Friday, April 27, 2012

நானா அஸ்மா...நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

18-ஆம் நூற்றாண்டு...

இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது.

இத்தகையவருக்கு 1793-ஆம் ஆண்டு மகளாக பிறந்தார் நானா அஸ்மா (Nana Asma'u). நபியவர்களின் கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருந்த நபித்தோழியான அஸ்மா (ரலி) அவர்களின் நினைவாகவே அவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. சிறு வயதிலேயே தன் தாயை இழந்த அஸ்மா, தன் சித்திக்களின் பொறுப்பில் வளர்ந்தார். எந்தவொரு விசயத்தையும் குர்ஆனின் ஒளியில் பார்க்கும் அத்தகைய பெண்மணிகளின் வளர்ப்பில் சிறப்பான கல்வி கொடுக்கப்பட்டார். இளம்வயதிலேயே ஓரிறைக்கொள்கை குறித்த தெளிவான எண்ணங்கள் அஸ்மாவுக்கு ஏற்றிவைக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அஸ்மாவின் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் தலைப்பட ஆரம்பித்தன. அதற்கு காரணம் உஸ்மான் டான் போடியோவின் தீவிர இறைப்பணி. சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் இஸ்லாமை நோக்கி மக்களை அழைப்பதில் தவறியதில்லை உஸ்மான். தன் இடத்தை விட்டு வெகு தூரம் சென்று பல்வேறு நிலப்பரப்புகளில் இஸ்லாமை எடுத்துக் கூறுவார். கால்நடை மேய்ப்பவர்கள், வியாபாரிகள், மார்க்கெட்கள் என்று யாரையும், எந்த இடத்தையும் விட்டதில்லை. இறைவனின் கிருபையால், உஸ்மானின் அழைப்பு பணிக்கு மகத்தான வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கையும், இஸ்லாமை சரிவர புரிந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர ஆரம்பித்தது.

வெளியேற்றம்:

இந்த சூழ்நிலை, அந்தந்த நிலப்பரப்பு ஆட்சியாளர்களை கடுமையாக கோபம் கொள்ள செய்தது. முடிவோ, பெரும் விபரீதமாக அமைந்தது. உஸ்மானின் குடும்பம், ஆதரவாளர்கள் என்று அனைவரும் கூண்டோடு கூண்டாக தங்களுடைய நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் (21st Feb 1804).

இது மிக சோதனையான காலக்கட்டம். பல மக்கள் பாலைவனத்தின் கொடுமை, பசி, நோய் காரணமாக போகும் வழியிலேயே இறந்தனர். இத்தகைய சூழ்நிலை உஸ்மானை நிலைக்குலைய செய்தது. ஆனால் வரலாற்றின் ஒரு சம்பவம் அவருக்கு பக்கபலமாக நின்றது. ஆம், நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய அந்த நிகழ்வு தான். இஸ்லாமின் வரலாற்றில் மறக்கவே முடியாத அந்த நிகழ்வை தற்போது தனக்குள் பிரதிபலித்து கொண்டே இருந்தார் உஸ்மான். இது இறைவனின் சோதனை, எப்படி சோதனைகளுக்கு பிறகு மக்கா முஸ்லிம்களின் வசம் வந்ததோ, அது போல, தங்களுக்கும் இறைவன் உதவுவான் என்று தீர்க்கமாக நம்பினார்.

வெற்றி:

உஸ்மானின் அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. வெளியேறியவர்கள், உஸ்மானின் மகனான முஹம்மது பெல்லோ தலைமையில் படை திரட்டினார்கள், போரிட்டார்கள். கடுமையான சண்டைகளுக்கு பிறகு பெல்லோ தலைமையிலான படை எதிர்தரப்பை வீழ்த்தியது (3rd October 1808). பல்வேறு பகுதிகளையும் இணைத்து சொகாடோ சாம்ராஜ்ஜியம் உருவானது.

பேரரசு உருவான போது நானா அஸ்மா அவர்களுக்கு பதினைந்து வயது. அப்போது குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்திருந்தார், நான்கு மொழிகளில் (Arabic, Fulfulde, Hausa, and Tamachek) புலமை பெற்றிருந்தார், இஸ்லாமிய சட்டதிட்டங்களில் தீர்க்கமான ஞானம் பெற்றுக்கொண்டிருந்தார், தன் சகோதரர் பெல்லோவின் நண்பரான ஜிடாடோவை திருமணமும் முடித்திருந்தார்.

கூடவே கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார். அந்த கவலை தன் மக்களை/அரசை பற்றியது. அரசாங்கத்தின் முன்னால் கடுமையான சவால்கள் காத்திருந்தன. பசி, நோய், ஏழ்மை, இஸ்லாமை ஏற்ற பூர்வகுடிமக்களை முஸ்லிம் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பது என்று இப்படி பல பல சவால்கள்.

1817-ஆம் ஆண்டு, உஸ்மான் இறந்த போது விவகாரங்கள் மேலும் பெரிதாகின.

ஆட்சி பொறுப்பை ஏற்ற முஹம்மது பெல்லோ தன் தங்கையின் திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரை முழுவதுமாக நம்பினார். நாட்டின் பெண்களின் நிலை மாறவேண்டும். மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு அஸ்மாவின் உதவி நிச்சயம் வேண்டும். ஆனால், தங்கையின் மனநிலை அவருக்கு மிகுந்த கவலையை தந்தது. குர்ஆனின் உதவியுடன் தன் தங்கையை அணுக ஆரம்பித்தார்.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது - குர்ஆன் 94:5

தன் தங்கையிடம் உற்சாகத்தை வரவழைக்க இதுப்போன்ற வசனங்கள் அவருக்கு பெரிதும் உதவின. "உன் இறைவன் வலிமையானவன் என்று தெரிந்தும் நீ கவலைக்கொள்கின்றாயா?", "தன் மீது நம்பிக்கை கொண்டவரை இறைவன் நிராகரிப்பான் என்று எண்ணுகின்றாயா?" - இதுப்போன்ற கேள்விகளையும் தன் தங்கையை நோக்கி கேட்பாராம் பெல்லோ.

கல்வி புரட்சி:

அவருடைய பிரார்த்தனை பொய்யாகவில்லை. உற்சாகத்துடன் எழுந்த நானா அஸ்மா மாபெரும் புரட்சிக்கு அடிக்கோல ஆரம்பித்தார்.

ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு மார்க்க அறிவு தெளிவாக போதிக்கப்பட வேண்டும். இது தான் அஸ்மாவின் அடிப்படை எண்ணமாக இருந்தது.

பசி மற்றும் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே கல்வியை போதிக்க வேண்டும். பாடத்திட்டங்கள் எளிமையாக இருக்கவேண்டும். நாட்டின் பெண்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களின் அறியாமையை போக்க வேண்டும். அவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

திட்டமெல்லாம் ஓகே. எப்படி செயல்படுத்துவது?

முதலில் உதவி தேவைப்படும் கிராமங்கள் மற்றும் ஏனைய பகுதிகளை கணக்கிட ஆரம்பித்தார். அந்த கிராமங்களில் நற்பண்புகள் மிக்கவர்களாக கருதப்பட்ட பெண்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தன் வீட்டில் கல்வி, ஒழுக்கம் குறித்த பயிற்சியை தொடங்கினார் (அஸ்மாவின் அந்த வீடு இன்றும் உள்ளது).

நான் முன்னமே கூறியது போன்று அஸ்மா அவர்கள் ஒரு அசாத்திய திறமைசாலி. இறையச்சம் சார்ந்த அற்புத பண்புகளை அவரால் தன் மாணவர்களிடையே எளிதாக கொண்டுவர முடிந்தது. இப்படியாக அஸ்மாவினால் உருவாக்கப்பட்டவர்களுக்கு "ஜாஜிக்கள் (jajis)" என்று பெயர். ஜாஜி என்றால் பொறுப்பாளர் என்று பொருள் கொள்ளலாம். கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஜாஜிக்கள் தற்போது தங்கள் ஊர்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க வேண்டும்.

இந்த ஜாஜிகளுக்கு துணையாக இருந்தது அஸ்மாவிடம் இருந்து அவர்கள் கற்ற கல்வியும், நபிமொழிகளும் தான். வீடுகளுக்கே சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் குறித்த குர்ஆன் வசனங்களை சத்தமாக ஓதி காட்டுவார்கள். அது அடுத்தடுத்த வீடுகளிலும் எதிரொலிக்கும். அந்தந்த வீட்டு பெண்கள் இந்த வசனங்களை திரும்ப ஓதி காட்டுவார்கள். இப்படியானது ஒரு யுக்தி.

பெண்களின் கஷ்டங்களை அஸ்மாவின் பார்வைக்கு கொண்டுவந்தார்கள். அவற்றை பொறுமையாக கேட்டறிந்தார் அஸ்மா. உடனுக்குடன் தீர்த்து வைக்கவும் செய்தார். அஸ்மாவின் இத்தகைய நடவடிக்கைகள் பெண்களிடையே பெரும் புரட்சியை உருவாக்கத் தொடங்கின. பெண்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை அவரால் கொண்டுவர முடிந்தது. பிரச்சனைகளை ஜாஜிக்கள் மூலமாக எளிதாக கையாள முடிந்தது. அவர் எதிர்ப்பார்த்த சகோதரத்துவம் மேலோங்க ஆரம்பித்தது.

தன் மாணவர்களான ஜாஜிக்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அஸ்மா. தன் அன்புமிக்க தோழிகள் என்றும், புத்திசாலிதனம் மற்றும் கடமையில் சிறந்தவர்கள் என்றும் அவர்களை குறிப்பிட்டார் அஸ்மா. ஆசிரியர்-மாணவர் உறவுக்கு அஸ்மாவும் ஜாஜிக்களும் மிக சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையில்லை.

ஒருவர் தன் வாழ்நாளிலேயே தன்னுடைய எண்ணங்கள் வெற்றி பெறுவதை பார்ப்பது இறைவனின் மகத்தான கிருபை. அந்த வகையில் அஸ்மா ஒரு அதிர்ஷ்டசாலியே. கட்டுக்கோப்பான சமூகம் உருவாக எண்ணம் கொண்டார். தெளிவான சிந்தனைகள் அடிப்படையில் காய் நகர்த்தி மாபெரும் வெற்றியும் கண்டார்.

I taught them what, in the Faith of Islam, is permissible And what is forbidden, so they would know how to act. I said they must distance themselves from sins such as lying, meanness, hatred and envy, Adultery, theft and self-esteem. I said they should repent Because these things lead to perdition. My women students and their children are well known for their good works. And peaceful behaviour in the community - Nana Asma'u
அவர்கள் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்காக, இஸ்லாம் அனுமதித்த மற்றும் அனுமதிக்காத விசயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். பொய், கயமைத்தனம், தீண்டாமை, பொறாமை, விபச்சாரம், திருட்டு போன்றவற்றிலிருந்து விலகி நிற்குமாறு கூறினேன். தவறு செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்க சொன்னேன். என்னுடைய மாணவியர்களும், அவர்களின் பிள்ளைகளும் தங்களுடைய சமூக பணிகளுக்காகவும், அமைதிக்காகவும் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள் - நானா அஸ்மா

புரட்சிக்கு வித்திட்டு, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா 1864-ஆம் ஆண்டு மறைந்தார். இறைவன் அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை தந்தருள்வானாக...ஆமீன்.

நானா அஸ்மாவின் தாக்கம் அன்று எப்படி இருந்ததோ அதுபோலவே நைஜீரிய பெண்களிடம் இன்றும் இருக்கின்றது. பெண்களின் முன்னேற்றம் குறித்த தங்கள் எண்ணங்களுக்கு அஸ்மாவின் பாடத்திட்டங்கள் என்றென்றும் துணையாக இருப்பதாக கூறுகின்றனர்.

The aim of FOMWAN is to upgrade the status of Muslim women through increasing their religious awareness and education - exactly what Nana Asma’u did. She mobilised women and brought them together, she taught and reformed them making them better members of society. Our inspiration came from her and we look on her as a model. Whatever we achieve is indigenous. Our ideas do not come from USA, nor the UK, nor from Saudi Arabia. We have our model here. We may learn from others but our upbringing, our development is through Nana Asma’u - Sa’adiyar Omar, Federation of Muslim Women’s Associations of Nigeria [FOMWAN].
முஸ்லிம் பெண்களிடையே மார்க்க விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரித்து அவர்களது நிலையை முன்னேற்றம் அடையச் செய்வதே "நைஜீரிய முஸ்லிம் பெண்கள்" கூட்டமைப்பின் நோக்கமாகும் - ஆம், அஸ்மா என்ன செய்தாரோ அதே தான். அவர் பெண்களை ஒருங்கிணைத்தார், கல்வி கொடுத்தார், அவர்களிடையே சீர்த்திருத்தம் மேற்கொண்டு சமூகத்தில் சிறந்த மக்களாக மாற்றினார். எங்களுடைய ஐடியாக்கள் அமெரிக்காவில் இருந்தோ, பிரிட்டனில் இருந்தோ, சவூதி அரேபியாவில் இருந்தோ வரவில்லை. எங்களுக்கான முன்னுதாரணம் இங்கேயே உள்ளார். நாங்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றோம், அதே நேரம் எங்களுடைய வளர்ப்பு, முன்னேற்றம் எல்லாம் அஸ்மாவிடமிருந்தே வருகின்றன - ஸாதியார் உமர், நைஜீரிய முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு.

இறைவா, நானா அஸ்மா போன்ற பெண்களை எங்கள் சமூகத்திற்கு மேலும் மேலும் அதிகரித்து தருவாயாக..ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

References:
1. The Essential Nana Asma'u - Jean Boyd, 2005 (Document available on request).
2. Nana Asma'u - Hyperhistory. link
3. Nana Asma'u - Brief Biography, Nigeria Muslim Forum UK. link
4. Nana Asma'u, Muslim Woman Scholar: Excerpts from One Woman’s Jihad - Roy Rosenzweig center for history and New media. link.
5. One Woman's Jihad: Nana Asma'u, Scholar and Scribe. - book review. Business Library. link
6. Nana Asma’u - Wikipedia. link

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


Sunday, April 1, 2012

புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

1. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை கொண்டிருப்பதை நாம் அறிவோம். நுண்ணுயிரிகளின் இந்த எழுச்சியானது நவீன மருத்துவதுறை எதிர்க்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கின்றது. மருத்துவ படைப்பிரிவிலிருந்து நம்முடைய ஆயுதங்கலான ஆன்டிபயாடிக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த நுண்ணுயிரிகளிடம் தோல்வியடைந்து வருகின்றன.

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான நுண்ணுயிரிகளின் எழுச்சியை சமீபத்திய நிகழ்வாக நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம் (பரிணாம கோட்பாட்டின் தற்காலத்திய ஆதாரமாக சிலரால் இது காட்டப்படுவதாகவும் நியாபகம். இது பரிணாமத்தின் ஆதாரமா என்பது குறித்து இறைவன் நாடினால் எதிர்கால பதிவுகளில் காண்போம்). ஆனால் நம்முடைய இந்த புரிதலை பின்னுக்கு தள்ளி வியப்பை உண்டாக்குகின்றன சமீபத்திய ஆய்வுகள்.

சென்ற ஆண்டின் பிற்பகுதியில் Nature ஆய்விதழில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரை[1,2] என்ன சொல்கின்றது என்றால், சுமார் 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் மருந்துக்களை எதிர்க்கொள்ளக்கூடிய தன்மையை கொண்டிருந்தனவாம். பலரும் நினைப்பது போல, பாக்டீரியாக்களின் தடுப்பாற்றல் என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல என்று கூறினர் அந்த ஆய்வை நடத்தியவர்கள்.

ஆக, எதிர்ப்பு சக்தியானது, பாக்டீரியாக்களில் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாகவே இருந்துள்ளது. ஆனால் வியப்பு இத்தோடு நிற்கவில்லை.

Vancomycin - இந்த ஆன்டிபயாடிக்கானது, கடைசி முயற்சியாக கொடுக்கப்படும் ஒரு மருந்தாகும். அதாவது, வேறெந்த மருந்தும் பயனளிக்காத நிலையில் கடைசி ஆயுதமாக பயன்படுத்தபடுவது இந்த மருந்தாகும். 1987-ஆம் ஆண்டு இந்த மருந்தை எதிர்க்கொள்ளக்கூடிய பாக்டீரியாக்கள் எழுந்த போது, அது மருத்துவதுறைக்கு ஒரு ஆச்சர்ய அடியாக விழுந்தது.

ஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.

ம்ம்ம்.. உயிரியல் உலகம் தொடர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றது.

2.  
"Nothing makes sense in biology except in the light of evolution"
"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது"

இப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது. அதற்கான காரணத்தை பின்னால் காணலாம்.

முதலில் இதனை பார்ப்போம்.

நாத்திகரும், பரிணாமவியலாளரும், உயிரியலாளரும், தத்துவஞானியும், மதிப்புமிக்க Theodozius Dobzhansky விருதை[3] பெற்றவருமான மசிமோ பிக்லீசி (Massimo Pigliucci) அவர்கள், சமீபத்தில் தன்னுடைய தளத்தில் (மேற்கூறிய வாசகம் குறித்து) கூறிய கருத்துக்கள்[4] கவனிக்க வைத்தன.

Perhaps the trouble started with Theodozius Dobzhansky, one of the fathers of modern evolutionary theory, who famously said that nothing makes sense in biology except in the light of evolution (the phrase is, in fact, approvingly quoted by Pross). Problem is, Dobzhansky was writing for an audience of science high school teachers, and his statement is patently wrong, as an even cursory examination of the history of biology makes clear. For instance, developmental biologists had done a lot of highly fruitful research throughout the 19th and 20th centuries even as they ignored Darwin. And molecular biologists made spectacular progress from the 1950’s though the onset of the 21st century, again pretty much completing ignoring evolution. This is not to say that evolutionary theory doesn’t help in understanding developmental and molecular systems, but it is a stretch of the record to make claims such as those of Dobzhansky - Massimo Pigliucci, Universal Darwinism and the alleged reduction of biology to chemistry, Rationally speaking. 22nd March 2012.   
நவீன பரிணாம கோட்பாட்டின் தந்தைகளில் ஒருவரான Theodozius Dobzhansky-யால் தான் இந்த குழப்பம் ஆரம்பமானது. "பரிணாம ஒளியில் அல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது" என்ற பிரபல கருத்தை அவர் தான் கூறினார். பிரச்சனை என்னவென்றால், அவர் உயர்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தார், அவருடைய கருத்து வெளிப்படையாக தவறானது. உயிரியலின் வரலாற்றை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கூட இது நமக்கு தெளிவாகும்.
19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டு முழுக்க, டார்வினை புறக்கணித்துவிட்டும் கூட, அதிக பலன் தந்த நிறைய ஆய்வுகளை உயிரியலாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். 1950-க்களில் இருந்து 21-நூற்றாண்டின் ஆரம்பம் வரை, மூலக்கூறு உயிரியலாளர்கள், பரிணாமத்தை புறக்கணித்து விட்டே நேர்த்தியான முன்னேற்றத்தை கண்டனர்.
இதன் மூலமாக, உயிரியலில் பரிணாம கோட்பாடு உதவாது என்று சொல்ல வரவில்லை. அதே நேரம், Dobzhansky சொன்னது போன்ற கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தான் சொல்லுகின்றேன் - (extract from the original quote of) Massimo Pigliucci, Universal Darwinism and the alleged reduction of biology to chemistry, Rationally speaking. 22nd March 2012.  

பரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூரமே.

முதலில் பரிணாமம் என்றால் என்ன? ஒரு உயிரினம் (காலப்போக்கில்) இன்னொரு உயிரினமாக மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. ஆனால், ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறியதாக நமக்கு வரலாற்றிலும் ஆதாரமில்லை, தற்காலத்திலும் ஆதாரமில்லை.

பரிணாமம் உண்மையென்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், பரிணாமம் எப்படி நடந்திருக்கும் (இயக்கமுறை/Mechanism) என்பது குறித்து பரிணாமவியலாளர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் உயிரியலாளரான மறைந்த லின் மர்குலிஸ் (Lynn Margulis) அவர்களை எடுத்துக்கொள்வோம். இயற்கை தேர்வு மற்றும் மரபணு மாற்றங்கள் புதிய உயிரினங்களை உருவாக்கும் என்ற கருத்தை நிராகரித்தார் மர்குலிஸ்[6]. டார்வினிஸ்ட்களை விமர்சிக்கவும் செய்தார்.

ஆக, பரிணாமம் உண்மையாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதனுள்ளே கடுமையான பிரச்சனைகள் உண்டு. தான் சொல்ல வந்த அடிப்படை விஷயத்திலேயே பிரச்சனைகளை கொண்ட ஒரு கோட்பாடு, எப்படி உயிரியலின் மூலாதாரமாக இருக்க முடியும்?

ஒரு வேலை, பரிணாம கோட்பாடு என்ற ஒன்றே உலகில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். உயிரியலில் நாம் இன்று பார்க்கக்கூடிய முன்னேற்றங்களே ஏற்பட்டிருக்காதா?

உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.

உயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இம்மாதிரியான நிலையில் மேலே சொன்னது போன்ற வாசகங்களை அல்லது அதற்கு நிகரான ஒன்றை கூறிக்கொண்டு உயிரியலை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Bacteria: resisting antibiotics since at least 30,000 BC - Discover Magazine blog. 31st August 2011. link
2. Resistance to Antibiotics Is Ancient - Science Daily.  31st August 2011. link
3. The Society for the study of Evolution - The Theodosius Dobzhansky Prize. link
4. Universal Darwinism and the alleged reduction of biology to chemistry - Massimo Pigliucci, Rationally Speaking. link
5. Antibiotic resistance is ancient - Nature 477, 457–461 (22 September 2011) doi:10.1038/nature10388. link
6. Lynn Margulis, Q+A - Discover, April 2011. P.No.68-69. link
7. Lynn Margulis - Wikipedia. link
8. Vancomycin - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ