Wednesday, February 17, 2010

ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த  சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லிமாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். 

"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.  

அது 1975-ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார். 

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெறும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார். 

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்லக்கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்,

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"

இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார். அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது,

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"

இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு  கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.

 "நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்கபடுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"

பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...

   "நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதற்காக"
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதற்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

"நான் மாறிக்கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு  செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமைப்படுத்தினேன்."

பன்றி இறைச்சி மற்றும் மதுவை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச்  செய்தார்கள். 

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"

1977, மே 21-ல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஆமினா ஏற்றுக்கொண்டார்.

   " இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது  தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"
 "நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒருவித அமைதி, மகிழ்ச்சி. இதற்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மெம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.  ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

(தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்) 






5 comments:

  1. அன்பு சகோதரர் ஆஷிக்,
    ஆறு மாதத்திற்கு முன்னர் தமிழ் எழுத தெரியாது என்ற ஆஷிக்கா இது என்ற சந்தேகம் வரும் அளவிற்கு தங்களின் எழுத்து நடை இருக்கின்றது. இது இறைவன் உங்களுக்களித்த கருணை என்றே சொல்ல வேண்டும். சகோதரி ஆமினா போன்ற எண்ணற்றவர்கள் இஸ்லாத்தை குறை கூற முயன்று பின்னர் இஸ்லாத்தையே தம்முடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டது, இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்பதை வலிமையாக பறை சாற்றுகின்றது.

    ஆமினா அவர்களின் வாழ்வில் அடுத்து என்ன நடந்தது என்பதை அரிய ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  2. அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத்,

    உணர்ச்சியுடன் கூடிய மிக நல்ல பதிவு.

    // அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை.//-எனக்கிது பாடம்.

    ReplyDelete
  3. சகோதரர் ஆஷிக்:

    உணர்வுகளின் உலுக்கள் இந்த நல்லப் பதிவு, கண்காள் கலங்கியது..

    நிறைய பாடம் எனக்கு(ம்) கற்று கொடுத்தது !

    ReplyDelete
  4. சகோதரர் ஆஷிக்.... உங்கள் சேவை தொடர்ந்தும் தேவை... அழகான பதிவுகள்... சிந்திக்க வைக்கும் தகவல்கள்.. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete