Friday, December 23, 2011

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான்.  

பேராசிரியர் ஆண்டனி ப்ளு (Antony Flew) - இன்று எப்படி நாத்திகர்களினால் ரிச்சர்ட் டாகின்ஸ் கொண்டாடப்படுகின்றாரோ, அதுபோல இருபதாம் நூற்றாண்டில் நாத்திகர்களால் கொண்டாடப்பட்டவர். 


நாத்திகத்தின் முன்னணி சாம்பியனாக கருதப்பட்ட இவர், சுமார் ஐம்பது ஆண்டு காலம் நாத்திகத்திற்காக தன் வாழ்நாளை கழித்தவர். விவாதங்கள், புத்தகங்கள், பல்கலைகழக சொற்பொழிவுகள் என்று நாத்திகம் குறித்து பேசினாலே இவர் பெயர் தவிர்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாத்திகர்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்தார்.

இறைநம்பிக்கை ஏன் அர்த்தமற்றது என்பது குறித்து இவர் எழுதிய "Theology and Falsification" என்ற கட்டுரை, சென்ற நூற்றாண்டின் அதிகம் மறுபதிப்பு செய்யப்பட்ட தத்துவ கட்டுரையாகும். 

இதுவரையிலான இவருடைய அறிமுகத்தை வைத்து, இவர் எந்த அளவு நாத்திகர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். 

இப்படியான ஒருவர் ஆத்திகத்தின்பால் திரும்பினால்? தன் திசை மாற்றத்திற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளே காரணம் என்று கூறினால்?

Dec 9, 2004-ஆம் ஆண்டு, Associated Press ஊடகம், நாத்திகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கும்விதமாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பு இதுதான், 

"Famous Atheist Now Believes in God" - AP report, 9th Dec 2004. 
"பிரபல நாத்திகர் தற்போது கடவுளை நம்புகின்றார்" - AP report, 9th Dec 2004.

Associated Press ஊடகத்தின் அந்த கட்டுரையின் நாயகன் ப்ளு அவர்கள் தான். இது நாத்திகர்களால் நம்பவே முடியாத செய்தி. 

ஆத்திகராக மாறினார் ப்ளு என்பது மிக அதிர்ச்சியான தகவல் என்ற போதிலும் அதனை அவர்கள் காலப்போக்கில் கடந்து வந்துவிடலாம். ஆனால், அந்த கட்டுரையின் உபதலைப்பு தான் நாத்திகர்களை கடுமையான கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கியிருக்கும். அந்த உபதலைப்பு இதுதான். 

"One of World's Leading Atheists Now Believes in God, More or Less, Based on Scientific Evidence" - AP report, 9th Dec 2004.
"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்" - (Extract from the original quote of) AP report, 9th Dec 2004.

ooopppsss....

எதிர்ப்பார்த்தது போலவே இந்த செய்தி நாத்திகர்களிடையே பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. டி.வி, ரேடியோ, நாளிதழ்கள் என்று அனைத்து தரப்பட்ட ஊடங்கங்களிலும் இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டது. ப்ளு ஆத்திகரானது எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதென்றால், Associated Press ஊடகம் மட்டுமே இதுக்குறித்து தொடர்ச்சியாக மூன்று கட்டுரைகளை வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

நாத்திகத்திற்காக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ப்ளு. தன் ஐம்பது ஆண்டு கால பிரச்சாரத்தில் எத்தனை வாதங்களை நாத்திகத்திற்கு எதிராக பார்த்திருப்பார்? எத்தனை விதமான சவால்களை சந்தித்திருப்பார்? அப்படிப்பட்டவர் ஆத்திகத்தின்பால் திரும்புகின்றார் என்றால் மிக  வலிமையான வாதங்கள் ஆத்திகத்திற்கு ஆதரவாக, நாத்திகத்திற்கு எதிராக அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்.

எதற்காக ஆத்திகத்தின்பால் திரும்பினீர்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் "Follow the evidence, wherever it leads" என்பதாகும். அதாவது, ஆதாரங்களை பின்தொடர்ந்து செல்லுங்கள், அவை என்ன சொல்கின்றனவோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.

Dec, 2004-ல், இறைவனை தான் நம்புவதாக ப்ளு வெளிப்படையாக அறிவித்தாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே "Philosopy Now" இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையில் தன் நிலை குறித்து பின்வருமாறு க்ளூ கொடுத்திருந்தார்,

"It has become inordinately difficult even to begin to think about constructing a naturalistic theory of the evolution of that first reproducing organism," - Antony flew on August-September issue of Britain's Philosophy Now magazine (As reported by AP)
(இனப்பெருக்கம் செய்யும்) உலகின் முதல் உயிரினம், இயற்கையாக பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை நம்புவது குறித்து யோசிப்பது கூட வர வர கடினமாக இருக்கின்றது - (extract from the original quote of) Antony flew on August-September issue of Britain's Philosophy Now magazine (As reported by AP)

உயிர் குறித்து வெளிவரும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்பு போன்றவை தன் நாத்திக நம்பிக்கையை பதம் பார்த்துவிட்டதாக கூறினார் ப்ளு.

குறிப்பாக, DNA-க்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், நம்பவே முடியாத அளவுக்கு சிக்கலான  வடிவமைப்பை அவை கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாகவும், இவையெல்லாம் தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை எனவும், நிச்சயம் ஒரு அறிவார்ந்த சக்தியாலேயே இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் தன் நிலையை தெளிவாக அறிவித்தார் ப்ளு.

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. உயிரியல் உலகை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாய் புரியும் உண்மை என்னவென்றால், உயிர் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை நாளுக்கு நாள் அறிவியல் முடிவுகள் தெளிவுபடுத்தி வருகின்றன என்பதுதான்.

பேராசிரியர் ப்ளு, அறிவியல் முடிவுகளின் வாயிலாக இறைவனை அங்கீகரித்து மிகப்பெரிய தாக்கத்தை நாத்திகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார்.  ஆனால் அவர் இத்தோடு நிறுத்தவில்லை. அடுத்த பூகம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமானார்.

2007-ஆம் ஆண்டு, ராய் வர்கீஸ் என்பவருடன் இணைந்து ப்ளு வெளிக்கொண்டு வந்த புத்தகம் நாத்திகர்களிடையே ஒரு கலக்கு கலக்கியது. அந்த புத்தகத்தின் பெயர் "There is a God (இறைவன் இருக்கின்றான்)" என்பதாகும். அதில் தான் நாத்திகனாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் இருந்தது பற்றி, பின்னர் மனம் மாறியது பற்றி விரிவாக விளக்குகின்றார் ப்ளு.


இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்த MIT-யின் அணுசக்தி பொறியியல் துறையின் தலைவரான இயன் ஹட்ஷின்சன் பின்வருமாறு கூறுகின்றார்.

“Antony Flew’s book will incense atheists who suppose (erroneously) that science proves there is no God.” - Ian H. Hutchinson, Professor and Head of the Dept. of Nuclear Science and Engineering, MIT (as found on Amazon review).
இறைவன் இல்லையென்று அறிவியல் நிரூபித்துவிட்டதாக (தவறாக) எண்ணிக்கொண்டிருக்கும் நாத்திகர்களை ப்ளுவின் இந்த புத்தகம் சினமூட்டுகின்றது - Ian H. Hutchinson, Professor and Head of the Dept. of Nuclear Science and Engineering, MIT (as found on Amazon review). 

தங்களின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் இப்படி தடம்மாறியது குறித்து தங்கள் மனதை சாந்தப்படுத்தியாக வேண்டுமே நாத்திகர்கள்?...என்ன செய்வது?...ஒருவேளை ப்ளு கிருத்துவதையோ அல்லது இஸ்லாத்தையோ ஏற்றிருந்தால் 'காசு கொடுத்துவிட்டார்கள், அதனால் ஏற்றுக்கொண்டுவிட்டார்' என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ப்ளு, இறைவன் இருக்கின்றான் என்று ஒப்புக்கொண்டாரே தவிர ஒருங்கிணைந்த மதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரம், தன் மீது மதப்பிரச்சாரங்கள் நடத்தப்பட்டால் அதற்கு தான் தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.

ப்ளுவின் மனமாற்றத்தை பின்னர் எப்படித்தான் விளக்கம் கூறி தங்கள் மனதை சாந்தப்படுத்திக்கொள்வது?....இந்த நொடிப்பொழுதில் சில நாத்திகர்களது மனதில் உதித்ததுதான் சில அதிஅற்புதமான எண்ணங்கள். வயதாகிவிட்டதால் ப்ளு இப்படி பேசுகின்றார் என்றும், மனரீதியான பாதிப்பு (mentally declined) ஏற்பட்டுள்ளதால் இப்படி நடந்துக்கொள்கின்றார் என்றும் கூறினர். இதற்கும் சாட்டையடியாக விளக்கம் கொடுத்தார் ப்ளு.

டாகின்ஸ்கின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார். உயிர்த்தோற்றம் குறித்த டாகின்ஸ்சின் கருத்தை "காமெடி" என்று கூறிய ப்ளு, டாகின்ஸ்சின் வாதங்கள் இப்படித்தான் இருக்குமானால் கேம் முடிந்துவிட்டதாக கூறினார்.

"...Richard Dawkins' comical effort to argue in The God Delusion that the origin of life can be attributed to a "lucky chance." If that's the best argument you have, then the game is over" - Professor Flew's interview with Dr. Benjamin Wiker, dated 30th October 2007.
அதிர்ஷ்டவசமாக உயிர் உருவாக்கியிருக்கும் என்று தன்னுடைய புத்தகத்தில் டாகின்ஸ் கூறுவது ஒரு காமெடியான முயற்சியே ஆகும். இதுதான் உங்களுடைய மிகச்சிறந்த வாதம் என்றால், கேம் முடிந்துவிட்டது - (extract from the original quote of) Professor Flew's interview with Dr. Benjamin Wiker, dated 30th October 2007.

பரிணாம கோட்பாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் Intelligent Design (ID) கோட்பாட்டை ஒட்டியே தன்னுடைய எண்ண அலைகள் இருப்பதாக ப்ளு கூற, Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ப்ளு போன்ற ஒருவர், வேகமாக வளர்ந்து வரும் அவர்களது கோட்பாட்டிற்கு ஆதரவுக்கரம் நீட்டியதை பெரும் புத்துணர்ச்சியாக எண்ணினர் (ID குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

நாத்திகர்களின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் ப்ளு. நாத்திகராக வாழ்ந்தவர் ஆத்திகராக மறைந்துவிட்டார்.

வரலாறு முழுக்க, ப்ளு போன்ற பிரபல நாத்திகர்கள் அல்லது நாத்திகர்களாக இருந்த ஆய்வாளர்கள் தங்களது மனதை ஆத்திகத்தின்பால் திருப்பியதற்கு அறிவியல் முடிவுகளும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை. (இன்ஷா அல்லாஹ், இம்மாதிரியான நாத்திகர்களை எதிர்க்கால பதிவுகளில் அவ்வப்போது பார்க்கவிருக்கின்றோம்)

அறிவியல் நாத்திகத்திற்கு வழிவகுக்கின்றது என்று தங்கள் அறியாமையால் சிலர் எண்ணினால் அது அறிவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலே அன்றி வேறொன்றும் இல்லை.

சிந்திக்க விருப்பமுள்ளவர்கள் சிந்திக்கட்டும். நடுநிலையோடு அறிவியல் முடிவுகளை ஆய்வு செய்யட்டும். உண்மையை அறிந்துக்கொள்ளட்டும். 

முடிவாக:

பிரிட்டனின் "The Guardian" பத்திரிக்கை, 2011-ன் டாப்-10 அறிவியல் செய்திகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் என்னுடைய கவனத்தை ஈர்த்தன இரண்டு செய்திகள்.

1. உலகின் முதல் பறவை என்று சுமார் 150 ஆண்டுகளாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்ட ஆர்க்கியாப்டெரிக்ஸ், தான் பறவையல்ல ஒரு டைனாசர் மட்டுமே என்று கூறி பரிணாமவாதிகளுக்கு bye bye காட்டிய செய்தி டாப்-10னில் இடம்பெற்றுள்ளது (ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

2. பல மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கருதப்பட்ட ஸ்டெம் செல் ஆய்வுகள், இந்த நூற்றாண்டில் ஆர்வமிக்கதாக இருக்காது என்பது மற்றொரு செய்தி. நான்கு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள், அவர்களது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பெரிய பின்னடைவை இந்த ஆய்வுகளுக்கு தந்திருப்பதாக குறிப்பிடுகின்றது கார்டியன். இதனால், மனிதர்களுக்கு ஸ்டெம் செல் செலுத்தி ஆய்வு செய்வது தற்காலிகமாக கைவிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொருளாதார பிரச்சனையும் மற்றுமொரு காரணம் என்றும் கார்டியன் மேலும் தெரிவிக்கின்றது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Famous Atheist Now Believes in God - AP report, 9th dec 2004. link
2. Exclusive Flew interview - Dr.Benjamin wiker, 30th Oct 2007. link
3. There Is a God: How the World's Most Notorious Atheist Changed His Mind - Amazon.com. link
4. The Turning of an Atheist - New York times, November 4, 2007. link
5. Intelligent Design: Atheists to the Rescue - First times, 29th Nov 2011. link
6. Science review of 2011: the year's 10 biggest stories - The Guardian, 17th Dec 2011. link
7. Antony Flew - Wikipedia. link
8. The First Gene: The Birth of Programming, Messaging and Formal Control - Amazon.com. link
9. Materialists Beware: The First Gene Defends a Strictly Scientific, Non-Materialist Conception of Biological Origins - Evolution News, 17 Nov 2011. link
10. There is a God - Antony flew, Preface and Introduction. link
11. The Central Dogma - RIKEN Omics Science Center, youtube. link
12. Antony Flew's There IS a God - the authorship controversy - ARN, 31st Dec 2007. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


Tuesday, November 29, 2011

முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

                  பிரிட்டனின் பிரபல ஊடகமான "Mail Online", அதிரடியான செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது (28th Nov 2011). 

பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பரிணாம பாடத்தை புறக்கணிக்கின்றனர்/வெளிநடப்பு செய்கின்றனர் என்ற செய்தி தான் அது. இதற்கு காரணம், குர்ஆனின் போதனைகளுக்கு எதிராக பரிணாம கோட்பாடு இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்களாம்.


பாரம்பரியமிக்க இலண்டன் பல்கலைகழக கல்லூரியின் (University College London) பேராசிரியர்கள் இன்னும் அதிர்ச்சிதரக்கூடிய செய்தியையும் கூறுகின்றார்கள். அதாவது, முக்கிய பாடமான(??) டார்வீனிய கோட்பாட்டை, மத காரணங்களை கூறி புறக்கணிக்கும் உயிரியல் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாம். இது அவர்களுக்கு கவலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம் மாணவர்களின் இத்தகைய எதிர்ப்புக்கு பின்னால் துருக்கியின் ஹாருன் யஹ்யா போன்றவர்களின் பரிணாம எதிர்ப்பு புத்தகங்கள் ஒரு காரணமாக இருக்கலாமென்று கூறப்பட்டுள்ளது. ஹாருன் யஹ்யாவின் குழுக்கள் பிரிட்டனில் தொடர்ந்து பரிணாம எதிர்ப்பு உரைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. 2008-ஆம் ஆண்டு, இலண்டன் பல்கலைகழக கல்லூரியில் பரிணாம எதிர்ப்பு உரையை ஹாருன் யஹ்யாவின் குழு நிகழ்த்தியது. இந்த ஆண்டு பிரிட்டனின் பல்வேறு இடங்களில் அவர்கள் பரிணாம எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். 

பரிணாம கோட்பாட்டின் தூதர்களில் ஒருவரான ரிச்சர்ட் டாகின்ஸ்சை நேரடி விவாதத்திற்கு அழைத்து பிரிட்டனின் பிரபல நாளிதழ்களில் ஹாருன் யஹ்யா விளம்பரம் கொடுத்திருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. 

ஆக, இதுப்போன்ற தீவிர பிரச்சாரங்கள் மாணவர்களின் புறக்கணிப்பிற்கு பின்னணியில் இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். 

முஸ்லிம் மாணவர்களின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டீவ் ஜோன்ஸ். இவர் இலண்டன் பல்கலைகழக கல்லூரியின் ஓய்வுப்பெற்ற மனித மரபியல் பேராசிரியராவார். தங்கள் நம்பிக்கைக்கு எதிராக உயிரியல் இருப்பதாக நினைத்தால் எதற்காக அந்த துறையை முஸ்லிம் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஸ்டீவ் ஜோன்ஸ். 

ஸ்டீவ் ஜோன்ஸின் இத்தகைய கருத்தை தங்களுக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் விமர்சித்திருக்கின்றது பரிணாம எதிர்ப்பு முன்னணி தளமான 'uncommon descent'. மருத்துவ பாடத்தில் டார்வினிசத்துக்கு என்ன வேலை என்று கேட்டிருக்கின்றது அந்த தளம். மருத்துவ பாடத்தில் டார்வினிசத்தை உள்ளே புகுத்தி மாணவர்களின் நேரத்தை வீணாக்குவது ஒரு அவதூறுச் செயலாக கருதப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்றது அந்த தளம். 

பரிணாம பாடத்தை புறக்கணிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே முஸ்லிம்கள் என்று குறிப்பிடும் 'Mail online', இதுக்குறித்த தன்னுடைய கவலையை டாகின்ஸ் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றது. 

அது சரி, பரிணாம கோட்பாட்டை ஏற்காததற்காக உயிரியல் பயிலும் மாணவர்களை விமர்சிக்கின்றார்களே (சில) பேராசிரியர்கள், இந்த ஆண்டு துவக்கத்தில், Science ஆய்விதழில், அமெரிக்காவின் பெரும்பாலான உயிரியல் பாட ஆசிரியர்கள் பரிணாமத்தை ஆதரிக்க தயங்குவதாக செய்தி வெளிவந்ததே.....

ஆசிரியர்களுக்கே இந்த நிலை என்றால் மாணவர்களை சொல்லி என்ன செய்வது??

மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் நம்மை காப்பானாக..ஆமீன். 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Muslim medical students boycotting lectures on evolution... because it 'clashes with the Koran' - Mail Online, 28th November 2011. link
2. British Muslim med students refuse to attend Darwin propaganda lectures - Uncommon descent. link
3. High School Biology Teachers in U.S. Reluctant to Endorse Evolution in Class, Study Finds - Science daily, 28th January 2011. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Saturday, November 26, 2011

இவர் தான் முஹம்மது நபி...நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கோடானுகோடி மக்கள் இந்த மனிதர் மீது அபரிமிதமான அன்பை பொழிய என்ன காரணம்?, மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்திருக்கின்றார் என்றால், அவருடைய போதனைகள் எப்படி இருந்தன?

இம்மாதிரியான கேள்விகளுக்கு, சற்றே சுருக்கமான முறையில் விடை கொடுக்க முயலும் பதிவு தான் இது.

முஸ்லிம்களால் தங்கள் உயிரினினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்த பதிவு அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்). 

நபியவர்கள் குறித்து சில வரிகளில்: 

மக்கா நகரில் 570-ஆம் ஆண்டு பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். மக்கா நகர மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். நேர்மையாளராகவும், உண்மையாளராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் அறியப்பட்டவர்கள். ஆனால், நபிகளாரின் நாற்பதாவது வயதில் இந்த காட்சிகள் மாறத்தொடங்கின. இந்த வயதில் தான் இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லும் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).

இறைவன் தன்னை நபியாக தேர்ந்தெடுத்திருக்கின்றான், இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க சொல்லிருக்கின்றான் என்று சொன்னதால் கேலியும், கிண்டலுமே மிஞ்சின. ஆனாலும் இறைச்செய்தியை எடுத்துச்சொல்வதில் பின்வாங்கவில்லை. அழகான முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். இறைச்செய்தியால் கவரப்பட்ட மக்கள், சிறிது சிறிதாக இஸ்லாத்தின்பால் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். 

தங்களின் மூதாதையர் பின்பற்றிய பாதையிலிருந்து மக்களை திசை திருப்புகின்றார் முஹம்மது (ஸல்) என்று கொந்தளித்தனர் மக்கா நகர அதிகார வர்க்கத்தினர். சமாதானம் பேச சென்றனர். இஸ்லாத்தை எடுத்துக்கூறுவதை முஹம்மது (ஸல்) கைவிடுவாரேயானால், அவருக்கு, பொன் பொருள் அதிகாரம் என்று அனைத்தையும் தருவதாக கூறினர். ஆனால் நபியவர்களோ எளிமையான வார்த்தைகளை பதிலாக கூறினார்கள். 

ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்த சொன்னாலும் தன்னால் முடியாது என்ற வார்த்தைகள் தான் அவை. இன்றளவும், இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும்போது வரக்கூடிய தடங்கல்களையும், சோதனைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முஸ்லிம்கள் செயல்பட ஊக்கமாய் இருப்பது அந்த எளிமையான, காத்திரமான வார்த்தைகள் தான். 

உலக மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதரை எதிர்த்தவர்கள், கொன்றொழிக்க வாளேந்தி புறப்பட்டவர்கள் என்று பலரும் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அந்த பகுதி முழுவதுமே இஸ்லாத்தை தழுவியிருந்தது.

நபியவர்களின், வாழ்வின் பல்வேறு அங்கங்கள் குறித்த சுமார் 25 நபிமொழிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள், இந்த அற்புத மனிதர் குறித்த மேலும் பல தகவல்களை இதன் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். அவை உங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக அமையலாம் (இறைவன் நாடினால்). 
**********
1. "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

2. ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)' என்று மக்கள் கேட்டார்கள். ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

3. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள், "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணைபுரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).

4. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்".

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

5.  "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்.

7. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புஹாரி.

8. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.

9. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புஹாரி.

10. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கின்றார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.

11. ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புஹாரி.

12. நபி(ஸல்) அவர்களிடம் ஹிந்த் பின்த்து உத்பா(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

13. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று மக்கள் கூறினார்கள். ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

14. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

15.  "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.

16. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)".

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

17. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

18. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் (செயல்) செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், 'நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு - கடனாளிகளுக்கு தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி).
நூல்: முஸ்லிம்.

19. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.

20. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றார்கள். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி).
ஆதாரம்: முஅத்தா.

21. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தாய் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

22. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி).
ஆதாரம்: அபூதாவூத்.

23. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) சொல்லிக்கொண்டார். உடனே அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

24. "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: புஹாரி.

25. '(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

**********

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படிக்க, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும். இமெயில் மூலம் பெற விரும்புபவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com). 

நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் நாம் வாழ்ந்திட இறைவன் அருள்புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தை சுருக்கங்களுக்கான விளக்கங்கள்:
1. ஸல் - ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் என்பதின் சுருக்கமாகும். இதற்கு "இவர் மீது இறைவனின் அமைதியும், கண்ணியமும் நிலவுவதாக " என்று பொருள்.
2. ரலி - ரலியல்லாஹு அன்ஹு/அன்ஹா என்பதின் சுருக்கமாகும். இதனை, நபியவர்களுடன் இருந்த/கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்க பயன்படுத்துவார்கள். இதற்கு "இறைவன் இவர்களை பொருந்திக்கொள்வானாக" என்று பொருள். 

Please note:
"இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)" என்ற தலைப்பில் மேலே உள்ள தனிப்பக்கத்தில், நெகிழ்வூட்டும் நபிமொழிகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.  

My Sincere thanks to: 
6. சகோதரர் ஜாபர் ஸபாமர்வா.
7. சகோதரர் ஜாஹிர் ஹுசைன். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ


Sunday, November 13, 2011

வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இந்த பதிவு சரியான முறையில் கையாளப்பட்டிருந்தால் இதில் உள்ள சில தகவல்கள் உங்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டுச்செல்லலாம் (இன்ஷா அல்லாஹ்). தயாராகிக்கொள்ளுங்கள். 

Hoatzin (வாட்சின் என்று உச்சரிக்க வேண்டும்) - பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும் இந்த பறவையினம் தென் அமெரிக்க கண்டத்தில் வசிக்கின்றது. கயானா நாட்டின் தேசியப்பறவை.


கோழி அளவிலான இவை பல ஆச்சர்யத்தன்மைகளை தன்னகத்தே கொண்டவை. வேறு எந்த பறவையினத்துக்கும் இல்லாத தனித்துவங்கள் இவற்றிற்கு உண்டு. 

படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவற்றின் பெயரைக் கேட்டாலே சில பரிணாமவியலாளர்களுக்கு அலர்ஜி தான். ஆம், பரிணாமவியலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்றது இந்த உயிரினம்.

ஏன் இவை பரிணாமவியலாளர்களுக்கு கடுமையான சவாலாக விளங்கிக்கொண்டிருக்கின்றன? அப்படி என்ன ஆச்சர்யத்தன்மைகளை, தனித்துவங்களை இவை கொண்டிருக்கின்றன? 

அறிந்துக்கொள்ள தொடருங்கள்...

ஆச்சர்யங்கள் மற்றும் தனித்துவங்கள்:  

பல்வேறு நிறங்களை தன் உடலில் கொண்டுள்ள வாட்சின், ஒரு சரிவர பறக்கத்தெரியாத பறவை. இறக்கைகளை படபடவென்று அடித்துக்கொண்டு மரம் விட்டு மரம் பாயியுமே தவிர, நீண்ட தூரத்திற்கு அதனால் பறக்க இயலாது. 

தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வசிக்கும் வாட்சின், ஆற்று நீருக்கு மேலே உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டும். ஆண் பெண் என்று இரண்டுமே முட்டைகளை மாறி மாறி அடைக்காக்கும். 

ஆச்சர்யமான உடலமைப்பை தன்னிடத்தே கொண்டவை இதனுடைய குஞ்சுகள். எப்படியென்றால், குஞ்சுகளின் ஒவ்வொரு இறக்கையின் இறுதியிலும் இரண்டு நகங்கள் உண்டு.இந்த நகங்கள் ஆபத்தான சூழ்நிலையில் குஞ்சுகளுக்கு உதவுகின்றன. எப்படி என்பதற்கு ஒரு உதாரணத்தை சொன்னால் உங்களுக்கு புரிந்துவிடும். கழுகு போன்ற ஆபத்துக்கள் வாட்சினின் கூட்டை நெருங்கினால், குஞ்சுகளை விட்டு விட்டு தாய் தந்தை பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடும் (குஞ்சுகள் தங்களை காத்துக்கொள்ளும் என்ற எண்ணம் இதற்கு காரணமாக இருக்கலாம்). 

இந்த குஞ்சுகள் என்ன செய்யுமென்றால், ஆபத்து நெருங்கும் போது, கூட்டிலிருந்து அப்படியே தாவி கீழே உள்ள ஆற்றில் விழுந்துவிடும். ஆபத்து நீங்கும் வரை நீருக்கடியில் நீந்திக்கொண்டிருக்கும். ஆபத்து விலகிவிட்டதாக உணர்ந்துவிட்டால், கரையேறி, தன் இறக்கைகளில் உள்ள நகங்களை பயன்படுத்தி மரமேறி தன் கூட்டிற்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்.

இதில் மற்றொரு வியப்பான தகவல் என்னவென்றால், குஞ்சுக்களாக இருக்கும்போது நன்கு நீந்தவும் மரமேறவும் தெரிந்த இவற்றிற்கு, பெரியவர்களானதும், இந்த இரண்டு தன்மைகளும் இவற்றை விட்டு போய்விடுகின்றன.

வாட்சின்கள் சைவத்தை உணவு முறையாக கொண்டவை. அதிலும் இலைகளையே அதிகம் உண்பவை. இவற்றை உணவுக்காக பிடிப்பதில்லை தென் அமெரிக்க பழங்குடியினத்தவர். இதற்கு காரணம், இவற்றின் இறைச்சி ருசியாக இருக்காது என்பதோடு மட்டுமல்லாமல், இவற்றிலிருந்து வெளிவரும் ஒருவித துர்நாற்றமும் மற்றுமொரு காரணம். உணவுக்கு வேறெதுவும் கிடைக்காத கடைசிக்கட்டத்தில் மட்டுமே இவற்றை பிடிக்கின்றனர் பழங்குடியினத்தவர்.

உலகின் மற்ற பறவையினங்களுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை வாட்சின்களுக்கு உண்டு. அது, இவற்றின் செரிமான மண்டலம் (Digestive System) தான்.     

மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும் இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில் (Crop) உணவு செரிமானம் நடக்கின்றது. இது அறிவியல்ரீதியாக மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.

வாட்சின்களின் தொண்டைப்பை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உணவுகளை சேமித்து வைப்பதற்கும், மற்றொன்று செரிமானத்திற்கும் பயன்படுகின்றது.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு தகவல், இந்த பறவைகள் தங்களது தொண்டைப்பையில் உணவுகளை நிறுத்திவைக்கும் நேரம்தான். திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும், திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன. உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது.

பாதி அறைத்த நிலையில் தொண்டைப்பையில் உள்ள உணவுகளை மேலே கொண்டுவந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுக்கின்றன இந்த பறவைகள். வாட்சின்களின் உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் இருந்தால் அவை தொண்டைப்பையில் உள்ள திரவங்களால் நீக்கப்பட்டு தூய்மையான உணவுகளே குஞ்சுகளுக்கு செலுத்தப்படுகின்றன.

வியப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு தகவல், வாட்சின்களுடைய தொண்டைப்பையும் அதன் தன்மைகளும் கால்நடைகளை ஒத்திருக்கின்றன என்பதுதான். ஆம், மாடு போன்ற கால்நடைகளும் இப்படியான செரிமான மண்டலத்தையே கொண்டிருக்கின்றன.

வாட்சின்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்...

மர்மங்களும், குழப்பங்களும்: 

வாட்சின்களின் வினோதமான உடலமைப்பும், இயல்புக்கு மாற்றமான தன்மைகளும் பரிணாமவியலாளர்களை பெரும் குழப்பத்திலேயே ஆழ்த்திருக்கின்றன.

  • இவை எந்த உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கும்?
  • உலகின் மற்ற பறவையினங்கள் தங்களுக்குண்டான gizzard செரிமான மண்டலத்தை கொண்டு பிரச்சனைகள் இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்க, இவைகளுக்கு மட்டும் கால்நடைகளுக்கு இருப்பது போன்ற செரிமான மண்டலம் உருவாகத் தேவை என்ன? 

- இப்படியான கேள்விகளுக்கு இதுவரை திருப்திகரமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

'பரிணாமத்தில் விடையில்லா கேள்விகள்தான் நிறைய இருக்கின்றனவே?, இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பல கேள்விகளுக்கு அப்படி இப்படி என்று எதையாவது கூறி சமாளிக்கவாவது முயற்சி செய்வார்கள் பரிமாணவியலாளர்கள். ஆனால் வாட்சினை பொறுத்தவரை அப்படியான அனுமானம் கூட கிடையாது. ஒரு பெரிய வெற்றிடம் மட்டுமே.

டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் (DNA Sequence data) கூட சூழ்நிலையை மோசமாக்கினவே தவிர சீராக்கவில்லை.

No satisfying evolutionary hypothesis has been proposed, and the situation has become worse with the availability of DNA sequence data - wikipedia
இதுவரை எந்தவொரு திருப்திகரமான பரிணாம அனுமானமும் முன்வைக்கப்படவில்லை. டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன - wikipedia  

இப்படியான படுகுழப்பமான சூழ்நிலை வாட்சின்கள் விசயத்தில் நீடிப்பதாலேயே இவற்றை வேறெந்த (பறவை) குடும்பத்தோடும் சேர்க்காமல் இவற்றிற்கென தனி குடும்பத்தை உருவாக்கியிருக்கின்றனர் (Family-Opisthocomidae).

உலகின் பெரும்பான்மை உயிரினங்களான பூச்சிகளின் தோற்றத்தில் எப்படி விடைத்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனரோ, அதுபோலவே வாட்சின்களின் விசயத்திலும் நிற்கின்றனர் பரிணாமவியலாளர்கள். (பூச்சிகளின் தோற்றம் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

இருக்கும் தலைவலி போதாதென்று மற்றுமொரு புது பிரச்சனை வாட்சின்கள் விவகாரத்தில் தற்போது கிளம்பியுள்ளது.  

அறிவியல் ஆய்விதழான "Naturwissenschaften"-னில், சென்ற மாதம் ஐந்தாம் தேதி (5th October, 2011) வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, வாட்சின்கள் குறித்த புது தகவலை கூறுகின்றது. அதாவது, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான எலும்புத்துண்டுகள் வாட்சின்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றன என்ற தகவல்தான் அது.

அப்படியென்றால், வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சார்ந்தவைகளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கின்றது. வாட்சின்கள் தென் அமெரிக்காவில் மட்டுமே வசிக்கின்றன. வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றால், எப்படி அவை தென் அமெரிக்காவிற்கு வந்தன? சற்று தூரம் கூட பறக்க முடியாத அவை, ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்கவிற்கும் நடுவில் இருக்கக்கூடிய 1000 கி.மீ (க்கும் மேலான) அகலம் கொண்ட அட்லான்டிக் பெருங்கடலை எப்படி தாண்டின?

இவைகளின் மூதாதையர் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவைகளாக இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும் கூட, 1000 கி.மீ தூரத்தை கடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றது Science Daily தளம்.

But how does a bird, which is an especially poor long-distance flyer, manage to cross a sea that is over 1,000 kilometres wide? Even if the flying capabilities of the Hoatzin's ancestors were better, it is highly unlikely that they could have managed this distance in the air - Science Daily, 4th Oct 2011

பிறகு எப்படித்தான் கடந்தன?

இங்கு தான் ஒரு சூப்பர்(??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் (drifting flotsam, rafting event).


மிதவை என்றால் நாம் பார்க்கக்கூடிய கட்டுமரங்கள் போன்று இருக்கலாம், அல்லது ஒரு சிறு தீவு போன்ற நிலப்பரப்பு அப்படியே தண்ணீரில் மிதந்து செல்வதாக இருக்கலாம். நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

இப்படி கண்டம் விட்டு கண்டம் மிக நீண்ட தூரம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மிதவையில் செல்ல வாய்ப்புண்டா? அப்படி இதுவரை ஒரு பயணத்தை சோதித்து பார்த்திருக்கின்றார்களா? அல்லது இதுவரை அப்படியொரு பயணத்தை யாராவது பார்த்திருக்கின்றார்களா?

பரிணாமவியலாளர்களின் இத்தகைய கற்பனை கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு அப்படி சொல்வதைத்தவிர வேறு வழியும் இல்லை. டார்வினின் காலத்தில் இருந்து பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்? ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது இப்படியான எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும்.

எது எப்படியோ, வாட்சின்கள் தொடர்ந்து இவர்களுடன் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன. 'வாட்சின்கள் விவகாரத்தில் மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது' என்ற (வழக்கமான) பதிலை சொல்லி தங்களை சமாதானப்படுத்திக்கொண்டு காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கின்றனர்.

இதுவரை பரிணாம விசயத்தில் எதிர்மறையான பதில்களையே இவர்களுக்கு சொல்லியுள்ள காலம், வாட்சின்கள் விசயத்திலாவது இவர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பதிலை சொல்லுமா??.....இவர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்....

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலை நிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Pictures taken from:
1st Picture - 'Its Nature' website.
2nd Picture - Howstuffworks website and tailored by aashiq ahamed.
3rd Picture - Scientific American blog. 

My sincere thanks to:
1. Lynx Edicions.

References:
1. Across the Atlantic On Flotsam: New Fossil Findings Shed Light On the Origins of the Mysterious Bird Hoatzin - Science Daily, 4th oct 2011. link
2. HBW 3 - Family text: Opisthocomidae (Hoatzin) -  Handbook of the Birds of the World, Lynx Edicions. link
3. Hoatzins are no longer exclusively South American and once crossed an ocean - Scientific American blog, 5th oct 2011. link
4. Hoatzin - Encyclopedia Britannica. link
5. Hoatzin - howstuffworks. link
6. Hoatzin — the strangest bird in the Amazon: Houston Chronicle, 9th April 2010. link
7. Hoatzin - Wikipedia. link
8. Hoatzin (Opisthocomus hoazin) - Guyana Birding. link
9. More Taxa, More Characters: The Hoatzin Problem Is Still Unresolved - Molecular Biology and Evolution, Oxford Journals. link
10. The Case of the Mysterious Hoatzin: Biogeography Fails Neo-Darwinism Again - Evolution News, 5th Nov 2011. link
11. Opisthomocus hoazin - Oiseaux birds. link
12. RELIC OF PREHISTORY? - Last Refuge. link
13. Hoatzin – Beautiful Stinkbird: Suite 101. link
14. Oceannic dispersal - wikipedia. link
15. Biogeographical Challenges to Neo-Darwinian Evolution - Idea center. link
16. The Horrible Hoatzin - Its Nature. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


Tuesday, November 8, 2011

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...அஸ்ஸலாமு அலைக்கும், 

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.

எனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி பிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர். மைசூரில் இருந்து இவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தபோது, கூடுதல் வருமானத்திற்காக சையத் கலீம் என்பவரது துணிக்கடையில் முதலீடு செய்தனர் இவரது குடும்பத்தினர். வரும் லாபத்தில், முதலீட்டிற்கு ஏற்ற பங்கை உமரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட வேண்டுமென்பது ஒப்பந்தம்.

சையத் கலீம் அவர்களின் நேர்மையான வியாபாரத்தால் கவரப்பட்ட உமரின் பெற்றோர், தாங்களும் அந்த கடையில் முதலீடு செய்திருப்பதால், சையத் கலீமுடன் சேர்ந்து பணியாற்றுமாறு உமரை கேட்டுக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களுடன் பணியாற்ற மறுத்து விட்டார் உமர். நாளடைவில் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகமாக வேண்டா வெறுப்பாக அந்த கடையில் பணியாற்ற ஆரம்பித்தார் (அப்போது டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தால் பகுதி நேரமாகவே பணியாற்றினார் உமர்).

சையத் கலீம் அவர்களின் துணிக்கடை வாயிலாக உமருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன். அங்கே அவருக்கு குர்ஆன் கொடுக்கப்பட, மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேற ஆரம்பித்தன.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் மறைந்து, இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் உமர். தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய மார்க்கத்தை தன் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். உமரின் இறைப்பணி வெற்றியளிக்க ஆரம்பிக்க, அவரின் சகோதரி பிர்தவ்ஸ்சும் இஸ்லாத்தை பின்பற்றுவதென முடிவெடுத்தார்.

இறைவனின் கடுமையான சோதனைகள் ஆரம்பித்தன.

எவ்வாறான சோதனைகள் அவை? இறைவனின் சோதனைகளை எப்படி கையாண்டனர் உமரும், சகோதரி பிர்தவ்சும்?

சகோதரியின் வார்த்தைகளில் இருந்து....

"கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் (ஆஷா), என் சகோதரி வீணா மற்றும் எங்கள் அண்ணன் நாகராஜ் என்று நாங்கள் மூன்று பேர். கடைசிப் பிள்ளை என்பதால் என் மீது செல்லம் அதிகம். 

என் அண்ணன் ஆன்மீக விசயத்தில் மிகவும் தீவிரமானவர். தினமும் காலை மாலையென பூஜைகளை மேற்கொள்வார். முரட்டுத்தனமும் அதிகம். சமயங்களில் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கின்றோம். 

சையத் கலீம் என்பவரின் துணிக்கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து பூஜைகள் செய்வதை நிறுத்திவிட்டார் என் சகோதரர். இதனால் என் அம்மாவிற்கும், அவருக்குமிடையே பெரிய அளவிலான வாக்குவாதங்கள் நடைபெறும். அவருடைய நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்திருந்தன. என் சகோதரர் இப்போது அதிக பொறுப்பானவராக மாறியிருந்தார். மென்மையாக பேசவும் செய்தார். 

நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய இந்த திடீர் மாற்றம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.    

தினமும் என் அம்மாவிடம் விவாதிப்பார். ஈஸ்வரனுக்கு எதற்கு மனைவி?, சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள்?, இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை?...

இப்படியான அவருடைய கேள்விகளால் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். 

என் அண்ணனது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமும், சில நிமிடங்கள் தன் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வார். உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். ஒருநாள், அவர் வெளியே சென்றிருந்த நேரம், அவரது அறைக்குள் சென்று, எதையாவது மறைத்து வைத்திருக்கின்றாரா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது கையில் அகப்பட்டது ஒரு டைரி. அதனைத் திறந்தேன். உள்ளே இருந்த எந்த வார்த்தையும் எனக்கு புரியவில்லை, ஒரே ஒரு வார்த்தையை தவிர. அது நமாஸ் (தொழுகை) என்ற வார்த்தை. 

அன்று மாலை இது குறித்து என் சகோதரரிடம் கேட்க நினைத்தேன். அதற்கேற்ப, என் அம்மாவும் சகோதரியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த டைரி குறித்தும், அவருடைய இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேட்டேன்.

என் சகோதரர் கூற ஆரம்பித்தார். ஆதாம், ஏவாள், இப்லீஸ் என்று விளக்க ஆரம்பித்தார். இந்த சிலை வணக்கங்கள் தவறென்றார். இவை மனிதனை நேரான பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன என்று கூறினார். 

இப்போது நான் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எப்படி மனிதனால் இறைவனின் உருவத்தை கற்பனை செய்யமுடியும்? வெற்று கண்களால் நம்மால் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை வானத்தை பார்க்க முடியும். அதற்கு மேலாக பார்க்க நம்மால் முடியாது. நம் கண்களுக்கு அவ்வளவுதான் வரையறை. அது போல, நம் மனதிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எல்லை இருக்க வேண்டும். நம்மால் அந்த வரையறையை வைத்துக்கொண்டு இறைவனின் உருவத்தை கற்பனை செய்ய முடியாது. 

என்னுடைய ஆய்வுக்கு பிறகு, இறைவனுக்கான இந்த உருவங்கள், மனிதர்களின் கற்பனையால் உருவானவை என்ற முடிவுக்கு வந்தேன். 

ஒருநாள், என் சகோதரர் வேலை செய்துக்கொண்டிருந்த சையத் கலீம் அவர்களின் கடைக்கு சென்றேன். அங்கே கலீம் அவர்களின் சகோதரர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். அது அப்துல்லாஹ் யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு. அல்-கஹ்ப்f என்ற அத்தியாயத்தில் இருந்து நான் வாசித்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. 'கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும், இறைவனின் வார்த்தைகளை எழுதி முடிக்க முடியாது' என்று கூறியது அந்த வசனம்.

இறைவன் அவ்வளவு போற்றுதலுக்கு உரியவனா? இந்த வசனத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தேன். மனிதனின் படைப்பு, உயிரினங்கள், இந்த பூமி என்று இவை அனைத்து குறித்தும் பிரதிபலிக்க ஆரம்பித்தேன். ஆம், அந்த வசனம் கூறுவது உண்மைதான். எனக்குள் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. 

இஸ்லாத்தை பின்வற்றுவதென முடிவெடுத்தேன். இதனை என் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த இடைநேரத்தில், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை என் குடும்பத்தாரிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் என் சகோதரர். அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பேசுவார், விளக்க முயற்சிப்பார். அவருடைய உரையாடல்களை உற்று கவனிப்பேன். எனக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது. 

டிப்ளமா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, இனி என்னுடைய வாழ்வை ஒரு முஸ்லிமாக தொடர வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டில் நடந்த பூஜைகளை புறக்கணிக்க ஆரம்பித்தேன். 

'ஒரு பெண்ணாக எப்படி வீட்டிலிருந்து வெளியேறுவது?'

'ஒரு பெண் என்பதால், உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், பின்பற்றுவதிலிருந்தும் பின்வாங்க வேண்டுமா?..........கூடாது' - இதுப்போன்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.

இந்த கால கட்டத்தில் என்னுடைய சகோதரியும் இஸ்லாம் குறித்து தெளிவுபெற ஆரம்பித்தார். ஒரு விநாயகர் சதுர்த்தியின் போது, நாங்கள் மூவரும் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை எதிர்க்க ஆரம்பித்தோம். எங்களுடைய நடவடிக்கைகளை என் தாய் கண்டித்தார். கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.

நாங்கள் வெளியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் எங்கள் சகோதரர். சையத் கலீம் அவர்களின் கடையில் வேலை செய்த குர்ஷித் பாய் என்பவர் நாங்கள் தங்கிக்கொள்ள அவருடைய ஸ்டோர் ரூமை சில நாட்களுக்கு கொடுத்துதவ முன்வந்தார். என்னுடைய சகோதரி கடைசி நேரத்தில் எங்களுடன் வருவதில் இருந்து பின்வாங்கினார். ஆனால் நான் உறுதியாக இருந்தேன், அல்ஹம்துலில்லாஹ். என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் அம்மா. தங்க நகைகளும், சிறந்த வரன் பார்த்து திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். எனக்கு இவையெல்லாம் தேவையில்லை என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டேன்.

அன்று மாலை, நானும் என் சகோதரரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். என் அண்ணனிடம் அப்போது இருந்ததோ நூறு ரூபாய் மட்டுமே. அல்ஹம்துலில்லாஹ், ஆனாலும் எங்களுக்கு அப்படியொரு துணிச்சலை இறைவன் கொடுத்திருந்தான்.

வீட்டிலிருந்து வெளியேறிய போது நான் இறுதியாண்டு டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் என்னை சந்தித்த என் அம்மா, பாட்டியை சந்திக்க சொல்லி கேட்டுக்கொண்டார். பாட்டி வீட்டிற்கு சென்றேன்.

'நீ முஸ்லிமாகி விட்டாயல்லவா?', என் பாட்டி கேட்டார்.

'ஆம்', பதிலளித்தேன்.

'நீ கிருத்துவராகவோ அல்லது வேறு எந்த மதத்தையும் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள். ஆனால் முஸ்லிமாக வேண்டாம். அவர்கள் மோசமாவர்கள்'.

'உங்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியவில்லை, அதனால் தான் இப்படி பேசுகின்றீர்கள்'.

என்னை ஒரு அறையில் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். 'என்னால் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டேன். அன்றைய தினத்தில் எனக்கு அப்படியொரு வலிமையையும், துணிச்சலையும் கொடுத்திருந்தான் இறைவன், அல்ஹம்துலில்லாஹ்.

காவல்துறையிலும், கல்லூரி முதல்வரிடத்திலும் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் என் அம்மா. ஆனால் நாங்கள் எதற்கும் மசியவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தோம்.

நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, வேறொரு நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் சகோதரர் அந்த வேலையை கைவிட்டார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு (கூட) அந்த வேளையில் போக முடியவில்லை என்பதே காரணம்.

ஒரு சிறிய இடத்தில் வாழ ஆரம்பித்தோம்.

சிறிய ஸ்டவ், ஒரு விரிப்பு (பாய்), சில சமையல் பாத்திரங்கள் - இவைதான் எங்களிடம் அப்போது இருந்த பொருட்கள். எங்களுடைய துணிமணிகளை தரையில் வைத்துக்கொள்வோம். புத்தகங்களை தலையணைகளாக பயன்படுத்திக்கொள்வோம். என்னுடைய துப்பட்டா தான் தரைவிரிப்பாக இருந்தது. சாப்பிடும் தட்டுக்களை கண்ணாடிகளாக உபயோகப்படுத்தி தலை வாரிய அந்த நாட்கள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ், அவை என் வாழ்வின் மிக அழகான நாட்கள். இவ்வளவு சோதனைகளை அளித்து எங்களை கெளரவப்படுத்தியதற்காக இறைவனுக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

மதிய உணவோடு என்னை சந்திக்க கல்லூரிக்கு வருவார் என் அம்மா. வீட்டிற்கு திரும்ப வேண்டுமென்று சொல்லுவார். நான் மிகுந்த பசியுடன் இருந்தாலும், அந்த உணவை வாங்க மறுப்பேன்.

சுமார் 8-12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தார் என் சகோதரர். சில நேரங்களில், வாழைப்பழங்கள் மற்றும் சில ரொட்டி துண்டுகளுடன் எங்கள் நாட்களை கழித்திருக்கின்றோம். விழித்திருந்தால் பசிக்கும் என்பதால், சில நாட்களில், கல்லூரியில் இருந்து திரும்பியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உறங்க சென்று விடுவேன்.

இன்று என்னுடைய வாழ்வை திரும்பி பார்க்கின்றேன். இறைவனின் மகத்தான கிருபை மட்டும் இல்லையென்றால் எங்களால் இத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்க முடியாது.

அல்ஹம்துலில்லாஹ், தற்போது தொலைத்தொடர்பு (டெலிகாம்) துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கின்றேன். என் சகோதரர், ஒரு பெரிய நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகின்றார்.

என் முஸ்லிம் நண்பர்களை கிண்டல் செய்த பள்ளி நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். இன்றோ, அவன் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கின்றான் இறைவன். தினமும் அவனை ஐந்து முறை தொழ வைத்திருக்கின்றான்.

பல்வேறு சோதனைகளை கொண்டு எங்களுக்கு பயிற்சியளித்து தூய்மைபடுத்தியிருக்கின்றான் இறைவன். இதனை கண்களில் கண்ணீர் ததும்ப நினைத்துப் பார்க்கின்றேன்.

'இறைவன் யாரை அதிகம் நேசிக்கின்றானோ அவர்களுக்கு அதிக சோதனைகளை கொடுக்கின்றான்' என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை நினைவு கூறும்போதெல்லாம் இறைவன் எங்களுக்கு இன்னும் சோதனைகளை கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம். அதனை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றோம்"

சுப்ஹானல்லாஹ்....

இவர்களின் அனுபவத்தை கேட்கும் போதே புது உற்சாகம் பிறக்கின்றது. இவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை இன்மையிலும் மறுமையிலும் இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

சகோதரி பிர்தவ்ஸ் அவர்களுக்கு ஒரு அழகான, நிறைவான வாழ்வை இறைவன் கொடுத்திருக்கின்றான். ஒரு பெண், பின்பு ஆண் இரட்டையர்கள் என்று மூன்று குழந்தைகளை இறைவன் சகோதரிக்கு அருளியிருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனின் சோதனைகள் நமக்கான பயிற்சிகள், நம்மை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் என்றெண்ணி பொறுமை காப்போம். இன்ஷா அல்லாஹ்.

இறைவா, எங்களுக்கு எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் பொறுமையையும், வலிமையையும் தந்தருள்வாயாக...ஆமீன்.

அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை - குர்ஆன் 2:286. 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக....ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
1. இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.
2. சகோதரர் உமர் அவர்களின் அனுபவத்தை காண கீழே உள்ள youtube சுட்டியை பயன்படுத்தவும்.

My Sincere thanks to:
1. சகோதரி அன்னு.

References:
1. Firdouse Rao - My Journey to Islam: whyislam.org. link
2. Birth of Twins - Mumlovesme.com. link
3. Br.Omar rao - youtube. link
4. Muhammed Umar Rao - Islamreligion.com. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 


Monday, October 17, 2011

தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

---------------------
அறிவிப்பு:

தமிழ்மணத்தின் பெயரில் நடந்த குழப்பத்திற்கு தமிழ்மணம் வருத்தம் தெரிவித்துள்ளது.
---------------------


ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்மணத்தில் இணைந்துள்ள) முஸ்லிம் பதிவர்களின் பதிவுகள் தொடர்ந்து வெளிவரும், இன்ஷா அல்லாஹ். இதுவரை வெளிவந்துள்ள பதிவுகளின் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில், இந்த பதிவை படிக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவு உங்களை கொதிப்படைய செய்யலாம். பொறுப்பான சேவையில் இருக்க வேண்டிய திரட்டி, பொறுப்பற்ற முறையில் இஸ்லாமிய போதனையை கேலியும், அவமதிப்பும் செய்திருப்பது உங்களது உணர்ச்சிகளை தூண்டலாம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம், இறைவன் காட்டிய வழிப்படி பொறுமையை கடைப்பிடித்து அழகாக முறையில் நம் எதிர்ப்பை காட்டுவோம் என்பதுதான். இன்ஷா அல்லாஹ். 

முதலில் தமிழ்மணம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அது குறித்து சொல்லிவிடுகின்றேன். தமிழ்மணம் என்பது பல்வேறு பதிவர்களின் ஆக்கங்களை சேகரித்து ஒரே இடத்தில் கொடுக்கும் தளமாகும் (திரட்டி). தமிழ்மணம் போல தமிழில் எண்ணற்ற திரட்டிகள் உண்டு.

சென்ற மாதம் தமிழ்மணத்துடனான ஒரு உரையாடலின் போது (அந்த உரையாடலை காண இங்கே சுட்டவும்) அவர்களை நோக்கி "உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று முகமன் கூறியதற்கு, தமிழ்மணம் அளித்த பதில் அதிர்ச்சி தந்தது. அது, 

"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. 

ஆனால், சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது. 

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"

ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம். 

இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேலி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான். 

அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை). 

ரமணிதரன் அவர்களின் இந்த பொறுப்பற்ற பதில் முஸ்லிம்களை மேலும் கொதிப்படைய செய்தது. ஏனென்றால், அந்த தளத்தில் விவாதித்த ரமணிதரன், தமிழ்மணம் சார்பாகவே தான் கருத்து கூறுவதாக ஆரம்ப கமெண்ட்டுகளிலேயே (இரண்டாவது கமெண்ட்) தெரிவித்துவிட்டார். இதனை உறுதிப்படுத்திக் கொண்டு தான் தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பினோம். 


இருப்பினும் பொறுமைக் காத்து, தமிழ்மணம் சார்பாக தான் செயல்படுவதாக ரமணிதரன் கூறிய அந்த கமெண்ட்டை ஆதாரமாக அனுப்பி, மறுபடியும் விளக்கம் கேட்டோம். அதற்கு பதில் என்ற பெயரில் ரமணிதரன் கூறியிருந்தது மிகவும் துரதிஷ்டவசமானது.

என்ன தெரியுமா கூறினார்?? ஒரு கமெண்ட்டில் தானே தமிழ்மணம் சார்பாக என்றிருக்கின்றது, நீங்கள் குறிப்பிட்ட கமெண்ட்டில் அப்படி இல்லையே என்று.

என்ன அறியாமைக்கருத்து இது??? அப்படியென்றால் அந்த ஒரு கமெண்ட் மட்டுமே தமிழ்மணம் சார்பாக போடப்பட்டது, மற்ற அவருடைய கருத்தெல்லாம் இவருடைய தனிப்பட்ட கருத்தாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். 

இருப்பினும், தமிழ்மண நிர்வாகிகள் பதில் சொல்லுவார்கள் என்று பொறுமை காத்தோம். தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரும் வரை எங்களின் பதிவுகளில் தமிழ்மண வோட்டு பட்டையையும், தமிழ்மணத்தில் எங்கள் பதிவை சேர்ப்பதையும் நிறுத்திவைத்தோம். இதனாலேயே கடந்த இரு நாட்களில் பதிவிட்ட (இந்த விவகாரங்களை பற்றி தெரிந்த) முஸ்லிம் சகோதர சகோதரிகள், தமிழ்மணத்தில் தங்களுடைய பதிவுகளை சேர்க்கவில்லை, வோட்டு பட்டையையும் தூக்கிவிட்டார்கள். 

இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றோம். 

தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக முஸ்லிம்களிடம் தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை. 

நேரம் தாமதிக்காது தமிழ்மணம் இந்த விசயத்தில் செயல்படுவது சாலச்சிறந்தது. 

அந்த தளத்தில், அந்த தள உரிமையாளர்களுக்கும், அங்கே கமெண்ட் போட்டவர்களின் கருத்துக்கும் பதில் என்று பெயரில் சகோதரர் இரமணிதரன் கூறிய வார்த்தைகள் ஆபாசத்தின், அருவருப்பின், அநாகரிகத்தின் உச்சக்கட்டம். எங்களுடைய கடும் கண்டனத்தை இதற்கு தெரிவித்து கொள்கின்றோம்.ஒரு நிர்வாகி இப்படி செயல்படுவதை இதற்கு முன் பார்த்ததில்லை. இனி பார்க்ககூடாதென்றும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். பொதுவில் இப்படி பேசி எல்லார் மனங்களையும் உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்கு பகிரங்க மன்னிப்பை சகோதரர் ரமணிதரன் கேட்க வேண்டும். 

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்வார்கள் முஸ்லிம்கள் என்ற எண்ணத்தில் தமிழ்மண நிர்வாகம் இருக்குமானால், வெறும் வோட்டுபட்டையை நீக்குவதுடனும், தமிழ்மணத்தில் இருந்து விலகுவதுடனும் எங்களது நடவடிக்கைகள் முடிவடையாது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு ஆதாரமாக வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பதிவர்கள், வாசகர்கள் இல்லையேல் திரட்டிகள் கிடையாது. இதனை படிக்கும் முஸ்லிம்கள் பொறுமைக்காத்து, இதுக் குறித்த உங்கள் கண்டனங்களை அழகான முறையில் தமிழ்மணத்திற்கு தெரியப்படுத்தவும் (admin@thamizmanam.com). மேலும் நீங்கள் அறிந்தவர்களுக்கும் இதனை அனுப்பி அவர்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்ய சொல்லவும்.

”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - குர்ஆன் 5:2

குறிப்பு: எங்களிடம் இருந்த, தமிழ்மணத்தில் இணைந்துள்ள முஸ்லிம் பதிவர்களின் மெயில் முகவரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்காதவர்கள், இதனை பார்த்த பிறகு, உங்கள் தளங்களிலும் கண்டனத்தை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை இன்று வெளிவந்துள்ள முஸ்லிம்களின் ஏனைய கண்டன பதிவுகள் (இந்த பகுதி தொடர்ந்து update செய்யப்படும்):

1. சகோதரி அஸ்மா: http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
2. சகோதரர் குலாம்: http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
3. சகோதரர் Faaique: http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
5. சகோதரர் அப்துல் பாசித்: http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
6. சகோதரர் ஹைதர் அலி: http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
7. சகோதரி ஆமீனா: http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
8. சகோதரர் ஜமால்: http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
9. சகோதரர் ரஜின்: http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
10. சகோதரர் இளம் தூயவன்: http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்): http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
12. சகோதரர் கார்பன் கூட்டாளி: http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
13. சகோதரி ஜலீலா கமால்: http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
14. சகோதரர் சிநேகிதன் அக்பர்: http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
15. சகோதரர் ஹாஜா மைதீன்: http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
16. சகோதரர் HajasreeN: http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
17. சகோதரர் அரபுத்தமிழன்: http://ibnuzubairtamil.blogspot.com/2011/10/blog-post_17.html
18. சகோதரர் அப்துல் ஹகீம்: http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html
19. சகோதரர் ஜெய்லானி: http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html
20. சகோதரர் காதர்: http://theepandham.blogspot.com/2011/10/blog-post_17.html
21. சகோதரர் ஸ்டார்ஜன்: http://ensaaral.blogspot.com/2011/10/blog-post_17.html
22. சகோதரர் ரஹீம் கஸாலி: http://ragariz.blogspot.com/2011/10/letter-to-thamizhmanam.html
23. சகோதரர் அப்துல் காதர்: http://mabdulkhader.blogspot.com/2011/10/blog-post.html
24. சகோதரர் ரியாஸ்: http://riyasdreams.blogspot.com/2011/10/blog-post_17.html
25. சகோதரர் சுவனப்பிரியன்: http://suvanappiriyan.blogspot.com/2011/10/blog-post_17.html
26. சகோதரி ஆயிஷா: http://puthiyavasantham.blogspot.com/2011/10/blog-post_18.html
27. சகோதரர் ஜியாவுதீன்: http://www.ziyau.in/2011/10/thamizmanam-my-condemnation.html
28. சகோதரி அன்னு: http://mydeartamilnadu.blogspot.com/2011/10/blog-post.html
29. சகோதரி பாத்திமா நிஹாஜா: http://fnihaza.blogspot.com/2011/10/blog-post_17.html
30. சகோதரி நாஸியா: http://biriyaani.blogspot.com/2011/10/blog-post.html


இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ