்துல‌யும் ஹ‌ராம்(2) என்று சொல்ல‌ப்ப‌டாத‌போது எப்ப‌டி இப்ப‌டி ஒரு ஃப‌த்வா வ‌ந்துச்சுன்னு ஒரே குழ‌ப்ப‌ம். பிற‌கு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்க‌ளின் கைங்க‌ரிய‌ம் தான். ச‌மீப‌மாக‌ வ‌ந்த‌ செய்திக‌ளில் 'அப்ப‌டி ஒரு 'ஃப‌த்வாவை சொல்ல‌வில்லை, பெண்க‌ள் வேலை செய்யுமிட‌த்தில் பேண வேண்டிய‌ ஹிஜாபை(3) ப‌ற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று ம‌றுப்பு தெரிவிச்சிருக்காங்க‌.

**

ச‌ரி. இப்ப‌ முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா? செல்ல‌க்கூடாதா? இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது?

ஒருத்த‌ர் முஸ்லிம் என்று சொன்னால் அவ‌ர் எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்த‌வ‌ராவார். ஆங்கில‌த்துல‌ சொல்ல‌னும்னா 'டோட்ட‌ல் ச‌ப்மிஷ‌ன் டு அல்லாஹ்'. இதில் ந‌ம்ம‌ வாழ்க்கையோட‌ ஒவ்வொரு செய‌ல்க‌ளுமே இறைவ‌ண‌க்க‌ம் தான். காலையில‌ தூங்கி எழுவ‌திலிருந்து, இர‌வு தூங்க‌ செல்லும் வரை, பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போனா நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்படி ஒழுங்கோட‌ செய்வ‌துன்னு இஸ்லாத்தில் ந‌ம‌க்கு க‌ட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய‌ இருந்து பார்க்கும்போது இது ரொம்ப‌ பிற்போக்குத்த‌ன‌மா தெரிய‌லாம். ஆனா 1400 வருஷ‌ங்க‌ளாக‌ இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸல்) அவ‌ர்க‌ளை பின்ப‌ற்றுவ‌தில் இன்றிருக்கும் கோடிக்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ளுக்கு எந்த‌ சிர‌ம‌மும் இல்லை. 

அப்ப‌டி ஆண்க‌ள், பெண்க‌ள் என‌ சேர்த்தியாக‌வும், த‌னித்த‌னியாக‌வும் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ல‌ க‌ட்டுபாடுக‌ள் இஸ்லாத்தில் இருக்கு. 

ஒரு குடும்ப‌ம் என்றால், அதில் தாய், த‌க‌ப்பனுக்கும், பிள்ளைக‌ளுக்கும் ப‌ல‌ கட‌மைக‌ள் இருக்கு. இஸ்லாத்தில் என்ன‌தான் ம‌னைவி ப‌ண‌க்காரியாக‌ இருந்தாலும், ச‌ம்பாதிப்ப‌வ‌ளாக‌ இருந்தாலும், குடும்ப‌த்தின் ப‌ராம‌ரிப்புக்கு ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டுமே இருக்கு. ம‌னைவி தான் ச‌ம்பாதிக்கிறாளேன்னு க‌ண‌வ‌ன் ஜாலியா இருக்க‌ முடியாது. அதே போல‌, ம‌னைவி ச‌ம்பாதிப்ப‌தில் அவ‌ள் குடும்ப‌த்திற்கு செல‌வு செய்ய‌ க‌ட‌மை இல்லை. 

அதாவ‌து, ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை. 

இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை இருக்கும்போதே நாம‌ தெரிஞ்சுக்க‌லாம், பெண்க‌ள் வேலைக்கு போவ‌தையும், ச‌ம்பாதிப்ப‌தையும் இஸ்லாம் எந்த‌ வித‌த்திலும் த‌டுக்க‌வில்லை. இன்னும் சொல்ல‌ப்போனா இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை தான் எனக்கு க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்கிற‌ ஆசைய‌ தூண்டிச்சே. பின்ன‌, நாம‌ ச‌ம்பாதிச்ச‌த‌ ந‌ம்ம‌ இஷ்ட‌ப்ப‌டி செல‌வு செய்ய‌லாம்தானே? (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா?)

ச‌ரி, அப்ப‌ ஏன் பெண்க‌ள் வேலைக்கு போற‌த‌ ப‌த்தி எந்த‌ வித‌ க‌ட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்ப‌டி ஒரு ஆணுக்கு குடும்ப‌த்திற்காக‌ ச‌ம்பாதிப்ப‌து க‌டமையோ, அதே போல‌ ஒரு பெண்ணுக்கு குடும்ப‌த்தை பார்த்துக்கொள்வ‌து கட‌மையாகிற‌து. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலாம். 

உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்காக கஷ்ப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வளவு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன். 

வேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து, 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌. 

அடுத்த‌தா, அள‌வுக்க‌திக‌மான‌ சோஷிய‌லைசிங் இருக்க‌க்கூடாது. ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ. நான் என் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் என‌க்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை என்று சொன்னேன். என்னை ம‌தித்தார்க‌ள். :) 

அதோட‌ ரொம்ப‌ முக்கிய‌ம், ந‌ம்முடைய‌ க‌டமையான‌ தொழுகையையும் பேண‌ அனும‌திக்க‌னும். இது ஆண்க‌ளுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்ப‌து கொஞ்சம் ஓவ‌ர் தான். இருந்தாலும் ச‌மாளிப்ப‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மை. ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை

என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன். 

இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷ‌யத்தில் இது ந‌ட‌ந்திருக்கு. 

ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.

வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பங்கு இருக்குங்கோவ்), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.
==========

சகோதரி நாஸியா அவர்களின் இந்த கட்டுரை அவரின் அனுமதி பெற்று இங்கே பகிரப்பட்டுள்ளது (படம்: கூகிள் உதவி). 

பதிவுலகில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரிகள் அஸ்மா, அன்னு, ஹுசைனம்மா, ஜலீலா கமால், ஆசியா உமர், ஆயிஷா அபுல், மலிக்கா, ஆமினா, ஸாதிகாஃபாயிஜா காதர், பாத்திமா ஜொஹ்ரா, பாத்திமா நிஹாஸா, அப்சரா, ருபீனா, enrenrum16ஆயிஷா பேகம், Zumaras போன்றவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன். 

இறைவா, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அதிகரித்து தருவாயாக...ஆமீன்.  

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஃப‌த்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
2. ஹராம் - தடுக்கப்பட்டது.
3. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது. 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Thursday, February 2, 2012

மீலாது நபி விழா - சில கேள்விகள்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான். 

ஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு. 

முதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன். 

மவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை. 

இறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள். 

தேவையா இந்த விழா?

"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.

தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185

குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம். 

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா? 

நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா? 

இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா? 

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? 

இதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா?

இதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது? முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது? 

சிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 

இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு:

இன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ் 

முஸ்லிமல்லாதவர்களுக்கு: 

தயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். 

இறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ