Showing posts with label ரிச்சர்ட் டாகின்ஸ். Show all posts
Showing posts with label ரிச்சர்ட் டாகின்ஸ். Show all posts

Sunday, February 7, 2016

ரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...



நம் அனைவர் மீதும் இறைவனின், சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

என்ன தம்பி, தலைப்பே செம விவகாரமா இருக்கே....நேரா மேட்டருக்கு வா.

நம்ம டாகின்ஸ் புதுசா ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்காரு அண்ணே. ஒரு அறிவியல் கருத்தரங்குல, இங்கிலாந்தின் New Statesman ஊடக பத்திரிக்கையாளர் ஒருவர் இவரு கிட்ட கேள்வி கேட்டிருக்காரு. 

ரிச்சர்ட் டாகின்ஸ்
என்னான்னு?

மதங்கள் சம்பந்தமா கேள்வி கேட்டிருக்காரு. 'தம்பி இந்த கருத்தரங்குக்கு சம்பந்தமா மட்டும் கேள்வி கேளுங்க'ன்னு டாகின்ஸ் சொல்லிருக்காரு. 

நியாயம் தானே ! 

ஆமாண்ணே, சரியான பேச்சு தான். இந்த நிருபர் திரும்பவும் அப்படியே கேள்வி கேட்டிருக்காரு. ஒரு கட்டத்துல, இந்த நிருபர் முஸ்லிம்னு தெரிஞ்சிகிட்ட டாகின்ஸ், 'உங்க இறைத்தூதர் பறக்கும் குதிரைல வானத்துக்கு போனாரே, அத நீ நம்புறியா'ன்னு கேட்டிருக்கார். அதுக்கு அந்த நிருபர், ஆமான்னு சொல்லிருக்கார். அவ்ளோதான் டென்ஷன் ஆகி, கோபத்துல அந்த நேர்க்காணல்ல இருந்தே வெளியேறிவிட்டார் டாகின்ஸ். 

ஆஹா, இது என்னப்பா விசித்திரமா இருக்கு. பிடிக்கலன்னா, மதங்கள் சம்பந்தமா கேள்வி கேட்டப்பவே வெளியேறி இருக்கலாமே. அது என்ன இஸ்லாம் சம்மந்தமா கேள்வி கேட்டு, சொன்ன பதில் புடிக்கலன்னு போறது. 

இது தான் பிரச்சன. பலரும் டாகின்ஸ்சுடைய இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிச்சு இருக்காங்க. இந்த பறக்கும் குதிரைய பத்தி பொதுமேடைல டாகின்ஸ் கேட்குறது இது முதல் தடவை இல்லை. ஏற்கனவே, ஆக்ஸ்போர்ட் யூனியன்ல, சில வருஷத்துக்கு முன்னாடி, அல்ஜசீரா ஊடகத்தின் மஹ்தி ஹசன் கூட நடந்த ஒரு நேர்காணல்ல இதே கேள்விய டாகின்ஸ் கேட்டிருக்காரு. அப்ப ஹசனும், இந்த நிகழ்வ 'இறைவன் புறத்துல இருந்து அவன் அடியாருக்கு காட்டப்பட்ட ஒரு அற்புத சம்பவமா நாங்க நம்புறோம்'னு சொன்னார்.

ஆமா, அல்ஜசீரா நிருபர் பேரு என்னான்னு சொன்ன? 

மஹ்தி ஹசன்.....

மஹ்தி ஹசன் 
யோவ், இந்த பயலா, சமீபத்துல கூட நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருத்தர ஒருவழி பண்ணி ட்விட்டர்ல வலதுசாரிகள் கிட்ட கடுமையா எதிர்ப்ப சம்பாரிச்சானே, அந்த பய தானே...

அவரே தான்....

ரொம்ப விவகாரமான பையன்பா. இவர பத்தி அப்பால பார்ப்போம். முதல்ல பறக்கும் குதிரை மேட்டருக்கு வா. என்ன சம்பவம் இது, இப்படியான நிகழ்வு இஸ்லாமுல இருக்கா? கொஞ்சம் டீடெயிலா சொல்லு. 

இப்படியான சம்பவம் இருக்கு.. அதாவது, சவூதி அரேபியாவின் மக்காவுல இருக்குற ஹரம் மசூதியில் இருந்து, (ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தின்) ஜெருசலத்தில் இருக்குற அக்ஸா மசூதி வரை, ஒரு இரவில், நபிகள் நாயகம் அழைத்து செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து வானுலகிற்கு சென்று திரும்பியதா இஸ்லாமிய மூல நூல்கள் சொல்கின்றன. குர்ஆன்ல இந்த சம்பவம் பின்வருவாறு விவரிக்கப்பட்டிருக்கு.. 

மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன் - அல்குர்ஆன் 17:1

ம்ம்ம். நீ தொடரு. 

இந்த பறக்கும் குதிரை குறித்து நபிமொழிகள்ல பின்வரும்படியான விளக்கம் வருது. 

"நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது....(இந்த நிகழ்ச்சி நடந்தது)..... கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதுமான புராக் எனும் வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது'' - அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி), நூல்: புகாரி 3207. 

ஒ, இந்த புராக் வாகனத்த தான் டாகின்ஸ் பறக்கும் குதிரைன்னு சொல்றாரா...

ஆமாம். இப்ப சொல்ல போறத நல்லா கவனியுங்க.  

சொல்லு சொல்லு. ரொம்ப சுவாரசியமா இருக்கு. 

இந்த புராக்ல போன சம்பவம் எல்லாம் ஒரு இரவுல நடந்து முடிஞ்சிருச்சுன்னு நான் சொன்னேன் இல்லையா. அடுத்த நாள் காலைல இத எப்படி மக்கள் கிட்ட சொல்றதுன்னு நபிகள் நாயகமே ரொம்ப கவலைல தான் இருந்திருக்காங்க. ஏன்னா, ஏற்கனவே இவரு குழப்பத்த ஏற்படுத்திகிட்டு இருக்குறதா மக்கா நகர மக்கள் நினைக்குறாங்க. இப்ப இந்த நேரத்துல இதை வேற சொன்னா, நிச்சயமா இவர் ஒரு பொய்யர்ன்னு முத்திரை குத்திருவாங்கன்னு அஞ்சி இருக்கார். 

அப்ப, இந்த சம்பவம் மேல, இன்னைக்கு டாகின்ஸ்சுக்கு இருக்குற கேள்வி/சந்தேகம்/கேலி எல்லாம் நபி வாழ்ந்த காலத்துல இருந்த மக்கள் கிட்டயும் இருந்துச்சுன்னு சொல்லு. சூப்பரா இருக்குப்பா. சரி, இந்த சம்பவத்த மக்கள் கிட்ட சொன்னப்ப என்ன நடந்துச்சு...

என்ன நடந்துச்சு என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு விளக்குது. 

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காலையில் மக்காவில் இருந்த போது என்னுடைய இந்த (பயண) விஷயமாக நான் தாங்க முடியாத கவலை கொண்டிருந்தேன். மக்கள் என்னைப் பொய்யராக்கி விடுவார்கள் என்று அறிந்திருந்தேன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) தனியாகக் கவலையுடன் அமர்ந்திருக்கும் போது, அங்கு சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல், நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.
நபி (ஸல்) அவர்களிடம், "என்ன? ஏதேனும் புதுச் செய்தி உண்டா?'' என்று கிண்டலாகக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் கேட்டான். "இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவன் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்றான். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
தனது கூட்டத்தாரை அழைத்து வந்ததும் (அவர்களது முன்னிலையில்) நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்து விடுவார்களோ என்று பயந்த அவன், அந்தச் செய்தியைப் பொய்ப்படுத்துவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"உம்முடைய கூட்டத்தாரை நான் அழைத்துக் கொண்டு வந்தால் என்னிடம் அறிவித்ததை அவர்களிடமும் அறிவிப்பீரா?'' என்று கேட்டான். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
உடனே அபூஜஹ்ல், "பனீ கஅப் பின் லுவை கூட்டத்தாரே! வாருங்கள்!'' என்று கூறினான். அவனை நோக்கி சபைகள் கிளர்ந்தெழுந்து வரத் துவங்கி அவ்விருவருக்கும் மத்தியில் அமர்ந்தனர். "என்னிடம் அறிவித்ததை உம்முடைய கூட்டத்தாரிடம் அறிவியுங்கள்'' என்று அபூஜஹ்ல் கூறினான்.
"இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவர்கள் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்று அக்கூட்டத்தினர் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
சிலர் கை தட்டியவர்களாகவும், சிலர் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டும், "நீர் அந்தப் பள்ளியை எங்களிடம் வர்ணனை செய்ய முடியுமா?'' என்று கேட்டனர். அந்த ஊருக்குச் சென்று பள்ளியைப் பார்த்தவர்களும் அந்தச் சபையில் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது. (இதைக் கேட்ட) மக்கள், "வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார்'' என்று கூறினர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2670

கேட்கறதுக்கு செமையா இருக்கப்பா. மக்காவுக்கும், ஜெருசலதிற்கும் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரமாவது இருக்குமா?

இருக்குமண்ணே.... 

அன்னைக்கு இருந்த டெக்னாலஜி படி, ஒரு நாள் நைட்ல, இவ்வளவு தூரத்திற்கு போயிட்டு வந்திருக்க முடியாது.  ஆனா, இவர் இதற்கு முன் போயிராத/பார்த்திராத ஜெருசலம் பள்ளிவாசல் குறித்து நுணுக்கமான விசயங்கள கூட சரியா வர்ணிச்சு இருக்காரு. ஏற்கனவே அந்த பள்ளிக்கு போயிட்டு வந்திருந்த மக்கள் இவர் சொல்றது சரிதான்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்ப, இறைவன் நபிக்கு காட்டின அத்தாட்சியா/அற்புதமா தான் இந்த பயணத்த நாம புரிஞ்சிக்க முடியும். 

இவ்ளோ தான் மேட்டரு. இத ஒரு அற்புதமா (miracle), இறைவன் தன் அடியாருக்கு காட்டிய அத்தாட்சிகளாக தான் முஸ்லிம்கள் நம்புறாங்க. 

சரிதாம்பா... இந்த சம்பவத்த இறைவன் நடத்திக்காட்டிய அற்புதமா நம்புறதுல டாகின்ஸ்க்கு என்ன பிரச்சன? 

இதுக்கு அறிவியல்ரீதியான ஆதாரம் கேட்குறார்ண்ணே...

என்ன? என்னையா சொல்ற. 

ஆமா அவரு அப்படித்தான் கேட்குராறு. குதிரைக்கு எப்படி இறக்கை இருக்கும்? அது எப்படி பறக்கும்? யாரு பார்த்தா? இப்படியான ஆதாரங்கள்...

ஆஹா............ இறைவன் சைட்ல இருந்து நிகழ்த்தக்கூடிய ஒரு அற்புதத்துக்கு, இந்த உலகத்துல இருக்குற விசயங்கள அளவுக்கோலா வச்சு ஆதாரத்த கேட்குறது என்னய்யா லாஜிக்? அதுமட்டுமில்லாம நபி சொன்னது சரிதான்னு செக் செய்து அப்போதைய மக்கள் ஒத்துக்கிட்டு இருக்காங்க. இது பொய் என்று மக்கள் நம்பியிருந்தா இஸ்லாம் பரவியிருக்க வாய்ப்பே இல்ல. ஒருவேள New Statesman நிருபரோ அல்லது மஹ்தி ஹசனோ, 'இந்தா பாருங்க, நாங்க அந்த காலத்துலைய பறக்குறதுக்கு டெக்னாலஜி கண்டுபிடிச்சிட்டோம்'னு சொல்லியிருந்தா கூட டாகின்ஸ் கேட்கறதுல நியாயம் இருக்கு. இவங்க அப்படி சொல்லல தானே. 

கரெக்ட் தான். இவங்க அப்படி சொல்லல. ஒரு அற்புதமா இந்த சம்பவத்த நம்புறோம்னு தான் சொல்றாங்க. 

நல்ல வேலை நம்ம மோடி தப்பிச்சாரு...

என்ன சொல்றீங்க? இப்ப எதுக்கு மோடிய இதுல நுழைக்குறீங்க?

'ப்ளாஸ்டிக் சர்ஜரி அந்த காலத்துலயே நம்ம நாட்டுல இருந்துச்சு. அதுக்கு பிள்ளையார் தான் உதாரணம்'னு மோடி சொல்லப்போய் அவர நம்ம நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வழி பண்ணிட்டாங்க தானே. நல்ல வேலை மோடி இங்கிலாந்துல இத சொல்லல. 

சரிதான். பிள்ளையார் சம்பவத்த ஒரு தெய்வீக நிகழ்வா மோடி சொல்லியிருந்தா இந்த அளவிற்கு எதிர்ப்பு வந்திருக்காது. சரி நம்ம விசயத்துக்கு வாங்க. 

வந்தாச்சு. சொல்லு, டாகின்ஸ் இப்படியெல்லாம் பேசும் போது இந்த மஹ்தி ஹசன் சும்மா இருந்திருக்க மாட்டாரேப்பா...

அது எப்படி இருப்பாரு...டாகின்ஸ்சுடைய இந்த பேச்சுக்களை 'sheer nonsense' அப்படின்னு சொல்லிட்டாரு ஹசன். 

ஆஹா, அப்படின்னா 'சுத்தமா அறிவுக்கு ஒத்துவராதது' என்று தானே அர்த்தம்....

ஆமா. ஹசனோட எதிர்வாதங்கள பாருங்க. அப்படியே மலைத்து போயிடுவீங்க...

சொல்லுப்பா...எனக்கு எந்த மாதிரி விசயத்துல ஆர்வம் ஜாஸ்தி...

ரெடியா.............................. "தாஜ்மஹால் அழகானது" - இந்த வாக்கியத்த நீங்க ஒத்துக்குறீங்களா? 

நான் என்ன ஒத்துக்குறது, உலகமே ஒத்துக்குமப்பா...

வெரி குட். சரி இந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மைய அறிவியல்ரீதியா எப்படி சோதித்து பார்க்குறது? 

என்ன?.........(சில நொடி மவுனம்)

புரியலையா. இன்னொருவிதமா சொல்லுறேன். 'நீங்க அழகானவர்' - இத எப்படி அறிவியல்ரீதியா நிரூபிக்.....

தம்பி நிறுத்து....நிறுத்து....ஸ்டியரிங்க என் பக்கமா திருப்பாத, உன்னுடைய குசும்பு எனக்கு தெரியும்....நீ தாஜ்மஹாலுக்கே வா.....

ஹா ஹா....சொல்லுங்கண்ணே சொல்லுங்க...தாஜ்மஹால் அழகானது என்பதை அறிவியலரீதியா எப்படி சோதித்து பார்ப்பீங்க. இப்படி கட்டுனதான் அழகு, இந்த வடிவம் கொடுத்தா தான் அழகு, ஒரு கட்டிடம் இப்படி இருந்தா தான் அழகு - இதற்கெல்லாம் அறிவியல்ரீதியா என்ன அளவுகோல்? 

எப்பா தம்பி, நான் அப்பவே சொன்னேன் இந்த மஹ்தி ஹசன் விவகாரமான பையன்ன்னு.... 

சரி இத விடுங்க..... 'உங்க மனைவி உங்கள விரும்புறார்' - இத எப்படி அறிவியல்ரீதியா சோதித்து பார்ப்பீங்க? உண்மைன்னு நம்புவீங்க?

ஐயோ ஐயோ...தெரியாத்தனமா உன்கிட்ட கேள்வி கேட்டு மாட்டிகிட்டேன். என் மனைவி என்ன விரும்புறாங்கன்னு எனக்கு தெரியாதா..அவங்க உணர்வு எனக்கு புரியாதா....

அண்ணே, இந்த உணர்வு உணர்ச்சி இதையெல்லாம் விடுங்க. நீங்க அவங்கள விரும்புறதோ அல்லது அவங்க உங்கள விரும்புறதோ உண்மைன்னு எப்படி அறிவியல்ரீதியா சோதித்து பார்ப்பீங்க? நிரூபிப்பீங்க? 

முடியாதுப்பா....சத்தியமா முடியாது....

நீங்க நேர்ல பார்க்குற, உண்மைன்னு ஒத்துக்குற இம்மாதிரியான விசயங்களையே அறிவியல்ரீதியா சோதித்து பார்க்க முடியாது, அறிவியல்ரீதியா ஆதாரங்கள் கொடுக்க முடியாதுன்னு இருக்குறப்ப, தெய்வீகரீதியா நடந்த ஒரு அற்புத சம்பவத்துக்கு அறிவியல்ரீதியா ஆதாரம் கேட்குறது நியாயமா?? ------ இதுதான் ஹசனோட ஒரு வாதம்.

அடேங்கப்பா...எவ்ளோ ஆழமான வாதம்....... (கொஞ்ச நேரம் கழித்து சிரிக்கிறார்) தெரியாத்தனமா நம்ம ஆர்எஸ்எஸ் தலைவரு ஹசன் கிட்ட போய் மாட்டுனாரு பாரு. அத நினைச்சா சிரிப்பா தான்யா வருது. இந்த பையன பத்தி தெரிஞ்சிருந்தா பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டு இருப்பாரா? 

ஹா ஹா ஹா....அறிவியல்ரீதியா சோதிச்சு பார்த்து நம்புறதுக்கு குர்ஆன்ல நிறைய விஷயம் இருக்கு. அதவிட்டுட்டு ஒரு தெய்வீக அற்புதத்துக்கு அறிவியல் ஆதாரம் கேட்டு தொங்குறதுல என்ன பயன் இருக்க முடியும்? 

ரொம்ப சரி... இதெல்லாம் இருக்கட்டும். டாகின்ஸ் நம்புற பரிணாமத்துக்கு ஆதாரம் இருக்கா???? (சிரிக்கிறார்) டயர்ட் ஆகிட்டேன் தம்பி...இதுக்கு பதில் சொல்லிட்டு நீ முடிச்சிக்க.

பரிணாமத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லங்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இப்படியான கேள்வி கேட்டா டாகின்ஸ் எப்படி பதில் சொல்றார்ன்னு பாருங்க. 'ஒரு கொலை நடந்திருக்கு. அத நாம பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு கொலைதான்னு நம்புறோம். அதுமாதிரி தான் பரிணாமமும். பரிணாமம் நடந்ததை யாரும் பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு பரிணாமம் நடந்துச்சுன்னு நம்புறோம்' - இது தான் டாகின்ஸ்சோட விளக்கம். 

அட்ரா சக்க...அட்ரா சக்க...இத தானய்யா இறை நம்பிக்கையாளர்களும் சொல்றாங்க. இறைவன நாங்க பார்த்ததில்லை, ஆனா அவனோட இருப்பை நிரூபிக்குறதுக்கு இந்த உலகத்துல நிறைய ஆதாரங்கள் இருக்கு, அவற்றை வஞ்சு தான் இறைவன நம்புறோம்ன்னு. டாகின்ஸ்ச விட பிரபலமா இருந்த நாத்திகரான பேராசிரியர் ஆண்டனி ப்ளு (இவர் குறித்த எதிர்க்குரல் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்), ஆத்திகரா மாறினதுக்கு இப்படியான ஆதாரங்களை தானே காரணமா சொன்னாரு. ஒரே அளவுக்கோலை வைத்துக் கொண்டு ஒன்ன மட்டும் நம்புவேன், இன்னொன்ன நம்ப மாட்டேன்னு சொல்றது அறிவுக்கு ஒத்துவர்ர விசயமாய்யா....

இத நீங்க டாகின்ஸ்கிட்ட தான் கேட்கணும்......

ஹி ஹி...நீ கிளம்பிக்க...

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Mehdi Hasan vs Richard Dawkins: My faith in God is not foolish - Mehdi Hasan, 19th December 2012 . New Statesman. link
2. 'Pathetic': Richard Dawkins in extraordinary outburst against Islam - Jason Taylor. 29th December 2015. Express. link
3. My year in Islamophobia - Emad Ahmed. New Stateman. 22nd December 2015. link
4. Richard Dawkins is just as rude in person as he is on Twitter, apparently - Ryan Kearney, New Republic. link
5. Richard Dawkins debates Muslim Journalist - Youtube. link
6. Richard Dawkins, PZ Myers, AronRa and Hamza Tzortzis at Atheist Convention - Islamic Education and Research Academy. Youtube. link

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ  






Tuesday, July 23, 2013

பிரிட்டிஷ் முஸ்லிம்கள் - அறக்கொடைகள் - கடைசியில் நாத்திகர்கள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

பிரிட்டனின் பிரபல ஊடகமான "தி டைம்ஸ்", நன்கொடை/அறக்கொடை அளிப்பதில், சமயரீதியாக மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பிரதிபளிக்கும் ஆய்வொன்றின் முடிவுகளை சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. அந்த கட்டுரைக்கு தி டைம்ஸ் வைத்த தலையங்கம் இதுதான், 

Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013
அறக்கொடை அளிப்பதில் பிரிட்டனில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்கின்றனர் - (Extract from the original article of) The Times, 20th July 2013.

இன்று பரவலாக பல்வேறு ஊடங்களும் பகிர்ந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் கவனிக்கத்தக்க தகவல்களை நமக்கு தருகின்றன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம். 

பிரிட்டனில், சாரிட்டி (charity) எனப்படும் அறக்கொடை அளிப்பதில் முஸ்லிம்கள் முதல் நிலையிலும், நாத்திகர்கள் கடைசியிலும் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 371 யூரோக்களை கொடுத்துள்ளனர் (இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 29,000 ரூபாய் ஆகும்). இதுவே மற்ற சமயத்தவர்களை பொருத்தமட்டில் பின்வருமாறு உள்ளது. 

யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே அதிகமாக
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே குறைவாக
நாத்திகர்கள் - 116 யூரோக்கள் 


இதுமட்டுமல்லாது, நன்கொடை/அறக்கொடை கொடுக்காதவர்கள் பட்டியலிலும், யூதர்களுடன் இணைந்து நாத்திகர்கள் முன்னிலையில் உள்ளனர். சென்ற ஆண்டில், பத்தில் நான்கு நாத்திகர்கள் எவ்விதமான தர்மத்தையும் மேற்கொள்ளவில்லை. யூதர்களை பொருத்தமட்டில், இது, நான்கிற்கும் சற்றே அதிகமாக உள்ளது.

ரிச்சர்ட் டாகின்ஸ் போன்ற பிரித்தானியர்கள், நாத்திகத்தின் மூலம் ஆரோக்கியமான/கருணையான உலகத்தை உருவாக்க முடியும் என்று முயற்சிகள் செய்துவரும் நிலையில் இப்படியான முடிவுகள் நிச்சயம் பெரும் பின்னடைவே. தங்களின் செல்வத்தை எப்படி செலவழித்தால், செலவழித்தவருக்கு எப்படியான நன்மைகள் உண்டாகும் என்பதை நாத்திகர்கள் மனதில் பதிய வைத்து அறக்கொடைகளை அதிகரிக்க வேண்டியது டாகின்ஸ் போன்றவர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாகும். 

நாம் பதிவிற்கு வருவோம்.

முஸ்லிம்களின் நன்கொடை யாருக்கு அதிகமாக சென்றுள்ளது?

இது பலரும் அறிந்துக்கொள்ள விரும்பும் கேள்வியாகும். இதற்கும் இந்த ஆய்வு பதிலளிக்கின்றது. முஸ்லிம்களின் நன்கொடைகள், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களான Muslim Aid மற்றும் Islamic Relief போன்றவற்றிற்கு அதிகப்படியாக சென்றுள்ளது. அதே போல, பின்வரும் மருத்துவ நிறுவனங்களுக்கும் முஸ்லிம்கள் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளனர். 

1. புற்றுநோய் ஆய்வுக்கழகம் (Cancer Research) 
2. மேக்மில்லன் & பிரிட்டிஷ் இருதய கழகம் (MacMillan & British Heart Foundation)

சந்தேகமில்லாமல், இப்படியான ஆய்வுகள் மூலம் முஸ்லிம்கள் ஆச்சர்யமடைய ஒன்றுமில்லை. இஸ்லாம் அதிகப்படியாக வலியுறுத்தும் நன்மைகளில் (கடமையான) ஜகாத் மற்றும் தர்மங்களுக்கு முக்கிய பங்குண்டு. பொருளாதார வசதியுள்ள முஸ்லிம்கள் அதிகப்படியாக வழங்கி தங்களின் நன்மைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த ஆய்வு முடிவுகள் சிறு அளவிலாவது ஊக்கமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Infographics:
1. By Aashiq Ahamed

My sincere thanks to:
1. The Times Faith. 
2. Just Giving. 

References:
1. Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013. link
2. UK Muslims Top Charity Givers - On Islam, 21st July 2013. link
3. Muslims 'Give Most To Charity', Ahead Of Christians, Jews And Atheists, Poll Finds - The Huffington Post, 21st July 2013. link
4. Justgiving - Wikipedia. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, February 15, 2012

பிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்




நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

நேற்று பிபிசி ரேடியோ தளத்தில் வெளியான டாகின்ஸ் கலந்துக்கொண்ட உரையாடல் படுசுவாரசியமாக இருந்தது.

கிருத்துவத்தை விமர்சிக்க போய் தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொண்டார் டாகின்ஸ். பரிணாமத்திற்கு எதிரான தளங்கள் தற்போது இந்த ரேடியோ உரையாடலை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. 

அந்த உரையாடலின் பின்னணி இதுதான். 

ரிச்சர்ட் டாகின்ஸ் நிறுவனத்திற்காக பிரிட்டனில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஆய்வின் முடிவின்படி, பிரிட்டனில் 54% மக்கள் கிருத்துவத்தை நம்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெயரளவிற்கு தான் கிருத்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்களே ஒழிய (உண்மையான) கிருத்துவர்கள் கிடையாதாம் (????). 

டாகின்ஸ் ஒரு நாத்திகர் அல்லவா? அவர் நிறுவனத்திற்காக இப்படியான ஒரு ஆய்வு நடத்தப்படுகின்றது என்றால் நாம் படு கவனமாக தான் இதனை பார்க்கவேண்டும். காரணம், நிச்சயம் இதில் ஏதேனும் உள்அர்த்தம்/பாகுபாடு இருக்கலாம். 

அதெப்படி இவர்கள் (உண்மையான) கிருத்துவர்கள் இல்லை என்று கண்டுபிடித்தார்கள்? 

எப்படி என்றால், இவர்கள் சர்ச்சுக்கு செல்வது கிடையாது, பைபிளை படிப்பது கிடையாது, ஏசுவை கடவுளின் மகன் என்று ஏற்பது கிடையாது. இவ்வளவு ஏன், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் பெயர் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆகையால் டாகின்ஸ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். கிருத்துவ நம்பிக்கையின் முக்கியமானவற்றை இவர்கள் பின்பற்றாததால்/தெரியாததால் இவர்கள் கிருத்துவர்கள் கிடையாது. 

மொத்தத்தில், இவர்கள் தங்களை கிருத்துவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களே. பிரிட்டன் ஒரு கிருத்துவ தேசம் என்று கூறிக்கொண்டு தான் அங்கே நம்பிக்கை சார்ந்த பள்ளிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. இப்போது இப்படியான முடிவுகள் வந்திருப்பதால், பிரிட்டன் ஒரு கிருத்துவ நாடு என்ற நிலை பரிசீளிக்கப்பட வேண்டும். இது தான் டாகின்ஸ் சொல்ல வருவது. 

நீங்கள் மேலே பார்த்தவற்றை தான் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார் டாகின்ஸ். 

தன் வாயால் கெடும் என்று எதையோ பார்த்து சொல்வார்களே, அது போல தான் அமைந்தது அடுத்தடுத்த நிகழ்வுகள். 

இந்த உரையாடலில் டாகின்ஸ்சுடன் சேர்ந்து கலந்துக்கொண்டார் Reverend ஜைல்ஸ் ப்ரேசர். கிருத்துவம் குறித்து பலருக்கு பலவிதமான பார்வை இருக்கின்றது என்றும், தங்களை கிருத்துவர்கள் என்று மக்கள் அடையாளப்படுத்திக்கொண்டனர் என்றால் அத்தோடு விட்டுவிடுவதே சரியானது என்றும் வாதிட்டார் அவர். அதனைத் தாண்டி, சில குழப்பம் ஏற்படுத்தும் முட்டாள்தனமான கேள்விகளை கேட்டு, அதனை கொண்டு ஒரு முடிவிற்கு வருவதெல்லாம் தேவையற்றது என்று கூறினார் அவர். 

உரையாடலின் நடுவே டாகின்ஸ்சை நோக்கி ஒரு பிடி போட்டார் பாருங்கள் ப்ரேசர்.  

இதோ அந்த உரையாடல், 

"ரிச்சர்ட், (டார்வினின்) origin of species புத்தகத்தின் முழு பெயரை சொல்லுங்களேன். நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்" 

"ஆம், என்னால் முடியும்.." 

"சொல்லுங்க.." 

"on the origin of species...அ.......on the origin species....அ........பிறகு ஒரு உப தலைப்பு வரும்...பாதுகாக்கப்பட்ட இனங்கள் குறித்து அது பேசும்...."

கடைசி வரை புத்தகத்தின் முழு பெயரை சொல்லவில்லை டாகின்ஸ். டார்வினின் புத்தகத்தின் முழு பெயர் "On the origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favored Races in the Struggle for Life"......

ஆஹா....டார்வினின் புத்தகத்தின் பெயர் டாகின்ஸ்சுக்கு தெரியவில்லை. ஆகையால் அவர் வாதப்படி அவர் பரிணாமத்தை (முழுமையாக) நம்பவில்லை. :) :)

இதனையே பிரதிபலித்தார் ப்ரேசர்..

"ரிச்சர்ட், டார்வினிசத்தின் பெரிய நம்பிக்கை நீங்கள். பரிணாமத்தை நம்பும் மக்களிடம் போய் டார்வினின் புத்தகத்தின் பெயர் கேட்டு, 2% மக்கள் மட்டுமே சரியான பதில் சொல்லிருப்பார்களேயானால், பரிணாமத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிடலாமா? இம்மாதிரியான கேள்விகள் நியாயமில்லாதவை...."

ஒருவர் சரிவர தன் நம்பிக்கையை பின்பற்றவில்லை என்பதற்காக அவரை நம்பிக்கையாளர் இல்லை என்று கூறிவிட முடியுமா - ப்ரேசேரின் இத்தகைய கேள்விகள் தெளிவாக இருந்தன.  

டாகின்ஸ் சிக்கி திணறிய அந்த பகுதியை கீழே கேட்கலாம். முழுமையாக கேட்க விரும்புபவர்கள் பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பிபிசி லின்க்கை சுட்டுங்கள்.


அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்போம். பரிணாம நம்பிக்கையாளர்களிடம் போய், 
  • டார்வினின் புத்தகத்தின் பெயர் என்ன? 
  • டார்வினின் புத்தகத்தை படித்திருக்கிண்றீர்களா?, 
  • அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன?
  • பரிணாமம் என்றால் என்ன?

இப்படியாக கேள்வி கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்?? அதனை வைத்து இவர்கள் சும்மாச்சுக்கும் தான் பரிணாமத்தை நம்புகின்றார்கள் என்று கிருத்துவர்கள் சொன்னால் டாகின்ஸ் கூடாரம் ஏற்றுக்கொள்ளுமா? 

என்னவோ போங்க...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்..

References:
1. Majority of Christians 'tick the box' - BBC Radio 4, 14th Feb 2012. link
2. Richard Dawkins's English Inquisition - Evolution News. 14th Feb 2012. link

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Friday, March 26, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


             நம்மில் பலரும் சில இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளை எதிர்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றி வருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே... 

இந்த பதிவுகள் எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதரர்களுக்கு ஒரு சிறு உதவி.

இந்த பதிவுகளில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...

1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...       

நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவி புரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.

மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.

  • Micro or Horizontal Evolution
  • Macro or Vertical Evolution

இந்த Macro பரிணாம வளர்ச்சிதான் விவகாரமே. இதிலிருந்து அது வந்தது, அதிலிருந்து மற்றொன்று வந்தது, (இப்போதைக்கு) கடைசியாய் நாம் வந்தோம் என்று சொல்லுகிற இந்த macro evolution தான் பிரச்சனையே. நடுநிலையோடு சிந்திக்கிற எவரும் இந்த macro பரிணாம கொள்கையால் குழம்பி போவது உறுதி...

"Biological evolution is a change in the genetic characteristics of a population over time. That this happens is a fact. Biological evolution also refers to the common descent of living organisms from shared ancestors. The evidence for historical evolution -- genetic, fossil, anatomical, etc. -- is so overwhelming that it is also considered a fact. The theory of evolution describes the mechanisms that cause evolution. So evolution is both a fact and a theory"  --- Talk Origins Site   

நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிக்கும் பிரபல தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களாலும் Macro பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றாலே இந்த Macro Evolution தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதனால் தான் வெறுமனே பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றே சொல்கின்றனர்.

நான் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி இங்கு விளக்க போவதில்லை. ஆனால் நான் கூற விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நாத்திகரை (அல்லது வேறு யாரையும்) விவாதத்தில் சந்தித்தால், அவருக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் நம்பிக்கை இருந்தால், அவரை கண்ணியத்தோடு அணுகி விளக்கம் கேளுங்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று?

மற்றொன்று, எல்லா நாத்திகர்களும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டவர்கள் என்று நாம் நினைத்து விடக் கூடாது. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளாத சில பேர் இருக்கிறார்கள்...
  
எப்படி ஒருவருக்கு பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறதா என்று அறிவது? 

சுலபம், நமக்கு தெரியாததுமல்ல, நாம் எப்படி இந்த உலகிற்கு வந்திருப்போம் என்ற ஒரே ஒரு கேள்வியை கேட்டால் போதும்....

அதற்கு அவர் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விளக்கமாக கொடுத்தால் அவர்தான் நாம் எதிர்பார்க்கும் சகோதரர். 

அவரிடம் ஆரோக்கியமான முறையில் விவாதியுங்கள். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அபத்தங்களை எடுத்துக் கூறுங்கள். 

அவர்கள்,தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கு வேறெந்த காரணத்தை வேண்டுமென்றாலும்  கூறட்டும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மட்டும் கூறக்கூடாது என்ற அளவில் விவாதங்கள் இருக்கவேண்டும். 

"சரிப்பா, நான் எப்படியோ வந்துட்டேன்" என்று சொல்லி தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கான காரணங்களை தேடி ஆராயட்டும், பரிணாம வளர்ச்சி என்ற படுத்து விட்ட கோட்பாட்டை மட்டும் உதவிக்கு கொண்டு வரக்கூடாது.     

இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலோட்டமாக அல்ல, ஆழமாக...   

பரிணாம வளர்ச்சியை பற்றி அறிய விரும்புகிறவர்கள், பரிணாம வளர்ச்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பு தளங்களை பார்க்கலாம்.

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் இரு முக்கிய தூதர்கள் என்றால், அன்று டார்வின் இன்று ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins). 



டார்வினை பற்றி பேச தேவையில்லை, அவரே அவரது புத்தகத்தில் தன்னால் சிலவற்றை தற்போது நிரூபிக்க முடியாதென்றும், எதிர்காலத்தில் நிரூபிக்க படலாம் என்றும் கூறிவிட்டார். 

இப்போது நம்முடைய கவனமெல்லாம், தற்காலத்திய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் காவலர் ரிச்சர்ட் டாகின்ஸ் பற்றித்தான் இருக்கவேண்டும். டாகின்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் விலங்கியல் துறையின் பேராசிரியராய் இருந்தவர். 

இவர் எழுதி பரபரப்பாய் விற்பனையான புத்தகம் "The God Delusion". இதில் கடவுள் ஏன் இல்லை என்று விளக்குகிறார் டாகின்ஸ். அதையாவது  இவர் தெளிவாக சொன்னாரா என்றால்...இல்லை. குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது...




உதாரணத்துக்கு....

"God almost certainly does not exist" --- Richard Dawkins in his book "The God Delusion", Page No:158 

"The God Delusion" என்பதற்கு பதிலாக "The Dawkins Delusion" என்று வைத்திருக்கலாம், பொருத்தமாக இருந்திருக்கும்.

நீங்கள் விவாதங்களில் சிலர் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம். 

டாகின்ஸ்சுடைய இந்த புத்தகம் முஸ்லிம்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மற்றவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. 

இந்த புத்தகத்தில் பரிணாம வளர்ச்சியையும் வைத்துதான் கடவுள் இல்லை என்று வாதிடுகிறார் டாகின்ஸ். 

நான் மேலே சொன்ன ஒரு சிறு உதவி இங்கேதான். நீங்கள் உங்கள் விவாதங்களில் டாகின்ஸ்சை பற்றியோ அல்லது அவரது இந்த புத்தகத்தை பற்றியோ அல்லது பரிமாண வளர்ச்சி பற்றியோ உங்களிடம் கேள்விகள் வைக்கப்படுமானால் நீங்கள் நான் இப்போது குறிப்பிட போகும் இரு நபர்களது விளக்கங்களை பரிசீலனை செய்யலாம். 

உலகளவில் முஸ்லிம்கள் பல நாத்திகர்களுடன் விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் எனக்கு தெரிந்த வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் Shabir Ally, Adam Deen மற்றும் Hamza Andreas Tzortzis ஆவர். 

இவர்களில் ஆடம் தீன் மற்றும் ஹம்சாவை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஆடம் மற்றும் ஹம்சா இருவரும் பல பிரபல நாத்திகவாதிகளுடன் நேரடி விவாதம் புரிந்தவர்கள்/புரிந்து கொண்டிருப்பவர்கள்.




டாகின்ஸ்சுடைய புத்தகத்தை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருபவர்கள். மேற்குலகில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து (குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன்) பல பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக இந்த புத்தகத்தை பற்றி பேசி, விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.                           



நீங்கள் இவர்களுடைய தளத்திலிருந்து இவர்களது விவாத வீடியோக்களையும், இவர்களது எழுத்து வாதங்களையும் பார்க்கலாம்/படிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம்.


  1. hamzatzortzis.blogspot.com
  2. hamzatzortzis.com
  3. adamdeen.com

ஆக, உங்கள் முன் பரிணாம வளர்ச்சி மற்றும் டாகின்ஸ்சுடைய புத்தகத்தை யாராவது மேற்கோள் காட்டினால் (நிச்சயம் காட்டுவார்கள்) இந்த இரு சகோதரர்களின் வாதங்களையும் நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் கேட்பது புரிகிறது, ஏன் டாகின்சை நேரடி விவாதத்திற்கு அழைக்க கூடாது?

அழைக்காமலா இருந்திருப்பார்கள் நம் சகோதரர்கள்?, நாம் தான் இந்த விஷயத்தில் முன்னோடிகள் ஆயிற்றே (அல்ஹம்துலில்லாஹ்)... பிரிட்டனின் முன்னணி பத்திரிக்கையான டைம்ஸ் தினசரி மூலமும் சில முறை அழைப்பு விடுத்தாகி விட்டது... பயனில்லை...



டாகின்சை பற்றி பேசும்போது உமர் (ரலி) அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.

நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷிகளால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது,   "இறைவா, உமர் அல்லது அபு ஜஹல் ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வைத்துவிடு" என்று துவா செய்தார்கள். இறைவன் உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தை ஏற்கவைத்து நாயகம் (ஸல்) அவர்களது கரத்தை வலுப்படுத்தினான். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாத்தை எதிர்த்த பலரும் இஸ்லாமின்பால் தங்களை ஐக்கியப்படுத்தி வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம், டாகின்ஸ்சை இறைவன் இஸ்லாத்தில்பால் கொண்டுவர வேண்டுமென்று...                  

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இறைவன் நம் ஈமானை அதிகரிக்க செய்வானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ