Showing posts with label துனிசியா. Show all posts
Showing posts with label துனிசியா. Show all posts

Tuesday, February 28, 2012

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

மீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.  

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள். 

துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள். 

ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.  

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது. 


இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள். 


இந்த தகவல்களை கொண்டு எந்த முடிவிற்கும் வருவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது. 

அதுபோல, யாரை நோக்கி 'பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது. 

தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

My Sincere thanks to:
1. Brother Garibaldi of Loonwatch.

References:
1. Women in national parliaments - Inter-Parliamentary Union (situation as of Nov, 2011). link
2. Women in Parliament: Islamists in Tunisia Field More Women as Candidates than the Percentage of Women in the US Congress - Loonwatch. link
3. Inter-Parliamentary Union - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Monday, February 14, 2011

துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர் (இவரைப் பற்றிய கட்டுரையை படிக்க <<இங்கே>> சுட்டவும்). 

சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய "துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்(1)" என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.     

"மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று நடந்தது.

கண்களில் கண்ணீர் மல்க ஒரு பெண் எனக்கு பக்கத்தில் நின்றிருந்தார். தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் துனிசியா திரும்ப பாஸ்போர்ட் எடுக்க அன்று காலையிலிருந்து தூதரகத்தினுள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது முகம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தெரிந்தது, ஆனால் எங்கு பார்த்தேனென்று நினைவுக்கு வரவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரை இவரை உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் தூதரக அதிகாரிகள். ஆனால் இன்றோ, தொலைந்து போன மகளை கண்டது போல சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கின்றனர். ஒரு அதிகாரி "தூதரை சந்திக்க விருப்பமா?" என்று கூட கேட்டிருக்கின்றார். 

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க, இவரை நான் ஏற்கனவே சந்திருக்கின்றேன் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் எங்கே?

முன்னாள் துனிசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பென் அலி மற்றும் அவரது மனைவி லீலா குறித்து பேச்சு திரும்பியது. தன்னுடைய கணவருக்கு பிறகு அதிபர் பதவியை அடைய லீலா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இவர்களது தற்போதைய இருப்பிடம், இரண்டு புனித பள்ளிவாசல்களின் இருப்பிடமான சவூதி அரேபியா. இதனை எண்ணி நாங்கள் இருவரும் சிரித்தோம். ஐந்து வேலையும் பாங்கு(2) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் நாட்டில், அதனை தாங்கி கொண்டு பென் அலியும் லீலாவும் எப்படி இருக்கப்போகின்றார்கள்?

இவர்கள் இருவரும் தேசிய தொலைக்காட்சியில் பாங்கு சொல்லப்படுவதை தடை செய்தவர்கள், ரமலான் நோன்பை புறக்கணித்தவர்கள், அந்நிய நாட்டு கலாச்சாரம் என்று ஹிஜாபை தடை செய்தவர்கள். சுருக்கமாக சொல்லுவதென்றால், தாங்கள் விரும்பியது போல நடந்து கொண்டவர்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்வா(3) கொடுக்க தங்களுக்கு அடிபணிந்த அறிஞர்களையும் வைத்து கொண்டவர்கள்.

நாகரிகமற்ற தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்தவர் பென் அலி. சித்திரவதை, விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளுவது, அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறை என இவை அனைத்தும் துனிசியாவில் சர்வ சாதாரணமாய் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்கள் கிழித்தெறியப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் பென் அலி. பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைகழகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தவர் அவர்.

சிறைகளில் குரான் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் தொழுதால் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

அவரையும், அவரது ஊழல் மிகுந்த அரசாங்கத்தையும் புகழ்த்து பேசும் இமாம்களை அவரது ஆட்சிமுறை கொண்டு வந்தது. இதன் மூலமாக அவர்கள் என்ன எதிர்ப்பார்த்தார்களோ அது நடந்தது. இறையச்சம் கொண்டோரை பள்ளிவாசல்களில் இருந்து அது தள்ளியிருக்கச் செய்தது.

வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம் இளைஞர்கள் விரைவாக பள்ளிவாசலுக்கு செல்லாததில் ஆச்சர்யமொன்றுமில்லை. (ஏனென்றால்) குத்பாவின்(4) பாதி நேரத்தை, பென் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகழ் பாடி செலவழித்து கொண்டிருந்தவர்கள் அந்த இமாம்கள்.

முன்னாள் சிகை அலங்காரரான லீலாவை நினைத்து நானும் அந்த சகோதரியும் ஆச்சர்யப்பட்டோம். ஜித்தாவில் இருக்கும் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து ஒவ்வொருமுறை வெளியேறும் போதும் அவர் கருப்பு நிற அபாயா அணிய வேண்டுமே? இது குறித்த அவரது பார்வை எப்படியிருக்கும்? மார்க்க பற்றுள்ள சவூதி காவல்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

துனிசியாவில் இருந்து அவர்கள் புறப்படும் பொழுது, அவர்கள் சென்றடைய விருப்பப்பட்ட இடங்களின் பட்டியலில் நிச்சயம் சவூதி இருந்திருக்காது.

"சாரி, லண்டன், பாரிஸ், நியூயார்க், மொனாகோ அல்லது ஜெனிவாவில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை, ஜித்தா எப்படி?" என்று அந்த கெட்ட செய்தியை விமானி அவர்களிடம் தெரிவித்த போது அவர்களது உணர்வுகள் எப்படி இருத்திருக்கும் என்பதை நான் பார்க்காமல் போய் விட்டேன்.

பென் அலியின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களுமே என்னை முதன் முதலாக, 2006ல், லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்தின் முன் நிற்க வைத்தது. இஸ்லாமை பின்பற்ற என்னுடைய சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளுக்காக போராட வைத்தது.

அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்?, தங்களை திருப்திபடுத்தவா?, அல்லது தங்களுக்கு பாதுகாவலாய் விளங்கி வந்த, உற்ற நண்பர்கள் போல் நடித்து வந்த மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்தவா?

பிப்ரவரி 2009ல், துனிசியாவில் நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்கின்றேன். அப்போது நூற்றுக்கணக்கான பென் அலியின் ஆதரவாளர்கள் நாங்கள் தொழுவதையும், வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நாங்கள் கலந்து கொள்வதையும் தடுக்க தங்களால் முடிந்த வரை முயன்று பார்த்தார்கள்.

நாங்கள் எங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த தெருவிலேயே தொழுதோம். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மிரட்சி இருக்கின்றதே, அதனை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி அந்த சகோதரியிடம் கூறிக்கொண்டிருந்தேன். பென் அலி மற்றும் லீலாவின் தற்போதைய நிலையை எண்ணி மீண்டும் சிரித்தோம்.

என்னவொரு உணர்ச்சிகர நிலை, மேற்குலகின் நிலையில்லாத நண்பர்களால் கைவிடப்பட்ட பிறகு இவர்களது உதவிக்கு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். மன்னிப்பதென்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய பண்பு. ஆனால், அந்த பண்பை இவர்களை நோக்கி காட்ட நினைக்ககூடிய நிலையில் கூட தற்போது துனிசியர்கள் இல்லை.

தங்கள் மக்களிடம் இவர்கள் காட்டாத கருணையை இன்று சில முஸ்லிம்கள் இவர்களிடம் காட்டியிருக்கின்றார்கள். இதற்கு நன்றியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிந்த பெண்கள், இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றிய சகோதரர்கள், மனித உரிமை இயக்கத்தினர் என இவர்கள் அனைவர் குறித்தும் பென் அலி தனக்குள்ளாக பிரதிபளித்து கொள்ள வேண்டிய தருணம் இது.

தன்னுடைய மக்களுக்கு இவர் கொண்டு சென்ற திரித்த, நீர்த்து போன இஸ்லாத்தை போலல்லாமல், இனியாவது இவர் தூய இஸ்லாத்தை கண்டெடுப்பாரா என்றெண்ணி அதிசயக்கின்றேன்.

அந்த சகோதரியை நோக்கி திரும்பி, இனியாவது ஹிஜாபின் மகிமையை லீலா புரிந்து கொள்வாரா என்று இன்னும் அதிகமாக ஆச்சர்யப்படுகின்றேன்.

இதனை கூறிக்கொண்டிருக்கும் போதே, என்னருகில் இன்று கொண்டிருக்கும் இந்த பெண் யாரென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் 2006ல், துனிசிய தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்திருக்கின்றோம்.

சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பென் அலியின் குண்டர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகளை என்னிடத்தில் அப்போது விவரித்தார் இவர். குரலில் நடுக்கத்துடன் அன்று இவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.
"லண்டனுக்கு வந்த பிறகும் என்னுடைய ஹிஜாப் இன்னும் என் சட்டைப்பையில் இருக்கின்றது" 
இவருடைய கதையை கேட்டு அன்று நான் கண்கலங்கியது எனக்கு நன்கு நினைவிருக்கின்றது.

தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..."


அல்ஹம்துலில்லாஹ்....

யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்: 
1. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் மற்றும் கை மணிகட்டுகளை தவிர்த்து உடல் முழுவதும் மறைக்கும் விதமாக உடையணியும் முறையை குறிக்கின்றது.
2. பாங்கு - தொழுகைக்காக பள்ளிவாசல்களிலிருந்து எழுப்பப்படும் அழைப்பு.
3. பத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
4. குத்பா - பிரசங்கம்/சொற்பொழிவு.  
5. உம்மத் - நம்பிக்கையாளர்களின் சமூகம் (Community of Believers).

Sister Yvonne Ridley's official website:
i. http://yvonneridley.org

References:
i. Hijab Makes a Return in Tunisia - Yvonne Ridley, 25th January 2011. link.
ii. துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம் - சகோதரர் முஹம்மது ஆஷிக். link.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.