Tuesday, November 23, 2010

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   





ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. 



சரி இப்போது பதிவிற்கு வருவோம். 

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய "Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். . 



இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம். 

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.  



மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது. 

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!) 

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம். 

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.          

என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.

ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.

பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing. 
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது. 

சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Monday, November 15, 2010

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

அது 1938 ஆம் வருடம். 

கிறிஸ்துமசுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன (Dec 22). தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில், சாலும்னா ஆற்றின் வாயிற்பகுதியில் தன் குழுவினருடன் மீன் பிடித்து கொண்டிருந்தார் கேப்டன் கூசன். 

அப்போது வலையில் சிக்கியது ஒரு வினோதமான மீன். 

ஆம், அது மிகவும் வினோதமான மீன். ஏனென்றால் அப்படிப்பட்ட மீனை இதுவரை அவர் பார்த்ததில்லை. தன்னுடைய வலையில் சிக்கிய அந்த மீன் இன்னும் சிறிது நாட்களில் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்த போகின்றது என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.  

அப்போது அவருக்கு தோன்றியதெல்லாம் இந்த வினோதமான மீனைப் பற்றி கிழக்கு லண்டன் (East London - தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நகரம்) அருங்காட்சியகத்திற்கு தகவல் கொடுப்போம் என்பதுதான். 

அப்போது கிழக்கு லண்டன் அருங்காட்சியகத்தின் டைரக்டராக இருந்தவர் கோர்ட்னி லாடிமர் (Miss Marjorie Courtney-Latimer) அவர்கள். மீனின் உடலமைப்பு அவருக்கு வியப்பை கொடுக்க, அந்த மீனை தன்னுடைய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்தார்.

படு சுவாரசிய காட்சிகள் நடந்தேற ஆரம்பித்தன.

மீன்கள் பற்றிய ஆய்வில் தனித்துவம் பெற்றவரான டாக்டர் ஸ்மித் (Dr.J.L.B Smith) அவர்களை தொலைப்பேசியில் அழைத்தார் லாடிமர். பதிலில்லை. ஓய்வு மற்றும் சில காரணங்களுக்காக தன் மனைவியுடன் தன் அலுவலகத்திலிருந்து சுமார் 350 மைல்கள் தொலைவில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டிற்கு சென்றிருந்தார் ஸ்மித்.

தொலைப்பேசியில் அழைத்து பார்த்து பதில் இல்லாததால், தான் பார்த்த அந்த மீன் குறித்து குறிப்புகள் எழுதி அந்த மீனை படமாக வரைந்து ஸ்மித்திற்கு கடிதம் எழுதினார் லாடிமர்.



ஜனவரி மூன்றாம் தேதி அலுவலகம் வந்து கடிதத்தை பார்த்த ஸ்மித்திற்கோ பேரதிர்ச்சி. இது குறித்து அவர் "என்னுடைய மூளையில் குண்டு வெடித்தது போல உணர்ந்தேன். நிச்சயமாக இது மற்ற மீன்களை போல இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் வந்து 11 நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்த அவர், அந்த மீனின் உடல் அழுகிவிடப்போகின்றது என்று அஞ்சி உடனடியாக லாடிமருக்கு தந்தி அடித்தார்.

அதில் "மிக முக்கியமானது. பாதுகாக்கவும் (MOST IMPORTANT PRESERVE SKELETON AND GILLS [OF] FISH DESCRIBED)" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிறகு வீட்டிற்கு சென்று லாடிமருக்கு கடிதம் எழுதினார், அதில்

மிஸ் லாடிமர்,
உங்களுடைய 23ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. நன்றி. நான் கிரஹம்ஸ்டவுனில் இல்லாததால் உங்களது கடிதத்தை பார்க்க முடியவில்லை. உங்களிடம் உள்ள மீனை வெகு விரைவில் வந்து பார்க்கமுடியும் என்றும் எனக்கு தோன்றவில்லை. நான் தற்போது பணி நிமித்தமாக வேறு ஒரு இடத்திற்கு செல்ல இருப்பதால் அந்த மீனை பாதுகாத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களுடைய படம் மற்றும் குறிப்புகளிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த மீன் பல காலங்களுக்கு முன்னதாகவே அழிந்து விட்டதாக கருதப்படும் ஒரு உயிரினத்தை ஒத்திருக்கின்றது. எனினும் நான் அதனை பார்க்கும் வரை எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை. 
நான் வரும் வரை அதனை மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். --- (Extract from the Original quote of) Dr.J.L.B. Smith's Letter to Miss.Latimer, 3rd January 1939.     

அவரால் இந்த ஆச்சர்யத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளமுடியவில்லை. அடுத்த நாள் லாடிமரை தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.

ஸ்மித் அவர்கள் கிழக்கு லண்டனுக்கு அந்த மீனை பார்க்க சென்றது பிப்ரவரி 16ஆம் தேதி. ஆனால் அதற்கு முன் வரை பல கடிதங்களை அவர் லாடிமருக்கு எழுதியுள்ளார். லாடிமர் அவர்களும் ஸ்மித்திற்கு பல தகவல்களை கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளார். இவ்வளவு ஏன்? அந்த மீனின் செதில்கள் சிலவற்றை கூட ஸ்மித்திற்கு அனுப்பி வைத்துள்ளார் லாடிமர்.

ஆனால், தான் மனதில் நினைத்திருக்கும் மீனாக அது நிச்சயம் இருக்காது என்றே நம்பினார் ஸ்மித். ஒருவேளை அந்த மீன் தான் நினைத்த மீனாக இருந்தால், அது உயிரியல் உலகையே ஸ்தம்பிக்க வைக்க போகின்றது என்பதையும் நன்கு உணர்ந்தே இருந்தார்.

ஆனால், எது நடக்க வாய்ப்பே இல்லை என்று அவர் கருதினாரோ அது தான் கடைசியில் நடந்தது. 

ஆம். அந்த மீனைப் பார்த்த ஸ்மித் அவர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஆச்சர்யம் என்பதை காட்டிலும் திகைப்பு என்பதே சரியான வார்த்தையாக இருக்க முடியும். எந்த மீனை அவர் கற்பனை செய்து வைத்திருந்தாரோ அதே மீன் தான் அது.

தான் அந்த மீனை முதல் முறை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பின்னர் எழுதிய ஸ்மித் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

Although I had come prepared, that first sight [of the fish] hit me like a white-hot blast and made me feel shaky and queer, my body tingled --- Dr.J.L.B Smith in his book "The four Legs"
நான் அனைத்திற்கும் தயாராகி தான் வந்தேன். இருந்தாலும் அந்த மீனை முதலில் பார்த்த போது எனக்குள் நடுக்கம் ஏற்படுவது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தது --- (Extract from the original quote of) Dr.J.L.B Smith in his book "The four Legs"       

ஸ்மித் அவர்கள் என்ன நினைத்தாரோ அது தான் நடந்தது. "அந்த மீன் தான் இது" என்று அவர் உறுதிப்படுத்தியதும் உயிரியல் உலகம் பரபரப்புக்கு உள்ளானது. அவர்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அறிவியல் உலகே ஆச்சர்யத்தில் மூழ்கியது.

இந்த மீன் கண்டுபிடிப்பு இன்றளவும் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விலங்கியல் கண்டுபிடிப்பாக கருதப்படுவதாக ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் கூறுகின்றது.

பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த செய்தியை வெளியிட்டன.

அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற பல மீன்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன.



இதுவரை பார்த்ததை வைத்து, இந்த மீனிற்கான முக்கியத்துவம் எந்தளவிற்கு இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்திருப்பீர்கள்.

இனி, ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? எந்த மீன் இது? அறிவியலாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக பரிணாமவியலாளர்களுக்கு ஏன் மிகுந்த அதிர்ச்சியை இது அளித்தது? என்று பார்ப்போம்.

இந்த மீனிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? 

பின்னே இருக்காதா என்ன? 65-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த மீன் இனம், இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றன என்று தெரிய வந்தால் யார் தான் ஆச்சர்யப்படாமல் இருப்பர்? (அழிந்து விட்டதாக கருதப்படும் டைனாசர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று தெரிய வந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?, அது போன்றதொரு சூழ்நிலை தான் இது)   

எந்த மீன் இது? பரிணாமவியலாளர்களுக்கு ஏன் அவ்வளவு அதிர்ச்சி?

இந்த மீனிற்கு பெயர் சீலகந்த் (Coelacanth). சுமார் நூறு கிலோ எடை வரை, சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன் பரிணாம வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தது.


மீன்கள் படிப்படியாக நிலவாழ் உயிரினங்களாக (Tetrapods - eg. amphibians, reptiles, mammals) மாறியிருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாம கோட்பாடு.

அதன்படி, பரிணாமவியலாளர்களால், மீன்களுக்கும் நிலவாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினமாக (Transitional form or Missing Link) நம்பப்பட்டு வந்தது சீலகந்த்.

அதாவது, மீன்கள் சிறுக சிறுகச் சீலகந்த்தாக மாறி பின்னர் இவற்றிலிருந்து நிலவாழ் உயிரினங்கள் வந்திருக்கவேண்டுமென்று அப்போது பரிணாமவியலாளர்களால் நம்பப்பட்டு வந்தது.        

சீலகந்த்கள் இடைப்பட்ட உயிரினமாக கருதப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எல்லோருக்கும் புரியும் ஒரு முக்கிய காரணமென்றால், இவற்றின் துடுப்புகள் (Fins) கால்கள் போன்று இருந்ததுதான்.

It was once thought to be a missing link between fishes and amphibians because of its leg-like lobed fins - Natural History Museum, London. 
ஒரு காலத்தில் இவை மீன்களுக்கும், நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினமாக கருதப்பட்டு வந்தன. அதற்கு காரணம், இவற்றுடைய துடுப்புகள் கால்கள் போன்று இருந்தது தான் - (Extract from the original quote of) Natural History Museum, London.  

ஆக, மீன்களுக்கு கால்கள் வளர்ந்து (சீலகந்த் ஆக மாறி) நிலத்திற்கு வந்ததாக நம்பப்பட்டு வந்தது.

400-360 மில்லியன் ஆண்டுகள் பழமையான சீலகந்த் மீன்களின் உயிரினப்படிமங்கள் (Fossils) காணக்கிடைக்கின்றன. சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான நிறைய படிமங்கள் கிடைத்திருக்கின்றன.



1938 ஆம் ஆண்டு இந்த மீன் பிடிக்கப்படும் வரை, சுமார் 65-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மீன் இனம் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் டைனாசர்களும் அழிந்து போனதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

ஏன் இவற்றுடைய இடைப்பட்ட கால படிமங்கள் கிடைக்கவில்லை?

இதற்கு என்ன விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், பழங்காலத்திய சீலகந்த்கள்,  படிமம் உருவாகுவதற்கு ஏற்ற சூழ்நிலையில் வாழ்ந்தனவாம். ஆனால் தற்காலத்திய (சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து இன்று வரை) சீலகந்த்களோ படிமம் உருவாகுவதற்கு சாதகமான இடங்களில் வசிக்க வில்லையாம்.

How could Coelacanths disappear for over 80 million years and then turn up alive and well in the twentieth century? The answer seems to be that the Coelacanths from the fossil record lived in environments favouring fossilisation. Modern Coelacanths, both in the Comoros and Sulawesi were found in environments that do not favour fossil formation. They inhabit caves and overhangs in near vertical marine reefs, at about 200 m depth, off newly formed volcanic islands --- Coelacanth, Latimeria chalumnae Smith, 1939. australianmuseum.net.au   

ஆக, 80 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த இனம் இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றன என்று தெரியவந்தால் எந்த அறிவியலாளர் தான் ஆச்சர்யமடையாமல் இருப்பார்?

பரிணாமவியவியலாளர்களுக்கோ, ஆச்சர்யம் என்பது சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். ஏனென்றால், எதனை பரிணாம கோட்பாட்டிற்கு மிக வலிமையான ஆதாரம் என்று காட்டி வந்தார்களோ அது அன்றோடு மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது.

சீலகந்த் உயிரோடு காட்சியளித்து பரிணாமவியலாளர்களின் நம்பிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டது.

(80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய) சீலகந்த்களுடைய படிமங்களை வைத்து தான் அவைகளை இடைப்பட்ட உயிரினமாக அவர்கள் கருதினார்கள். இன்று உயிரோடு உள்ள இந்த இனத்தை ஆராய்ந்து பார்த்ததில் பரிணாமவியலாளர்களின் இந்த மீன் பற்றிய கருத்துக்கள் தவறு என்று தெரிய வந்தன.

உதாரணத்துக்கு, படிமங்களை வைத்து இந்த மீனினுடைய துடுப்புகளை கால்களாக எண்ணிக்கொண்டிருந்தனர் என்று மேலே பார்த்தோமல்லவா? உயிரோடு உள்ள இந்த மீன் இனத்தை ஆய்வு செய்து பார்த்ததில், ஆழ்கடல் மீன்களான இவை, அந்த துடுப்புகளை கால்களாக உபயோகப்படுத்துவதில்லை என்று தெரிய வந்தது. அதாவது, கடலின் தரைப்பகுதியில் கூட இவை அந்த துடுப்புகளை வைத்து சீல்களை போல நடந்து போவதில்லை என்று தெரிய வந்தது. அந்த துடுப்புகள் கால்களில்லை, அவை துடுப்புகள் மட்டுமே.

ஆக, ஆய்வுகளின் மூலம் இவை இடைப்பட்ட உயிரினம் இல்லை என்பது தெளிவானது.

இதில் இன்னொரு முக்கிய செய்தியும் அடங்கியிருக்கின்றது. சற்று யோசித்து பாருங்கள், இந்த மீன் இனம் இந்நேரம் காட்சியளித்திருக்காவிட்டால், இன்றளவும் இடைப்பட்ட உயிரினமாக இவை கருதப்பட்டிருக்கும். ஆக, படிமங்களை வைத்து எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் நிரூபித்தது சீலகந்த்.

தான் இடைப்பட்ட உயிரினமில்லை என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல் சில கேள்விகளையும் பரிணாமவியலாளர்கள் முன் தூக்கி போட்டது சீலகந்த்.

மிகவும் சிக்கலான உடலமைப்பை கொண்டிருக்கும் ஆழ்கடல் மீன்களான சீலகந்த், சுமார் 150-400 மீட்டர்கள் ஆழத்தில் வாழ்பவை. இவைகளை தூண்டில் மூலம் கடலின் மேல்மட்டத்திற்கு இழுத்து வர செய்து சோதித்து பார்த்ததில், இவை அங்கு சில மணி நேரங்களே உயிரோடு இருப்பது தெரிய வந்தது (இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன). இதனாலேயே இவைகளை மீன் காட்சியகத்தில் வைப்பதென்பது முடியாத காரியமாய் இருக்கின்றது. கடலின் மேல்மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டால் சில மணி நேரங்களில் இறந்துவிடும் இவை, பிறகு எப்படி கரைக்கு வர முயற்சித்து சிறுக சிறுக மாறி நிலவாழ் உயிரினமாக மாறியிருக்க முடியும்?

ஒருவேளை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சீலகந்த் மீன்கள் கடற்கரைக்கு அருகில் வரக்கூடிய தகுதியை கொண்டிருந்திருக்கலாமோ? அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை. பரிணாமவியலாளர்களின் கற்பனையில் மட்டுமே அது உண்மையாக இருக்க முடியும்.     

இந்த மீன் பல ஆச்சர்ய தன்மைகளை தன்னகத்தே கொண்டது. ஆய்வு செய்து பார்த்தால் அறிந்து கொள்வீர்கள்.

இப்போது பரிணாம ஆதரவாளர்களுக்கு சில கேள்விகள்:

1. நீங்கள் இன்னும் சீலகந்த்தை இடைப்பட்ட உயிரினமாக கருதுகின்றீர்களா? (Is the coelacanth still a missing link?)

ஏன் இதை கேட்கின்றேன் என்றால், பரிணாமம் குறித்த முன்னொரு பதிவின் பின்னூட்ட உரையாடலின் போது தருமி என்பவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கின்றார்.

****
தருமி said...
யாஹ்யா துணிந்து சொல்லும் தவறுக்கு இன்னொரு சான்று: //Although a great many fossils of living things which existed billions of years ago, from bacteria to ants and from leaves to birds, are present in the fossil record, not a single fossil of an imaginary transitional form has ever been discovered.//

I think he means - imaginary transitional form = MISSING LINKS OR CONNECTING LINKS.

அப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்களே... நீங்கள் சொல்லும் சீலகாந்த், ஆர்கியாப்ட்ரிக்ஸ் --இதெல்ல்லாம் என்னவாம்?
Tuesday, July 20, 2010௦
****

ஆக, பெரியவர் தருமி போன்ற துறைச்சார்ந்தவர்களே இதனை இன்னும் இடைப்பட்ட உயிரினமாகத் தான் நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.

பரிணாமத்திற்கு ஆதாரமாக கருதப்பட்ட சீலகந்த் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆதாரமில்லை என்று நிராகரிக்கப்பட்டு விட்டதை மறந்து விட்டனரா அல்லது அவர்களுக்கு இது குறித்த தகவல் இன்னும் போய் சேரவில்லையா?

இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பரிணாம ஆதரவாளர்கள் பதில் சொல்லட்டும். அவர்களது பதிலைப் பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் வைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் உங்கள் அனைவருக்கும் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.    


My Sincere Thanks to:
1. Public Broadcasting service.
2. Australian Museum.
3. Natural History Museum, London.
4. Wikipedia. 

References:
1. Coelacanth, Latimeria chalumnae Smith, 1939 - Australian Museum. link
2. Moment of Discovery -  Peter Tyson, Public Broadcasting Service. link
3. Fishes of the deep sea - Natural History Museum, London. link
4. Latimeria chalumnae - Natural History Museum, London. link
5. Coelacanth - Wikipedia. link
6. Thinking about biology - Stephen Webster, Cambridge University Press, p.81-83.
7. Aquarium snaps world's first photos of young coelacanth - Japan Times. link
8. Claim CB930.1 - Talkorigins. link
9. Coelacanths - Aquatic Community. link
10. The discovery - Berkeley website. link
11. The One Minute Coelacanth: A Brief Overview - Dinofish Website. link
12. Coelacanth Evolution - Pharyngula, Science Blogs. link
13. Living Coelacanths: Values, Eco-ethics and Human Responsibility - Hans Fricke, Max Planck Institute, Germany.
14. History of the Coelacanth Fishes - Peter L.Forey, Springer, p-38.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 






Tuesday, November 9, 2010

"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது. 

இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை.  ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறிய தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். 

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்ற பிரச்சாரம் எடுபட்டதில்லை என்பதொடு மட்டுமல்லாமல் பல சகோதரிகளை நம் மார்க்க சகோதரிகளாக கொடுத்திருக்கின்றது இந்த பிரச்சாரம். அந்த வகையில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் நமக்கு மிகப்பெரும் உதவி புரிகின்றனர் என்றால் அது மிகையாகாது.     

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. 



அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன். 

  • பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது. 
  • லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.  
  • இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார். 


இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.

அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ். 

அந்த கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.


1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London

இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. 

வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று. 

ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால் அது அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.

ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது? 

சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன். 

ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.      

குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation. 

மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன். 

என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன. 

ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".

நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்தி படுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.

அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.

படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.

என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா? எங்களால் முடியாது"

என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"

நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.

காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.

இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது. 

முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.

நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.  


2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey) 
Solicitor, 30, Bradford

நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"

நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை. 

2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க "ஏசு சிலுவையில் அறையப்பட்ட" செயினைப் பார்த்து அவர் கேட்டார், "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?"

நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். "இல்லை நான் அப்படி நினைக்கவில்லை".

பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.  

முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.

லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது. 

எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"   

நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர். 

அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.

பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.     

சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன். 

"நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்". 

சிறிது நேரம் அமைதி...என் தாய் கூறினார். 

"நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?"

கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார். 

"திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?. 

அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.

நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது. 

நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன்.  சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.

நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை. 


அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....

பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.

டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து. 

"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டு கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.

ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். 

ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.

இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please note:
சகோதரிகளின் கருத்துக்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கப்படவில்லை. 

My Sincere Thanks to:
1. The Times.

Reference:

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






Monday, November 1, 2010

50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது: 

இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதற்கு, நான் அறிந்த வரையில் மூன்று கோட்பாடுகள் உள்ளன.

Evolution Theory: தற்செயலாக வந்திருக்க வேண்டும் (Natural Selection + Random Mutations).
Creation Theory: கடவுள் படைத்தார்.
Intelligent Design Theory: பதிவில் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------


நீங்கள் மேலே காணும் இந்த பதிவின் தலைப்பு என்னுடையதல்ல. பிரிட்டனின் பிரபல தினசரியான "The Guardian" தன்னுடைய கட்டுரை ஒன்றுக்கு வைத்த தலைப்பு தான் அது (Half of Britons do not believe in evolution, survey finds).   

சென்ற ஆண்டு, சார்லஸ் டார்வினின் "Origin of species" புத்தகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும், டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் பிரதிபலிப்பு தான் "தி கார்டியன்" பத்திரிகையின் இந்த தலைப்பு.

பிரிட்டனின் மதிப்புமிக்க நிறுவனமான காம்ரஸ் (ComRes), "Rescuing Darwin" என்ற தலைப்பில் நடத்திய இந்த ஆய்வு பல ஆச்சர்யமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. பரிணாமவியலாளர்களுக்கோ இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

பரிணாமம் தொடர்பாக ஆய்வில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் அதற்குண்டான பதில்களையும் இந்த பதிவில் பார்ப்போம். ஆய்வு முடிவுகளை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


1) பரிணாமத்தை இரண்டாக பிரித்து கொண்டார்கள், ஆத்திக பரிணாமம் மற்றும் நாத்திக  பரிணாமம் (Theistic Evolution and Atheistic Evolution).  

a) மக்கள் முன் வைக்கப்பட்ட முதல் கருத்து,  

பரிணாமம் என்ற யுக்தியை பயன்படுத்தி இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார். (Theistic Evolution)

மேலே பார்த்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு மக்கள் சொன்ன பதில்கள், 

நிச்சயமாக உண்மை (Definitely True) - 12%
ஏறக்குறைய உண்மை (Probably True) - 32% 
ஏறக்குறைய உண்மையில்லை (Probably Untrue) - 20%
நிச்சயமாக உண்மையில்லை (Definitely Untrue) - 26%         
தெரியாது (Don't Know) - 10%

ஆக, சுமார் 44% மக்கள், "பரிணாமம் உண்மைதான்...ஆனால் அதற்கு பின்னால் இறைவன் இருக்கின்றான்/இருக்கலாம்" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர்.


b) அடுத்ததாக மக்கள் முன் வைக்கப்பட்ட கருத்து,

இறைநம்பிக்கை என்பது அவசியமில்லாதது மற்றும் அசட்டுத்தனமானது என்ற கருத்தை பரிணாமம் உருவாக்குகின்றது (Atheistic Evolution).          

இதற்கு மக்கள் சொன்ன பதில்கள்,

நிச்சயமாக உண்மை - 13%
ஏறக்குறைய உண்மை - 21% 
ஏறக்குறைய உண்மையில்லை - 27%
நிச்சயமாக உண்மையில்லை - 30%         
தெரியாது - 10%

ஆக, சுமார் 57% மக்கள், "பரிணாமம் இறைவனை பொய்பிக்காது, மறுக்காது" என்று நம்புகின்றனர்.

இதற்கு அடுத்து வந்த மக்கள் கருத்து தான் பரிணாமவியலாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.   

அப்படி என்ன கேள்வி, அதற்கு அப்படி என்ன பதில் என்று கேட்கின்றீர்களா?....தொடர்ந்து படியுங்கள்.


2) பரிணாமத்திற்கு (Evolution Theory) மாற்றாக கருதப்படும் ஒரு கோட்பாடென்றால் அது "Intelligent Design" கோட்பாடு.

இந்த உலகில் உயிரினங்கள் தற்செயலாக (Natural Selection + Random Mutation) வர வாய்ப்பில்லை, இவ்வளவு சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் இருக்கிறதென்றால், அதற்கு ஒரு அறிவார்ந்த சக்தி (Intelligent Designer) தான் காரணமாய் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றது இந்த கோட்பாடு.

டெக்னிகலாக சொல்லுவதென்றால், இந்த பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் குறிப்பிடத்தக்க தன்மைகளை விளக்க இயற்கை தேர்வு (Natural Selection) ஒத்துவராது, ஒரு அறிவார்ந்த சக்தி பின்னணியில் இருக்கின்றது என்ற விளக்கமே சிறந்தது என்று கூறுகின்றது இந்த கோட்பாடு.

The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. --- Centre for Intelligent Design. 

இதனை படைப்பு கோட்பாட்டோடு (Creation Theory) குழப்பிக்கொள்ள கூடாது.

படைப்பு கோட்பாடென்பது, கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று கூறும் கோட்பாடு. Intelligent Design கோட்பாட்டை பொறுத்தவரை, கடவுள் என்ற வார்த்தையை அது உபயோகிக்காது, புத்திசாலித்தனமான சக்தி என்றே குறிப்பிடும். அது போல குரான், பைபிள் போன்றவற்றை நிரூபிக்கவும் முயலாது.

இதனை பின்பற்றுபவர்களை பொறுத்தவரை, இந்த சிக்கலான உலகம், நிச்சயம் தற்செயலாக வர வாய்ப்பில்லை, இந்த சிக்கலான வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு "Intelligent Designer"  இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள். 

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு புத்திசாலித்தனமான சக்தி இருக்கிறதென்பதை தர்க்க ரீதியாக நிரூபிக்க முயல்பவர்கள் (Intelligent design logically implies a designer).
  
இந்த கோட்பாடை அறிவியலாக பரிணாமவியலாளர்கள் ஏற்பதில்லை.

படைப்பு கோட்பாடை அறிவியலாக ஏற்க முடியாததால் Intelligent Design என்ற கோட்பாட்டை கொண்டு வந்து அதற்கு அறிவியல் சாயம் பூசி கடவுள் என்ற conceptடை  நிரூபிக்க பார்க்கின்றார்கள் ஆத்திகர்கள் என்பது பரிணாமவியலாளர்களின் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரிக்கின்றார்கள் Intelligent Design கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்கள். இந்த கோட்பாட்டை படைப்பு கோட்பாட்டோடு சேர்த்து விட்டால் இதனை எளிதாக முறியடித்து விடலாம் என்று கருதுவதால் தான் பரிணாமவியலாளர்கள் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்று விளக்கம் சொல்கின்றனர் இவர்கள்.     

பரிணாமவியலாளர்களுக்கும், Intelligent Design கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் கருத்து யுத்தம் அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்று. 

சரி, விசயத்திற்கு வருவோம்.

பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அந்த விஷயம் என்னவென்றால், சுமார் 51% பிரிட்டன் மக்கள், "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை/ஏறக்குறைய உண்மை என்று சொன்னதுதான்.

"Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை என்று 14% மக்களும், ஏறக்குறைய உண்மையென்று 37% மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றார்கள். "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மையில்லை என்று 19% மக்களும், ஏறக்குறைய உண்மையில்லை என்று 21% மக்களும் கருத்து தெரித்திருக்கின்றார்கள்.

ஆக, பெரும்பாலான மக்கள் Evolution Theoryயை நம்புவதை விட அதற்கு சவாலாக இருக்கக்கூடிய Intelligent Design Theoryயை நம்புகின்றார்கள். இது பரிணாமவியலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

இதுதான் பரிணாமவியலாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டார்வின் பிறந்த நாட்டில், அவர் மூலமாக பிரபலமான கோட்பாட்டை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை.

ஏற்கனவே "Intelligent Design" கோட்பாடை பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்து வந்து, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் டென்ஷன் அடையாமல் வேறு என்ன செய்வர்!!!!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் டாகின்ஸ், பிரிட்டன் மக்களின் அறிவியல் அறியாமை வருத்தப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றால் அமெரிக்க ஆய்வு முடிவுகளோ பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன.

ஆம், அமெரிக்க மக்களிடம் கடந்த இருபது வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளது.

கடந்த ஆண்டு, தனது பரிணாமம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரபல "Gallup" நிறுவனம், அதற்கு என்ன தெரியுமா தலைப்பு வைத்தது..."டார்வினின் பிறந்த நாளன்று, பத்தில் நான்கு பேரே பரிணாமத்தை நம்புகின்றார்கள்"....எப்படி இருக்கின்றது தலைப்பு?

மொத்தத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் பரிணாமத்திற்கு எதிரான இந்த நிலைப்பாடு பரிணாமவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில், படைப்பு கோட்பாடையும் (Creation Theory), Intelligent Design கோட்பாட்டையும் சேர்க்க வேண்டுமென்று அதிகரித்து வரும் குரல்களால் பரிணாம உலகம் திக்குமுக்காடுகின்றது.

உதாரணத்திற்கு, பிரிட்டனில், அறிவியல் ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒருவர் படைப்பு கோட்பாட்டை அறிவியல் வகுப்புகளில் பரிணாமத்துடன் சேர்ந்து நடத்த வேண்டுமென்று கூறியிருக்கின்றார்களாம்.

இங்கு நாம் பார்த்த செய்திகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யத்தை தரலாம்.

உலகில், படித்த மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 28% மக்கள் மட்டுமே பரிணாமத்தை நம்புவதாக தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, இந்த ஆண்டின் துவக்கத்தில், இஸ்ரேல் கல்வித்துறையின் தலைமை விஞ்ஞானியான கவ்ரியல் அவிடல் (Gavriel Avital) பரிணாமத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி மிகுந்த பரபரப்பை உண்டாக்கினார்.

ஆக, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் பெரும்பாலான மக்கள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளனர். முஸ்லிம் நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட கோட்பாடாகவே அது கருதப்படுகின்றது.

இவ்வளவுக்கும் என்ன காரணம் என்று பரிணாமவியலாளர்கள் கருதுகின்றார்கள்?....

பதில் எளிதானது தான். பரிணாமம், பள்ளிகளில் சரியான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது முக்கிய காரணங்களில் ஒன்று.

எது எப்படியோ, பரிணாமவியலாளர்கள் முன் மிகப்பெரிய சவால் இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
Intelligent Design கோட்பாடு குறித்த தகவல்களை தமிழ் படுத்தியதில் சிரமங்கள் இருந்தன. சரியாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்றே எண்ணுகின்றேன். என்னுடைய மொழிப்பெயர்ப்பில் தவறு இருப்பதாக கருதும் சகோதரர்கள் சரியான மொழிப்பெயர்ப்பை மறுமொழி வாயிலாக தெரியப்படுத்தவும்.

My sincere thanks to:
1. The Guardian.
2. The Daily Telegraph.

One can download the Rescue Darwin report from:
1. http://www.comres.co.uk/page1657513.aspx

References:
1. Rescuing Darwin survey - comres.co.uk
2. Science and Technology in the Israeli Consciousness - Samuel Neaman Institute survey.
3. Controversy over evolution in Israel - National center for science education, http://ncse.com, dated 21st February, 2010.
4. Poll reveals public doubts over Charles Darwin's theory of evolution - The Daily telegraph, dated 31st January, 2009.
5. Half of Britons do not believe in evolution, survey finds - The Guardian, 1st february 2009.
6. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll Daily tracking, surveyed on Feb 6-7,2009.
7. What is the theory of Intelligent Design - FAQ section, Centre for Intelligent Design.
8. Intelligent Design - Wikipedia.
9. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily tracking, surveyed on May 8-11, 2008. gallup.com

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.