Thursday, September 30, 2010

தீர்ப்பை மதிப்போம்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.   

பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் இன்ஷா அல்லாஹ் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. இந்நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

தீர்ப்பு எதுவாகினும் அது இறைவனின் நாட்டம் என்பதை நாம் நன்றாகவே அறிந்துள்ளோம். ஒரு உண்மையான முஸ்லிம் இறைவனுக்கு அடிபணியவும், அவனுடைய தூதர் வாழ்ந்து காட்டியப்படி வாழவுமே நினைப்பான். 

குறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற பெயரையே அழிக்க சொன்ன நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம். சமூக ஒற்றுமையில் நமக்கு மிகப்பெரும் பங்கிருக்கின்றது. இறுதித்தூதரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். தமக்கு ஏற்பட்ட எண்ணற்ற துயரங்களை சகித்து கொண்டு பொறுமையை கடைபிடித்தவர்கள் அவர்கள். 

தான் உண்மையான முஸ்லிம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நபியவர்கள் காட்டிய அந்த பொறுமையை கடைபிடிக்கட்டும். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும். 

உங்கள் உணர்ச்சிகளை தூண்டுமாறு வரும் எந்தவொரு sms சையும் உங்களோடு அழித்து விடுங்கள்.

தீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் அதற்காக உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவருக்கு பாதகம் செய்யும் செயலில் இறங்குபவர்கள் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும். நபியவர்களின் வழிமுறைக்கு எதிரான எந்தவொரு காரியத்தையும் செய்ய நமக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.   

அதே நேரம், தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தால், அதனை காரணமாகக் (மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றேன் என்ற பெயரில்) கொண்டு அடுத்தவருக்கு தொந்தரவு தருபவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள் நான் மேற்கூறியதையே மற்றொரு முறை படித்து கொள்ளட்டும். 

வெற்றியோ, தோல்வியோ இரண்டும் நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் சோதனை தான். பொறுமை காத்து நமக்கான இந்த சோதனையை சந்திப்போம். அதற்கான மனவலிமையை இறைவன் தரவேண்டுமென்று துவாச் செய்வோம். 

போதும், பாப்ரி மஸ்ஜித் இடிபட்டதால் நம் நாடு உலக அளவில் பட்ட அவமானங்கள் போதும். இன்னொரு முறை அது நடக்க வேண்டாம். நீதித்துறையை மதிப்போம், சமூக ஒற்றுமையை காப்போம்....

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 
   
உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ.    






6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பின் சகோதரன் ஆஷிக்,
    தீர்ப்பு சாதகமாக இருக்கும்பட்சத்தில் ஆரவாரம் செய்வதையோ பாதகமாக இருக்கும்பட்சத்தில் கலவரம் செய்வதையோ இரண்டு தரப்புமே தவிர்க்க வேண்டும். அமைதி கெட கூடாது என நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பின் சகோதரன் ஆஷிக்,

    ///பாப்ரி மஸ்ஜித் இடிபட்டதால் நம் நாடு உலக அளவில் பட்ட அவமானங்கள் போதும். இன்னொரு முறை அது நடக்க வேண்டாம்.///---உங்களுக்கு இருக்கும் இந்த உயரிய எண்ணம் இன்று அந்த நீதிபதிகளுக்கு இல்லையே சகோதரா...?

    எனக்கு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட (1992) நாளைவிட, முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் பூட்டி சீல்வைத்த(1950)நாளைவிட, இன்றுதான் இந்தியாவிற்கு பெருத்த தலை குனிவாய் கேவலமான அவமானமாய் உள்ளது.

    இன்றைய தீர்ப்பு என்பது, உண்மையில் நீதியை நிலை நாட்டுவதற்கும்... ஹிந்துத்வா ஆதரவு நிலைக்கும்... இடையேயான ஒரு முக்கியமான அமில சோதனை.

    கடைசியில் வழக்கம்போலவே ஹிந்துத்வாதான் வெற்றி பெற்று விட்டது.

    அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது...

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    நல்லடக்கமா அல்லது தகனமா... அது... (அதாங்க... மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே ...சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு... அதுதான்...) அது எப்போது என்று தெரியவில்லை.

    அநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்...

    என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.

    இனி, மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.

    இத்தீர்ப்பால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. 'இந்திய மதச்சார்பின்மை' எனும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட மேலும் ஒரு வாய்ப்பு. அம்புட்டுதான்.

    ஆனால், நிலம் பெற்றவர்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். உடனடியாய் கோவில் கட்டி பெரிய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து திருப்பதி ஏழுமலையானையே விரைவில் ஓவர்டேக் செய்வார்கள்.

    வாழ்க ... இந்துயா...

    நன்றி ... அநீதி மன்றம்...

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர் mohamed ashik அவர்கள் தீர்ப்பு குறித்து கூறிய வார்த்தைகள் உண்மைதான் என்றாலும் ,நாம் வாழும் கால சூழ்நிலையும் கருத்தில் கொண்டுதான் இனி செயல்படவேண்டும். இந்தியா எனும் பன்முகம் கொண்ட சமுகத்தில் அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாமியர்களுக்கு இப்போது கிடைத்த தீர்ப்பு வியப்புக்குரியதே., வாய்மொழியாக வார்த்தைகள் பகிரப்பட்டு அவை அடிப்படையில் கூறப்பட்ட தீர்ப்பல்ல.,இது ஆயிரமாயிரம் பக்க சான்றுகள் சாட்சியாக்கப்பட்டு நன்..........................கு ஆராயப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இப்படி இருக்கிறது என்பது கவனத்திற்குரியது. இதில் மேல் முறையீடு என்பது கூட கால விரயத்திற்கும் தேவையில்லாத வேதனைகளுக்கும் தான் வழிவகுக்கும். பொறுமையே கடைபிடியுங்கள் சகோதரரகளே! கண்டிப்பாக பொறுமையாளர்களுடன் தான் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ்விற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் மட்டுமல்ல இன்று பதில் (தீர்ப்பு) சொன்னவர்களும் தான்...
    (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)

    ReplyDelete
  4. சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம்,

    குழப்பம் மட்டுமே மிஞ்சுகின்றது என்பதைத் தவிர சொல்லுவதற்கு ஒன்றுமில்லை...

    அமைதி காத்து நம் மானத்தை காத்த அனைவருக்கும் நன்றி... இந்த அமைதி தொடரவேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்போம்...இன்ஷா அல்லாஹ்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. //குறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற பெயரையே அழிக்க சொன்ன நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம்.//
    இந்த நேரத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கையை
    நினைவூட்டிய சகோதரா!
    நன்றி ஜசாக்கல்லாஹு கைரா

    ReplyDelete