Wednesday, February 17, 2010

ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி --- பகுதி 2


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


சென்ற பதிவின் தொடர்ச்சி....முதல் பகுதியை வாசிக்க <<இங்கே>> சுட்டவும்... 


இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே. ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம். 

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது. 

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாஹ்வை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்துக் கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்... 

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராயத் தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துக் கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
 "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36       
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்.    

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.  
    " நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"  
அதற்கு அவரது தாய் "அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா............. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுப்ஹானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.  

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21-ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. 
 • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
 • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.  
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
 • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். 
இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.


                                        


சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். 

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். 

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.

"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு"  --- குரான் 11:11    
 " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9  


குறிப்பு:

ஆமினா அவர்களின் சொற்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யூடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.


References:
1. Interview with Rebecca Simmons of  The Knoxville News-Sentinel in Tennessee
2. islamreligiondotcom
3. youtubedotcom
4. famousmuslimsdotcomஉங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  


10 comments:

 1. அன்பு சகோதரர் ஆஷிக்,
  சகோதரி ஆமினா அசில்மி அவர்களின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம். அவர் இஸ்லாத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கை சஹாபிய பெண்களின் வாழ்க்கையை நம் நினைவில் கொண்டு வருகின்றது. அவருக்கு இறைவன் ஈருலகிலும் அமைதியை தருவானாக என்ற பிரார்த்தனையுடன்...

  ReplyDelete
 2. அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத்,
  மெய்சிலிர்க்க வைத்து மன உறுதியை கூட்டுகிறது உங்கள் பதிவு.
  //மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.//---மாறுபட்ட புதிய சிந்தனை.

  பொதுவாக இப்போது இஸ்லாமிய கருத்துக்களை கண்ணை/காதை மூடிக்கொண்டு எதிர்க்கும் மாற்றுக்கொள்கை கொண்டவர்களிடம் இஸ்லாமிய கருத்தை என் கருத்தாய் வைத்தால் வரவேற்கிறார்கள். உடனே அது குர்ஆனில்/ஹதீஸில் உள்ள கருத்துதான் என்றால் மௌனமாகி விடுகிறார்கள். இஸ்லாம் என்றாலே எதிர்ப்பவர்களிடம் அவர்களை சிந்திக்க வைக்க இந்த முயற்சி சிறந்ததாய் படுகிறது.

  ReplyDelete
 3. சகோதரர் ஆஷீக்
  தங்களது வலைப்பக்கத்தை பற்றி நண்பர் சேக்தாவூது அவர்கள் கூறினார். சகோதரி ஆமினா இஸ்லாத்திற்காக செய்த தியாகத்தை பற்றி படிக்கும் போது,நம்மை முழுமையாக மாற்றி கொள்ள வேண்டும் என்ற படிப்பினை தருகிறது.தொடர்ந்து தாருங்கள் sathik ali

  ReplyDelete
 4. பிஸ்மில்லாஹ்,

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,

  அன்பு சகோதரர் சாதிக் அலி அவர்களுக்கு,

  தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. நான் தகவல்களை பல கோணத்தில் சரிப்பார்த்த பின்னரே பதிவு செய்கிறேன். அப்படியும் தவறு வரும் பட்சத்தில் தங்களை போன்றவர்கள் தயவு கூர்ந்து அதனை எடுத்துக்கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 5. May the almighty Allah bless you for your wonderful work.

  ReplyDelete
 6. சகோதரி உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போமாக!

  ReplyDelete
 7. சகோதரர் TNTJLBK,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஆமினாஹ் அசில்மி அவர்கள் சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு சாலை விபத்தில் மரணித்து விட்டார்கள். (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இந்த கட்டுரை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் எழுதப்பட்டது...

  ஆமினாஹ் அவர்களின் அமல்களுக்கு தக்க கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 8. May the almighty Allah SWA bless you for your wonderful work.
  May ALMIGHTY ALLAH SWA grant JANNATHUL FIRDOUSE
  To AMINAH ASILMI.

  ReplyDelete
 9. Assalamu alaikkum wa rahmathullahi wa barakathuhu
  Amina asilmi ma sha allah great suvanathai allah avarkalukku tharuvanaga aameen
  Brother ashiq ungalukkum allah eerulaga vetriyayum tharuvanaga aameen aameen ya rabbal aalameen

  ReplyDelete