Tuesday, March 20, 2012

ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வுநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

**********
பிரஞ்சு வார்த்தைகளின் உச்சரிப்புகள் கவனமுடன் கையாளப்பட்டுள்ளன. தவறிருந்தால் சுட்டி காட்டவும்.
**********

ல ரெயுனிஒன் (La Réunion) - இந்திய பெருங்கடலில், மடகாஸ்கருக்கும் மொரீஷியஸ்சுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். சுமார் எட்டு லட்சம் மக்கள் வாழும் இந்த தீவு அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும். 

நிச்சயம், இது எண்ணிப்பார்க்கவே கொடுமையான ஒரு நோயே. ரெயுனிஒன் தீவின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்நோய்க்கு பறிகொடுத்துவிட்டனர். 

இந்த நோயை Ravine encephalopathy என்றழைகின்றனர். இந்த நோய் மிக அரிதானது. 10000-15000 பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அதே நேரம், ஒருமுறை வந்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு கடந்துக்செல்லக்கூடியது. ஆக, இது ஒரு பரம்பரை நோயே. இந்த தீவு மக்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட காரணமிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், காலங்காலமாக சொந்தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்து வந்தனர் இத்தீவின் மக்கள். ஆகையால், இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறையினரையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. 

சரி, இந்த நோய்க்கான காரணங்கள் என்ன? எப்படி ஏற்படுகின்றது இந்த நோய்?

இதற்கு விடைக்காண ஆரம்பித்து தான் அதிசயத்து போய் நின்றது கர்தோ (Cartault) என்ற ஆய்வாளரின் குழு. இந்த நோய் ஏற்பட எந்த மரபணுக்கள் காரணம் என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள் இந்த குழுவினர். சுமார் ஒன்பது குடும்பங்களை ஆய்வுக்குட்படுத்தினர். நோயால் பாதிக்கப்பட்ட பதினைந்து குழந்தைகளும், பாதிக்கப்படாத பதினேழு குழந்தைகளும் இதில் அடங்குவர்.   

மரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது. 

ஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது. 

இயல்பான நிலைக்கு மாறாக சில மரபணுக்கள் இருப்பதால் நோய் ஏற்பட்டிருக்கின்றது, இதில் என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது. 

குப்பை மரபணுக்கள் (Junk DNA):

அது 1940-களில் ஒரு கட்டம். 

மரபியல் வல்லுனரும், பின்னாளில் நோபல் பரிசு பெற்றவருமான பார்பரா ஒரு வியப்பூட்டும் ஆய்வை நிகழ்த்தினார். உயிரினங்களின் மரபணுக்களில் 'transposons' எனப்படும் மரபணுக்களை கண்டுபிடித்தார் அவர். இந்த மரபணுக்களின் பயன்பாடு தெரியாவிடினும், இவை மற்ற மரபணுக்களை ஒழுங்குப்படுத்தும் செயலை செய்யலாம் என்று எண்ணினார் பார்பரா. 

அதே நேரம், இந்த மரபணுக்களை "குப்பை மரபணுக்கள் (Junk DNA)" என்று அழைக்க ஆரம்பித்தனர் ஆய்வாளர்கள். இவை உபயோகமில்லாதவை என்று அவர்கள் கருதியதாலேயே அப்படி அழைக்கலாயினர். 

அது என்ன உபயோகப்படும் மரபணுக்கள், உபயோகமில்லா மரபணுக்கள்?

ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் சில அதிகாரங்கள் (chapter) பயனுள்ளவை என்றும், மற்ற அதிகாரங்கள் பயனற்றவை என்றும் கூறினால் எப்படி இருக்குமோ அப்படியான நிலை தான் இதுவும். உயிரினங்களின் DNA-க்களில் சில பகுதிகள் பயனுள்ள மரபணுக்கள் (coding DNA) என்றும், மிஞ்சியவை பயனில்லாதவை (Non-coding DNA or 'Junk' DNA) என்றும் எண்ணினர் ஆய்வாளர்கள்.  
பயனுள்ள மரபணுக்கள் என்பவை, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை (Instructions) தன்னகத்தே கொண்டவை. ஆயிரக்கணக்கான புரதங்கள் ஒருங்கிணைந்து நம் உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன. 

பயனற்ற மரபணுக்கள் என்பவை, இத்தகைய செயற்பாடுகளை செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல், இவை எதற்காக இருக்கின்றன என்பதே நீண்ட காலத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது/இருந்துக்கொண்டிருக்கின்றது. 

பார்பரா முதற்கொண்டு சில ஆய்வாளர்கள், இவை பயனுள்ள மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் செயலை செய்யலாம் என்பதாக கூறினாலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகையால் குப்பை மரபணுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. 

இயல்பாகவே இந்த குப்பை மரபணுக்கள்(?) இறைமறுப்பாளர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்துவிட்டன. 'இறைவன் உயிரினங்களை படைத்தார் என்றால் ஏன் உபயோகமற்ற மரபணுக்கள் இருக்க வேண்டும்?' - இத்தகைய கேள்விகள் எளிதாக எழ ஆரம்பித்தன.

நாத்திகர்களின் அறிவியல் சார்ந்த இறைமறுப்பு புரிதல்கள் நீடித்ததில்லை என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. குப்பை மரபணுக்கள் விசயத்திலும் அது தான் நடக்க ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களாக, இவற்றில் நடக்கும் ஆய்வுகள் இந்த மரபணுக்கள் குறித்த மிக வியப்பான செய்திகளை தந்துக்கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குப்பை மரபணுக்கள் என்பவை சுமார் 540 மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களில் மாற்றமடையாமல் காணப்படுகின்றன என்ற தகவல் வெளிவந்தது.

என்ன? 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளில் குப்பை மரபணுக்கள் இருந்திருக்கின்றனவா? இவை பயனற்றவை, குப்பை என்பதாக இருந்திருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகள் மாற்றமடையாமல் வந்திருக்க வேண்டிய அவசியம் என்ன? - இம்மாதிரியான கேள்விகள் ஆய்வாளர்களை அசரடிக்க, நாம் அறியாத ஏதோ ஒரு முக்கிய பணியை இந்த மரபணுக்கள் நம் செல்களில் செய்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.

ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வை போலவே வேறு பல ஆய்வுகளும் மேற்கண்ட முடிவுக்கே வந்தன. முக்கிய பணியை செய்கின்றன என்று பலரும் ஒப்புக்கொண்டாலும், அது எந்தமாதிரியான பணி என்பதை தங்கள் ஆய்வுகளுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துக்களை கூறினர்.

மொத்தத்தில், குப்பை மரபணுக்கள் குறித்த தவறான புரிதல்கள் விலக ஆரம்பித்தன.

பைனல் பஞ்ச்:

ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2 (Intron), LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா?

இவை என்ன தெரியுமா? இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Ooppss.....

இது அறிவியல் உலகை பிரம்மிக்க வைக்கும் ஒரு செய்தியே. காரணம், இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் உயிர்க்கொல்லி நோய்க்கு வழிவகுக்கின்றது என்றால் இவற்றை எப்படி குப்பையாக கருத முடியும்?

ஆக, குப்பை மரபணுக்கள் குறித்த ஆய்வாளர்களின் முந்தைய புரிதல்கள் தவறு என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

'ஓகே. குப்பை மரபணுக்களில் சில பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் இன்னும் பல மரபணுக்கள் பயனற்றவையாக இருக்கின்றவே' என்று சிலர் கூறலாம். நேற்றுவரை இவை ஒன்றுக்கும் உபயோகமில்லாத மரபணு தொகுப்பு, இன்றோ இவற்றில் சில மிகவும் பயனுள்ளவை, அப்போ நாளை?

எப்போது குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவைகளில் சில, மிகவும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டு விட்டதோ, அப்போதே மற்ற (குப்பை) மரபணுக்கள் குறித்த எண்ணங்களையும் மறுபரிசீலனை செய்யும் வழிமுறைகளை அவை திறந்து விட்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை நோக்கி அறிவியல் பயணிக்காது. அப்படி பயணித்தால் அது அறிவியலாக இருக்கவும் முடியாது.

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

My Sincere thanks to:
1. Sister Shameena (for helping out with French pronunciations)
2. Brother Mohamed Ashik and Sister Amina Mohammed (for content checking)

References:
1. Research team finds key to childhood brain disease lies in genetic junk - Medical Xpress. March 13, 2012. link
2. Under three layers of junk, the secret to a fatal brain disease - Discover magazine blog. March 12th, 2012. link
3. Transposons, or Jumping Genes: Not Junk DNA? - Nature Education. link
4. Barbara McClintock and the Discovery of Jumping Genes (Transposons) - Nature Education. link
5. 'Junk' DNA gets credit for making us who we are - New Scientist. 19 March 2010. link
6. 'Junk' throws up precious secret - BBC. 12 May 2004. link
7. "Junk DNA" - PSRAST.org. link
8. Difference Between DNA and Genes - Differencebetween.net. link
9. Noncoding DNA - Wikipedia. link
10. Genetics 101 Part 1: What are genes? - youtube. link
11. Genes & Chromosomes Part 1 - youtube. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


Sunday, March 4, 2012

1964...நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

1964-ஆம் வருடம்..... 

ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்து இறங்கினார் இந்த அற்புத தலைவர். குறைந்த காலமே வாழ்ந்திருந்தாலும் (39) இவருக்கு வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு. சென்ற நூற்றாண்டில், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய மிகச் சிறந்த மனிதர்களை நீங்கள் கணக்கிட்டீர்கள் என்றால் அதில் இவர் பெயர் தவிர்க்க முடியாதது. 

தன்னை முஸ்லிம் என்றே ஹஜ் செய்யும் அந்த நேரம் வரை நினைத்திருந்தார். ஆனால் இவர் இந்நாள் வரை பின்பற்றியது இஸ்லாமா?

ஏன் இப்படியான கேள்வி?

இஸ்லாம் என்பது கருப்பினத்தவருக்கான மார்க்கம் என்றே எண்ணினார். கருப்பினத்தவரே சிறந்தவர்கள், வெள்ளையர்களோ பேய்கள் என்றார். கருப்பினத்தவரும், வெள்ளையர்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழவே முடியாது என்று கூறினார். இது போன்ற எண்ணங்கள் இஸ்லாமிற்கு நேரடியாக பங்கம் விளைவிக்க கூடியவை. ஆனால் இவருக்கு இஸ்லாத்தின் பெயரால் அளிக்கப்பட்ட போதனைகள் இப்படியாகத்தான் இருந்தன.

ஆக, இயல்பாகவே, ஹஜ் யாத்திரை இவருக்குள் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. அங்கே இஸ்லாத்தின் சமத்துவத்தை கண்ட இவர் திக்கி திணறி போனார். இத்தனை நாட்களாக எந்த கொள்கைகளை வைத்து வாழ்ந்துக்கொண்டிருந்தாரோ, அந்த கொள்கைகள் நேரடியாக அசைத்து பார்க்கப்பட்டன. 

ஆனால், உண்மையை ஏற்றுக்கொள்ள அவர் தயங்கவில்லை. காலம் தாழ்த்தவில்லை. இது தான் இஸ்லாம், நான் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கின்றேன் என்றார். நிச்சயம் இவருடைய இந்த மனமாற்றம் அங்கே அமெரிக்காவில் இவருக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றமடைய செய்யப்போகின்றது. ஆனால் அவர்களுக்காக உண்மை நிலையை சமரசம் செய்துக்கொள்ள விரும்பவில்லை. தன் முடிவில் உறுதியாக நின்றார். 

அந்த உறுதிக்கு இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்தான். ஹஜ் செய்த பிறகு சுமார் ஒரு வருடமே உயிரோடு இருந்தார். தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு (இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையில்) பனிரெண்டு வருடங்கள் கழித்ததை காட்டிலும், அந்த கடைசி ஒரு வருடத்தில் மாபெரும் புரட்சியை உண்டாக்கினார். 

யார் இவர்?

இந்நேரம் உங்களில் பலர் இவரை அடையாளம் கண்டு கொண்டிருந்திருப்பீர்கள்..........மால்கம் எக்ஸ்................


இந்த மனிதர் தன்னை படிப்பவர்களை ஆச்சர்யப்படுத்த என்றுமே தவறியதில்லை. எத்தனை எத்தனை சோதனைகள், திருப்பங்கள் இவர் வாழ்வில். 

சிறு வயதிலிருந்தே வெள்ளையின மக்களின் கடுமையான கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தார் மால்கம் எக்ஸ். இவருடைய பெற்றோர்கள் இருவருமே சமூக சேவகர்கள். பள்ளி பருவத்தில் மிகச் சிறந்த மாணவனாக திகழ்ந்தார் எக்ஸ். வழக்கறிஞராக ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒரு கருப்பினத்தவனுக்கு இத்தகைய ஆசைகள் இருக்க கூடாது என்று ஒரு வெள்ளையின ஆசிரியர் சொல்ல, பள்ளியிலிருந்து வெளியேறினார் எக்ஸ்.

சிறுவனாக இருந்த போதே, இவருடைய தந்தை ஒரு விபத்தில் இறக்க, தாயோ மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்சின் வாழ்க்கை திசை மாற ஆரம்பித்தது. 

வெள்ளையர்கள் மீது இவர் கொண்டிருந்த கோபம் அவர்களின் வீடுகளை கொள்ளையடிக்க தூண்டியது. சிலருடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார். ஒருமுறை கையும் களவுமாக அகப்பட்டு எட்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். 

சிறையில் இருந்த போது தான் இஸ்லாமிய தேசிய அமைப்பு (மூலமாக இஸ்லாம்(?)) இவருக்கு அறிமுகமானது (இந்த அமைப்பு குறித்த இத்தளத்தின் பதிவை படிக்க <<இங்கே>> சுட்டவும்). 1930-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தையை பார்த்தவுடன், இது ஒரு இஸ்லாமிய அமைப்போ என்று எண்ணிவிடாதீர்கள். இவர்களுடைய பல கொள்கைகள் இஸ்லாமுடன் முரண்பட்டன. ஆனால் தங்களை முஸ்லிம்கள் என்று தான் கூறிக்கொண்டனர். 

வெள்ளையின அடக்குமுறைகளில் இருந்து கறுப்பினத்தவரை காக்கும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் இது என்ற போதிலும், வெள்ளையர்களை பேய்கள், கருப்பினத்தவரே சிறந்தவர்கள் என்று கூறுவதெல்லாம் மிக மோசமான இனவெறிச் செயல். இஸ்லாம் கற்பிக்காததும் கூட.  ஆனால் இந்த போதனைகள் சிறையில் இருந்த எக்ஸ்சிற்கு போதிக்கப்பட்ட போது அவர் ஏற்றுக்கொண்டார். காரணம், இதுநாள் வரை அவர் பார்த்த வெள்ளையர்களின் நடவடிக்கைகள் அப்படியாகவே இருந்தன. 

அந்த இயக்கத்தின் தலைவரான எலிஜா முஹம்மதுவிற்கு சிறையில் இருந்தவாறு கடிதம் எழுதினார். பன்றி இறைச்சியையும், புகைப்பிடிப்பதையும் இயக்கம் தடை செய்திருந்ததால் அதனை விட்டொழித்தார். இனி தவறுகள் செய்யமாட்டேனென்று இறைவனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க சொன்னது அமைப்பு. செய்தார்.  

அமைப்பின் உதவியோடு 1952-ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் எக்ஸ். 1952-1964 இடையேயான காலக்கட்டத்தில் மிக வேகமான வளர்ச்சியை கண்டார். எலிஜா முஹம்மதுவிற்கு பிறகு சிறந்த தலைவர் இவர் தான் என்று சொல்லுமளவு அமைப்பில் உயர்ந்தார்.

கருப்பின மக்கள் அனுபவிக்கும் பாகுபாட்டை, அவர்களின் பிரச்சனைகளை மிக அழகாக தொகுத்து வெளியுலகிற்கு எடுத்துரைத்தார். அவர்களின் உள்ளக்குமுறல்களை ஆணித்தரமாக பிரதிபலித்தார். இதனால் கவரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் இஸ்லாமிய தேசிய அமைப்பில் இணைய ஆரம்பித்தனர். தங்களை முஸ்லிம்கள்(??) என்று அடையாளப்படுத்த ஆரம்பித்தனர்.  


தவறான கொள்கைகளை இஸ்லாத்தின் பெயரால் போதித்துக்கொண்டிருந்த இவர்களின் வளர்ச்சி முஸ்லிம்களை கலங்கடித்தது. தவறான விஷயங்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியுமா? இல்லை என்பதே வரலாறு நமக்கு சொல்லும் பாடம்.

மற்றுமொரு புரட்சிக்கான தருணம் அமைந்தது. 1964-ஆம் ஆண்டு, ஹஜ் செய்வதற்காக சவூதி வந்திறங்கினார் மால்கம் எக்ஸ். 

இஸ்லாம் என்பது கருப்பினத்தவருக்கான மார்க்கம் என்ற அவரது நிலைப்பாட்டில் முதல் அடி விழுந்தது. இஸ்லாமில் பல்வேறு இனங்களுக்கும் இடமுண்டு என்பதை புரிந்துக்கொண்டார். பல்வேறு இனத்தவரும் ஒரே மார்க்கத்தின் கீழ் அணிவகுத்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தார். வெள்ளை நிறத்தை தன் உடல் நிறமாக கொண்டவர்கள் தன்னை சமமாக நடத்தியதை கண்டு வியந்தார். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நடத்திய விதத்தில் இன பாகுபாடு இல்லாததை உணர்ச்சியுடன் எதிர்கொண்டார்.

இஸ்லாம் அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. தன் வாழ்வில், முதல் முறையாக, வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒன்றாக இணைத்து வாழ முடியும் என்ற முடிவிற்கு வந்தார். இத்தனை நாளாக அவர் கொண்டிருந்த கொள்கைகள் சுக்குநூறாக அந்த பயணத்தில் உடைத்தெரியப்பட்டன.


இனி தான் அவர் முன்னே மிகப்பெரிய பணி காத்திருந்தது. தவறான கொள்கைக்கு லட்சக்கணக்கான மக்களை அழைத்து வந்தவர் எக்ஸ். இப்போது அவர்கள் முன்னே சென்று உண்மையான இஸ்லாத்தை போதிக்க வேண்டும். நாம் இதுநாள் வரை பின்பற்றியது இஸ்லாம் இல்லை என்று புரியவைக்கவேண்டும். நம் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம், அதேநேரம் மற்ற இனத்தவரை தாழ்வாக கருதவேண்டாம் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.  

மால்கம் எக்ஸ் இங்கு தான் நமக்கெல்லாம் ஒரு மாபெரும் உதாரணமாக உயர்ந்து நின்றார். தவறான கொள்கைகளை பின்பற்ற தயங்காமல் அழைத்தோம், இப்போது நேரான வழியை பின்பற்ற அழைப்பதில் என்ன தயக்கம்?

அமெரிக்கா திரும்பும் வரை கூட தாமதிக்கவில்லை எக்ஸ். உண்மையை உணர்ந்துக்கொண்டவுடன், மக்காவிலிருந்தே அதிரடியான கடிதம் ஒன்றை மக்களுக்கு எழுதினார்.

அந்த கடிதம் இன்று வரை பலருடைய உள்ளங்களை சிதறடித்து கொண்டிருக்கின்றது. குறைவான வருடங்களே எக்ஸ் வாழ்ந்திருக்கலாம், ஆனால் இந்த கடிதம் இருக்கும்வரை பலரையும் அது இஸ்லாமின்பால் அழைத்துக்கொண்டிருக்கும். அந்த கடிதத்திலிருந்து சில வரிகள்.

"இதுநாள் வரை, இப்படியான உண்மையான விருந்தோம்பளையும், ஆழமான சகோதரத்துவத்தையும் நான் அனுபவித்ததில்லை. இங்கு பல்வேறு நிறத்தவரும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பை கண்டு நான் வாயடைத்து போயுள்ளேன்.

அமெரிக்காவில் என்னுடைய அனுபவங்களை கொண்டு, வெள்ளையினத்தவரும் அது அல்லாதவர்களும் ஒன்றாக வாழவே முடியாது என்று நினைத்திருந்தேன். நீல நிற கண்களை கொண்டவரிலிருந்து கருப்பு நிற ஆப்பிரிக்கர் வரை, இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் ஒன்றிணைந்திருக்கின்றனர். ஆனால் நாங்கள் ஒரே மாதிரியான சடங்குகளை செய்கின்றோம், சகோதரத்துவத்தை பிரதிபலிக்கின்றோம்.

அமெரிக்கா இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இனவெறி பிரச்சனைகளை ஒழிக்கக்கூடிய ஒரு மார்க்கம் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே.

அமெரிக்காவாக இருந்திருந்தால் இவர்களை வெள்ளையர்கள் என்று கூறியிருந்திருப்பார்கள். அப்படியான மனிதர்களை நான் இங்கே சந்திக்கின்றேன், அவர்களுடன் பேசுகின்றேன், ஒன்றாக உணவருந்துகின்றேன். தாங்கள் வெள்ளையர் என்ற எண்ணம் இஸ்லாம் என்னும் வழிமுறையால் இவர்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது.

என்னிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த யாத்திரையில், நான் பார்த்தவைகளும் அனுபவித்தவைகளும் என்னுடைய முந்தைய முடிவுகளை மாற்றிக்கொள்ள வைத்திருக்கின்றன.

இது நாள் வரை இப்படியாக நான் கவுரவிக்கப்பட்டதில்லை. இது நாள் வரை இப்படியான எளிமையை உணர்ந்ததில்லை. ஒரு அமெரிக்க நீக்ரோவின் மீது இப்படியான அன்பு பொழியப்படும் என்பதை யார் தான் நம்புவார்?

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

Sincerely,
El-Hajj Malik El-Shabazz
(Malcolm X)"

ஒருவேளை மால்கம் எக்ஸ் இஸ்லாமை சரியாக உணராமல் இருந்திருந்தால் அவரை இனவெறியர் என்றே வரலாறு பதிந்திருக்கும்.

அமெரிக்கா திரும்பினார்..


தொடர்ந்து கருப்பினத்தவருக்காக போராடினார். அதே நேரம், தங்களுக்காக வெள்ளையர்கள் குரல் கொடுத்தால் அவர்களையும் அரவணைத்து சென்றார்.

இது தான் உண்மையான இஸ்லாம் என்று எடுத்துரைத்து அமைதியான புரட்சியை மக்கள் மனதில் ஏற்படுத்தினார்.

எக்ஸ் இஸ்லாத்தின்பால் வந்த பிறகு கடுமையான சரிவை சந்தித்தது இஸ்லாமிய தேசிய அமைப்பு. ஒருவர் பின் ஒருவராக அந்த அமைப்பை விட்டு வெளியேறி இஸ்லாத்தின்பால் வந்தனர். 1975-ஆம் ஆண்டு அந்த அமைப்பு கலைக்கப்பட்டு, தூய இஸ்லாத்தின்பால் வந்தது. பிறகு மறுபடியும் அந்த அமைப்பு துவக்கப்பட்டாலும் இன்று வரை வீரியம் குறைந்த இயக்கமாகவே செயல்பட்டு வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் தலைவர்களும் இஸ்லாத்தின்பால் வந்துக்கொண்டிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

மால்கம் எக்ஸ்சின் வாழ்க்கையில் முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் ஆழமான படிப்பினைகள் உண்டு. 

தான் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கார்டன் பார்க்ஸ் என்பவருடன் மால்கம் எக்ஸ் நடத்திய உணர்வுப்பூர்வமான உரையாடலுடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.

"பிரதர் உங்களுக்கு நினைவிருக்கின்றதா?

அன்று, வெள்ளையின கல்லூரி பெண் ஒருத்தி உணவகத்திற்கு வந்தாள். கருப்பின முஸ்லிம்களுக்கு உதவ முயற்சித்தாள். ஒரு வெள்ளையின பெண் கருப்பினத்தவருக்கு உதவ முடியுமா? வாய்ப்பே இல்லை என்று அவளை தடுத்தேன். அவள் அழுதுக்கொண்டே உணவகத்தை விட்டு வெளியேறினாள்.

இன்று அதனை நினைத்து வருந்துகின்றேன். ஆப்பிரிக்க கண்டத்தின் பல இடங்களில் வெள்ளையின மக்கள் கருப்பினத்தவருக்கு உதவுகின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகள் பல தவறான எண்ணங்களை கொல்கின்றன.

ஒரு கருப்பின முஸ்லிமாக நான் பல தவறுகளை செய்திருக்கின்றேன். அதற்கெல்லாம் தற்போது வருந்துகின்றேன். அன்றிருந்த அனைத்து கருப்பின முஸ்லிம்களை போல, நானும் (வெள்ளையர்கள் விசயத்தில்) கொடூரமாக நடந்துக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட திசை காட்டப்பட்டு, அதனை நோக்கி பயணிக்குமாறு மயக்கப்பட்டேன்.

Well, ஒரு மனிதன் முட்டாளாக இருப்பானேயானால் அதற்குரிய பரிசை அவன் பெற்றே ஆக வேண்டும். இதனை உணர்ந்துக்கொள்ள எனக்கு பனிரெண்டு வருடங்கள் ஆனது.

அவை கெட்ட காட்சிகள் பிரதர். அந்நாட்களின் துயரங்களும் முட்டாள்தனங்களும் - இன்று அவற்றிலிருந்து விலகியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்"

இறைவா, இஸ்லாத்தின் பெயரால் யார் யாரெல்லாம் தவறான வழிகாட்டுதலில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

My sincere thanks to:
1. Malcolmx.com. link

Photos taken from:
2. Brothermalcolm.net. link

References:
1. Malcolm X: The Paragon of Self-Transformation - Islamicity. link
2. Malcolm X: The Pilgrimage to Makkah - Islamicity. link
3. BIOGRAPHY - Malcolmx.com. link
4. A Brief History on the Origin of the Nation of Islam in America - noi.org. link
5. Nation of Islam FAQs - beliefnet.com. link
6. Malcolm X - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ