Thursday, September 30, 2010

தீர்ப்பை மதிப்போம்...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.   

பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் இன்ஷா அல்லாஹ் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. இந்நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

தீர்ப்பு எதுவாகினும் அது இறைவனின் நாட்டம் என்பதை நாம் நன்றாகவே அறிந்துள்ளோம். ஒரு உண்மையான முஸ்லிம் இறைவனுக்கு அடிபணியவும், அவனுடைய தூதர் வாழ்ந்து காட்டியப்படி வாழவுமே நினைப்பான். 

குறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற பெயரையே அழிக்க சொன்ன நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம். சமூக ஒற்றுமையில் நமக்கு மிகப்பெரும் பங்கிருக்கின்றது. இறுதித்தூதரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். தமக்கு ஏற்பட்ட எண்ணற்ற துயரங்களை சகித்து கொண்டு பொறுமையை கடைபிடித்தவர்கள் அவர்கள். 

தான் உண்மையான முஸ்லிம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நபியவர்கள் காட்டிய அந்த பொறுமையை கடைபிடிக்கட்டும். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும். 

உங்கள் உணர்ச்சிகளை தூண்டுமாறு வரும் எந்தவொரு sms சையும் உங்களோடு அழித்து விடுங்கள்.

தீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் அதற்காக உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவருக்கு பாதகம் செய்யும் செயலில் இறங்குபவர்கள் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும். நபியவர்களின் வழிமுறைக்கு எதிரான எந்தவொரு காரியத்தையும் செய்ய நமக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.   

அதே நேரம், தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தால், அதனை காரணமாகக் (மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றேன் என்ற பெயரில்) கொண்டு அடுத்தவருக்கு தொந்தரவு தருபவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள் நான் மேற்கூறியதையே மற்றொரு முறை படித்து கொள்ளட்டும். 

வெற்றியோ, தோல்வியோ இரண்டும் நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் சோதனை தான். பொறுமை காத்து நமக்கான இந்த சோதனையை சந்திப்போம். அதற்கான மனவலிமையை இறைவன் தரவேண்டுமென்று துவாச் செய்வோம். 

போதும், பாப்ரி மஸ்ஜித் இடிபட்டதால் நம் நாடு உலக அளவில் பட்ட அவமானங்கள் போதும். இன்னொரு முறை அது நடக்க வேண்டாம். நீதித்துறையை மதிப்போம், சமூக ஒற்றுமையை காப்போம்....

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 
   
உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ.    


Tuesday, September 28, 2010

(பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.    


       பரிணாமம் குறித்து தேட துவங்கியதில் இருந்தே பல குழப்பங்கள். அவற்றில் சிலவற்றை பரிணாமம் தொடர்பான பதிவுகள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.... அந்த வரிசையில் மற்றொரு குழப்பம். இந்த முறை பிரபல Berkeley பல்கலைக்கழக (University of California, Berkeley) தளத்திலிருந்து...

பரிணாமம் குறித்த தவறான புரிதல்களுக்கு(???) விளக்கம் தருவதற்காக ஒரு பகுதியை (Misconceptions about evolution and the mechanisms of evolution) ஒதுக்கி இருக்கின்றது அந்த தளம். மக்களிடையே உள்ள ஒரு தவறான புரிதலாக பின்வரும் கருத்தை முன்வைக்கின்றது அந்த தளம்,

பரிணாமமும் மதமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை ("Evolution and religion are incompatible")". 

இதற்கான பதிலாக பின்வருவதை கூறுகின்றது அந்த தளம்.

"Religion and science (evolution) are very different things. In science, only natural causes are used to explain natural phenomena, while religion deals with beliefs that are beyond the natural world.
The misconception that one always has to choose between science and religion is incorrect. Of course, some religious beliefs explicitly contradict science (e.g., the belief that the world and all life on it was created in six literal days); however, most religious groups have no conflict with the theory of evolution or other scientific findings. In fact, many religious people, including theologians, feel that a deeper understanding of nature actually enriches their faith" --- Misconceptions about evolution and the mechanisms of evolution, Understanding Evolution, University of California, Berkeley. 
மதம் மற்றும் அறிவியல் (பரிணாமம்) ஆகிய இரண்டும் மிகவும் வித்தியாசமானவை. அறிவியலில், இயற்கை நிகழ்வுகளை விளக்க இயற்கை காரணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மதங்களோ, இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நம்பிக்கைகளை கையாளுகின்றன. 
மதம் மற்றும் அறிவியல் ஆகிய இந்த இரண்டில் ஒன்றை தான் ஒருவர் தேர்வு செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. ஆம், சில மத நம்பிக்கைகள் அறிவியலுக்கு நேர் எதிராக உள்ளன (உதாரணத்துக்கு, ஆறு literal நாட்களில் உலகம் மற்றும் அதிலுள்ள உயிரினங்கள் படைக்கப்பட்டன என்பது போன்ற நம்பிக்கைகள்); ஆனாலும், பெரும்பான்மையான சமய அமைப்புகளுக்கு பரிணாமம் மற்றும் மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பிரச்சனையாக இருப்பதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பெரும்பான்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு, வேத விற்பன்னர்கள் உட்பட, இயற்கை மீதான ஆழமான புரிதல் அவர்களது நம்பிக்கையை மேலும் செழிப்பாக்குகின்றது --- (Extract from the original quote of) Misconceptions about evolution and the mechanisms of evolution, Understanding Evolution, University of California, Berkeley.       
   
Berkeley தளத்தில் காணப்படும் இந்த விளக்கத்தில் என்னை கவனிக்க வைத்தன தொடர்ந்து வந்த கடைசி இரண்டு வரிகள், 

"Moreover, in the scientific community there are thousands of scientists who are devoutly religious and also accept evolution"
"மேலும், அறிவியல் உலகில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஆழ்ந்த இறைநம்பிக்கையும் அதே சமயம் பரிணாமத்தை ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்"

பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் ஆழ்ந்த இறைபக்தி உள்ளவர்களாம். அட....

இதையே வேறு விதமாக சொல்லுவதென்றால், ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் நாத்திகர்கள் இல்லை, அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள்...
இப்போது, கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக பரிணாமத்தை துணைக்கு அழைத்து வரும் நாத்திகர்களை பார்த்து நான் கேட்க விரும்புவது...

 • பரிணாமம் கடவுளை மறுப்பதாக இருந்தால் எதற்காக பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவேண்டும்? 
 • இந்த விஞ்ஞானிகள் "உயிரினங்கள் சிறிது சிறிதாக மாறி பல்வேறு உயிரினங்களாக வந்திருக்கலாம், ஆனால் அதனை நடத்தும் அளவு இயற்கைக்கு தகுதி இல்லை (Natural Selection), இதற்கு பின்னணியில் ஒரு அற்புத சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருப்பார்களோ?   
 • பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்றால், பரிணாமம் கடவுளை மறுக்காது என்று அவர்கள் எண்ணுகின்றார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? 
 • பரிணாமம் கடவுளை மறுக்காது என்று தெள்ளத்தெளிவாக கூறுகின்றது talk origins தளம் (பார்க்க <<புரியாத புதிர்கள்...>>). Berkeley தளமோ, பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் கடவுள் பக்தி கொண்டுள்ளதாக கூறுகின்றது. ஆக, கடவுளை மறுக்காத ஒரு கொள்கையை ஆதாரமாகக் கொண்டு கடவுளை மறுப்பது அறிவுக்கு ஒத்துவருகின்ற ஒன்றா? 
 • இல்லை, talk origins மற்றும் Berkeley ஆகிய தளங்களின் கருத்து தவறா?     
    
பரிணாமம் சரியா தவறா என்கின்ற வாதம் ஒரு பக்கம், அப்படியே அது சரியாக இருந்தாலும் அது இறைவனை மறுக்காது, ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்கின்ற கருத்துக்கள் மற்றொரு பக்கம். 

ஆக, பரிணாமம் உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, அதனை வைத்து இறைவனை மறுக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. 

1) அப்படியென்றால், கடவுளை மறுக்க பரிணாமத்தை ஆதாரமாக காட்டும் நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?     

2) கடவுளை மறுக்காத ஒரு கோட்பாட்டை தங்கள் கொள்கையை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றார்களா? 


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to: 
1. Talk Origins site. 
2. University of California, Berkeley site. 

Reference: 
1. http://evolution.berkeley.edu/evolibrary/misconceptions_faq.php#a1


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அThursday, September 9, 2010

"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்"அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

            சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 


ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ். 

இது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.... 
  

"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.   

அல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.

நான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன். 

என் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும்?, ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்?

என் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள். 

இப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?"  

சிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.  

இறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன். 

இஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம். 

தன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது. 

இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.     

சுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.    

குரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன். 
  
சந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது. 

இங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது. 

மத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். 

இருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.  

அதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.  

இஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம். 

நான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.   

இன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....

ஏஞ்சலா கொலின்ஸ்"     


சகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ். 


இஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        

இத்தளத்தில் உள்ள இஸ்லாத்தை தழுவியவர்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் காண <<இங்கே>> சுட்டவும்.   

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Original article published as: 
1. Why I decided to Submit - Angela Colins, dated 9th September 2006 on islamicity.com. 

Tamil translation of the meanings of the original article written by:
1. Aashiq Ahamed. A

My Sincere thanks to:
1. Youtube.

Reference:
1. Choosing Islam: My Life as a convert - Sandra Marquez, People Magazine dated 4th September 2006. 


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ Saturday, September 4, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - Vஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 


கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - I:


பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் (The Piltdown Man Forgery): 

பில்ட்டவுன் மனிதன், 
 • அறிவியல் உலகால் மறக்க முடியா பெயர். 
 • இருபதாம் நூற்றாண்டின்  மிகப் பெரிய அறிவியல் மோசடியாக, பித்தலாட்டமாக (The Biggest Scientific Hoax of 20th century) அறியப்படும் நிகழ்வு.  
 • குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து  மனிதன் வந்திருக்க வேண்டுமென்ற பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரமாக (The Missing link) காட்டப்பட்ட ஒன்று. 
 • நாற்பது ஆண்டு காலங்கள் உலக மக்களை முட்டாளாக்கிய பரிணாம ஆதாரம்.    

இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம், 

"இது மோசடித்தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."     

ஆம், அவர்களது கருத்து உண்மைதான். ஆனால், அவர்களுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பது தான் உண்மை. 

பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் எதைப் பற்றியது, எப்படி பித்தலாட்டம் நடந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....இன்ஷா அல்லாஹ்....      

பில்ட்டவுன் மனிதனைப் பற்றி..... 

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்கு உள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார் தொல்லுயிரியலாளரான சார்லஸ் டாசன் (Charles Dawson, Amateur palaeontologist). 

அங்கு ஒரு மனித எலும்பு படிமத்தை கண்டெடுத்தார் அவர். பலவித படிமங்கள் அங்கு கிடைக்கலாம் என்று யூகித்த அவர், 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி தன் நண்பரான ஆர்தர் கீத் வுட்வர்ட் (Arthur Keith Woodward) அவர்களுக்கு தன் கண்டுபிடிப்புகளை பற்றி தெரிவித்தார். 

ஆர்தர் கீத் அவர்களும் தொல்லுயிரியலாளர் தான். பிரிட்டிஷ் இயற்கை வரலாறு அருங்காட்சியக (British Natural History Museum) பணியில் இருந்தவர். 

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகளை அதிகப்படுத்தினர். இவர்களுடன் தே சார்டின் (Teilhard de Chardin, priest and amateur geologist) என்பவரும் சேர்ந்து கொண்டார். இந்த குழு அந்த இடத்தில் பல்வேறு படிமங்களை கண்டெடுத்தது. அவை, 

 • மனிதக் குரங்கு போன்ற ஒன்றின் கோரைப்பல் நீங்கலான தாடைப்பகுதி (ape-like lower jaw missing the canine). 
 • மனித மண்டை ஓடு பகுதிகள் (human-like skull). 
 • மற்றும் சில விலங்குகளின் மிச்சங்கள்.          கண்டெடுத்த இந்த படிமங்களை புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர் கீத்தும் டாசனும்.

(மண்டை ஓடு மற்றும் தாடையின் சில பகுதிகள் தான் கிடைத்தன என்றாலும் அவற்றை உதவியாக வைத்து மண்டை ஓட்டை பின்னர் சில ஆண்டுகள் கழித்து புனரமைப்பு செய்தனர் (Re-construction))  


(காலப்போக்கில் அதற்கு முகமும் உருவானது)


  
மனித மண்டை ஓடும், குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமங்கள் தான் என்பது போன்ற கூற்று உருவானது. அதுமட்டுமல்லாமல், தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனித பற்களைப் போன்று இருந்தன. இந்த படிமங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்ற பரிணாம கருத்துக்கு ஆதரவாக இருந்ததால், மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினம் (Missing Link) கிடைத்து விட்டதாக நம்பப்பட்டது. 

இந்த உயிரினத்துக்கு "பில்ட்டவுன் மனிதன்" என்று பெயர் சூட்டினர். இவன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கூறினர்.     

ஆனால் இதனை சில அறிவியலாளர்கள் நம்ப மறுத்தனர். இந்த இரண்டு படிமங்களும் வெவ்வேறு உயிரினத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர்களது கருத்து எடுபடவில்லை. 

21-11-1912 அன்று இது குறித்த செய்தியை கார்டியன் பத்திரிக்கை வெளியிட விஷயம் படுவேகமாக பரவியது. மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக புகழப்பட்டது. 

1913 ஆம் ஆண்டு பில்ட்டவுன் மனிதன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டான். அதே ஆண்டு, தாடைப் படிமம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் இருந்து ஒரு கோரைப்பல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கோரைப்பல் குரங்கின் பல்லை விட மனிதனின் பல் போன்று இருப்பதாக கீத் தெரிவித்தார். இது விடுபட்டு போன கோரைப்பல் தான் என நம்பப்பட்டது. 

இது, பில்ட்டவுன் மனிதன், குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் தான் என்ற கூற்றை மேலும் வலுப்படுத்தியது.  

இரண்டு ஆண்டுகள் கழித்து, படிமங்கள் முதலில் எடுக்கப்பட்ட கல்சுரங்கத்திற்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் இரண்டாவது பில்ட்டவுன் மனிதனின் மிச்சங்களாக சில மூளைப்பகுதி ஓடுகள், ஒரு கடவாய்ப்பல் (molar tooth) போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 

இப்போது முன்னர் சந்தேகம் தெரிவித்த அறிவியலாளர்களில் பலர் பில்ட்டவுன் மனிதனை நம்ப ஆரம்பித்தனர். 

(இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களும் வெவ்வேறாக இருந்தன. உதாரணத்துக்கு, முதல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் தாடை இருந்தது. இரண்டாம் இடத்தில் அது இல்லை. முதல் இடத்தில் கோரைப்பல் கிடைத்தது, இரண்டாம் இடத்தில் கடவாய்ப்பல் கிடைத்தது)      

மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், இந்த இரண்டாம் இடத்தை பற்றி அறிந்தவர் சார்லஸ் டாசன் மட்டுமே, வேறு யாருக்கும் இந்த இரண்டாம் பில்ட்டவுன் மனித மிச்சங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியாது. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் இந்த இடம் முதல் இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது என்பது மட்டும்தான். இதற்கு காரணம், இரண்டாம் இடத்திலிருந்து மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில காலங்களில் டாசன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் (1916). அதனால், இன்று வரை அந்த இரண்டாம் இடம் எது என்று அறிவியலாளர்களுக்கு தெரியாது. 

டாசனின் வாழ்வு முடிந்தது, ஆனால் பில்ட்டவுன் மனிதன் குறித்த சர்ச்சைகள் லேசாக வெளியில் வர ஆரம்பித்தன. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, டாசன் மறைவிற்கு பின்னர் அந்த கல்சுரங்கத்தில் இருந்து வேறு எந்த மனித படிமங்களும் கிடைக்கவில்லை. இந்த ஒரு படிமம் மட்டும் தான். இது சந்தேகத்தை அதிகப்படுத்த போதுமானதாக இருந்தது.

எப்போது பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் அம்பலமானது?    
    
1924 ஆம் ஆண்டிலிருந்து காட்சிகள் வேகமாக மாற ஆரம்பித்தன. அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. 1946 ஆம் ஆண்டு வரையிலான இந்த காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு இடங்களில் இருந்து "ஆதி" மனிதனின் படிமங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. (உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து, ஜாவாவில் இருந்து). இவை அனைத்தும் பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டன (பில்ட்டவுன் மனிதனின் குரங்கு தாடை போல எதுவும் இல்லை).   

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒரு கையில் பில்ட்டவுன் மனித படிமங்கள் மற்றொரு கையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள். இவற்றில் எது மனித பரிணாமத்தை விளக்குகிறது என்று புரியாமல் பரிணாமவியலாளர்கள் குழம்பி போயினர். 

1924 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்கால மனித படிமம் (Australopithecus), பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் ஒத்துபோகவில்லை என்று கூறி அந்த படிமத்தை நிராகரித்திருக்கின்றனர் என்றால் பில்ட்டவுன் மனிதன் பரிணாம உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா? 

பரிணாமவியலாளர்கள் மற்ற படிமங்களை கைவிட்டு விட்டு பில்ட்டவுன் படிமத்தை விடாப்பிடியாக பிடித்திருக்க முக்கிய காரணம், அது, மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற அவர்களது நம்பிக்கையை மெருகூட்டியதால் தான். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட மற்ற படிமங்களை வைத்து மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. ஆனால் பில்ட்டவுன் மனிதனை வைத்து அப்படி கூற முடியும், அது மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கான நேரடி ஆதாரம். அதனால் அவர்கள் பில்ட்டவுன் மனிதனை கைவிட விரும்பவில்லை. 

ஆனால், காலம் செல்ல செல்ல, மற்ற இடங்களில் படிமங்கள் அதிகமாக கிடைக்கப்பட, பில்ட்டவுன் மனிதனுக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. அது எப்படி பில்ட்டவுன் மனித படிமம் மட்டும் உலகின் மற்ற படிமங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும்? 

இந்த கேள்வி மிக அதிக அளவில் எழ ஆரம்பித்தது. இப்போது பரிணாமவியலாளர்களுக்கு வேறு வழி இல்லை. பில்ட்டவுன் மனித படிமத்தை தெளிவாக ஆராய வேண்டிய சூழ்நிலை.

1940களில் படிமங்களின் வயதை கண்டிபிடிக்கப் பயன்படுத்தப்படும் ப்லூரின் சோதனை (Fluorine Test) புழுக்கத்திற்கு வந்த நேரம். இந்த புதிய யுக்தியை கொண்டு பில்ட்டவுன் மனிதனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார் கென்னத் ஓக்லி என்ற தொல்லுயிரியலாளர். 

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொண்டு வந்தன ஆய்வு முடிவுகள். 

முதல் ஷாக் என்னவென்றால், பில்ட்டவுன் மனித படிமம் ஐந்து லட்ச ஆண்டுகளுக்கு முந்தையதெல்லாம் கிடையாது, வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்பது.

இது பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால், இன்றைய மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தற்போதைய நிலையை அடைந்து விட்டான் என்பது அவர்களது புரிதல்.    

மனிதன் நன்கு பரிணாமித்து விட்ட காலக்கட்டத்தில், பரிணாமித்து கொண்டிருக்கும் பில்ட்டவுன் மனிதன் எப்படி இருக்க முடியும்?..... இது முதல் கேள்வி.    

ஆனால் இதுவெல்லாம் என்ன அதிர்ச்சி என்பது போல இருந்தன அடுத்தடுத்த நிகழ்வுகள். அவை அறிவியல் உலகை ஸ்தம்பிக்க வைத்தன.    

1953 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஜோசப் வெய்னர், கென்னத் ஓக்ளியுடன் சேர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். 

இரண்டாவது ஷாக்.....நன்கு முன்னேறிய யுக்திகளை வைத்து மறுபடியும் பில்ட்டவுன் மனித படிமங்களை சோதனை செய்து பார்த்ததில், மண்டை ஓடு மனிதனுடையது என்றும், தாடையோ ஓராங்குட்டான் குரங்கினுடையது என்றும் தெரியவந்தது. வேதிப்பொருட்களை கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதானவையாக தெரியவைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆக இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் பகுதிகள் அல்ல, இரண்டும் வெவ்வேறு உயிரினங்களின் பகுதிகள் என்ற உண்மை வெளிவந்தது.

அதுமட்டுமல்லாமல், தாடைப்பகுதில் இருந்த பற்கள் ஒராங்குட்டான் குரங்கின் பற்கள் என்றும், மனித பற்களாக தெரிய வைக்க அவை கருவிகளை கொண்டு தீட்டப்பட்டு, மண்டை ஓடு படிமத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை கறைப்படவும் செய்திருக்கின்றனர். 

நேர்த்தியாக செய்யப்பட்ட இப்படியொரு பித்தலாட்டத்தால் அறிவியல் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு தெளிவான ஆதாரமாக காட்டப்பட்ட ஒன்று பரிணாமவியலாளர்கள் கண்முன்னே கரைந்து போனது. 

1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்" என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.  லண்டன் ஸ்டார் பத்திரிக்கையின் தலையங்கமோ  "இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி" என்று கூறியது.

சுமார் நாற்பது ஆண்டு காலம் மக்களை முட்டாளாக்கி இருக்கின்றான் பில்ட்டவுன் மனிதன்.      

ஆனால் காட்சி இதோடு முடியவில்லை. இதற்கு மேல் தான் க்ளைமேக்ஸ்சே இருந்தது.

1959 ஆம் ஆண்டு கார்பன்-14 யுக்தியை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு சுமார் 520-720 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாகவும், தாடையோ சற்று இளையதாகவும் (சுமார் 500 ஆண்டுகள்) தெரியவந்தது. கோரைப்பல்லோ ப்ளீஸ்டோசின் (Pleistocene Age: about 1.8 Million - 10,000 years before current period) கால சிம்பன்சி குரங்கினுடையது என்று தெரிய வந்தது.   

ஆக, மனித மண்டை ஓடு மற்றும் குரங்கின் தாடை என இவ்விரண்டும் மத்திய காலத்தை (Medieval Period) சேர்ந்தவை. இந்த பித்தலாட்டத்தை செய்தவர்/செய்தவர்கள் அவற்றை எடுத்து, அவை பழங்கால உணர்வு கொடுக்க வேண்டுமென்பதற்காக வேதிப்பொருட்களை கொண்டு அவற்றை மாற்றி அந்த கல்சுரங்கத்தில் போட்டிருக்கின்றார்/போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நேர்த்தியாக மோசடியை செய்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக தொல்லுயிரியல் துறை பற்றி நன்கு அறிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது இந்த பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்தவர்களின் கருத்து.        

இதனை செய்தவர்கள் யார்? 

இதை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. பலர் மீது சந்தேகப்படுகிறார்கள், அவர்களில் சிலர்,

 • Charles Dawson, 
 • Tielhard de Chardin, 
 • W. J. Sollas, 
 • Grafton Elliot Smith, 
 • Arthur Conan Doyle,
 • Martin A. C. Hinton   

போன்றவர்கள் ஆவர். Talk origins தளம் இன்னும் பலரது பெயரை குறிப்பிடுகிறது.

பலரின் மீது சந்தேம் இருந்தாலும் இந்த மனிதனை கண்டுபிடித்த டாசன் மீதே அதிக சந்தேகம் இருக்கின்றது. பிபிசி, டாசனை அதிகமாகவே சந்தேகிக்கின்றது. இதற்கு,  

 • 1900 களில், டாசன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஹாஸ்டிங்க்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து இதே போன்ற ஒரு மண்டை ஓடு காணாமல் போனது, 
 • டாசன் இறந்ததிலிருந்து அந்த பகுதியில் வேறு படிமங்கள் கிடைக்கவில்லை என்பது

போன்ற காரணங்களை கூறுகின்றது.

டாசன் மீது பலரும் சந்தேகப்பட்டாலும் இன்று வரை இதனை செய்தவர் யார் என்பது புரியாதப் புதிராகவே உள்ளது...


"நாங்கள் தானே இதை கண்டுபிடித்தோம்...."
    
இப்போது பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கேள்வியை இங்கே கொண்டு வந்து பொருத்தி பார்ப்போம்.                        

இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம், 

"இது மோசடி தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."     

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.... ஆம், அவர்கள் தான் மோசடியை கண்டுபிடித்தார்கள். நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் தான் அவர்கள்........

ஆனால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வேலை, உலகின் மற்ற இடங்களில் மனித படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே.      

ஆக, இந்த பித்தலாட்டம், பரிணாமவியலாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்பதை காட்டிலும், மனித பரிணாமம் குறித்த இருவேறு குழப்பங்களிருந்து அவர்களை விடுவித்து நிம்மதியடைய செய்தது என்பதே சரி.     


சில கேள்விகள்... '

இந்த பித்தலாட்டத்தின் மூலம் எனக்குள் எழும் சில கேள்விகள், 

 • இந்த பித்தலாட்டத்தின் நோக்கம் என்ன? 
 • ஒரு பொய்யை உண்மையாக காட்ட இத்தனை சிரத்தை எடுத்தது ஏன்?   
 • பரிணாம கோட்பாட்டை உண்மை என்று மோசடி செய்து நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? 


இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...

இது மூலமாக நமக்கு கிடைக்கும் படிப்பினை, பரிணாமவியலாளர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தங்கள் கொள்கையை உண்மை என்று காட்ட எந்த நிலைக்கும் அவர்கள் இறங்குவார்கள் என்பது.

எது எப்படியோ இந்த பித்தலாட்டம் நமக்கு சொல்லக்கூடிய செய்தி,  வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரத்தை பரிணாமவியலாளர்கள் காட்டினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகளாவது பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென்பது.

நான் ஏற்கனவே பலமுறை கூறியது தான். பரிணாமத்திற்கு ஆதாரம் என்று வரலாற்றில் எதுவும் இல்லை.

நாய் (அல்லது நரி) போன்ற ஒன்றிலிருந்து குதிரை வந்திருக்க வேண்டுமென்று ஆதாரம் காட்டுவார்கள், பார்த்திருக்கின்றீர்களா?.... உயிரினங்களை, உருவத்தின் படி சிறியதிலிருந்து பெரியது வரை வரிசையாக அடுக்கி வைத்து குதிரை பரிணாமத்தை விளக்குவார்கள். இதுவெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று.  ஆனால் இன்றும் சிலர் இதனை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவது ஆச்சர்யமளிக்கின்றது. 

அதுபோல, மீனுக்கும் நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினம் என்று சீலகந்த் என்ற மீனை ஆதாரம் காட்டினார்கள். அது 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டது என்றும் கூறினார்கள். ஆனால் அந்த மீனோ 1930களின் பிற்பகுதியில் ஆப்ரிக்க கடல் பகுதியில் தென்பட்டு பரிணாமவியலாளர்களை திக்குமுக்காட செய்தது. அதுமட்டுமல்லாமல், ஆழ்கடல் உயிரினமான அந்த மீன் கடலின் தரைப்பகுதில் இருந்து சுமார் 150 மீட்டர்கள் வரை கூட மேலே வராது  என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்தது. ஆக, இந்த ஆதாரமும் மறைந்தது. 

இப்படியாக இவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஒவ்வொன்றாக காணாமல் போயின.

இன்ஷா அல்லாஹ் அவற்றை பற்றி எதிர்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.    

ஆதாரமே இல்லாமல் வெறும் யூகத்தால் அமைந்த ஒரு கோட்பாட்டை அறிவியல் என்று சொல்வது சரியா அல்லது கதை என்று சொல்லுவது சரியா....

இறைவன் இது போன்ற மோசடிகளிலிருந்து நம்மை வழி தவற செய்யாமல் பாதுகாப்பானாக...ஆமின்.  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to, 
1.Talk Origins Website.
2. Natural History Museum, London.
3. BBC.

References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.