Monday, June 28, 2010

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்...



அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

      எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.     

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. 

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.            

1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம். 

"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.

குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்....

"இறைவா நீ இருந்தால்..."

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.

என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது.

பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.

என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை.

பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான "Muhammed: His life based on the Earliest Sources" னும் அறிமுகமாயின.

நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்?

பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள்.

ஆக, குரானைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense). நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது.

இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.

நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர்.

நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.
"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13  
"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46.
அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான். அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது..."

அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன. 

"நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து வேண்டுமென்று" மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும்.

என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.

என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.

என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.

என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான்.



தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான்.

அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது.

இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான். நான் இழந்ததை விட பெற்றவை அதிகம்.

என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள். அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.

என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்....."

சுப்ஹானல்லாஹ்....ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம்  நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது.
  
டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது.

பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். 

இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்... 

Dr. Laurence Brown's official website: 
1. http://www.leveltruth.org

Canadian Dawah Association's official website: 
1. cdadawah.com

My Sincere thanks to: 
1. Br.eddie

References: 
1. Dr.Brown's Conversion story - leveltruth.org
2. Purpose of Life - Dr.Brown's interview with Br.eddie, thedeenshow.com
3. Dr.Brown's jihad - Dr.Brown's interview with Br.eddie, thedeenshow.com
4. Dr.Laurence Brown - Wikipedia..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Tuesday, June 15, 2010

"ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்" - அஹ்மதிநிஜாத்



அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை. 

அவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது.  சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.

அதிரடியான நேர்க்காணல் அது. 

அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், "ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது" என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்காணல் நடைப்பெற்றது.

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்" என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார் 

அப்போது கேட்க பட்ட கேள்விதான்,  

ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே? 

அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில்,

"அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்....."  

இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்...



......ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?

(சிரிக்கின்றார்)...உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

ஏன்?

அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்? 

அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.

முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா?

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா?

எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது. 

அது உண்மையா இல்லையா?

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. 

நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர். 

எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள். 

சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா? 

ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். 

இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் --

உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. .......ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது. 

நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது. 

செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று.

அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், "இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று".  முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை---

அவர்கள் பின்னடைந்து விட்டார்கள்.  

அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது. 

ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்? 

அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். 

என்னால் உடன்பட முடியவில்லை.....

அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.

அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது. 

...நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ?   

118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா? 

ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. 

இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது?

NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.
  
அதேபோல,  உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள்.

உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே?

என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம். 

உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்? 

நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள---
  
அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று.

கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல.

விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு  அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன். 

உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா

இது----என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது---  

என்னை பேச அனுமதியுங்கள். 

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா? 

இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள்.

வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது.

ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை? 

நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது? 

நேற்று அமெரிக்கா "எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன" என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது? 

ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன.

இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,

உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும். 

ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். 

ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா?

இல்லை.

ஏன்?

குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள்.

நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா? 

இராணுவ நடவடிக்கைப் பற்றி?

பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

என்னையா ?

ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன். 

இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா? 

இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று? 

நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்...

நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. 

அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா?

அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும்.

சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது. 

எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா?

நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து?

நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.

ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.

நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்?

தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,

நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா? 

நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.

உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது.

சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான்.

இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம். 

பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,

  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை. 
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.   

இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,

இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.
நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?
அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம். 

புரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ?....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.... 

This article is the extract of Iran President's Interview with George Stephanopoulos which was translated by Aashiq Ahamed for Unnatham Magazine.


My sincere thanks to:
1.Unnatham Magazine.

References:
1. Mahmoud Ahmadinejad on Nuclear Programme - ABC News dated 5th May, 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 
       






Wednesday, June 9, 2010

ஏன் இஸ்லாம்? - III



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

     சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி கார்டியன் (The Guardian)", இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.


"கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள். 

இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு...  


"கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு. 

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள் "கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)" என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர்.

அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர். இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும்; ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.

நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம், தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீக ரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான். 

அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.



நான் நேர்க்காணல் செய்த பெண்களோ, இஸ்லாம், தங்களுக்கு மிகுந்த கண்ணியத்தை அளித்துள்ளதாகவும், பெண்களை அழகு பொருட்களாக காணும் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய தகவல், இவர்களில் பலர், இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு கிருத்துவத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். சர்ச்சுக்கு செல்பவர்களாகவோ அல்லது சர்ச்சுடன் தொடர்புடையவர்களை உறவினர்களாகவோ கொண்டவர்கள்.  இது இஸ்லாத்தை ஏற்கும் வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இஸ்லாத்தை தழுவும் பல வெள்ளையர்கள் அதற்கு முன் எந்த ஒரு மார்க்கத்தின் மீதும் பற்று இல்லாதவர்களாகத் தான் இருப்பர்.     

அதுபோல நான் அறிந்துக்கொண்ட ஒரு சுவாரசியமான விஷயம், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களை, குறிப்பாக ஆண்களை, பார்க்க வைத்ததில் மால்கம் எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றார். நான் பேசிய பலருடைய மனதிலும் மால்கம் எக்ஸ் என்ற அந்த சகோதரர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். (மால்கம் எக்ஸ் குறித்த கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)

அமெரிக்காவைப் போன்று பிரிட்டனிலும், கறுப்பின முஸ்லிம்கள், குற்றவாளிகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படி திருத்தப்பட்ட பலர், தங்களை நல்வழிப்படுத்திய கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதில் மும்முரமாக இருக்கின்றனர். இதில் அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.     

இறுதியாக நான் சொல்ல விரும்புவது, வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு கிருத்துவத்தில் பதிலில்லாத போது, அதனை முன்வைத்தவர்களுக்கு சரியான மாற்றாக இருப்பது இஸ்லாம்.

சிலர், தங்கள் ஹீரோக்ககளை பார்த்து இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தங்களை தேடி முடிவில் இஸ்லாத்தை வந்தடைகின்றனர்.

எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை"


சுபானல்லாஹ்....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

   
My Sincere Thanks To:
1. The Guardian Newspaper.

Original Article written by:
1. Br.Richard Reddie.

Extract of the article translated by:
1. Aashiq Ahamed A

Reference: 
1. Why are black people turning to Islam? - The Guardian, dated 5th October 2009.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Saturday, June 5, 2010

Nation of Islam - எழுச்சியும் வீழ்ச்சியும்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. அமெரிக்காவில், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம். அவர்களுக்கு உதவ  வாலஸ் பர்த் முஹம்மது (Wallace D.Fard Muhammed) என்பவரால் 1930ல் தோற்றுவிக்கப்பட்டது தான் "Nation of Islam (இஸ்லாமிய தேசிய அமைப்பு அல்லது இஸ்லாமிய தேசியம்)".

பிறகு, 1933 ஆம் ஆண்டு, பர்த் முஹம்மது அவர்களின் மாணவரான எலிஜா முஹம்மது(Elijah Muhammed) அவர்களின் கட்டுபாட்டுக்குள் அமைப்பு வந்தது. எலிஜா அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் தான் (1933-1975) அமைப்பு மாபெரும் எழுச்சி கண்டது. அமெரிக்காவை திணறடித்தது.


அமைப்பின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தையை பார்த்தவுடன் இது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருக்குமோ என்று நீங்கள் கருதினால், அது தவறு.

ஆம், பெயரில் தான் இஸ்லாம் இருந்ததே ஒழிய, இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுமளவு வேறுபாடுகள்.

இவர்களது சில கொள்கைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்,

  • இவர்களை பொறுத்தவரை, இந்த அமைப்பை தோற்றுவித்தவரான பர்த் முஹம்மது அவர்கள் இறைவனின் அவதாரம் (God Incarnate).
  • அதற்கு பிறகு வந்த எலிஜா முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர். 
  • நோன்பு, தொழுகை, ஜகாத் அவசியமில்லை. 
  • கிருத்துவர்களை போல நாற்காலியில் அமர்ந்து கொண்டே பிரார்த்தனை செய்வார்கள். சஜிதாவெல்லாம் கிடையாது. 
  • ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தான் உயர்ந்தவர். மற்ற இனத்தவர் இவர்களுக்கு கீழே தான். அதுவும், வெள்ளையர்களை "Devils" என்று அழைத்தவர்கள். 
  • மற்ற இனத்தவருடன் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்தவர்கள்.   

ஆக, நாம் மேலே பார்த்த அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகள். சுருக்கமாக சொல்லப்போனால் தங்களுக்கு தகுந்தாற்போல வளைத்துக்கொண்டார்கள்.

அதே சமயம், இவர்களிடம் நல்ல விசயங்களும் பல இருந்தன. உதாரணத்துக்கு, இவர்களின் அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள்,

  • மது பழக்கம் இருந்தால் விட்டு விட வேண்டும். 
  • போதை மருந்துகளின் பக்கம் கூட போகக்கூடாது. 
  • சூதாட்டம் கூடாது. 
  • கொள்ளை கும்பல்களின் (Gang, Gangster) உறவு இருக்கக்கூடாது. 
  • மிக கண்ணியமான முறையில் உடையணிய வேண்டும். 

இவை மட்டுமல்லாமல், இவர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள். குரான் தான் இவர்களுக்கு இறைவேதம்.

இந்த அமைப்பால் தங்களின் தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்தவர்கள் பலர்.

அரசியல் ரீதியாக மாபெரும் எழுச்சியை 1950 களில் கண்டது இஸ்லாமிய தேசிய அமைப்பு. அது தான், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராய் கருதப்படும் மால்கம் எக்ஸ் (Malcolm X) அவர்கள் அந்த அமைப்பில் உறுப்பினராய் சேர்ந்த நேரம் (1952). மால்கம் எக்ஸ் ஒரு புத்துணர்ச்சியை அமைப்பிற்கு கொடுத்தார். இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது.

முஸ்லிம்களுக்கோ பெரும் வேதனையை கொடுத்தது இவர்களுடைய வளர்ச்சி. அமைப்பின் கொள்கைகள் இஸ்லாமிற்கு முரணானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இஸ்லாமிய தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று அறிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கேட்க கூடிய நிலையில் எலிஜா அவர்கள் இல்லை. 

எவ்வளவு நாள் தான் பொய்யான முகம் நிலைத்திருக்கும்?

எந்த மால்கம் எக்ஸ் அந்த அமைப்பு எழுச்சி பெற உதவியாய் இருந்தாரோ, அதே எக்ஸ், 1963 ஆம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தூய இஸ்லாமின்பால் வந்து மாபெரும் அதிர்ச்சியை அவர்களுக்கு தந்தார். 

மால்கம் எக்ஸ் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவர் சென்ற ஹஜ் யாத்திரை தான்.

அங்கு பலதரப்பட்ட மக்களும் ஒன்றாக, நிற பேதம் பார்க்காமல் சகோதரர்களாய் பழகியது அவருக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வித்திட்டது. ஹஜ் பயணத்திற்கு பிறகு, வெள்ளையர்கள் மீதான அவருடைய எண்ணம் மாறியது. எல்லோரும் ஒன்றே என்ற எண்ணம் பிறந்தது. இது போன்ற எண்ணங்கள் இஸ்லாமிய தேசிய அமைப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது. வெள்ளையர்களை தாழ்ந்தவர்களாகவே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.

மால்கம் எக்ஸ், இஸ்லாமிய தேசிய அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு புறம்பானவை என்று கூறினார். ஆனால் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று அறிவித்தார்.

அவருடைய விலகல் அந்த அமைப்புக்கு பலத்த அடியாக அமைந்தது. 

அதே போல, அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி, நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இமாம் சிராஜ் வஹாஜ் என்று எண்ணற்றவர்கள் தொடர்ந்து வெளியேறி சத்தியமார்க்கத்தின்பால் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இப்படி பல பேர் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கு பின்னணியில் இருந்தவர், இன்று முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் முக்கியமானவர். அவர் செய்த காரியம் நிச்சயம் புரட்சிகரமானது. 

இஸ்லாமிய தேசிய அமைப்பின் 45 ஆண்டு கால வாழ்வை, 1975 ஆம் ஆண்டு முடித்து வைத்தவர் அவர். இஸ்லாமிய தேசிய அமைப்பை கலைத்து அதை இஸ்லாமுடன் ஐக்கியப்படுத்தியவர் அவர்.

அந்த நபர் வேறு யாருமல்ல...நபி என்று சொல்லப்பட்ட எலிஜா முஹம்மது அவர்களின் மகனான வாரித் தீன் முஹம்மது (Warith Deen Mohammed) தான் அவர். 

தன் தந்தையினுடைய செயல்பாடுகள், இஸ்லாமிற்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து போராடி வந்து, எலிஜா அவர்களின் மறைவுக்கு பிறகு அந்த அமைப்பை கலைத்தே விட்டார்.

சிறு வயதிலிருந்தே பர்த் முஹம்மது அவர்களின் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் வாரித். அதன் காரணமாக சிலமுறை அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மறுத்து தன் இருபத்தி எட்டாம் வயதில் சிறைக்குச் சென்றார்.

அந்த சிறைச்சாலை தான் அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

குரானை நன்கு ஆராய்ந்து தூய இஸ்லாமை அவர் அறிந்து கொண்டது அந்த பதினான்கு மாத சிறை வாழ்க்கையில் தான். சிறையை விட்டு வெளியே வந்த போது, இஸ்லாமிய தேசிய அமைப்பு தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இஸ்லாமின்பால் வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையர்களையும் சமமாக பார்க்க வேண்டுமென்று கூறினார்.

இவருடைய தாவாஹ் தான் மால்கம் எக்ஸ் அவர்களையும், இன்னும் பலரையும் அமைப்பிலிருந்து வெளியேற வைத்தது.

அவருடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு, அதாவது, 1975 ஆம் ஆண்டு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். அழகிய முறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார். இஸ்லாமிய தேசிய அமைப்பு (Nation of Islam), முஸ்லிம் அமெரிக்கர்கள் சங்கம் (American Society of Muslims) என்று பெயர் மாறி சத்தியமார்க்கத்தின்பால் வந்தது.

ஆக, முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை வாரித் தீன் முஹம்மது அவர்கள், ஒரு மிகச் சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். இஸ்லாமிய நாடுகள் பலவற்றால் கவுரவிக்கபட்டவர். 2008ல், இவரது மறைவுக்கு பிறகு, அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான CAIR (Council on American-Islamic relations) இவரை, "அமெரிக்காவின் இமாம்" என்று அழைத்து இவருக்கு பெருமை சேர்த்தது.

வாரித் தீன் அவர்கள், சுமார் 25 லட்சம் மக்களை தூய இஸ்லாமின்பால் கொண்டு வந்ததாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய தேசிய அமைப்பை சார்ந்தவர்கள் ஆவர்.  

1970 களின் பிற்பகுதியில் Nation of Islam கலைக்கப்பட்டாலும் பிரச்சனை முழுவதுமாக முடிந்து விடவில்லை. வாரித் தீன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாத சிலர், 1981 ஆம் ஆண்டு மறுபடியும் இஸ்லாமிய தேசிய அமைப்பை நிறுவினர். லூயிஸ் பராகான் (Louis Farrakhan) அதனுடைய தலைவராக பொறுப்பேற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பு வீரியம் குறைந்த அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு போல அதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்படும் தாவாஹ் பணிகள் இந்த அமைப்பில் சேருபவர்களை எளிதில் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடுகின்றன.       

இதையெல்லாம் விட மேலாக, இஸ்லாமிய தேசிய அமைப்பும் சிறுக சிறுக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

தங்களுடைய பல தவறான கொள்கைகளை ஒவ்வொன்றாக களைந்து விட்டு இஸ்லாத்தின்பால் வந்து கொண்டிருக்கின்றனர்.    

2000 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவரான பராகான் அவர்கள் "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனின் இறுதி தூதர்" என்று அறிவித்து வியப்பை ஏற்படுத்தினார்.   

இப்பொழுதெல்லாம் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொழ, நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.     

"...சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்..."  - குர்ஆன் 17:81  

அமெரிக்காவின் இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்ச்சியாக லூயிஸ் பராகான் அவர்களை சந்தித்து தான் வருகின்றனர். தாவாஹ் பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இறைவன் இந்த அமைப்பினரை முழுவதுமாக இஸ்லாத்தின்பால் கொண்டுவர வேண்டுமென்று துவாச்செய்வோம்.

அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


References:
1. Brief history on the origin of Nation of Islam - noi.org
2. Nation of Islam in the Balance of islam - Islam online.
3. Nation of Islam FAQs - beleivenet.com
4. Differences between Islam and Nation of Islam - differencebetween.com
5. Malcolm X - malcolmx.com
6. Muhammed Ali - ali.com
7. Warith Deen Muhammed, Elijah Muhammed, Malcolm X, Siraj Wahhaj, Muhammed Ali - wikipedia. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.