Saturday, May 29, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - II



This article has been updated at 18.30 hrs, 30th may 2010.
Few more information added at the end of this article.
இந்த பதிவின் இறுதியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42

பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். 

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான். 

இப்போது பதிவிற்கு செல்வோம்....


உயிரியல் பரிணாமம் என்றால் என்ன? 

ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன். 

What is the definition of Evolution? or Define Evolution?  

பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.   

"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!  இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.  

விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?   

1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,   

"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.   
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary

இந்த விளக்கம் சரியா? தவறா? 

உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...

Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது  மன்னிக்க முடியாததாம்.  

"This is inexcusable for a dictionary of science" - Talk Origins

அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம். 

"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins

இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள், 
  • ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்? 
  • இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா? 
  • அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?  
  • இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி? 
  • இல்லை, Talk Origins தளம் தவறா?   


தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள். 

Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம். 

"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's    

நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து  பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.   

"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318. 

இப்போது நம்முள் எழும் சில கேள்விகள், 
  • எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன? 
  • ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா? 


அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன? 

இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?



2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்? 

"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986. 

மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால், 

"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website   
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)

நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர். 

அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது, 

"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997. 

இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்,  Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர். 

"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" -  Lawrence A. Moran

ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

இது என்ன குழப்பம்? 

இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,

  •  Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?  
  • இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு? 

ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா? 

இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? 

அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள். 


ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins   

அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
  •  பரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? 
  • ஏன் சரியாக விளக்க முடியவில்லை? 
  • அவர்களுக்கே புரியவில்லையா? 

புரியாத புதிர்தான்...


ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது?..................


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.   

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


My Sincere thanks to: 
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran. 

Source of Information: 
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html

References: 
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ    







Wednesday, May 26, 2010

Agnosticism To இஸ்லாம்...




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  


"ATHEISM (நாத்திகம்)" கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன "Agnosticism"?

உங்களில் சிலருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதனால், முதலில் "Agnosticism" என்றால் என்னவென்று பார்த்துவிட்டு பிறகு பதிவுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ். 

நாத்திகத்தை பின்பற்றுபவர் நாத்திகர் என்றால், "Agnosticism"தை பின்பற்றுபவர் "Agnostic (அக்னாஸ்டிக்)". 

(குறிப்பு: அக்னாஸ்டிக் என்பதற்கு சரியான தமிழ் பதம் தெரியாததால் அப்படியே பயன்படுத்தபடுகின்றது. அறிந்தவர்கள் தெரிவிக்கவும்) 

இவர்களும் நாத்திகர்களைப் போல கடவுளைப் பற்றி பேசும் மதங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், நாத்திகர்களைப் போல கடவுள் இல்லையென்று ஆணித்தரமாக மறுக்க மாட்டார்கள். கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்பது இவர்களது கொள்கை. 

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது, கடவுளைப் பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள். 

Agnostic - One who is skeptical about the existence of God but does not profess true atheism      

ஏன் அக்னாஸ்டிக் பற்றி பேசுகிறோம்? 

ஏனென்றால், இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது அப்படியிருந்த ஒரு நபரைப் பற்றி தான். அவர் அக்னாஸ்டிக்காக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர். 

சகோதரர் ஹம்சா அன்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (Hamza Andreas Tzortzis) இங்கிலாந்தை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இவர், பிரிட்டனின் புகழ் பெற்ற தாவாஹ் அமைப்பான இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Islamic Education and Research Academy, IERA) முக்கிய உறுப்பினர். 



பிரபல நாத்திகர்களுடன் தொடர்ந்து நேரடி விவாதத்தில் பங்கேற்றுவரும் இவரைப் பற்றி நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சிறிது பார்த்திருக்கின்றோம் (பார்க்க எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு). 

இன்ஷா அல்லாஹ் இந்த பதிவில் அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து One Legacy வானொலிக்கு அளித்த பேட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.                  


"என்னுடைய தந்தை கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர், என் தாய் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தவர். என் பெற்றோர்கள் எந்தவொரு மதத்தின் மீதும் ஆர்வம் காட்டியதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை கூறியது இன்னும் நினைவிருக்கின்றது, 

"கடவுள் உனக்குள்ளேயே இருக்கின்றார்"

என் தந்தையின் அறிவுரைகள் பெரிதும் உதவின. சிறு வயதிலிருந்தே எதையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பேன். புது விஷயங்களை படிப்பதிலும் ஆர்வம் அதிகம். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். இஸ்லாம், பௌத்தம் என்று பல மதங்களை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தேன். 

இவ்வுலகம், நாம் இங்கிருப்பதற்க்கான காரணங்கள் என்று இவற்றை தேடுவதில் தனி விருப்பம்.  
      
எனக்கு புத்த மதத்தின் மீது ஒருவித ஈர்ப்பிருந்தது. அதற்கு காரணம், அது அக்னாஸ்டிக் வகையான மதம் என்பதால் தான். உதாரணத்துக்கு, புத்தரிடம் ஒருவர் கேட்டாராம், 

"கடவுள் இருக்கிறாரா?" 

அதற்கு புத்தர் சொன்னாராம், 

"இருந்தாலும் பிரச்சனையில்லை (It does not matter if he exists)" என்று, “இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்" 

இது போன்றவற்றால் புத்த மதம் என்னை பெரிதும் வசீகரித்தது.

எனக்கு இஸ்லாம் நன்கு அறிமுகமானது பள்ளி காலங்களில் தான். என்னுடன் படிக்கும் முஸ்லிம் நண்பர்களிடம் பல கேள்விகளை கேட்பேன். 

"ஏன் இப்படி உடையணிகின்றீர்கள், ஏன் ஐவேளை தொழுகின்றீர்கள், ஏன் மற்றவர்களை சகோதரரென்று அழைக்கின்றீர்கள்" என்று பல கேள்விகள்.  

அவர்கள் எளிமையாக பதிலளித்துவிடுவார்கள், "இஸ்லாம் சொல்கிறது, செய்கிறோம்", அவ்வளவுதான் அவர்களது பதில். 

சில சமயங்களில் அவர்கள் இஸ்லாம் சொல்லாத செயல்களை செய்தால், "இது இஸ்லாமிய வழியில்லையே" என்று எடுத்துக் கூறுவேன். என்னுடைய இந்த அறிவுரைகள் அவர்களுக்கு வியப்பைத் தரும். 

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்தவொரு ஈடுபாடும் கிடையாது, “உங்கள் மதம் பற்றி எனக்கும் தெரியும்” என்று காட்டிக்கொள்ளவே இதெல்லாம். 


பல்கலைகழகத்தில் உளவியல் பாடத்தில் சேர்ந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் (Police IT Department) வேலைக்கு சேர்ந்தேன். இது பிரிட்டன் வெளியுறவுத் துறையின் கீழ் வருகின்றது. ஐரோப்பிய அலுவலக கலாச்சாரங்கள் அறிமுகமாயின. 

அது ஒரு கிறிஸ்துமஸ் சமயம். பார்ட்டிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. என் அலுவலகத்திலும் அது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளியிலிருந்தும் பலரை அழைத்திருந்தார்கள். 

எனக்கு நடனமெல்லாம் வராது. ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். மது, ஆட்டம், பாட்டம்.           

அப்போது ஒரு பெண் என் அருகில் வந்தார். அவரது பெயரைக் கேட்டேன். சொன்னார். எனக்கோ ஆச்சர்யம். அது இஸ்லாமிய பெயராக தெரிந்தது. நான் மறுபடியும் அவரிடம் கேட்டேன். 

"நீங்கள் முஸ்லிமா?" 

"ஆம், முஸ்லிம்தான்" 

அதை கேட்டவுடன் எனக்கு மிகுந்த அதிர்ச்சி. 

என்ன? பார்ட்டிகளில் ஒரு முஸ்லிமா? 

"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் இங்கே? ஒரு முஸ்லிம் இங்கெல்லாம் வரக்கூடாதே?

நான் அப்படி கேட்டதும் அவரது முகம் சோர்ந்து விட்டது. அவரது கையில் இருந்த மதுவை வாங்கி அதற்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறை ஊற்றி கொடுத்தேன். முஸ்லிம்கள் தான் மது அருந்தக் கூடாதே. என்னுடைய செயல் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

"என்ன செய்கின்றீர்கள் நீங்கள்? என்னுடைய மார்க்கத்தை எனக்கே சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றீர்கள், அதுவும் இந்த சூழ்நிலையில்..." 

என்னுடைய செயல் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. 

இருவரும் உரையாடத் துவங்கினோம். கலாச்சாரங்கள், இஸ்லாம் என்று பலவற்றையும் பேசினோம். நிச்சயமாக இது போன்ற பேச்சுக்களுக்கு அது சரியான இடமல்ல. எங்களை சுற்றி மது, ஆட்டம், பாட்டம் தான். நீங்களே யூகித்து கொள்ளுங்கள் அந்த சூழ்நிலையை.   

அதற்கு பிறகு பல மாதங்கள் கடந்தன, அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருநாள் என் அலுவலகத்தின் மனிதவளத்துறையிலிருந்து அழைப்பு. 

"மிஸ்டர் ஜார்ஜியஸ், ஒரு பெண்மணியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு" 

யாரது? அலுவலக தொலைப்பேசியில் அழைப்பது?

தொலைப்பேசியை வாங்கினேன். அந்த பெண் தான். எங்களின் பழைய சந்திப்பின் போதே கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். ஆனால் அவர் அதை தொலைத்திருக்கின்றார். இப்போது என் அலுவலக எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்து விட்டார்.

மறுபடியும் எண்களை பகிர்ந்துக் கொண்டோம். இந்த முறை எங்கள் நட்பு மேலும் வளர்ந்தது. அருங்காட்சியகம், சினிமா, பார்ட்டிகள் என்று ஒன்றாக செல்ல ஆரம்பித்தோம். ஐரோப்பிய கலாச்சாரத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 

ஆனால் நான் அவருடன் இருந்த நாட்களில் இஸ்லாமைப்பற்றி அதிகம் பேசியிருக்கின்றேன். ஆனால் அவருக்கோ அவையெல்லாம் விநோதமாக இருந்தது. நிச்சயமாக அவருக்கு அது பிடிக்கவில்லை. ஒரு ஆண் தோழர் இப்படி பேசுவதை அவர் விரும்பவில்லை. 

பிறகு நாங்கள் அவரவர் வழியே சென்று விட்டோம். அவர் ஆசிரியராக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார், அது நிமித்தமாக வட இங்கிலாந்திற்கு சென்று விட்டார். 

சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். கீழேயிருந்து என் தந்தை சத்தமாக அழைத்தார்,

"அன்ட்ரியஸ், உனக்கு ஒரு அழைப்பு" 

தூக்க கலக்கத்திலேயே கீழே இறங்கி வந்தேன்.    

"நான் தான் (It's me)" 

சுதாரித்து கொண்டேன். அதே பெண்தான். 

"ஒ................." 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு ஏன் அவர் அழைக்க வேண்டும்?

"உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தற்போது இஸ்லாமை முழுமையாக பின்பற்ற தொடங்கியிருக்கின்றேன். ஐவேளை தொழுகின்றேன். ஒரு இஸ்லாமிய பெண் எப்படி உடையணிய வேண்டுமோ அப்படி அணிகின்றேன்"

அவ்வளவுதான் பேசினார். என் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை, இணைப்பை துண்டித்து விட்டார். 

என்னால் நம்பவே முடியவில்லை. This is amazing.............  

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்த காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண் தன் மார்க்கத்துக்குள் திரும்பி வர நான் காரணமாய் இருந்திருக்கின்றேன், எப்படி? 

என்னால் மறக்க முடியாத, என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு அது.  

பிறகு, வாழ்வின் அர்த்தங்களைப் (Purpose of Life) பற்றிய என்னுடைய தேடல் தீவிரமடைந்தது. சாதாரண நாற்காலியே ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் போது, நாம் இவ்வுலகில் இருப்பதற்கு காரணமே இல்லையா? இது போன்ற கேள்விகள் என்னுள் அதிகம் எழ ஆரம்பித்தன. என் தேடல் விரிவடைந்தது. 

காட்டின் ஒரு மூலையில் வாழும் ஒரு வித அந்துப்பூச்சிகள் (Moth), மரத்திலிருந்து வழியும் பாலை (Sap) அருந்தி வாழுகின்றன. அதே மரத்தில் அவற்றிற்கு கீழே உள்ளே மற்றொரு வித அந்துப்பூச்சிகள், முதல் வித அந்துப்பூசிகள் வெளியேற்றிய கழிவுகளை பருகி வாழ்கின்றன. இவையெல்லாம் தானாகவே தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது போன்ற வாதங்களை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

நாமனைவரும் மிருகங்கள் என்றால் ஒழுக்கம் (Morale), எது சரி எது தவறு போன்றவை எப்படி தெரியும்? 

இவ்வாறாக, வாழ்வின் அர்த்தம் (Purpose of Life), தத்துவம் (Philosophy), அறிவியல் (Science), தர்க்கவியல் (Logic) என பல துறைகளை துணையாகக் கொண்டு எனது தேடல்கள் விரிவடைந்தது. 


கடவுள் என்ற ஒரு கோட்பாடு (concept) இல்லாமல் எதுவும் அறிவுக்கு ஒத்துவரவில்லை (This is the only thing that makes sense). மிக நீண்ட தேடல்களுக்கு பிறகு கடவுள் நிச்சயமாக இருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்தேன். 


இப்போது யார் என்னிடத்தில் வந்து கடவுள் இல்லையென்றாலும் அவர்களுடன் தர்க்கரீதியாக விவாதித்து கடவுள் உண்டு என்று நிரூபிக்கும் அளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

சரி, கடவுள் உண்டென்ற முடிவுக்கு வந்தாகி விட்டது. கடவுள் நம்மை படைத்து அப்படியே விட்டு விட்டாரா?, நமக்கு எதுவும் சொல்ல அவர் விரும்பவில்லையா? 

கடவுள் இருக்கிறாரென்றால் அவர் நமக்கு நிச்சயம் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் (He must have expressed something). அது தான் அறிவுக்கு ஒத்து வருகிறது.

இப்போது குரானை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். 

குரான், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குரான் எனக்கு சிறந்ததாக தெரிந்தது. 

ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது.           

என்னை மிகவும் பாதித்த குரானுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை. 

சரி, குரான் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குரானைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குரானைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். 

இப்போது, குரான் ஒரு அதிசயம் (Miracle) என்று வாதிக்குமளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

ஆக, இறைவனைப் பற்றியும் சரி, குரானைப் பற்றியும் சரி, விவாதிக்க நான் தயார்.

எல்லாம் தான் தெளிவாகி விட்டதே. நான் அப்போது முஸ்லிமாகி விட்டேனா என்று நீங்கள் கேட்டால்..... இல்லை.

அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. இஸ்லாம் என்ற கொள்கை அந்நியமாக தெரிந்தது. என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. இஸ்லாம் என்ற ஒரு வரையறைக்குள் என்னால் வர முடியவில்லை. எனக்குள் அறிவார்ந்த விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தேன் (I started to play intellectual Gymnastics). இதுவென்ன புது குழப்பம்? புரியவில்லை.

குரானை எடுத்துக்கொண்டு கிரீசுக்கு என் தாத்தா பாட்டியுடன் சிறிது காலம் தங்கி வரலாம் என்று சென்றேன். அங்கு தான் தொழுகையை செயற்படுத்தி பார்த்தேன். 

இங்கிலாந்திற்கு திரும்பினேன். என்னுடைய குழப்பங்கள் அதிகமாகியிருந்தது. அப்போது ஒரு கல்லூரி மாணவர் சொன்னார்,

"நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ஒருவர் சஜ்தாவில்  இருக்கும்போது இறைவனுடன் நெருக்கமாக இருக்கின்றார்"    

அப்படியா?, அடுத்த முறை நான் சஜ்தா செய்த போது, உரக்க கூறினேன்,

"இறைவா, தயவு கூர்ந்து எனக்கு உதவி செய் (come on, solve my problem). எனக்குள்ளே என்ன நடக்கின்றது? நீ இருக்கின்றாய் என்று என்னால் நிரூபிக்க முடியும். குரான் ஒரு Miracle என்று என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் என்னால் முஸ்லிமாக முடியவில்லை. இது மிகப் பெரிய குழப்பம். உதவி செய், தயவு கூர்ந்து உதவி செய்" 

ஒன்றும் நடக்கவில்லை...............Nothing was ticking......................finished. 

அக்னாஸ்டிக்காக தொடர்ந்து விட வேண்டியது தான்.

அது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி. அதிகாலை இரண்டு மணி. கதவு தட்டும் சத்தம். என் நண்பர். இந்த நண்பருடைய வீடு என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் தான் இருக்கின்றது. ஆனால் அவர் என் வீட்டிற்கு அவ்வளவாக வந்ததே கிடையாது. ஆனால் இப்போதோ அதிகாலை இரண்டு மணி. எதற்கு வந்திருக்கின்றார்? 

வெளியே அழைத்தார். பேசிக்கொண்டே நடந்தோம். அவர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குரான் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு. 

அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே................

என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது.

அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். 

"இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)"            

அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின. 

அடுத்த நாள். டாக்சியை பிடித்தேன். அருகிலிருந்த பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த சுமார் ஐம்பது சகோதரர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்"
               

சுபானல்லாஹ்... 

சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, தர்க்க ரீதியாக சொல்ல விரும்புபவர் சகோதரர் ஹம்சா அவர்கள். நாத்திகர்களுடனான அவரது பல வாதங்கள் யுடியூபில் (You tube) கிடைக்கின்றன. அவரது தளத்திலும் (முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவற்றை பார்க்கலாம். 

நாத்திகர்களுடனான உங்கள் உரையாடல்களுக்கு நிச்சயமாக சகோதரர் ஹம்சாவின் பதிவுகள் மற்றும் வீடியோக்களை பரிசீலிக்கலாம். 


வரும் ஜூன் பத்தொன்பதாம் தேதி (19th June, 2010)  லண்டனில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் எட் பக்னோருடன் (Dr. Ed Buckner, President of American Atheists), "இஸ்லாமா, நாத்திகமா" என்ற தலைப்பிலான நேரடி விவாதத்தில் பங்கேற்கவிருக்கிறார் ஹம்சா அவர்கள்.


நீங்கள் லண்டனில் வசிப்பவராக இருந்தால், "Friends House, Main Hall, 173-177 Euston Road, London, NW1 2BJ" என்ற முகவரியில் நடக்கும் இந்த விவாதத்தை நேரில் சென்று பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஹம்சா அவர்களுக்கு இந்த விவாதத்தில் வெற்றிகரமாக செயல் படக்கூடிய  மனபலத்தையும், உடல் நலத்தையும், கல்வி ஞானத்தையும் இறைவன் அருள வேண்டுமென்று துவாச் செய்வோம். 

இறைவன் இஸ்லாமிய சமூகத்திற்கு ஹம்சா போன்ற சகோதர/சகோதரிகளை தொடர்ந்து அருள்வானாக...ஆமின்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின் 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


This article inspired by:
1. Br.Hamza's Interview to "One Legacy Radio" 

Source of Information and Br.Hamza's blog:
1. http://www.hamzatzortzis.blogspot.com/

Br.Hamza's Official website: 
1.http://hamzatzortzis.com

IERA official website: 
1. http://www.iera.org.uk

References: 
1. Meaning of the term "Agnostic" taken from thefreedictionary.com. 
             

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  







Friday, May 21, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - I


 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


நிச்சயமாக இந்த தலைப்பு மிகைப்படுத்தப் பட்டதல்ல...

ஆம். பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மிகச் சிறந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அதை உணர்ந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்

பரிணாமம் குறித்த இந்த தொடர் பதிவுகளின் நோக்கம், தலைப்பை நியாயப்படுத்துவது தான்.

"This is one of the worst cases of scientific fraud. It’s shocking to find that somebody one thought was a great scientist was deliberately misleading. It makes me angry"
"மோசமான அறிவியல் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறந்த விஞ்ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் வேண்டுமென்றே இப்படி செய்தது அதிர்ச்சியை தருகிறது. என்னை இது கோபப்பட வைக்கிறது"      

இது, "The Times" நாளிதழில் 11th August, 1997ல் ஒரு பிரபல பரிணாமவியலாளர் குறித்து வெளிவந்த செய்தி. பரிணாமத்திற்கு ஆதரவாக அவர் எடுத்து வைத்த ஆதாரம் மிகப் பெரிய பித்தலாட்டம் என்று தெரிய வந்த போது வெளியானச் செய்தி.

நீங்கள் பரிணாமத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இது போன்ற பித்தலாட்டங்களை, மோசடிகளை, பொய் புரட்டுக்களை பார்க்கலாம். 

இவ்வளவு ஏன்? ஒரு பரிணாமவியலாளர் அவர் செய்த மோசடி அம்பலப்படுத்த பட்ட போது என்ன தெரியுமா கூறினார்?, நான் மட்டுமா இப்படி செய்தேன். இதற்கு முன் இது போன்றவற்றை விஞ்ஞானிகள் செய்ததில்லையா? என்று கேட்டு அதிர்ச்சியை உண்டாக்கினார்.             

யார் இவர்கள்? இவர்கள் செய்த பித்தலாட்டங்கள் என்னென்ன?, இது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதும் இந்த பதிவுகளின் மற்றொரு நோக்கம். இன்ஷா அல்லாஹ்...  



இந்த பதிவுகள் யாருக்கு உபயோகமாக இருக்கப் போகின்றன (இன்ஷா அல்லாஹ்)? 

யாருக்கென்றால், அவர்கள் பரிணாமவியலை நம்புபவர்கள். அதே சமயம், தெளிவான, நியாயமான, அறிவியல் பூர்வமான வாதங்கள் பரிணாமவியலுக்கு எதிராக வைக்கப்பட்டால், அதனை நிராகரிக்காமல் பரிசீலிப்பார்கள். அவர்கள் தான் இந்த பதிவுகளின் இலக்கு.   

பரிணாமத்தை நம்பாதவர்களுக்கு பரிணாமம் குறித்த அவர்களது கருத்துக்களை இந்த பதிவுகள் மேலும் வலுப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ். 

இந்த பதிவுகளை அப்படியே நம்பாமல், இது சரியா என்று நீங்கள் ஆராயுங்கள். அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ்.

"இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டாம்" --- குர்ஆன் 5:2        

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Wednesday, May 19, 2010

பாலஸ்தீன சிறுவர்களின் நிலை...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை "உன்னதம்" இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது...

சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International - Palestine Section) - பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.

ரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் "The Electronic Intifada" என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.

அட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும். 

ரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்கி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி. 

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதையும், மற்ற சமூக தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம். 

அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன?

ரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள். 

மற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு. 

அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா? 

ரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவடிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு. 

சிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், "இங்கே யார் முஹம்மது". அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல்ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

அந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள். 

பெரும்பாலான நேரங்களில் அந்த சிறுவர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குள்ளாக ஒப்புக்கொள்வார்கள், குற்றம் செய்திருந்தாலும் சரி, செய்யா விட்டாலும் சரி.

இது சர்வதேச சிறுவர் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. சென்ற ஆண்டு இஸ்ரேலிய இராணுவச் சட்டம் ஒன்று சிறுவர்களுக்காக ஏற்டுத்தப்பட்டது. அது அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் நாம் மேலே பார்த்த தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் என்னுடைய வழக்கறிஞர்களை கேட்டீர்களானால் அவர்கள் சொல்லுவார்கள் இன்னும் இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன என்று. பெரியவர்களுடன் இந்த சிறுவர்கள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். 

சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களில் சிறுவர்களுக்கான விதி முறைகளே கிடையாது. சிறுவர்களுக்கு அங்கு நியாயமும் கிடைக்காது.

அ: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட கலவரங்களில் இதுவரை எத்தனை சிறுவர்கள் உயிரிழந்திருப்பார்கள்?

ரி: இரண்டாவது பாலஸ்தீன இன்டிபிடா (செப்டம்பர் 2000) தொடங்கி இன்றுவரை சுமார் ஆயிரம் சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் சென்ற ஆண்டு குளிர்க்காலத்தில் காஸா பகுதியில் கொல்லப்பட்ட 348 சிறுவர்களை சேர்க்காமல்.

எப்படி இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. சிலர் நேரடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்களையோ அல்லது வீடுகளையோ சுடும்போது குறுக்கே வந்தவர்கள். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தவர்களையும் மறந்து விட வேண்டாம்.

இப்போது காஸாவில் உள்ள தடை உத்தரவால் மனித உரிமை இயக்கங்களால் கணக்கெடுக்க முடிவதில்லை. உதாரணத்துக்கு பசியால் இறந்த ஒரு சிறுவனை எங்களால் கணக்கெடுக்க முடியவில்லை.

நிறைய சிறுவர்கள் அராஜகமாக இஸ்ரேலியர்களால் கொல்லப்படுகின்றனர்.  2008-ல் இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் ஏற்பட்ட கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 20 சிறுவர்கள் காயப்பட்டும், சிலர் இறந்தும் உள்ளனர். இதனை நாங்கள் நவம்பர் 2008-ல் எழுதினோம்.

அ: மனித உரிமை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறதே. அதுப் பற்றி?

ரி: அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் கண்மூடித்தனமான ஆதரவு மற்றும் தன் இராணுவ பலத்தை நம்பியிருக்கும் நாடு இஸ்ரேல். மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயக நாடு என்பதுதான் அது இன்றளவும் இருப்பதற்கு காரணம்.

மனித உரிமை மீறல்கள் குறித்து பாலஸ்தீன அமைப்புகள் குரல் கொடுத்தால், அரசியல் காரணங்களை காட்டி இஸ்ரேல் அவற்றை நிராகரித்து விடும். ஆனால் சர்வதேச அமைப்புகளிடம் அது முடியாது.

மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் தன் பலத்தை காட்ட இஸ்ரேல் நினைத்தால், செய்தியை வழங்க ராணுவத்திலிருந்து ஒரு ஊடகப்பிரிவை அமைத்துக்கொள்ளும். எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் உள்ளே அனுமதிக்காது.

இஸ்ரேலுக்கு அந்த சர்வதேச ஊடகங்கள் இங்கே தேவையில்லை. அதுபோல இஸ்ரேல், சர்வதேச அமைப்புகளை ஜெருசலத்தை விட்டு வெளியேற்றவே நினைக்கிறது. நாங்கள் பல முக்கியமான தகவல்களை சேகரிக்க, சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மற்றும் எங்கள் அமைப்பை சேர்ந்த பல வெளிநாட்டினரும் உதவியிருக்கின்றனர்.

நான் இஸ்ரேலை குறை கூற விரும்பவில்லை. நான் கண்டிக்க நினைப்பது, இஸ்ரேலுக்கு பணிந்து போய்க்கொண்டு தன் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைத்தான்.

ஆனால் சர்வதேச நாடுகள் இதற்கெல்லாம் பணியாமல் மனித உரிமை இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

---end of interview---

துவா செய்துக்கொண்டே இருப்போம், பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய நிலம் திரும்ப கிடைக்கவேண்டுமென்று...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

This Article was translated by Aashiq Ahamed for Unnatham magazine.

My sincere thanks to:
Unnatham Magazine.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ                                                                             







Saturday, May 15, 2010

நாம் அந்நியர்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


சகோதரர் காலித் யாசின் (Khalid Yasin) அவர்கள், தன் பதினாறாம் வயதில் இஸ்லாத்தை தழுவியவர். பலரையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தவர். அவர், "Strangers" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.



"சிறு வயதிலிருந்தே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்மையாளராக, உண்மையாளராக அறியப்பட்டவர்கள். 

அப்படிப்பட்டவர், ஒரு சமயம் தன் மக்களை அழைத்து, 'ஒ குறைஷிகளே, உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த மலைக்கு பின்னாலிருந்து ஒரு படை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா?' என்று கேட்ட போது,  

'ஆம், நம்புவோம்' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அந்த மக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி. மக்கா நகர மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள் அவர்கள். 

பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள், 'அப்படியென்றால் இதையும் கேளுங்கள். இறைவன் ஒருவனே, அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. நான் அவனுடைய தூதர்', என்று கூறி சிலை வணக்கங்களை கண்டித்தபோது, அந்த மக்களுக்கு அவர் கூறிய அந்த செய்தி முற்றிலும் அந்நியமாகத் தெரிந்தது

இது நாள் வரை பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, உண்மையாளராக இருந்த அவர் அந்த நாளிலிருந்து அந்நியராகப் பார்க்கப்பட்டார். 

ஆம், இனி அவர்களில் ஒருவரில்லை நாயகம் (ஸல்) அவர்கள். 

நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தியை ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்த ஏழையும் பணக்காரனும், கருப்பு நிறத்தை கொண்டவனும் வெள்ளை நிறத்தை கொண்டவனும்,அரபியோ அரபி அல்லாதவரோ,அடிமையோ சுதந்திரமானவனோ என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்நியரானார்கள்.       

மக்கா நகரில் பெரிதும் மதிக்கப்பட்டாரே அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரும் அந்நியரானார். முஹம்மது (ஸல்) அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை கொன்றொழித்து விட்டுதான் வருவேன் என்று ஆவேசமாக புறப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள். அவர் கொலை வெறியுடன் புறப்பட்ட அந்த நாளிலேயே முஸ்லிமானார். அந்த நாளிலிருந்து அவரது சமூகத்தில் அவரும் அந்நியரானார்.


இன்றைக்கு அந்நியராக இருக்கும் நாம், அந்த அந்நியர்களுடன் தான் நம்மை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்காக மாபெரும் தியாகங்களை செய்த அவர்களோடுதான் நம் குழந்தைகளை தொடர்பு படுத்த வேண்டும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எவரிடத்தில் இந்த மூன்று குணங்கள் இருக்கிறதோ அவர் ஈமானை சுவைத்து விட்டார்' என்று கூறி, முதல் குணமாக கூறியது, 'அவர் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் வேறு யாரையும் விட அதிகம் நேசிப்பார்' என்பது. 

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தன் தந்தையிடம் கூறினார், 

'தந்தையே, உங்களை போரில் சந்திக்க நேர்ந்த போது, உங்கள் மீதான பாசத்தாலும், மரியாதையாலும் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டேன்' 

அப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள், 'வல்லாஹி, நான் உன்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை கொன்றிருப்பேன். ஏனென்றால் நீ அப்போது எதிரிகள் கூட்டத்தில் இருந்தாய்'.  

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் யாரையும் விட அதிகம் நேசித்தவர்கள் அந்த அந்நியர்கள்.

இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். அவர்கள் ஹராமான பொருட்களை விற்று கொண்டிருக்கலாம், ஹராமான செயல்களை செய்து கொண்டிருக்கலாம், உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டு தொழாமல் இருக்கலாம். ஆனால் நீங்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களை பார்த்தால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்லுவீர்கள், அவர்களுடன் காபி அருந்துவீர்கள், அவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள், அவர்களை கடந்து செல்லும்போது வாழ்த்து சொல்வீர்கள், ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பாக நடக்கும் போது அதை எடுத்து சொல்லமாட்டீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அதிகம் நேசிக்காததே காரணம்.

இன்னும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் இன்னும் இஸ்லாத்தை பற்றிய தீப்பொறி இருக்கிறது. ஆனால் அவர்களோ குப்பைகளில் உழல்கிறார்கள், அதையே உண்கிறார்கள், அந்த குப்பைகளை வீட்டிற்குள்ளும் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் யாரைப்பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இங்கே இருப்போரில் அப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும்.  அல்ஹம்துலில்லாஹ்.ஏனென்றால் இதுதான் உங்களுக்கு வேறு எங்கிருப்பதை காட்டிலும் சிறந்த இடம். நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள்.    

ஆக, முஸ்லிம்களே, அந்த அந்நியர்கள் செய்த தியாகத்தை, வாழ்ந்த வாழ்க்கையைத் தான் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும். 

அவர்கள் தான் நம் பிள்ளைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டும், மைக்கல் ஜோர்டனோ, மைக்கல் ஜாக்சனோ, கால்பந்து விளையாட்டு வீரர்களோ, கூடைப்பந்து விளையாட்டு வீரர்களோ அல்ல.

தினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவோம். இப்படியே ஒரு 90 நாட்கள் செய்து பாருங்கள். அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை நீங்கள் காணலாம். அவர்களுக்கு பரிசளிப்பதை ஒரு முதலீடாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த முதலீட்டை நீங்கள் செய்யத் தயங்கினால், வெளியே இருந்து தவறான செயல்களுக்கு அவர்களை தூண்ட, வேறு சிலர் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம் பிள்ளைகளுக்கு ஒசாமா இப்ன் ஜைத் (ரலி) யாரென்பதை சொல்லித்தருவோம். அந்த பதினாறு வயது சிறுவனை நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, அலி (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) என்று அனைவரும் இருந்தபோதும், இவர்தான் சிறந்தவர் என்று கூறி ஒப்படைத்தார்களே அந்த சிறுவனைப் பற்றி சொல்லி கொடுப்போம்.

அபிசீனியாவில், மன்னர் நஜ்ஜாசியிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அவரை கவர்ந்தாரே ஜாபர்(ரலி), அவரைப் பற்றி சொல்லித் தருவோம்.

களவில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களிடமிருந்து வந்தாரே அபூதர் (ரலி), அவரைப் பற்றி சொல்லித்தருவோம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மக்கா நகர மக்களிடம் சென்று, 'லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ் என்று உரக்கச் சொல்ல போகிறேன்' என்று அபூதர் (ரலி) சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், 'வேண்டாம் நீங்கள் அப்படி செய்தால் அவர்கள் உங்களை தாக்குவார்கள்' என்று கூறியபோதும், 'இல்லை நான் சென்று அந்த மக்களிடம் சொல்ல வேண்டும்' என்று சென்று, அந்த மக்கள் முன் ஷஹாதாவை உரக்க கூறினார்கள். கூறியதற்கு தண்டனையாக தாக்கப்பட்டார்கள். மயங்கி விழுந்தார்கள். அடுத்த நாள் மறுபடியும் சென்று கலிமாவை உரக்க கூறினார்கள். மறுபடியும் தாக்கப்பட்டார்கள். பின்னர் நாயகம் (ஸல்) அவர்கள், அபூதரை மக்காவை விட்டு வெளியேறச் சொல்லி விட்டார்கள். 

இதோ இவர்கள் தான் அந்நியர்கள். தங்கள் வாழ்க்கை முறையை நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கற்றவர்கள். இறைச் செய்தியையும், நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் மட்டுமே ஏற்று வாழ்ந்தவர்கள். 

முஹம்மது என்ற சகோதரர் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறார். அவர் இஸ்லாமை சரி வர பின்பற்றவில்லை. அதனால் அந்த அலுவலக மேலாளரால் மிதவாத முஸ்லிம் என்று பாராட்டப்படுகிறார். 

ஒரு நாள் நிலைமை மாறுகிறது. முஹம்மது தன் மார்க்கத்தை நன்கு புரிந்துக் கொள்கிறார். மேலாளர் மதியம் மணி 12.30 க்கு, 'வாருங்கள் கீழ போய் சாப்பிட்டு வருவோம்' என்கிறார். ஆனால் முஹம்மதோ, 'இல்லை, இது லுஹர் நேரம், நான் தொழ செல்ல வேண்டும்' என்கிறார். மேலாளருக்கோ அதிர்ச்சி, 

'முஹம்மது என்ன ஆயிற்று உங்களுக்கு?' 

'இனி என்னால் முன் போல இருக்க முடியாது. இதை நீங்கள் விரும்பவில்லையென்றால் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை'. 

எப்போது அவர் அப்படி சொன்னாரோ அந்த நிமிடத்தில் இருந்து அந்நியராகி விட்டார். 

அவர் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றுவதனால் அவரது மேலாளரால் மேலும் மதிக்கப்படலாம். ஆனால் முஹம்மதுக்கு அவர் அந்நியராகும் வரை இது புரிந்திருக்கவில்லை.    

நீங்கள் நினைக்கலாம், மிதவாத முஸ்லிம் என்று எதையும் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் உங்களை மதிப்போடு நடத்துவார்கள் என்று. இல்லை, நீங்கள் மிதவாதி என்று சொன்னாலும் அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். உங்களுக்கான உண்மையான மரியாதையெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது. அவன் கட்டளையிட்டதை  நீங்கள் முழுமையாக பின்பற்றுவதில் தான் இருக்கிறது. 

அதுபோல, ஒரு சகோதரி இருக்கிறார். அவர் இதுநாள் வரை ஹிஜாப் அணிந்ததில்லை, இஸ்லாம் சொல்கின்ற பெண்ணாக வாழ்ந்ததில்லை. அவருடைய கணவரும் அதை பெரிதாக அலட்சியப்படுத்தியதில்லை. ஒரு நாள், குரானைப் படிக்கிறார், சுன்னாஹ்வை படிக்கிறார். கண்களில் கண்ணீர் வழிகிறது. இத்தனை நாளாய் இப்படி வாழ்ந்து விட்டோமே என்று வருந்துகிறார். இனி ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்வது என்று முடிவெடுக்கிறார். 

அவருடைய மாற்றத்தை கண்ட அவரது கணவர், 'என்ன ஆயிற்று உனக்கு?' என்று கேட்கிறார். 

'இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொண்டேன், இனி என்னால் முன் போல்  வாழ முடியாது' 

'நீ அடிப்படைவாதியாகி விட்டாய். இனி நீ எனக்கு தேவையில்லை'.

ஆம், இப்போது அந்த சகோதரி அந்நியராகிவிட்டார். அவருடைய கணவர், அவரை விட்டு விலகினால், அல்லாஹ் அவருக்கு வேறொரு அந்நியரை துணையாகக் கொடுப்பான்.

அந்நியர்களாக இருப்பதற்குண்டான விருப்பமும், தைரியமும் நம்மிடம் இருக்க வேண்டும். நீங்கள் அந்நியராக இருப்பதனால் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தாரே கேட்கலாம்.       

அல்லாஹ்விடத்தில் அச்சம், நம்பிக்கை, தியாகம், ஒழுக்கம், தைரியம், விசுவாசம், மரியாதை, கல்வியைத் தேடுவது,ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது, சகோதரத்துவம், பொறுமை, ஒத்துழைப்பு ஆகிய இவைகள் தான் அந்நியருக்கான குணநலன்கள்.         

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்க வேண்டும். நாம் அந்நியராக இருந்தால், இஸ்லாத்திற்கெதிரான சிலரது எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.     

அவர்களிடம் அணுகுண்டு, Hydrogen குண்டு என்று பலவிதமான, மனித இனத்திற்கு நாசம் விளைவிக்கக்கூடிய குண்டுகள் இருக்கலாம். 

ஆனால் அல்லாஹ், நமக்கு அவைகளையெல்லாம் விட சக்தி வாய்ந்த குண்டை கொடுத்திருக்கிறான். அதற்கு பெயர் D-BOMB, ஆம் அது DAWAH BOMB. இந்த ஆற்றல் மிகுந்த குண்டு கட்டிடங்களை சிதறடிக்காது, மக்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இது அவர்கள் உள்ளங்களை ஊடுருவிச் சென்று அவர்களது மனதில் பலமான தாக்கத்தை உண்டு பண்ணி அவர்களையும் அந்நியர்களில் ஒருவராக மாற்றிவிடும் தன்மை கொண்டது.  

நீங்களும் நானும் இந்த குண்டை எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆம், நாம் பெற்ற இஸ்லாம் என்ற பொக்கிஷத்தை அவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். 

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக இருக்கச் செய்வானாக...

வழி தவறி சென்று கொண்டிருக்கும் சில முஸ்லிம்களை, இறைவன், கூடிய விரைவில் அந்நியர்களில் ஒருவராக திரும்பச் செய்வானாக....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு"

அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. பதிவின் நீளம் கருதி சகோதரர் காலித் யாசின் அவர்கள் கூறிய பல தகவல்கள் விடப்பட்டுள்ளன. இந்த உரையை முழுமையாக காண விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் வீடியோவை பார்க்கலாம்.


இந்த உரையை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

காலித் யாசின் அவர்கள் நிகழ்த்தி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு உரை,  "Purpose of Life" என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் அவர் நிகழ்த்திய உரை. 


அந்த உரையின் முடிவில், இருபதிற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவினார்கள். அந்த உரையையும் நீங்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக நிலைக்கச் செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


This Article Inspired by:
1. Sheik Khalid Yasin's Lecture "Strangers".

"Strangers" Video can be downloaded from:
1. http://www.kalamullah.com/khalid-yasin.html

My Sincere Thanks to: 
1. One Islam Productions, New South Wales, Australia. http://www.1islam.net
2. Br. Jafar Safamarva


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ