Monday, February 14, 2011

துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர் (இவரைப் பற்றிய கட்டுரையை படிக்க <<இங்கே>> சுட்டவும்). 

சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய "துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்(1)" என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.     

"மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று நடந்தது.

கண்களில் கண்ணீர் மல்க ஒரு பெண் எனக்கு பக்கத்தில் நின்றிருந்தார். தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் துனிசியா திரும்ப பாஸ்போர்ட் எடுக்க அன்று காலையிலிருந்து தூதரகத்தினுள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது முகம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தெரிந்தது, ஆனால் எங்கு பார்த்தேனென்று நினைவுக்கு வரவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரை இவரை உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் தூதரக அதிகாரிகள். ஆனால் இன்றோ, தொலைந்து போன மகளை கண்டது போல சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கின்றனர். ஒரு அதிகாரி "தூதரை சந்திக்க விருப்பமா?" என்று கூட கேட்டிருக்கின்றார். 

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க, இவரை நான் ஏற்கனவே சந்திருக்கின்றேன் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் எங்கே?

முன்னாள் துனிசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பென் அலி மற்றும் அவரது மனைவி லீலா குறித்து பேச்சு திரும்பியது. தன்னுடைய கணவருக்கு பிறகு அதிபர் பதவியை அடைய லீலா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இவர்களது தற்போதைய இருப்பிடம், இரண்டு புனித பள்ளிவாசல்களின் இருப்பிடமான சவூதி அரேபியா. இதனை எண்ணி நாங்கள் இருவரும் சிரித்தோம். ஐந்து வேலையும் பாங்கு(2) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் நாட்டில், அதனை தாங்கி கொண்டு பென் அலியும் லீலாவும் எப்படி இருக்கப்போகின்றார்கள்?

இவர்கள் இருவரும் தேசிய தொலைக்காட்சியில் பாங்கு சொல்லப்படுவதை தடை செய்தவர்கள், ரமலான் நோன்பை புறக்கணித்தவர்கள், அந்நிய நாட்டு கலாச்சாரம் என்று ஹிஜாபை தடை செய்தவர்கள். சுருக்கமாக சொல்லுவதென்றால், தாங்கள் விரும்பியது போல நடந்து கொண்டவர்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்வா(3) கொடுக்க தங்களுக்கு அடிபணிந்த அறிஞர்களையும் வைத்து கொண்டவர்கள்.

நாகரிகமற்ற தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்தவர் பென் அலி. சித்திரவதை, விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளுவது, அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறை என இவை அனைத்தும் துனிசியாவில் சர்வ சாதாரணமாய் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்கள் கிழித்தெறியப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் பென் அலி. பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைகழகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தவர் அவர்.

சிறைகளில் குரான் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் தொழுதால் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

அவரையும், அவரது ஊழல் மிகுந்த அரசாங்கத்தையும் புகழ்த்து பேசும் இமாம்களை அவரது ஆட்சிமுறை கொண்டு வந்தது. இதன் மூலமாக அவர்கள் என்ன எதிர்ப்பார்த்தார்களோ அது நடந்தது. இறையச்சம் கொண்டோரை பள்ளிவாசல்களில் இருந்து அது தள்ளியிருக்கச் செய்தது.

வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம் இளைஞர்கள் விரைவாக பள்ளிவாசலுக்கு செல்லாததில் ஆச்சர்யமொன்றுமில்லை. (ஏனென்றால்) குத்பாவின்(4) பாதி நேரத்தை, பென் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகழ் பாடி செலவழித்து கொண்டிருந்தவர்கள் அந்த இமாம்கள்.

முன்னாள் சிகை அலங்காரரான லீலாவை நினைத்து நானும் அந்த சகோதரியும் ஆச்சர்யப்பட்டோம். ஜித்தாவில் இருக்கும் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து ஒவ்வொருமுறை வெளியேறும் போதும் அவர் கருப்பு நிற அபாயா அணிய வேண்டுமே? இது குறித்த அவரது பார்வை எப்படியிருக்கும்? மார்க்க பற்றுள்ள சவூதி காவல்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

துனிசியாவில் இருந்து அவர்கள் புறப்படும் பொழுது, அவர்கள் சென்றடைய விருப்பப்பட்ட இடங்களின் பட்டியலில் நிச்சயம் சவூதி இருந்திருக்காது.

"சாரி, லண்டன், பாரிஸ், நியூயார்க், மொனாகோ அல்லது ஜெனிவாவில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை, ஜித்தா எப்படி?" என்று அந்த கெட்ட செய்தியை விமானி அவர்களிடம் தெரிவித்த போது அவர்களது உணர்வுகள் எப்படி இருத்திருக்கும் என்பதை நான் பார்க்காமல் போய் விட்டேன்.

பென் அலியின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களுமே என்னை முதன் முதலாக, 2006ல், லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்தின் முன் நிற்க வைத்தது. இஸ்லாமை பின்பற்ற என்னுடைய சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளுக்காக போராட வைத்தது.

அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்?, தங்களை திருப்திபடுத்தவா?, அல்லது தங்களுக்கு பாதுகாவலாய் விளங்கி வந்த, உற்ற நண்பர்கள் போல் நடித்து வந்த மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்தவா?

பிப்ரவரி 2009ல், துனிசியாவில் நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்கின்றேன். அப்போது நூற்றுக்கணக்கான பென் அலியின் ஆதரவாளர்கள் நாங்கள் தொழுவதையும், வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நாங்கள் கலந்து கொள்வதையும் தடுக்க தங்களால் முடிந்த வரை முயன்று பார்த்தார்கள்.

நாங்கள் எங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த தெருவிலேயே தொழுதோம். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மிரட்சி இருக்கின்றதே, அதனை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி அந்த சகோதரியிடம் கூறிக்கொண்டிருந்தேன். பென் அலி மற்றும் லீலாவின் தற்போதைய நிலையை எண்ணி மீண்டும் சிரித்தோம்.

என்னவொரு உணர்ச்சிகர நிலை, மேற்குலகின் நிலையில்லாத நண்பர்களால் கைவிடப்பட்ட பிறகு இவர்களது உதவிக்கு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். மன்னிப்பதென்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய பண்பு. ஆனால், அந்த பண்பை இவர்களை நோக்கி காட்ட நினைக்ககூடிய நிலையில் கூட தற்போது துனிசியர்கள் இல்லை.

தங்கள் மக்களிடம் இவர்கள் காட்டாத கருணையை இன்று சில முஸ்லிம்கள் இவர்களிடம் காட்டியிருக்கின்றார்கள். இதற்கு நன்றியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிந்த பெண்கள், இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றிய சகோதரர்கள், மனித உரிமை இயக்கத்தினர் என இவர்கள் அனைவர் குறித்தும் பென் அலி தனக்குள்ளாக பிரதிபளித்து கொள்ள வேண்டிய தருணம் இது.

தன்னுடைய மக்களுக்கு இவர் கொண்டு சென்ற திரித்த, நீர்த்து போன இஸ்லாத்தை போலல்லாமல், இனியாவது இவர் தூய இஸ்லாத்தை கண்டெடுப்பாரா என்றெண்ணி அதிசயக்கின்றேன்.

அந்த சகோதரியை நோக்கி திரும்பி, இனியாவது ஹிஜாபின் மகிமையை லீலா புரிந்து கொள்வாரா என்று இன்னும் அதிகமாக ஆச்சர்யப்படுகின்றேன்.

இதனை கூறிக்கொண்டிருக்கும் போதே, என்னருகில் இன்று கொண்டிருக்கும் இந்த பெண் யாரென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் 2006ல், துனிசிய தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்திருக்கின்றோம்.

சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பென் அலியின் குண்டர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகளை என்னிடத்தில் அப்போது விவரித்தார் இவர். குரலில் நடுக்கத்துடன் அன்று இவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.
"லண்டனுக்கு வந்த பிறகும் என்னுடைய ஹிஜாப் இன்னும் என் சட்டைப்பையில் இருக்கின்றது" 
இவருடைய கதையை கேட்டு அன்று நான் கண்கலங்கியது எனக்கு நன்கு நினைவிருக்கின்றது.

தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..."


அல்ஹம்துலில்லாஹ்....

யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்: 
1. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் மற்றும் கை மணிகட்டுகளை தவிர்த்து உடல் முழுவதும் மறைக்கும் விதமாக உடையணியும் முறையை குறிக்கின்றது.
2. பாங்கு - தொழுகைக்காக பள்ளிவாசல்களிலிருந்து எழுப்பப்படும் அழைப்பு.
3. பத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
4. குத்பா - பிரசங்கம்/சொற்பொழிவு.  
5. உம்மத் - நம்பிக்கையாளர்களின் சமூகம் (Community of Believers).

Sister Yvonne Ridley's official website:
i. http://yvonneridley.org

References:
i. Hijab Makes a Return in Tunisia - Yvonne Ridley, 25th January 2011. link.
ii. துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம் - சகோதரர் முஹம்மது ஆஷிக். link.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.


Friday, February 11, 2011

வெளியேறினார் முபாரக்...அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)...

------------
எகிப்து புரட்சி வென்றதற்கு பின்பான தகவல்கள் இந்த பகுதியில் தொடர்ந்து  update செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்.
-----------

எகிப்து மக்களின் அமைதி புரட்சி வென்றது....அதிபர் பதவியிலிருந்து விலகினார் முபாரக்....அல்லாஹு அக்பர் என்ற கோஷங்கள் வானை பிளக்கின்றன...அதிபர் முபாரக் பதவி விலகியதாக சில நிமிடங்களுக்கு (11/02/2011, 7 PM local) முன் துணை அதிபர் சுலைமான் அறிவித்தார். Supreme Council of Armed Forces முபாரக்கின் அதிகாரங்களை கவனிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியாக, இறைவன் மக்களுக்கு அருள் புரியட்டும் என்பதோடு அவரது பேச்சு முடிந்தது. 

----------
துணை அதிபரின் உரை:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்,

நாடு தற்போது சந்தித்து கொண்டிருக்கும் கடுமையாக சூழ்நிலைகளை மனதில் கொண்டு அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக ஹோஸ்னி முபாரக் முடிவெடுத்திருக்கின்றார். உயர் இராணுவ மன்றத்திடம் (Higher Council of the armed forces) நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் ஒப்படைத்துள்ளார்.

இறைவன் மக்களுக்கு அருள் புரிவானாக..
-----------

காசாவில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக பி.பி.சி தெரிவிக்கின்றது. ஆயிரகணக்கான  பாலஸ்தீனியர்கள் எகிப்து வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக பேரணியும் நடத்தியுள்ளனர்.

இந்த புரட்சியின் வெற்றிக்கு பின்னணியில் பேஸ்புக் சமூக தளத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. அதுபோலவே  அல்ஜசீராவிற்கும். எப்படி துனிசிய புரட்சிக்கு பின்னணியில் அல்ஜசீரா உறுதுணையாக நின்றதோ அதுபோலவே இந்த புரட்சியிலும் மிகப்பெரிய பங்கை அது ஆற்றியுள்ளது.      

12/02/2011:

கடந்த மூன்று வாரங்களாக இராணுவம் நடந்து கொண்ட விதம் எகிப்து மக்களிடையே பெரும் வரப்பேற்பை பெற்றிருக்கின்றது. முஸ்லிம் சகோதரத்துவ கட்சி இராணுவத்தின் பங்கை பாராட்டியுள்ளது. பொறுப்போடும், விவேகத்துடனும் இராணுவம் நடந்து கொண்டதாக எகிப்து மக்களின் நன்மதிப்பை பெற்ற இஸ்லாமிய அறிஞரான மாவொஹ் மசூத் தெரிவித்துள்ளார்.

"அபார வெற்றி" என்று புரட்சியின் முடிவை வர்ணித்துள்ளது ஈரான்.

முபாரக்கின் முடிவை நம் நாடு வரவேற்றுள்ளது.

புரட்சியின் வெற்றி குறித்து இதுவரை இஸ்ரேல் எந்த அறிக்கையும் விடவில்லை. இது, இஸ்ரேலின் மனநிலையை நன்கு பிரதிபலிப்பதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.

தற்காலிக கட்டத்திற்கான நடவடிக்கைகளை விரையில் அறிவிக்க போவதாக உயர் இராணுவ மன்றம் அறிவித்துள்ளது.  

பேஸ்புக் பற்றிய ஒரு நகைச்சுவை உலாவுவதாக அல்ஜசீராவின் வலைப்பூ கூறுவது,
மறுமையில், முன்னாள் அதிபர்களான அன்வர் சாடத் மற்றும் கமல் அப்தல் நாசரை சந்திக்கின்றாராம் முபாரக். அப்போது அவ்விருவரும் முபாரக்கை பார்த்து கேட்டார்களாம், "படுகொலை செய்யப்பட்டீர்களா அல்லது விஷம் வைக்கப்பட்டீர்களா?" என்று. அதற்கு முபாரக் சொன்ன பதில், "இல்லை, பேஸ்புக்".

தஹ்ரிர் சதுக்கத்தில் தான் அமைத்த தற்காலிக தடைகளை அகற்றி கொண்டிருக்கின்றது இராணுவம். சதுக்கத்தில் நிறைந்திருக்கும் குப்பைகளை அரசு ஊழியர்களுடன் சேர்ந்து மக்களும் அப்புறப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

13/02/2011:

நீண்ட நாள் அமைதிக்கு பிறகு, இறுதியாக, புரட்சியை வரவேற்றுள்ளது சவூதி. சென்ற மாதம் முபாரக்குக்கு ஆதரவாக சவூதி மன்னர் கருத்து தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.

சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்புவதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஸ்தம்பித்து போயிருந்த பங்கு வர்த்தகம் புதன்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.       

மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் எந்த வகையிலும் மீறப்பட மாட்டாது என்ற உயர் இராணுவ மன்ற அறிக்கை இஸ்ரேலுக்கு வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இந்த அறிக்கையை அது வரவேற்றுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அரசியல் சாசனமும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. எகிப்து மக்களின் மற்றுமொரு முக்கிய கோரிக்கையும் நிறைவேறியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ 


Tuesday, February 8, 2011

தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!!உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

பரிணாம ஆதரவாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல். 

அமெரிக்காவின் பெரும்பாலான உயர்நிலை பள்ளி உயிரியல் ஆசிரியர்கள், பரிணாமத்தை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுகின்றார்களாம். யார் சொல்வது இதை?....கடந்த மாதம் 28-ஆம் தேதியிட்ட பிரபல ஆய்விதழான SCIENCE தான் தெரிவிக்கின்றது இந்த செய்தியை....

உயிரியல் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட தேசிய ஆய்வு முடிவுகளை ஆவணச் செய்த ஆய்வாளர்கள் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை வெளியிட்டுள்ளனர். 

1. 28% ஆசிரியர்கள் மட்டுமே தேசிய ஆய்வு குழுவின் பரிந்துரைகளின் படி பரிணாமத்தை நடத்துபவர்களாக இருக்கின்றனர். 

அது என்ன பரிந்துரை?...

பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை அறிமுகப்படுத்துவது, உயிரியலின் பல பிரிவுகளை இணையக்கூடிய ஒன்றாக பரிணாமம் இருக்கிறதென்பதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை வகுப்பது என இவைதான் அந்த பரிந்துரைகள். 

2. இதற்கு நேர்மாறாக, 13% ஆசிரியர்கள், படைப்புவாதத்தையோ அல்லது Intelligent Design கோட்பாட்டையோ (இதனை பற்றி படிக்க <<இங்கே>> சுட்டவும்) ஆதரித்து வெளிப்படையாகவே போதிக்கின்றனர். இதற்காக குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வகுப்புகளில் செலவிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அறிவியல் முறைகளை வைத்து உயிரினங்களின் தோற்றத்தை அறிய முடியுமென்பதை நிராகரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பரிணாமம் மற்றும் படைப்புவாதம் என்ற இந்த இரண்டுமே நம்பிக்கைகளே ஒழிய, இந்த இரண்டையும் முழுவதுமாக நிரூபிப்பதோ அல்லது நிராகரிப்பதோ முடியாது என்றும் நினைக்கின்றனர்.          

மேலே பார்த்த தகவல்கள் உங்கள் புருவங்களை உயரச் செய்திருந்தால் மேற்கொண்டும் படியுங்கள். 3. அது சரி, மீதி இருக்கக்கூடிய சுமார் 60% ஆசிரியர்கள் எப்படி? 

இவர்கள் பரிணாமத்தையும் ஆதரிக்கவில்லையாம், படைப்புவாததையும் ஆதரிக்கவில்லையாம். இரண்டுக்கும் நடுவிலே இருக்கின்றார்களாம். இவர்களை "ஜாக்கிரதையான 60%" என்று குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். 

அதாவது, இந்த இரண்டில் எது சரி என்ற சர்ச்சையில் சிக்கி கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்கின்றார்களாம்!!!!!!!!!!

வகுப்புகளில் பரிணாமத்தை இவர்கள் மூன்று வழிகளில் அணுகுகின்றார்களாம். 

 • ஒரு சாரார், Micro Evolution (ஒரு உயிரினத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள்)  மட்டுமே உண்மை என்பது போல நடத்துகின்றார்களாம். அதாவது, ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் வந்திருக்க வேண்டுமென்று சொல்கின்ற Macro Evolution னை அவர்கள் பொருட்படுத்துவதில்லையாம். 
 • இரண்டாவது சாரார், பரிட்சைகளை கணக்கில் கொண்டு மட்டுமே பரிணாமத்தை நடத்துகின்றார்களாம். அதாவது " நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ, பரீட்சைக்கு இது தேவைப்படும், அதனால் இதனை படியுங்கள்" என்று கூறுபவர்களாக இருக்கின்றார்களாம்.
 • மூன்றாவது சாராரோ, உயிர்கள் தோற்றம் குறித்து பேசுகின்ற அனைத்து கோட்பாடுகளையும் தங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனராம். "நாங்கள் அனைத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நீங்களே எது சரியென்று முடிவெடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்லுபவர்களாக இருக்கின்றார்களாம். 

ஆக, நாம் முன்னர் பார்த்த 13% ஆசிரியர்களை விட, இந்த 60% ஆசிரியர்கள் தான் பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த கவலையை கொடுத்திருக்கின்றனர். 

சரி, ஆசிரியர்கள் பரிணாமத்தை ஆதரிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் தேவையென அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

 • நன்கு பயிற்றுவிக்கப்பட்ட உயிரியல் ஆசிரியர்களை பணியமர்த்துவது, 
 • கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் (எதிர்க்கால உயிரியல் ஆசிரியர்களுக்காக) பரிணாமம் குறித்த இளங்கலை பாடப்பிரிவை கொண்டு வருவது, 
 • கடைசியாக, அவ்வப்போது பரிணாமம் குறித்த மறுபயிற்சி (refresher courses) வகுப்புகளை ஆசிரியர்களுக்கு நடத்துவது, 

என இவை மாற்றங்களை கொண்டு வரலாமென இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதில் நிச்சயமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆலோசனைகளை செயல்படுத்த கல்விக்கூடங்கள் முன்வர வேண்டும். அப்போது தான் பரிணாமத்தின் உண்மை முகம் இன்னும் வேகமாக தெரிய வரும்.   

அதெல்லாம் சரி, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பரிணாமம் பற்றிய தெளிவு இல்லை என்று அவர்கள் மீது பழியைப்போடும் பரிணாமவியலாளர்கள், தங்களுடைய பாரபட்சத்தை தள்ளி வைத்து விட்டு சிந்திக்க முன்வருவார்களா? ஏன் இத்தனை ஆசிரியர்கள் பரிணாமத்தை உண்மையென போதிக்காமல் குழப்பத்தில் இருக்கின்றார்கள் என்று ஆய்வு செய்ய முன்வருவார்களா?

பரிணாம கோட்பாடு என்னும் உரலுக்குள், "இது வரை கிடைத்த ஆதாரங்கள்" என்னும் உலக்கை சரியாக பொருந்த மாட்டேங்கின்றதே,  ஆசிரியர்களின் தயக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமென இவர்களுக்கு புரியவில்லையா? சர்ச்சைக்கான அடிப்படை பிரச்சனை தங்களிடம் தான் உள்ளது என்பது தெரியவில்லையா?

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம், பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உண்மைகள் மேலும் வேகமாக பலரையும் சென்று அடையவேண்டுமென்று...

இறைவா, எங்களை என்றென்றும் நேர்வழியில் நிலை நிறுத்துவாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to:
1. Pennsylvania State University.

Picture taken from:
1. Carbon friend's blog. (carbonfriend.blogspot.com )

References:
 1. High school biology teachers reluctant to endorse evolution in class - Penn State website, 27th January 2011. link
2. Teachers Fail Evolution Education - Scientific American, 28th January 2011. link
3. High School Biology Teachers in U.S. Reluctant to Endorse Evolution in Class, Study Finds - Science daily, 28th January 2011. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 


Wednesday, February 2, 2011

எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்------------------
எகிப்து புரட்சி குறித்த தகவல்கள் இந்த பதிவின் இறுதியில் update செய்யப்படுகின்றன.
------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
  
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

எகிப்து - உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் இன்று இந்த நாட்டின் மீது தான் திரும்பியுள்ளது. சீனா தொடங்கி அமெரிக்கா வரை பல அரசாங்கங்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது எகிப்தில் நடக்கும் மக்கள் போராட்டம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில்,

 • எதனால் இந்த புரட்சி? 
 • புரட்சி எப்படி தொடங்கியது?
 • இதன் பின்னணியில் யார் இருப்பதாக அரசு குற்றஞ்சாட்டியிருக்கின்றது?
 • மக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள்.
 • எகிப்து அதிபர் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?
 • எதுமாதிரியான ஆட்சி அடுத்து அமையலாம்?
 • இந்த புரட்சி குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகம் கவலைப்படுவதற்கு என்ன காரணம்?     
என்று இந்த புரட்சி குறித்து விரிவாக பார்க்கவிருக்கின்றோம்.


எதற்காக இந்த புரட்சி? 

இது நம்மில் பெரும்பாலானோர் அறிந்த விசயம்தான்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், அரசாங்கத்தில் ஊழல் மலிந்து கிடப்பது என்று இவை அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் இந்த புரட்சி. எகிப்து மக்களை பொறுத்தவரை இவையெல்லாம் முடிவுக்கு வர வேண்டுமென்றால் தற்போதைய அதிபர் முபாரக் பதவி விலகி புதிய அரசு மக்களால் தேர்ந்தெடுக்க படவேண்டும். 

(மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாமல், அதிபர் முபாரக் தன் மகனை அடுத்த அதிபராக்க முயன்றதும் ஒரு காரணம்)

கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை ஆண்டு வரும் முபாரக் பதவி விலக சம்மதிக்கவில்லை. தற்போதைய அமைச்சரவையை கலைத்து விட்ட முபாரக், புதிய துணை அதிபரையும், பிரதமரையும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தமும் நடக்கும் என்று அறிவித்துள்ளார். 

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைகள் எகிப்து மக்களிடையே எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் கூடுதலாகவே போராட்டம் வலுவடைந்து வருகின்றது. முபாரக் பதவி விலகல் மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்ப்பது. அதற்கு குறைந்து எதையும் ஏற்க அவர்கள் தயாரில்லை. 


எப்படி தொடங்கியது போராட்டம்?

துனிசிய புரட்சி புத்துணர்ச்சியை கொடுக்க, சமூக தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் ஆரம்பித்த அரசுக்கு எதிரான பிரச்சாரம் நாளடைவில் வலுவடைந்து, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வீரியம் கொண்டு எழ, கடந்த மாதம் 25 ஆம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர் மக்கள்.      

ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகங்களை நோக்கி பேரணி சென்ற மக்கள், நாட்டின் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட தொடங்கினர். கெய்ரோவின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கத்தில் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். சில மணி நேர அமைதிக்கு பிறகு, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட, கண்ணீர் புகை குண்டுகளை உபயோகப்படுத்த துவங்கியது காவல் துறை. நாட்டின் தலைநகரில் தொடங்கிய போராட்டம் பின்பு மற்ற நகரங்களுக்கும் வேகமாக பரவ தொடங்கியது. அலெக்ஸ்சான்ட்ரியா, மன்சூரா, அஸ்வான் என பல நகரங்களுக்கும் பரவிய போராட்டம் எகிப்து அரசை திக்குமுக்காட வைத்தது. 

புரட்சிக்கு பின்னணியில் யார் இருக்கின்றார்கள்?

நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கிய சில மணி நேரங்களில், இதற்கெல்லாம் காரணம் "முஸ்லிம் சகோதரத்துவ" கட்சிதான் (Muslim Brotherhood) என்று குற்றஞ்சாட்டியது அரசு.  

யார் இந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர்?

எகிப்து அரசியலை உற்று நோக்கி கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை இந்த கட்சி தான் உருவாக்கியிருக்கின்றது. முபாரக் வீழ்ந்து இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால்? 

எகிப்திற்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் எலி ஷேக்டு (Eli Shaked) சில தினங்களுக்கு முன் எகிப்து புரட்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், எகிப்தில் தேர்தல் நடந்தால், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
  
எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியான இவர்களைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். 

1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சியின் குறிக்கோள், எகிப்தில் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டுமென்பதே ஆகும். வரலாற்றில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ள இந்த அமைப்பு அரசியல் ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், மதம் சார்ந்த ஒரு இயக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .  

மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவை இந்த கட்சி பெற காரணம், இவர்களின் சமுதாய பணிகள் தான். 2005 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்த கட்சி போட்டியிட தடை இருந்தாலும், இதன் உறுப்பினர்கள் சுயேட்சையாக நின்று 20% இடங்களை கைப்பற்றினார்கள் (இவ்வளவுக்கும் அந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது).

பிறகு ஒரு ஆவணத்தை வெளியிட்டு தன்னுடைய செல்வாக்கை பெருமளவு இழந்தது இந்த அமைப்பு. அதாவது, 2007 ஆம் ஆண்டு, தங்களின் அரசியல் நிலைபாடு குறித்து இவர்கள் வெளியிட்ட ஆவணத்தில், அதிபராக ஒரு பெண்ணையோ அல்லது கிருத்துவரையோ அனுமதிக்க போவதில்லை என்ற தெரிவித்திருந்தனர். எகிப்து மக்கள் பெருமளவில் இந்த கருத்தை எதிர்த்தனர்.

கிருத்துவர்கள் மீது இந்த அமைப்பினருக்கு எந்தவொரு பாரபட்சமும் இல்லை. இதனை நீண்ட காலமாக இவர்கள் தெளிவுபடுத்தி தான் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கிருத்துவரை அதிபராக்க முடியாது என்பது அவர்களது அரசியல் நிலைபாடாக இருந்தது. எதிர்ப்பு அதிகளவில் கிளம்ப, தங்களின் இந்த ஆவணம் ஒரு முன்னோட்டம் மட்டுமே ஒழிய இறுதி முடிவு கிடையாது என்று கூறி தன்னுடைய கருத்தை திரும்ப பெற்று கொண்டது இந்த அமைப்பு.

வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். அதாவது, எகிப்தில் நடந்த அரசியல் பிரச்சனைகளுக்கு பின்னணியில் இவர்கள் இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே வரலாறு முழுக்க இந்த கட்சியினர் எகிப்திய அரசாங்கத்தால் அதிக அளவில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அரசுக்கு எதிராக ஒரு பிரச்சனை நாட்டில் எழுகின்றது என்றால், அரசாங்கத்தின் சந்தேக கண்கள் முதலில் விழுவது இவர்கள் மேலாகத்தான் இருக்கும்.

அந்த காரணத்தினாலேயே தற்போதைய புரட்சிக்கும் இந்த இயக்கத்தினர்தான் தான் காரணம் என்று அரசு குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்கின்றதா? 

இல்லையென்று மறுக்கின்றனர் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர். இந்த புரட்சிக்கு முதலில் விதை போட்டவர்கள் சமூக ஆர்வலர்கள் என்றும், பின்னர் தான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கின்றன ஊடகங்கள்.    

போராட்டத்தில் தாமதமாக குதித்தனர் என்றாலும், இவர்கள் மக்களுடன் அணி சேர்ந்த பிறகு போராட்டம் மிக வலிமையானதாக மாற தொடங்கியது. சில நாட்களில் இவர்களே பெரும்பாமையினராக இருக்கக்கூடிய அளவு போராட்டம் மாறியது.அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் வீடு வீடாக சென்று மக்களை அழைத்து அடுத்த நாளும் போராட்டத்தின் வீரியம் குறையாமல் பார்த்து கொண்டனர்.

இவர்கள் ஆதரவால் மிகப்பெரிய அளவில் பல நகரங்களிலும் மக்கள் பேரணி நடத்த ஆரம்பித்தனர். இந்த இயக்கத்தின் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதானார்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகைக்கு பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. போராட்டகாரர்களுக்கும், போலிசாருக்கும் இடையே நடைப்பெற்ற சண்டையில் இதுவரை சுமார் 125 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

புரட்சி கால நிலவரம்:

கெய்ரோ நகரின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கம் வரலாற்று முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்திருக்கின்றது. அங்கேயே தொழுகின்றனர், போராடுகின்றனர்.   அதிபர் முபாரக் பதவி விலகும்வரை இந்த சதுக்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர் போராட்டகாரர்கள்.

அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி கடந்த 27 ஆம் தேதி எகிப்து திரும்பி போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார்.

போராட்டம் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு போலீசார் பலரை காணவில்லை. அவர்களும் போராட்டத்தில்  குதித்திருக்கலாம் என்று அல்ஜசீரா ஊடகம் தெரிவிக்கின்றது.

சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதால், திருட்டு சம்பவங்களை தடுக்க, எகிப்து மக்கள் தங்களுக்குள்ளாக அணிகளை உருவாக்கி வீடுகள், ஓட்டல்கள், அங்காடிகள், அருங்காட்சியகங்கள் என பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் உதவி புரிகின்றனர்.

இராணுவத்தினர் மக்களுடன் ஒத்துழைப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது பணிக்கு திரும்பியுள்ள போலிசாரின் நடவடிக்கை எப்படி இருக்குமென்று தெரியவில்லை.

மக்களின் போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்றும், தங்கள் எண்ணங்களை அமைதியான முறையில் வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உண்டென்றும், மக்களை நோக்கி எவ்விதமான தாக்குதலையும் நிகழ்த்த மாட்டோமென்றும் எகிப்து இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. மேலும், மக்களை காப்பதே இராணுவத்தின் முதல் பொறுப்பு என்றும் கூறியுள்ளது. இராணுவத்தின் ஆதரவும் மக்கள் பக்கம் இருப்பதால் முபாரக் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சுமார் 125 பேர் இந்த புரட்சியின் போது இறந்திருப்பதாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலைமை சுமூகமாகவே இருக்கின்றது. ராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் மக்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி கொள்ளும் காட்சிகளும் நடந்தேறுகின்றன.இந்த புரட்சி குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிக அளவில் கவலைப்பட என்ன காரணம்?

அமெரிக்காவை பொறுத்தவரை, மற்றொரு ஈரானாக எகிப்து ஆகிவிடக்கூடாது என்ற பயம். ஏனென்றால், 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி பல பாடங்களை அமெரிக்காவிற்கு புகட்டியுள்ளது. அதாவது, புரட்சிக்கு முன்பு இருந்த ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியது. ஆனால் புரட்சிக்கு பின்னரான அரசாங்கம் இன்று வரை அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றது.

அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். புரட்சிக்கு பின்பான அரசாங்கமும் தனக்கு ஆதரவாக இருக்குமென்று கார்ட்டர் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் இறைவன் நாடியதோ வேறொன்றை. அன்று கார்ட்டருக்கு ஏற்பட்ட நிலைமை இன்று ஒபாமாவுக்கு ஏற்பட்டிட கூடாதென்பதே அமெரிக்காவின் அச்சம். ஏனென்றால் தற்போதைய அதிபர் முபாரக் அமெரிக்க ஆதரவாளர்.

அதனாலேயே, உலகம் முழுவதும் முபாரக் பதவி விலக வேண்டுமென்று குரல்கள் ஒலித்து கொண்டிருக்க, அமெரிக்க அரசாங்கமோ, முபாரக் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று கூறி கொண்டிருந்தது.

இஸ்ரேல் நிலைமையோ இன்னும் சற்று ஆழமாக கவனிக்கப்பட வேண்டியது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹு வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்,  ஈரானைப் போல எகிப்தும் ஆகலாம் என்று.

அமெரிக்காவை விட இஸ்ரேல் அதிகமாக கவலைப்பட காரணம் தற்போதைய பிரச்சனையால் தன்னுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைப்பதால் தான். கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்ரேலும், எகிப்தும் நட்பு பாராட்டி வருகின்றன (இதனை முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றனர்)

எகிப்தினுடனான நட்பு காலங்களில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்ரேல். தன்னுடைய எல்லைக்கோட்டை எகிப்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல், இந்த அமைதி காலங்களில் பெருமளவு செல்வத்தை ராணுவத்துக்கு செலவழிக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு செலவழித்திருக்கின்றது.

எகிப்துடனான போர்க்காலங்களில் சுமார் 23% வருவாயை ராணுவத்துக்கு செலவழித்த இஸ்ரேல், எகிப்துடனான அமைதிக்கு பிறகு 9% மட்டுமே தன் ராணுவத்துக்கு செலவிடுகின்றது. அதுபோல, எகிப்தினுடனான பகை காலத்தில் ஆயிரக்கணக்கில் தன் படைகளை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரேல், இப்போது சில நூறுகளில் மட்டுமே வீரர்களை நிறுத்தி வைத்திருக்கின்றது.

ஆக, எகிப்து என்னும் பெரிய நாடு அவர்களுடன் நட்புடன் இருப்பது என்றுமே அவர்களுக்கு நல்லது. இதற்கு இந்த புரட்சி மூலம் பங்கம் வந்து விடுமோ என்று தான் அஞ்சுகின்றது இஸ்ரேல். அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகள் அவர்களது கவலையை நன்றாகவே பிரதிபலிக்கின்றன.

ஆட்சி மாறுவது அவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுமாதிரியான புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தடுக்க போகின்றார்கள் என்பதுதான் இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப்பெரிய கவலை. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவர்களது தற்போதைய எண்ணமாக இருந்தாலும் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புரட்சிக்கு பின் என்ன நடக்கும்?

அதிபர் முபாரக் முன்மொழிந்திருக்கும் எந்தவொரு சீர்த்திருத்த நடவடிக்கையையும் ஏற்றுகொள்ள தற்போதைய நிலையில் மக்கள் தயாரில்லை. அதனாலேயே இன்னும் மிகப்பெரிய போராட்டத்தை நேற்று நடத்தி காட்டினர் மக்கள்.  மொத்ததில், முபாரக் பதவி விலகுவது மட்டுமே தீர்வாக அமையும்.அப்படி ஒருவேளை அதிபர் முபாரக் பதவி விலகினால், இடைக்கால அரசு அமையலாம். அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி அதிபராக பொறுப்பேற்கலாம்.

பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.

எதுமாதிரியான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பர்?

எகிப்தின் மக்கள் தொகையில் சுமார் 10% கிருத்துவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் (95%) காப்டிக் கிருத்துவர்கள் (இவர்கள் கிருத்துமஸ்சை ஜனவரி 7 ஆம் தேதி கொண்டாடும் பழக்கத்தை கொண்டவர்கள். காப்டிக் என்றால் "எகிப்திய" என்று அர்த்தம் வரும்). காலங்காலமாக எகிப்தில் வசித்து வருபவர்கள். இன்றைய எகிப்து முஸ்லிம்களின் முன்னோர்கள் காப்டிக் கிருத்துவர்களாக இருந்தவர்கள் தான்.

தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பவர்கள் எகிப்து கிருத்துவர்கள்.

கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள நட்பும் நெகிழ்ச்சி தரக்கூடியது. கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்தாலும் எகிப்தியர்கள் ஒற்றுமையுடனே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒரு சர்ச்சில் நடந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு (இரண்டு பாதிரியார்களின் மனைவிகள் இஸ்லாத்தை தழுவியதால் கிருத்துவ மடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுவிக்கப்படாதவரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது) பிறகு, தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்களுக்கு மனித சங்கிலி அமைத்து கிருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்.

ஆக, கிருத்தவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட எந்தவொரு கட்சியையும் ஆட்சியில் உட்கார வைக்க மாட்டார்கள் எகிப்து மக்கள். அதுமட்டுமல்லாமல், இப்போது நடப்பது மக்கள் புரட்சி. இதில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் பங்கேற்று கொண்டிருக்கின்றனர்.

மொத்தத்தில், கிருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கே மக்களின் ஒட்டு விழும்.

எகிப்து பிரச்சனையின் முழு சாராம்சமும் இவைதான். தற்போதைய சூழ்நிலையில், எகிப்து மக்களின் போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதிபர் முபாரக்கின் பதவி விலகல் தான் அது.

(இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் (feb 2, 2011), அதிபர் முபாரக் தனது பதவி காலம் முடியும் வரை (செப்டம்பர், 2011) பதவியில் நீடிக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் போராட்டகாரர்கள் தெரிவித்து உள்ளனர்.

Update: 

04/02/2011 - கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், முபாரக் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட கூடியவர்களுக்குமிடையே நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பிறகு, இன்று மிகப்பெரிய போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். "முபாரக் வெளியேறும் நாள்" என்று அழைக்கப்படும் இந்த நாள் உலகளவில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

எகிப்து மக்கள் அதிசயக்கும் விதமாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது அரசு. ஆனால் இதனை அந்த இயக்கத்தினர் மறுத்து விட்டனர். முபாரக் முதலில் வெளியேற வேண்டுமென்றும், பின்பு அனைத்து கட்சிகள் இடம்பெறக்கூடிய தற்காலிய அரசை நியமிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறது அந்த கட்சி.

மில்லியன் கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடப்பதாகவும் அல் அரேபியா ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிபர் மாளிகையை நோக்கி பேரணி நடக்கப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜசீராவின் கெய்ரோ அலுவலகம் தாக்கப்பட்டு கருவிகள் உடைப்பட்டுள்ளதாக அந்த தளம் தெரிவித்துள்ளது.

05/02/2011 - பனிரெண்டாவது நாளாக போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

அதிபர் முபாரக் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றார்கள். கட்சியின் புதிய பொதுச்செயலாளராக ஹோசம் பட்ரவி நியமிக்கப்படுள்ளார். இவர், அதிபர் முபாரக்கின் மகன் கமல் முபாரக் வகித்து வந்த கட்சியின் அரசியல் பிரிவு தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கின்றார்.

06/02/2011 - பதிமூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது.

ஆளும் கட்சியின் தலைமை உறுப்பினர்களின் பதவி விலகல் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.

திருப்புமுனையாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பேச்சு வார்த்தைக்கு சம்மதித்து உள்ளது. மக்களின் உணர்வுகளை அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவே இந்த நடவடிக்கை என்று அது தெரிவித்துள்ளது

அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கொண்ட கூட்டு குழுவை உருவாக்குவதென பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாக எகிப்து தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முபாரக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும், இந்த அரசால் அரசியல் உள்நோக்கோடு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட தங்களுடைய இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை என முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இன்றும் லட்சகணக்கானோர் தஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையை முஸ்லிம்களும், சிறப்பு பிரார்த்தனையை கிருத்துவர்களும் அங்கே மேற்கொண்டனர்.

08/02/2011 - பதினைந்தாம் நாளாக போராட்டம் தொடர்கின்றது. அதே நேரம் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகின்றது. பொதுத்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வை அறிவித்துள்ளது அரசு.

09/02/2011 - நேற்று மதியத்திலிருந்து போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளன. நாடு திரும்பி போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வெளிநாடுவாழ் எகிப்தியர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலமாக செய்தி பரப்பப்படுகின்றது. எகிப்தியர்கள் பலர் நாடு திரும்பி போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். மற்றுமொரு பிரமாண்ட பேரணியை வரும் வெள்ளிக்கிழமை நடத்தி  காட்ட மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

10/02/2011 - பதினேழாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது. அதிபர் முபாரக் இன்று பதவி விலகுவார் என்ற செய்தி பரவுவதால் பரபரப்பு அதிகரித்திருக்கின்றது.

21:00 local - இன்னும் ஒரு  மணி நேரத்தில் முபாரக் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கின்றார். மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி இருக்கின்றது. 

லட்சகணக்கான மக்கள் அனைத்து நகரங்களிலும் திரண்டிருக்கின்றார்கள். அல்லாஹு அக்பர் என்ற கோஷம் விண்ணை பிளக்கின்றது.

பதவி விலக போவதில்லை என்று மீண்டும் அறிவித்தார் முபாரக்.

11/02/2011 - முபாரக்கின் நேற்றைய பேச்சு மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்று ஜும்மாஹ் தொழுகைக்கு பிறகு பிரமாண்ட ஆர்பாட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்

6:03 PM (local) - முபாரக் பதவி விலகியதாக துணை அதிபர் அறிவித்தார்)

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம்.....

 • எகிப்து மக்களின் இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டுமேன்று...
 • எகிப்து மக்கள் எதிர்ப்பார்க்ககூடிய நல்லாட்சி அமைய வேண்டுமென்று...
 • பொருளாதாரத்தில் எகிப்து சிறந்து விளங்கி வறுமைகள் ஒழியவேண்டுமென்று...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

My sincere thanks to:
1. Aljazeera.
2. BBC.
3. Reuters
4. Ottawa Citizen
5. AFP

References:
1. As it happened: Egypt unrest day five - BBC, 29th January 2011. link
2. Timeline: Egypt unrest - Aljazeera, 28th Jan 2011. link
3. Mubarak names deputy, protesters defy curfew - Times of India, 30th January 2011. link
4. China restricts news, discussion of Egypt unrest - Yahoo news, 31st January 2011. link
5. Brotherhood shows strength, limits in Egypt chaos - Associated Press. link
6. Muslim Brotherhood, Egypt Opposition Party, In The Spotlight During Protests - The Huffington Post, 30th January 2011. link
7. Al Jazeera undeterred by Egypt curb - Aljazeera, 30th January 2011. link
8. History of the Muslim Brotherhood in Egypt - Wikipedia. link
9. Threat of Muslim Brotherhood in Egypt likely overblown - Examiner, 29th January 2011. link
10. Muslim Brotherhood (Egypt) - The New York Times, updated on 31 January 2011. link
11. Israel 'fears' post-Mubarak era - Aljazeera, 31st January 2011. link
12. Giant protest to kick off in Egypt - Aljazeera, 1st February 2011. link
13. What is Coptic Christianity, and what do Coptic Christians believe? - Got questions.org. link
14. Muslim Brotherhhood, Egypt - LookLex Encyclopedia. link
15. Millions of protesters rock Egypt to oust Mubarak - Al-Arabiya, 1st February 2011. link
16. Over 200,000 in Egypt square call on Mubarak to go - MSN news, 1st February 2011. link
17. Muslims protect churches - National Post, 8th January 2011. link
18. Egypt's Copts clash with police - Aljazeera, 2nd January 2011. link
19. Muslim Brotherhood Falters as Egypt Outflanks Islamists - The Wall Street Journal, 15th May 2009. link
20. Muslim Brotherwood - Wikipedia
21. Defiant Mubarak vows to finish term -  Aljazeera, 2nd February, 2011. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ