Tuesday, April 19, 2011

சிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர். 

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....



"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன். 

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.  

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.... 

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்..... 

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன். 

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான். 

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன். 

'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்' 

அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை. 

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள். 

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன். 

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.

கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree  in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன். 

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன். 

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.

ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'

அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. 



இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'

அவர் கூற ஆரம்பித்தார்...

'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்

 'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'

'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'

'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்' 

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'

'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்" 

பின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது. 

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்..... 

உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன்.  என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'

அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.

என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.



அரபி வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.
2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)

Brother Idris Towfiq's website:
1. idristawfiq.com. link 

My sincere thanks to:
1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):
1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link
2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Monday, April 11, 2011

இஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இந்த பதிவில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள், முஸ்லிமல்லாத சகோதரி/சகோதரிகள் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருக்கலாம். 

இந்த பதிவை படிக்கும் முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்த பதிவை நீங்கள் எந்தவொரு முன் முடிவுமின்றி படியுங்கள். பின்னர் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து குறித்து ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் உங்களுக்கு இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக...ஆமீன். 

பதிவிற்குள் செல்வோம், 

1. தங்கள் சொத்துபத்துகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவற்றை அப்படியே விட்டு விட்டு நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர் முஸ்லிம்கள்....இது அன்று நடந்த சம்பவம். 

"ஒன்று நீங்கள் இஸ்லாமை துறக்க வேண்டும், அல்லது உங்கள் குழந்தைகளை துறக்க வேண்டும்" என்ற இக்கட்டான கேள்வி ஆமினாஹ் அசில்மி அவர்களது விவாகரத்து வழக்கில் முன்வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, கனத்த உள்ளத்தோடும் கலங்கிய கண்களோடும் சகோதரி ஆமினாஹ் அசில்மி சொன்ன பதில் "என்னால் இஸ்லாத்தை துறக்க முடியாது"......இது இன்று நடந்த சம்பவம். 

இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே இவர்களைப்போன்ற பலர் வந்து சென்றிருக்கலாம். 

  • ஒரு மார்க்கத்திற்காக, எதனையும் தியாகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது? 
  • ஒரு மார்க்கம் இவர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்?

2. சில வருடங்களுக்கு முன்பு (2007), பிரிட்டனில், முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

பிரிட்டனில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவதாக பெருவாரியான இளைஞர்கள் (40%) கருத்து தெரிவித்திருந்தனர். இது, அந்த கருத்துக்கணிப்பை நடந்தியவர்களை அதிர்ச்சியுற செய்தது. 

பொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள் ஜாலியாக இருக்க விரும்புபவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கின்றது. அப்படியிருக்க, முஸ்லிம் இளைஞர்கள், கடுமையான சட்டதிட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்ற ஷரியத் சட்டத்திற்கு கீழ் வாழ விருப்பப்படுவது எதனால்? 

3. 30-40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், உலகளவில், ஹிஜாப் என்னும் ஆடை முறையை அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இருந்ததாக அறிகின்றோம். 

ஆனால் இன்றோ, அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர். 

விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ள இந்நாளில், முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இந்நாளில், இயல்பாகவே, ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமென்பது ஹிஜாபை விமர்சிப்பவர்களின் பார்வையாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைக்கீழாக அல்லவா இருக்கின்றது? 

விஞ்ஞானம் அற்புத வளர்ச்சியை பெற்றுள்ள இந்நாளில் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் விரும்பி ஹிஜாப் அணிகின்றனர். இது எதனால்?

4. மது அருந்த இஸ்லாம் தடை விதித்த போது, தாமதிக்காமல் தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்து நொறுக்கினர் முஸ்லிம்கள். அதுபோல, பெண்களின் ஹிஜாப் குறித்த கட்டளை வந்த போது, உடனடியாக, தங்களிடமிருந்த ஆடைகளை சிறு துணிகளாக கிழித்து, ஹிஜாபை பேணிக்கொண்டனர் பெண்கள். 

இன்றளவும் கூட, இஸ்லாமை சரிவர பின்பற்றும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கருத்தில் உறுதிப்பாடாக இருந்து, அதற்கு எதிரான கருத்தை குரானிலிருந்து எடுத்து காட்டினால் சட்டென்று தன் நிலையை மாற்றி கொள்வார். 

ஒருவருடைய பழக்கவழக்கங்களை திடீரென மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் எத்தனையோ சகோதரர்களை பார்த்திருப்போம், மது அருந்த மாட்டேனென்று, புகை பிடிக்கமாட்டேனென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த சிரமப்படுவார்கள்.

ஆனால், இஸ்லாம் கூறிய ஒரு கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் என்றால், தங்களுடைய நீண்ட நாள் பழக்கத்தை ஒழித்துவிட நாடுகின்றார்கள் என்றால், அப்படி என்ன இருக்கின்றது இந்த மார்க்கத்தில்? 

ஒரு கட்டளை, ஒரு மனிதருக்குள் இந்த அளவு பாதிப்பை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்றால் இதற்கு என்ன காரணம்?     

5. நம் பதிவுலகில், இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற தளங்கள் உண்டு (இந்த தளங்களை நடத்துபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இளைஞர்கள் [17-18 வயது டீனேஜர்கள் கூட உண்டு]). இஸ்லாத்திற்காக இத்தனை உள்ளங்களா என்று நான் வியந்ததுண்டு. 

அழைப்பு தளங்கள் மட்டுமல்லாது, பொதுவான விஷயங்கள் குறித்து எழுதும் பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தங்கள் தளங்களில் பார்வைக்கு வைத்தே இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல், அவ்வப்போது இஸ்லாம் குறித்த கட்டுரைகளையும் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆக, பதிவுலகை பொருத்தவரை, பெரும்பாலான முஸ்லிம் பதிவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டே செயலாற்றுகின்றனர். 

ஒரு விஷயம் குறித்து எழுதும் போது, இது இஸ்லாமிற்கு உட்பட்டு தான் இருக்கின்றதா என்று ஆராய்ந்து செயல்படுமளவு எப்படி ஒரு மார்க்கம் ஒருவருடைய அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றது?  

6. பெண்களை தவறாக நடத்தும் மார்க்கம் இஸ்லாம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இஸ்லாமை நன்கு ஆராய்ந்து, அதனை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்போரில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இது ஏன்? 

7. சென்ற ஆண்டு, கவனிக்கப்படதக்க ஆய்வொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்க சராசரியை பொருத்தவரை, ஆண்களை விட பெண்களே இறைபக்தியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்களை பொருத்தவரை, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமில்லாமல் இருபாலரும் இறைபக்தியில் சமமாகவே சிறந்து விளங்குகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், "உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?" என்ற கேள்விக்கு, எண்பது சதவித (80%) முஸ்லிம் அமெரிக்கர்கள் "ஆம்" என்று பதில் அளித்திருக்கின்றனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம். 

தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் கூறியிருந்தாலும், இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர். (2007ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், வேறெதையும் விட இஸ்லாம் தங்கள் வாழ்வில் அதிமுக்கியமானது என்று 86% பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தெரிவித்திருந்தனர்).

  • எப்படி ஒரு மார்க்கம், ஆண் பெண் வித்தியாசமில்லாமல், ஒருவருடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கின்றது? 
  • இஸ்லாமை தவிர்த்து விட்டு, முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க என்ன காரணம்?  

8. நிச்சயமாக முஸ்லிம்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவை மார்க்கத்தை சரியான வழியில் பின்பற்றுவது குறித்த கருத்து வேற்றுமைகள். ஆனால், இஸ்லாத்திற்கெதிராக ஒரு நிகழ்வு நடந்தால் அதை ஒன்று சேர்ந்து சந்திக்கும் இவர்களது செயலாற்றல் அளப்பரியது. 

  • எதற்காக ஒரு மார்க்கத்தின் மீது இந்த அளவு பற்று வைத்திருக்கின்றனர்?
  • ஒரு மார்க்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்திக்கின்றதென்றால் அதற்கு என்ன காரணம்?     

9. மேலே பார்த்ததையெல்லாம் விட முக்கியமாக, இப்போது பார்க்கப்போகும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது. 

உலகில், ஒரு மார்க்கத்தின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதென்றால் அது இஸ்லாம் மீதாக தான் இருக்க முடியும். உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

  • வரலாறு முழுக்க இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கும் நிலையில், இவை, இஸ்லாத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையே...ஏன்? 
  • வழக்கம் போல இஸ்லாம் தொடர்ந்து மக்களை கவர்ந்திழுத்து வருகின்றனதே...எப்படி? 

மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் நமக்குள்ளாக பிரதிபலித்து கொள்ளப்படவேண்டியவை. 

முஸ்லிம்கள் இப்படி கட்டுண்டு இருப்பதற்கு "நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் பதிலாகாது. 

அதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும். 

முஸ்லிமல்லாத சகோதர/சகோதரரிகள் இந்த பதிவின் மையப்பொருள் குறித்து நன்கு சிந்தியுங்கள். "சரி, இவர்களை ஆட்டி வைக்கும் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று படித்து தான் பார்ப்போமே" என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், குர்ஆனை கேட்டு எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை (மூன்று சகோதரர்களின் வெவ்வேறு தமிழாக்கங்கள்) உங்களுக்கு (soft copy) அனுப்பி வைக்கின்றேன்.

அல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
படிப்பவர் புருவத்தை உயர வைக்கும் ஒரு குர்ஆன் வசனத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன். 

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

என்னவொரு அதிகாரத்தோரணை?

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.     

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி. link.
2. UK Muslim community statistics. link. 
3. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு. link.
4. Between 1800-1950, 60,000 books written against Islam: The Times, dated 16th April 1979.

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ 






Thursday, April 7, 2011

முபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.

தர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது. 

சில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது. 


"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார். 

முபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி(??) அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் "முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்" என்கின்றார். 

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது,  "(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று" 

அவர் மேலும் கூறுகையில், "நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்".     

பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது. 

இதற்கெல்லாம் காரணம் சலபி(??) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது. 

தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது, 

1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’  (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,  நூல்: புகாரி, முஸ்லிம்)

2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)   

தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?

3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)

4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)

5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)

6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)

இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. Islamist campaign against Egypt shrines focus fears - Reuters, dated 6th April, 2011. link
2. Shrine - Wikipedia. link

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ