Saturday, June 5, 2010

Nation of Islam - எழுச்சியும் வீழ்ச்சியும்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. அமெரிக்காவில், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம். அவர்களுக்கு உதவ  வாலஸ் பர்த் முஹம்மது (Wallace D.Fard Muhammed) என்பவரால் 1930ல் தோற்றுவிக்கப்பட்டது தான் "Nation of Islam (இஸ்லாமிய தேசிய அமைப்பு அல்லது இஸ்லாமிய தேசியம்)".

பிறகு, 1933 ஆம் ஆண்டு, பர்த் முஹம்மது அவர்களின் மாணவரான எலிஜா முஹம்மது(Elijah Muhammed) அவர்களின் கட்டுபாட்டுக்குள் அமைப்பு வந்தது. எலிஜா அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் தான் (1933-1975) அமைப்பு மாபெரும் எழுச்சி கண்டது. அமெரிக்காவை திணறடித்தது.


அமைப்பின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தையை பார்த்தவுடன் இது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருக்குமோ என்று நீங்கள் கருதினால், அது தவறு.

ஆம், பெயரில் தான் இஸ்லாம் இருந்ததே ஒழிய, இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுமளவு வேறுபாடுகள்.

இவர்களது சில கொள்கைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்,

  • இவர்களை பொறுத்தவரை, இந்த அமைப்பை தோற்றுவித்தவரான பர்த் முஹம்மது அவர்கள் இறைவனின் அவதாரம் (God Incarnate).
  • அதற்கு பிறகு வந்த எலிஜா முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர். 
  • நோன்பு, தொழுகை, ஜகாத் அவசியமில்லை. 
  • கிருத்துவர்களை போல நாற்காலியில் அமர்ந்து கொண்டே பிரார்த்தனை செய்வார்கள். சஜிதாவெல்லாம் கிடையாது. 
  • ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தான் உயர்ந்தவர். மற்ற இனத்தவர் இவர்களுக்கு கீழே தான். அதுவும், வெள்ளையர்களை "Devils" என்று அழைத்தவர்கள். 
  • மற்ற இனத்தவருடன் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்தவர்கள்.   

ஆக, நாம் மேலே பார்த்த அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகள். சுருக்கமாக சொல்லப்போனால் தங்களுக்கு தகுந்தாற்போல வளைத்துக்கொண்டார்கள்.

அதே சமயம், இவர்களிடம் நல்ல விசயங்களும் பல இருந்தன. உதாரணத்துக்கு, இவர்களின் அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள்,

  • மது பழக்கம் இருந்தால் விட்டு விட வேண்டும். 
  • போதை மருந்துகளின் பக்கம் கூட போகக்கூடாது. 
  • சூதாட்டம் கூடாது. 
  • கொள்ளை கும்பல்களின் (Gang, Gangster) உறவு இருக்கக்கூடாது. 
  • மிக கண்ணியமான முறையில் உடையணிய வேண்டும். 

இவை மட்டுமல்லாமல், இவர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள். குரான் தான் இவர்களுக்கு இறைவேதம்.

இந்த அமைப்பால் தங்களின் தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்தவர்கள் பலர்.

அரசியல் ரீதியாக மாபெரும் எழுச்சியை 1950 களில் கண்டது இஸ்லாமிய தேசிய அமைப்பு. அது தான், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராய் கருதப்படும் மால்கம் எக்ஸ் (Malcolm X) அவர்கள் அந்த அமைப்பில் உறுப்பினராய் சேர்ந்த நேரம் (1952). மால்கம் எக்ஸ் ஒரு புத்துணர்ச்சியை அமைப்பிற்கு கொடுத்தார். இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது.

முஸ்லிம்களுக்கோ பெரும் வேதனையை கொடுத்தது இவர்களுடைய வளர்ச்சி. அமைப்பின் கொள்கைகள் இஸ்லாமிற்கு முரணானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இஸ்லாமிய தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று அறிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கேட்க கூடிய நிலையில் எலிஜா அவர்கள் இல்லை. 

எவ்வளவு நாள் தான் பொய்யான முகம் நிலைத்திருக்கும்?

எந்த மால்கம் எக்ஸ் அந்த அமைப்பு எழுச்சி பெற உதவியாய் இருந்தாரோ, அதே எக்ஸ், 1963 ஆம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தூய இஸ்லாமின்பால் வந்து மாபெரும் அதிர்ச்சியை அவர்களுக்கு தந்தார். 

மால்கம் எக்ஸ் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவர் சென்ற ஹஜ் யாத்திரை தான்.

அங்கு பலதரப்பட்ட மக்களும் ஒன்றாக, நிற பேதம் பார்க்காமல் சகோதரர்களாய் பழகியது அவருக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வித்திட்டது. ஹஜ் பயணத்திற்கு பிறகு, வெள்ளையர்கள் மீதான அவருடைய எண்ணம் மாறியது. எல்லோரும் ஒன்றே என்ற எண்ணம் பிறந்தது. இது போன்ற எண்ணங்கள் இஸ்லாமிய தேசிய அமைப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது. வெள்ளையர்களை தாழ்ந்தவர்களாகவே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.

மால்கம் எக்ஸ், இஸ்லாமிய தேசிய அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு புறம்பானவை என்று கூறினார். ஆனால் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று அறிவித்தார்.

அவருடைய விலகல் அந்த அமைப்புக்கு பலத்த அடியாக அமைந்தது. 

அதே போல, அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி, நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இமாம் சிராஜ் வஹாஜ் என்று எண்ணற்றவர்கள் தொடர்ந்து வெளியேறி சத்தியமார்க்கத்தின்பால் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இப்படி பல பேர் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கு பின்னணியில் இருந்தவர், இன்று முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் முக்கியமானவர். அவர் செய்த காரியம் நிச்சயம் புரட்சிகரமானது. 

இஸ்லாமிய தேசிய அமைப்பின் 45 ஆண்டு கால வாழ்வை, 1975 ஆம் ஆண்டு முடித்து வைத்தவர் அவர். இஸ்லாமிய தேசிய அமைப்பை கலைத்து அதை இஸ்லாமுடன் ஐக்கியப்படுத்தியவர் அவர்.

அந்த நபர் வேறு யாருமல்ல...நபி என்று சொல்லப்பட்ட எலிஜா முஹம்மது அவர்களின் மகனான வாரித் தீன் முஹம்மது (Warith Deen Mohammed) தான் அவர். 

தன் தந்தையினுடைய செயல்பாடுகள், இஸ்லாமிற்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து போராடி வந்து, எலிஜா அவர்களின் மறைவுக்கு பிறகு அந்த அமைப்பை கலைத்தே விட்டார்.

சிறு வயதிலிருந்தே பர்த் முஹம்மது அவர்களின் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் வாரித். அதன் காரணமாக சிலமுறை அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மறுத்து தன் இருபத்தி எட்டாம் வயதில் சிறைக்குச் சென்றார்.

அந்த சிறைச்சாலை தான் அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

குரானை நன்கு ஆராய்ந்து தூய இஸ்லாமை அவர் அறிந்து கொண்டது அந்த பதினான்கு மாத சிறை வாழ்க்கையில் தான். சிறையை விட்டு வெளியே வந்த போது, இஸ்லாமிய தேசிய அமைப்பு தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இஸ்லாமின்பால் வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையர்களையும் சமமாக பார்க்க வேண்டுமென்று கூறினார்.

இவருடைய தாவாஹ் தான் மால்கம் எக்ஸ் அவர்களையும், இன்னும் பலரையும் அமைப்பிலிருந்து வெளியேற வைத்தது.

அவருடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு, அதாவது, 1975 ஆம் ஆண்டு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். அழகிய முறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார். இஸ்லாமிய தேசிய அமைப்பு (Nation of Islam), முஸ்லிம் அமெரிக்கர்கள் சங்கம் (American Society of Muslims) என்று பெயர் மாறி சத்தியமார்க்கத்தின்பால் வந்தது.

ஆக, முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை வாரித் தீன் முஹம்மது அவர்கள், ஒரு மிகச் சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். இஸ்லாமிய நாடுகள் பலவற்றால் கவுரவிக்கபட்டவர். 2008ல், இவரது மறைவுக்கு பிறகு, அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான CAIR (Council on American-Islamic relations) இவரை, "அமெரிக்காவின் இமாம்" என்று அழைத்து இவருக்கு பெருமை சேர்த்தது.

வாரித் தீன் அவர்கள், சுமார் 25 லட்சம் மக்களை தூய இஸ்லாமின்பால் கொண்டு வந்ததாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய தேசிய அமைப்பை சார்ந்தவர்கள் ஆவர்.  

1970 களின் பிற்பகுதியில் Nation of Islam கலைக்கப்பட்டாலும் பிரச்சனை முழுவதுமாக முடிந்து விடவில்லை. வாரித் தீன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாத சிலர், 1981 ஆம் ஆண்டு மறுபடியும் இஸ்லாமிய தேசிய அமைப்பை நிறுவினர். லூயிஸ் பராகான் (Louis Farrakhan) அதனுடைய தலைவராக பொறுப்பேற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பு வீரியம் குறைந்த அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு போல அதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்படும் தாவாஹ் பணிகள் இந்த அமைப்பில் சேருபவர்களை எளிதில் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடுகின்றன.       

இதையெல்லாம் விட மேலாக, இஸ்லாமிய தேசிய அமைப்பும் சிறுக சிறுக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

தங்களுடைய பல தவறான கொள்கைகளை ஒவ்வொன்றாக களைந்து விட்டு இஸ்லாத்தின்பால் வந்து கொண்டிருக்கின்றனர்.    

2000 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவரான பராகான் அவர்கள் "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனின் இறுதி தூதர்" என்று அறிவித்து வியப்பை ஏற்படுத்தினார்.   

இப்பொழுதெல்லாம் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொழ, நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.     

"...சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்..."  - குர்ஆன் 17:81  

அமெரிக்காவின் இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்ச்சியாக லூயிஸ் பராகான் அவர்களை சந்தித்து தான் வருகின்றனர். தாவாஹ் பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இறைவன் இந்த அமைப்பினரை முழுவதுமாக இஸ்லாத்தின்பால் கொண்டுவர வேண்டுமென்று துவாச்செய்வோம்.

அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


References:
1. Brief history on the origin of Nation of Islam - noi.org
2. Nation of Islam in the Balance of islam - Islam online.
3. Nation of Islam FAQs - beleivenet.com
4. Differences between Islam and Nation of Islam - differencebetween.com
5. Malcolm X - malcolmx.com
6. Muhammed Ali - ali.com
7. Warith Deen Muhammed, Elijah Muhammed, Malcolm X, Siraj Wahhaj, Muhammed Ali - wikipedia. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.  
     






9 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரன் ஆஷிக்,
    பெயரளவில் இஸ்லாத்தை பற்றிப் பிடித்திருந்த Nation of Islam அமைப்பு தூய்மையான இஸ்லாத்தை நோக்கி வருதல் ஒரு ஆரோக்கியமான அறிகுறியே. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமிய பெயரை பயன்படுத்தி கொண்டிருக்கும் சூபி, ஷியா, பரேலவிக்கள், அஹமதியாக்களும், சன்னி என்று சொல்லியே இறைவனுக்கு இணைவைக்கும் இன்னபிற வழிகேடர்களும் தூய்மையான இஸ்லாத்தை அறியும் வாய்ப்பை ஏக இறைவன் வழங்குவானாக.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் சொன்னது போல் வழிகேட்டில் இருக்கும் அனைவரும் தூய இஸ்லாத்தை அறிய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

    ReplyDelete
  3. சகோதரர் ஆஷிக் ஆஹ்மத்,
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    இது தங்களின் மற்றுமொரு சிறப்பான பதிவு.

    உலகெங்கும் பொதுவாக போராளிகள், அரசியல்வாதிகள் தங்கள் போராட்ட அரசியலுக்காக, அதன் வெற்றிக்காக அல்லது சுயநலனுக்காக மக்களின் ஆதரவு பெற மக்களிடம் ஏதாவது கூறி மூளைச்சலவை செய்கிறார்கள்.

    இந்த அடிப்படையில், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனை செய்திருக்கிறார்கள்...
    அன்று, கலிபாக்களுக்கு எதிராய் ஷியாக்கள் உருவாக்கியது...
    நேற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராய் இந்திய முஸ்லிம்களை ஆங்கிலம் படிக்க விடாமல் செய்தது...
    இன்று, தர்காக்களின் உண்டியல் மூலம் ஆதாயம் பெறவேண்டி அதனை எதிர்ப்பவர்களை காஃபிர்கள் என்பது... என பலவகைகள். இது எல்லாமே மக்கள் மனம் உண்மை இஸ்லாமிய மார்க்கம் பக்கம் ஈர்க்கப்பட்டு அதனிடம் பலமாக இருந்தால், எந்த மூளைச்சலவைக்கும் முகாந்திரமே இல்லை.

    ஆட்சியதிகாரம், நாட்டு விடுதலை, இலகுவான வழியில் குவியும் உண்டியல் பணம்... என இந்தவகையில்..., //அமெரிக்காவில், ஆப்ரிக்கா அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம்.//-இதுவும் கருப்பின முஸ்லிம்களை இனஅடக்குமுறைக்கு எதிராக போராட ஆள்செர்க்க, இஸ்லாம் தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளதாகவே காண்கிறேன்.

    இவைகள் இனி ஏற்படாவண்ணம் தடுக்க நம்மாலான முயற்சி: இஸ்லாத்தை அதன் உண்மையான தூயவடிவில் மக்களுக்கு எத்திவைப்பதே ஆகும், என்று தெளிவாக அறிய முடிகிறது.

    அந்தவகையில், இதையே பிற்காலத்தில் செய்த மால்கம் எக்ஸ்,வாரித் தீன் முஹம்மது போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  4. //அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...//

    வருவானாக.... ஒரு தரம்

    வருவானாக.... ரெண்டு தரம்

    வருவானாக.... மூணு தரம்

    ReplyDelete
  5. முற்றிலும் புதிய விஷயமாக எனக்கு இருக்கிறது இந்த இடுகையை படிப்பதற்கு முன்பு வரை இது சம்பந்தமான எந்த விஷயமும் தெரியாது. ஜஸாக்கல்லாஹ் கைர்

    ReplyDelete

  6. super plz visit

    http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_21.html

    ReplyDelete
  7. தங்களின் பணி சிறக்க துஆ செய்கிறோம் மென்மேலும் தங்கள் ஆய்வுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் அறியாத பல விடயங்களை அறியத் தந்த அற்புத கட்டுரை,ஜகாசல்லாஹ் ஆஷிக் அண்ணா...:)
    ................................................
    இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இறைவன் இந்த அமைப்பினரை முழுவதுமாக இஸ்லாத்தின்பால் கொண்டுவர வேண்டுமென்று துவாச்செய்வோம்.

    அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...ஆமின்.

    ReplyDelete