Showing posts with label கருத்து கணிப்பு. Show all posts
Showing posts with label கருத்து கணிப்பு. Show all posts

Monday, November 1, 2010

50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது: 

இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதற்கு, நான் அறிந்த வரையில் மூன்று கோட்பாடுகள் உள்ளன.

Evolution Theory: தற்செயலாக வந்திருக்க வேண்டும் (Natural Selection + Random Mutations).
Creation Theory: கடவுள் படைத்தார்.
Intelligent Design Theory: பதிவில் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------


நீங்கள் மேலே காணும் இந்த பதிவின் தலைப்பு என்னுடையதல்ல. பிரிட்டனின் பிரபல தினசரியான "The Guardian" தன்னுடைய கட்டுரை ஒன்றுக்கு வைத்த தலைப்பு தான் அது (Half of Britons do not believe in evolution, survey finds).   

சென்ற ஆண்டு, சார்லஸ் டார்வினின் "Origin of species" புத்தகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும், டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் பிரதிபலிப்பு தான் "தி கார்டியன்" பத்திரிகையின் இந்த தலைப்பு.

பிரிட்டனின் மதிப்புமிக்க நிறுவனமான காம்ரஸ் (ComRes), "Rescuing Darwin" என்ற தலைப்பில் நடத்திய இந்த ஆய்வு பல ஆச்சர்யமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. பரிணாமவியலாளர்களுக்கோ இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

பரிணாமம் தொடர்பாக ஆய்வில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் அதற்குண்டான பதில்களையும் இந்த பதிவில் பார்ப்போம். ஆய்வு முடிவுகளை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


1) பரிணாமத்தை இரண்டாக பிரித்து கொண்டார்கள், ஆத்திக பரிணாமம் மற்றும் நாத்திக  பரிணாமம் (Theistic Evolution and Atheistic Evolution).  

a) மக்கள் முன் வைக்கப்பட்ட முதல் கருத்து,  

பரிணாமம் என்ற யுக்தியை பயன்படுத்தி இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார். (Theistic Evolution)

மேலே பார்த்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு மக்கள் சொன்ன பதில்கள், 

நிச்சயமாக உண்மை (Definitely True) - 12%
ஏறக்குறைய உண்மை (Probably True) - 32% 
ஏறக்குறைய உண்மையில்லை (Probably Untrue) - 20%
நிச்சயமாக உண்மையில்லை (Definitely Untrue) - 26%         
தெரியாது (Don't Know) - 10%

ஆக, சுமார் 44% மக்கள், "பரிணாமம் உண்மைதான்...ஆனால் அதற்கு பின்னால் இறைவன் இருக்கின்றான்/இருக்கலாம்" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர்.


b) அடுத்ததாக மக்கள் முன் வைக்கப்பட்ட கருத்து,

இறைநம்பிக்கை என்பது அவசியமில்லாதது மற்றும் அசட்டுத்தனமானது என்ற கருத்தை பரிணாமம் உருவாக்குகின்றது (Atheistic Evolution).          

இதற்கு மக்கள் சொன்ன பதில்கள்,

நிச்சயமாக உண்மை - 13%
ஏறக்குறைய உண்மை - 21% 
ஏறக்குறைய உண்மையில்லை - 27%
நிச்சயமாக உண்மையில்லை - 30%         
தெரியாது - 10%

ஆக, சுமார் 57% மக்கள், "பரிணாமம் இறைவனை பொய்பிக்காது, மறுக்காது" என்று நம்புகின்றனர்.

இதற்கு அடுத்து வந்த மக்கள் கருத்து தான் பரிணாமவியலாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.   

அப்படி என்ன கேள்வி, அதற்கு அப்படி என்ன பதில் என்று கேட்கின்றீர்களா?....தொடர்ந்து படியுங்கள்.


2) பரிணாமத்திற்கு (Evolution Theory) மாற்றாக கருதப்படும் ஒரு கோட்பாடென்றால் அது "Intelligent Design" கோட்பாடு.

இந்த உலகில் உயிரினங்கள் தற்செயலாக (Natural Selection + Random Mutation) வர வாய்ப்பில்லை, இவ்வளவு சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் இருக்கிறதென்றால், அதற்கு ஒரு அறிவார்ந்த சக்தி (Intelligent Designer) தான் காரணமாய் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றது இந்த கோட்பாடு.

டெக்னிகலாக சொல்லுவதென்றால், இந்த பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் குறிப்பிடத்தக்க தன்மைகளை விளக்க இயற்கை தேர்வு (Natural Selection) ஒத்துவராது, ஒரு அறிவார்ந்த சக்தி பின்னணியில் இருக்கின்றது என்ற விளக்கமே சிறந்தது என்று கூறுகின்றது இந்த கோட்பாடு.

The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. --- Centre for Intelligent Design. 

இதனை படைப்பு கோட்பாட்டோடு (Creation Theory) குழப்பிக்கொள்ள கூடாது.

படைப்பு கோட்பாடென்பது, கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று கூறும் கோட்பாடு. Intelligent Design கோட்பாட்டை பொறுத்தவரை, கடவுள் என்ற வார்த்தையை அது உபயோகிக்காது, புத்திசாலித்தனமான சக்தி என்றே குறிப்பிடும். அது போல குரான், பைபிள் போன்றவற்றை நிரூபிக்கவும் முயலாது.

இதனை பின்பற்றுபவர்களை பொறுத்தவரை, இந்த சிக்கலான உலகம், நிச்சயம் தற்செயலாக வர வாய்ப்பில்லை, இந்த சிக்கலான வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு "Intelligent Designer"  இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள். 

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு புத்திசாலித்தனமான சக்தி இருக்கிறதென்பதை தர்க்க ரீதியாக நிரூபிக்க முயல்பவர்கள் (Intelligent design logically implies a designer).
  
இந்த கோட்பாடை அறிவியலாக பரிணாமவியலாளர்கள் ஏற்பதில்லை.

படைப்பு கோட்பாடை அறிவியலாக ஏற்க முடியாததால் Intelligent Design என்ற கோட்பாட்டை கொண்டு வந்து அதற்கு அறிவியல் சாயம் பூசி கடவுள் என்ற conceptடை  நிரூபிக்க பார்க்கின்றார்கள் ஆத்திகர்கள் என்பது பரிணாமவியலாளர்களின் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரிக்கின்றார்கள் Intelligent Design கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்கள். இந்த கோட்பாட்டை படைப்பு கோட்பாட்டோடு சேர்த்து விட்டால் இதனை எளிதாக முறியடித்து விடலாம் என்று கருதுவதால் தான் பரிணாமவியலாளர்கள் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்று விளக்கம் சொல்கின்றனர் இவர்கள்.     

பரிணாமவியலாளர்களுக்கும், Intelligent Design கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் கருத்து யுத்தம் அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்று. 

சரி, விசயத்திற்கு வருவோம்.

பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அந்த விஷயம் என்னவென்றால், சுமார் 51% பிரிட்டன் மக்கள், "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை/ஏறக்குறைய உண்மை என்று சொன்னதுதான்.

"Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை என்று 14% மக்களும், ஏறக்குறைய உண்மையென்று 37% மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றார்கள். "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மையில்லை என்று 19% மக்களும், ஏறக்குறைய உண்மையில்லை என்று 21% மக்களும் கருத்து தெரித்திருக்கின்றார்கள்.

ஆக, பெரும்பாலான மக்கள் Evolution Theoryயை நம்புவதை விட அதற்கு சவாலாக இருக்கக்கூடிய Intelligent Design Theoryயை நம்புகின்றார்கள். இது பரிணாமவியலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

இதுதான் பரிணாமவியலாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டார்வின் பிறந்த நாட்டில், அவர் மூலமாக பிரபலமான கோட்பாட்டை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை.

ஏற்கனவே "Intelligent Design" கோட்பாடை பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்து வந்து, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் டென்ஷன் அடையாமல் வேறு என்ன செய்வர்!!!!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் டாகின்ஸ், பிரிட்டன் மக்களின் அறிவியல் அறியாமை வருத்தப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றால் அமெரிக்க ஆய்வு முடிவுகளோ பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன.

ஆம், அமெரிக்க மக்களிடம் கடந்த இருபது வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளது.

கடந்த ஆண்டு, தனது பரிணாமம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரபல "Gallup" நிறுவனம், அதற்கு என்ன தெரியுமா தலைப்பு வைத்தது..."டார்வினின் பிறந்த நாளன்று, பத்தில் நான்கு பேரே பரிணாமத்தை நம்புகின்றார்கள்"....எப்படி இருக்கின்றது தலைப்பு?

மொத்தத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் பரிணாமத்திற்கு எதிரான இந்த நிலைப்பாடு பரிணாமவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில், படைப்பு கோட்பாடையும் (Creation Theory), Intelligent Design கோட்பாட்டையும் சேர்க்க வேண்டுமென்று அதிகரித்து வரும் குரல்களால் பரிணாம உலகம் திக்குமுக்காடுகின்றது.

உதாரணத்திற்கு, பிரிட்டனில், அறிவியல் ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒருவர் படைப்பு கோட்பாட்டை அறிவியல் வகுப்புகளில் பரிணாமத்துடன் சேர்ந்து நடத்த வேண்டுமென்று கூறியிருக்கின்றார்களாம்.

இங்கு நாம் பார்த்த செய்திகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யத்தை தரலாம்.

உலகில், படித்த மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 28% மக்கள் மட்டுமே பரிணாமத்தை நம்புவதாக தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, இந்த ஆண்டின் துவக்கத்தில், இஸ்ரேல் கல்வித்துறையின் தலைமை விஞ்ஞானியான கவ்ரியல் அவிடல் (Gavriel Avital) பரிணாமத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி மிகுந்த பரபரப்பை உண்டாக்கினார்.

ஆக, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் பெரும்பாலான மக்கள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளனர். முஸ்லிம் நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட கோட்பாடாகவே அது கருதப்படுகின்றது.

இவ்வளவுக்கும் என்ன காரணம் என்று பரிணாமவியலாளர்கள் கருதுகின்றார்கள்?....

பதில் எளிதானது தான். பரிணாமம், பள்ளிகளில் சரியான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது முக்கிய காரணங்களில் ஒன்று.

எது எப்படியோ, பரிணாமவியலாளர்கள் முன் மிகப்பெரிய சவால் இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
Intelligent Design கோட்பாடு குறித்த தகவல்களை தமிழ் படுத்தியதில் சிரமங்கள் இருந்தன. சரியாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்றே எண்ணுகின்றேன். என்னுடைய மொழிப்பெயர்ப்பில் தவறு இருப்பதாக கருதும் சகோதரர்கள் சரியான மொழிப்பெயர்ப்பை மறுமொழி வாயிலாக தெரியப்படுத்தவும்.

My sincere thanks to:
1. The Guardian.
2. The Daily Telegraph.

One can download the Rescue Darwin report from:
1. http://www.comres.co.uk/page1657513.aspx

References:
1. Rescuing Darwin survey - comres.co.uk
2. Science and Technology in the Israeli Consciousness - Samuel Neaman Institute survey.
3. Controversy over evolution in Israel - National center for science education, http://ncse.com, dated 21st February, 2010.
4. Poll reveals public doubts over Charles Darwin's theory of evolution - The Daily telegraph, dated 31st January, 2009.
5. Half of Britons do not believe in evolution, survey finds - The Guardian, 1st february 2009.
6. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll Daily tracking, surveyed on Feb 6-7,2009.
7. What is the theory of Intelligent Design - FAQ section, Centre for Intelligent Design.
8. Intelligent Design - Wikipedia.
9. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily tracking, surveyed on May 8-11, 2008. gallup.com

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.                






Monday, August 2, 2010

முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 

இதற்கான பதில் - 
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   

காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....


1. இனப் பின்னணி: 

முஸ்லிம் அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..


2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், முஸ்லிம் அமெரிக்கர்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம் அமெரிக்கரில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்க இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.

80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக  கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.


3. பெண்கள் 

யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.

அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.


முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.


4. மற்றவைகள்: 

  • 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
  • அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.  
  • மது அருந்துவோரின் சதவிதம் மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.     
  • முஸ்லிம் அமெரிக்க பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
  • கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%)வெள்ளையர்களும் (72%) வருகின்றனர். 

காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB). 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


My Sincere Thanks to: 
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.

Reference: 
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.  

One can download the complete document from: 
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.







Friday, April 23, 2010

Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அது பல கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. அது உண்மையா, பொய்யா என்கின்ற விவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன. 

அதெல்லாம் சரி, மக்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? எத்தனை பேர் இந்த கோட்பாட்டை ஏற்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்?. 

இது சார்பாக மக்களிடம் நடத்தப்பட்ட சில ஆய்வு (Survey) முடிவுளைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இன்ஷா அல்லாஹ்...


ஆய்வு 1:

சென்ற ஆண்டு, பத்து நாடுகளில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு குறித்து மக்களின் எண்ணங்களை திரட்டியது பிரிட்டிஷ் கவுன்சில் (British Council). அந்த நாடுகள் Argentina, China, Egypt, India, Mexico, Russia, South Africa, Spain, Great Britain and USA. 

பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில், சுமார் 54% மக்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடுக்கு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

அதிலும், இந்த பத்து நாடுகளில் நான்கில் (USA, South Africa, Russia and Egypt) இந்த கோட்பாட்டை பற்றி சந்தேகத்தில் இருப்பவர்களே மெஜாரிட்டி. உதாரணத்துக்கு சொல்லப்போனால், ரஷ்யாவில் மட்டும் சுமார் 48% பேர் இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ள தகுந்த ஒன்று இல்லை, ஆதாரங்களை பற்றிய சந்தேகம் (Skeptical) இருக்கிறது  என்று தெரிவித்துள்ளனர். 

ஆய்வு 2:

2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 34 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

Iceland, France, Denmark மற்றும் swedan நாடுகளைச் சேர்ந்த சுமார் 80% மக்கள், பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை ன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அதே சமயம், Poland, Croatia, Austria, Romania, Greece, Bulgaria, Lithuania மற்றும் Latvia நாடுகளைச் சேர்ந்த 45-55% மக்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

மிக ஆச்சர்யமாக, அமெரிக்காவில் 40% மக்கள் மட்டுமேந்த கோட்பாட்டை உண்மை என்று நம்புகின்றனர். 

ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளிலேயே மிக அதிக மக்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்கவில்லை என்றால் அது துருக்கி மக்கள்தான். சுமார் 75% பேர் இந்த கோட்பாடு உண்மையல்ல என்று நிராகரித்துள்ளனர். இது பரிணாம வளர்ச்சி கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. காரணம், மெத்த படித்த மக்கள் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளில் துருக்கியும் ஒன்று  என்பதுதான்.        


ஆய்வு 3: 

அமெரிக்கர்களிடம், 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 
  • சுமார் 44% மக்கள், கடவுள் மனிதனை இப்போதுள்ள நிலையிலேயே படைத்தார் என்றும்; 
  • சுமார் 36% மக்கள், உயிரினங்கள் மாறி மாறி மனிதன் வந்திருக்கலாம், ஆனால் அதற்கு பின்னால் கடவுள் இருக்கிறார் என்றும்; 
  • சுமார் 14% மக்கள் மட்டுமே, மனிதன் கடவுள் துணையில்லாமல் பரிணாம வளர்ச்சி அடைந்தான் 
என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆச்சர்யமாக, கடந்த 25 ஆண்டுகளாக இதே போன்று தான் அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


ஆய்வு 4: 

ஆய்வாளர்களுக்கு, இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தான் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. 

2008 ஆம் ஆண்டு, Egypt, Pakistan, Malaysia, Indonesia, Turkey மற்றும் Kazakhstan நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8% எகிப்தியர்கள், 11% மலேசியர்கள், 14% பாகிஸ்தானியர்கள், 16% இந்தோனேசியர்கள் மற்றும் 22% துருக்கியர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையாக இருக்கலாம் அல்லது நிச்சயமாக உண்மை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 



கஜகஸ்தான் நாட்டில் சுமார் 28% மக்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையல்ல என்று கூறியிருக்கின்றனர். அதேசமயம் அந்த கோட்பாடு உண்மை என்றும் பெரும்பாலானோர் கூறவில்லை. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை அல்லது தெரியாது என்ற பதிலே பெரும்பான்மை. 

ஆக, பரிணாம வளர்ச்சி கோட்பாடு மிகப்பெரிய அளவில் முஸ்லிம் நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 


மொத்தத்தில், மக்களிடையே உள்ள இந்த கருத்து வேற்றுமை, பரிணாமவியல் அறிவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சவுதி அரேபியா மற்றும் சூடான் நாடுகளின் பள்ளிக்கூடங்களில் பரிணாமவியல் பாடங்கள் கற்பிக்க மறுக்கப்படுவதும், மேலும் பல நாடுகளில் அதிகரித்து வரும் பரிணாமவியலுக்கு எதிரான கோஷங்களும் அவர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.             

இந்த மாற்றங்களுக்கு அவர்கள் கூறும் காரணம்,
  • பரிணாமவியல், பள்ளிகளில் சரியாக கற்பிக்கப்படுவதில்லை. 
  • அறிவியலை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதில்லை. 
  • அடிப்படைவாத மத நம்பிக்கைகள்.
  • மதம் சார்ந்த அரசியல்.


இதற்கு பரிணாமவியலை மறுப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்? 
  • பரிணாமவியல், Scientific Method டை பின்பற்றவில்லை. 
  • அதனை ஆதரிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. 
  • நிரூபிக்கப்படாத கோட்பாடு பள்ளிகளில் கற்பிக்கப்பட கூடாது. 
  • அப்படியே அது கற்பிக்கப்பட்டாலும், அதனுடன் கடவுள் உருவாக்கினார் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இரண்டையும் படித்து எது உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


எது எப்படியோ, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்களுக்கு, அவர்கள் முன்னே மாபெரும் சவால் இருக்கிறதென்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
These Results Should be troubling for Science Educators at all levels --- Miller Et Al, Public Acceptance of Evolution, 2006. p.766 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...       


My Sincere Thanks To:
1. Austrian Academy of Sciences. 

References: 
1. Public Acceptance of Evolution - Austrian Academy of Sciences, wwwdotoeaw.ac.at.
2.The British Council Survey - Submitted on 30th June, 2009 at World Council of Science  Journalists. wwwdotbritishcouncil.org.  
3. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily tracking, surveyed on May 8-11, 2008. wwwdotgallup.com    
4. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll Daily tracking, surveyed on Feb 6-7,2009.
5. Creation-Evolution Controversy - Wikipedia. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ