Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Saturday, November 26, 2011

இவர் தான் முஹம்மது நபி...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கோடானுகோடி மக்கள் இந்த மனிதர் மீது அபரிமிதமான அன்பை பொழிய என்ன காரணம்?, மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்திருக்கின்றார் என்றால், அவருடைய போதனைகள் எப்படி இருந்தன?

இம்மாதிரியான கேள்விகளுக்கு, சற்றே சுருக்கமான முறையில் விடை கொடுக்க முயலும் பதிவு தான் இது.

முஸ்லிம்களால் தங்கள் உயிரினினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்த பதிவு அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்). 

நபியவர்கள் குறித்து சில வரிகளில்: 

மக்கா நகரில் 570-ஆம் ஆண்டு பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். மக்கா நகர மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். நேர்மையாளராகவும், உண்மையாளராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் அறியப்பட்டவர்கள். ஆனால், நபிகளாரின் நாற்பதாவது வயதில் இந்த காட்சிகள் மாறத்தொடங்கின. இந்த வயதில் தான் இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லும் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).

இறைவன் தன்னை நபியாக தேர்ந்தெடுத்திருக்கின்றான், இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க சொல்லிருக்கின்றான் என்று சொன்னதால் கேலியும், கிண்டலுமே மிஞ்சின. ஆனாலும் இறைச்செய்தியை எடுத்துச்சொல்வதில் பின்வாங்கவில்லை. அழகான முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். இறைச்செய்தியால் கவரப்பட்ட மக்கள், சிறிது சிறிதாக இஸ்லாத்தின்பால் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். 

தங்களின் மூதாதையர் பின்பற்றிய பாதையிலிருந்து மக்களை திசை திருப்புகின்றார் முஹம்மது (ஸல்) என்று கொந்தளித்தனர் மக்கா நகர அதிகார வர்க்கத்தினர். சமாதானம் பேச சென்றனர். இஸ்லாத்தை எடுத்துக்கூறுவதை முஹம்மது (ஸல்) கைவிடுவாரேயானால், அவருக்கு, பொன் பொருள் அதிகாரம் என்று அனைத்தையும் தருவதாக கூறினர். ஆனால் நபியவர்களோ எளிமையான வார்த்தைகளை பதிலாக கூறினார்கள். 

ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்த சொன்னாலும் தன்னால் முடியாது என்ற வார்த்தைகள் தான் அவை. இன்றளவும், இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும்போது வரக்கூடிய தடங்கல்களையும், சோதனைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முஸ்லிம்கள் செயல்பட ஊக்கமாய் இருப்பது அந்த எளிமையான, காத்திரமான வார்த்தைகள் தான். 

உலக மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதரை எதிர்த்தவர்கள், கொன்றொழிக்க வாளேந்தி புறப்பட்டவர்கள் என்று பலரும் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அந்த பகுதி முழுவதுமே இஸ்லாத்தை தழுவியிருந்தது.

நபியவர்களின், வாழ்வின் பல்வேறு அங்கங்கள் குறித்த சுமார் 25 நபிமொழிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள், இந்த அற்புத மனிதர் குறித்த மேலும் பல தகவல்களை இதன் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். அவை உங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக அமையலாம் (இறைவன் நாடினால்). 
**********
1. "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

2. ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)' என்று மக்கள் கேட்டார்கள். ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

3. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள், "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணைபுரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).

4. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்".

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

5.  "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்.

7. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புஹாரி.

8. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.

9. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புஹாரி.

10. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கின்றார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.

11. ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புஹாரி.

12. நபி(ஸல்) அவர்களிடம் ஹிந்த் பின்த்து உத்பா(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

13. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று மக்கள் கூறினார்கள். ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

14. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

15.  "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.

16. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)".

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

17. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

18. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் (செயல்) செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், 'நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு - கடனாளிகளுக்கு தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி).
நூல்: முஸ்லிம்.

19. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.

20. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றார்கள். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி).
ஆதாரம்: முஅத்தா.

21. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தாய் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

22. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி).
ஆதாரம்: அபூதாவூத்.

23. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) சொல்லிக்கொண்டார். உடனே அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

24. "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: புஹாரி.

25. '(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

**********

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படிக்க, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும். இமெயில் மூலம் பெற விரும்புபவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com). 

நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் நாம் வாழ்ந்திட இறைவன் அருள்புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தை சுருக்கங்களுக்கான விளக்கங்கள்:
1. ஸல் - ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் என்பதின் சுருக்கமாகும். இதற்கு "இவர் மீது இறைவனின் அமைதியும், கண்ணியமும் நிலவுவதாக " என்று பொருள்.
2. ரலி - ரலியல்லாஹு அன்ஹு/அன்ஹா என்பதின் சுருக்கமாகும். இதனை, நபியவர்களுடன் இருந்த/கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்க பயன்படுத்துவார்கள். இதற்கு "இறைவன் இவர்களை பொருந்திக்கொள்வானாக" என்று பொருள். 

Please note:
"இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)" என்ற தலைப்பில் மேலே உள்ள தனிப்பக்கத்தில், நெகிழ்வூட்டும் நபிமொழிகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.  

My Sincere thanks to: 
6. சகோதரர் ஜாபர் ஸபாமர்வா.
7. சகோதரர் ஜாஹிர் ஹுசைன். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ






Monday, April 11, 2011

இஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இந்த பதிவில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள், முஸ்லிமல்லாத சகோதரி/சகோதரிகள் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருக்கலாம். 

இந்த பதிவை படிக்கும் முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்த பதிவை நீங்கள் எந்தவொரு முன் முடிவுமின்றி படியுங்கள். பின்னர் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து குறித்து ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் உங்களுக்கு இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக...ஆமீன். 

பதிவிற்குள் செல்வோம், 

1. தங்கள் சொத்துபத்துகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவற்றை அப்படியே விட்டு விட்டு நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர் முஸ்லிம்கள்....இது அன்று நடந்த சம்பவம். 

"ஒன்று நீங்கள் இஸ்லாமை துறக்க வேண்டும், அல்லது உங்கள் குழந்தைகளை துறக்க வேண்டும்" என்ற இக்கட்டான கேள்வி ஆமினாஹ் அசில்மி அவர்களது விவாகரத்து வழக்கில் முன்வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, கனத்த உள்ளத்தோடும் கலங்கிய கண்களோடும் சகோதரி ஆமினாஹ் அசில்மி சொன்ன பதில் "என்னால் இஸ்லாத்தை துறக்க முடியாது"......இது இன்று நடந்த சம்பவம். 

இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே இவர்களைப்போன்ற பலர் வந்து சென்றிருக்கலாம். 

  • ஒரு மார்க்கத்திற்காக, எதனையும் தியாகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது? 
  • ஒரு மார்க்கம் இவர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்?

2. சில வருடங்களுக்கு முன்பு (2007), பிரிட்டனில், முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

பிரிட்டனில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவதாக பெருவாரியான இளைஞர்கள் (40%) கருத்து தெரிவித்திருந்தனர். இது, அந்த கருத்துக்கணிப்பை நடந்தியவர்களை அதிர்ச்சியுற செய்தது. 

பொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள் ஜாலியாக இருக்க விரும்புபவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கின்றது. அப்படியிருக்க, முஸ்லிம் இளைஞர்கள், கடுமையான சட்டதிட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்ற ஷரியத் சட்டத்திற்கு கீழ் வாழ விருப்பப்படுவது எதனால்? 

3. 30-40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், உலகளவில், ஹிஜாப் என்னும் ஆடை முறையை அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இருந்ததாக அறிகின்றோம். 

ஆனால் இன்றோ, அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர். 

விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ள இந்நாளில், முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இந்நாளில், இயல்பாகவே, ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமென்பது ஹிஜாபை விமர்சிப்பவர்களின் பார்வையாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைக்கீழாக அல்லவா இருக்கின்றது? 

விஞ்ஞானம் அற்புத வளர்ச்சியை பெற்றுள்ள இந்நாளில் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் விரும்பி ஹிஜாப் அணிகின்றனர். இது எதனால்?

4. மது அருந்த இஸ்லாம் தடை விதித்த போது, தாமதிக்காமல் தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்து நொறுக்கினர் முஸ்லிம்கள். அதுபோல, பெண்களின் ஹிஜாப் குறித்த கட்டளை வந்த போது, உடனடியாக, தங்களிடமிருந்த ஆடைகளை சிறு துணிகளாக கிழித்து, ஹிஜாபை பேணிக்கொண்டனர் பெண்கள். 

இன்றளவும் கூட, இஸ்லாமை சரிவர பின்பற்றும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கருத்தில் உறுதிப்பாடாக இருந்து, அதற்கு எதிரான கருத்தை குரானிலிருந்து எடுத்து காட்டினால் சட்டென்று தன் நிலையை மாற்றி கொள்வார். 

ஒருவருடைய பழக்கவழக்கங்களை திடீரென மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் எத்தனையோ சகோதரர்களை பார்த்திருப்போம், மது அருந்த மாட்டேனென்று, புகை பிடிக்கமாட்டேனென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த சிரமப்படுவார்கள்.

ஆனால், இஸ்லாம் கூறிய ஒரு கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் என்றால், தங்களுடைய நீண்ட நாள் பழக்கத்தை ஒழித்துவிட நாடுகின்றார்கள் என்றால், அப்படி என்ன இருக்கின்றது இந்த மார்க்கத்தில்? 

ஒரு கட்டளை, ஒரு மனிதருக்குள் இந்த அளவு பாதிப்பை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்றால் இதற்கு என்ன காரணம்?     

5. நம் பதிவுலகில், இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற தளங்கள் உண்டு (இந்த தளங்களை நடத்துபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இளைஞர்கள் [17-18 வயது டீனேஜர்கள் கூட உண்டு]). இஸ்லாத்திற்காக இத்தனை உள்ளங்களா என்று நான் வியந்ததுண்டு. 

அழைப்பு தளங்கள் மட்டுமல்லாது, பொதுவான விஷயங்கள் குறித்து எழுதும் பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தங்கள் தளங்களில் பார்வைக்கு வைத்தே இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல், அவ்வப்போது இஸ்லாம் குறித்த கட்டுரைகளையும் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆக, பதிவுலகை பொருத்தவரை, பெரும்பாலான முஸ்லிம் பதிவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டே செயலாற்றுகின்றனர். 

ஒரு விஷயம் குறித்து எழுதும் போது, இது இஸ்லாமிற்கு உட்பட்டு தான் இருக்கின்றதா என்று ஆராய்ந்து செயல்படுமளவு எப்படி ஒரு மார்க்கம் ஒருவருடைய அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றது?  

6. பெண்களை தவறாக நடத்தும் மார்க்கம் இஸ்லாம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இஸ்லாமை நன்கு ஆராய்ந்து, அதனை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்போரில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இது ஏன்? 

7. சென்ற ஆண்டு, கவனிக்கப்படதக்க ஆய்வொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்க சராசரியை பொருத்தவரை, ஆண்களை விட பெண்களே இறைபக்தியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்களை பொருத்தவரை, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமில்லாமல் இருபாலரும் இறைபக்தியில் சமமாகவே சிறந்து விளங்குகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், "உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?" என்ற கேள்விக்கு, எண்பது சதவித (80%) முஸ்லிம் அமெரிக்கர்கள் "ஆம்" என்று பதில் அளித்திருக்கின்றனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம். 

தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் கூறியிருந்தாலும், இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர். (2007ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், வேறெதையும் விட இஸ்லாம் தங்கள் வாழ்வில் அதிமுக்கியமானது என்று 86% பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தெரிவித்திருந்தனர்).

  • எப்படி ஒரு மார்க்கம், ஆண் பெண் வித்தியாசமில்லாமல், ஒருவருடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கின்றது? 
  • இஸ்லாமை தவிர்த்து விட்டு, முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க என்ன காரணம்?  

8. நிச்சயமாக முஸ்லிம்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவை மார்க்கத்தை சரியான வழியில் பின்பற்றுவது குறித்த கருத்து வேற்றுமைகள். ஆனால், இஸ்லாத்திற்கெதிராக ஒரு நிகழ்வு நடந்தால் அதை ஒன்று சேர்ந்து சந்திக்கும் இவர்களது செயலாற்றல் அளப்பரியது. 

  • எதற்காக ஒரு மார்க்கத்தின் மீது இந்த அளவு பற்று வைத்திருக்கின்றனர்?
  • ஒரு மார்க்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்திக்கின்றதென்றால் அதற்கு என்ன காரணம்?     

9. மேலே பார்த்ததையெல்லாம் விட முக்கியமாக, இப்போது பார்க்கப்போகும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது. 

உலகில், ஒரு மார்க்கத்தின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதென்றால் அது இஸ்லாம் மீதாக தான் இருக்க முடியும். உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

  • வரலாறு முழுக்க இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கும் நிலையில், இவை, இஸ்லாத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையே...ஏன்? 
  • வழக்கம் போல இஸ்லாம் தொடர்ந்து மக்களை கவர்ந்திழுத்து வருகின்றனதே...எப்படி? 

மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் நமக்குள்ளாக பிரதிபலித்து கொள்ளப்படவேண்டியவை. 

முஸ்லிம்கள் இப்படி கட்டுண்டு இருப்பதற்கு "நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் பதிலாகாது. 

அதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும். 

முஸ்லிமல்லாத சகோதர/சகோதரரிகள் இந்த பதிவின் மையப்பொருள் குறித்து நன்கு சிந்தியுங்கள். "சரி, இவர்களை ஆட்டி வைக்கும் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று படித்து தான் பார்ப்போமே" என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், குர்ஆனை கேட்டு எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை (மூன்று சகோதரர்களின் வெவ்வேறு தமிழாக்கங்கள்) உங்களுக்கு (soft copy) அனுப்பி வைக்கின்றேன்.

அல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
படிப்பவர் புருவத்தை உயர வைக்கும் ஒரு குர்ஆன் வசனத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன். 

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

என்னவொரு அதிகாரத்தோரணை?

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.     

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி. link.
2. UK Muslim community statistics. link. 
3. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு. link.
4. Between 1800-1950, 60,000 books written against Islam: The Times, dated 16th April 1979.

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ 






Monday, January 17, 2011

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முஸ்லிம் பதிவர்கள் மற்றும் பின்னூட்டமிடும் முஸ்லிம்களை மனதில் கொண்டு எழுதப்படும் பதிவு. 

தமிழ் பதிவுலகில் பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் அழகான முறையில் செயலாற்றி வருகின்றார்கள். இஸ்லாம் குறித்த தகவல்கள், சமூக பிரச்சனைகள், உலக நடப்புகள், தொழில்நுட்பம் என்று அருமையாக எழுதி வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

முஸ்லிம் பதிவர்களில் ஒரு பகுதியினர் நான் இங்கு சொல்லப்போகும் விஷயத்தை ஏற்கனவே செயல்படுத்தி தான் வருகின்றார்கள். அவர்கள் மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக...ஆமீன். 

மற்றொரு பகுதியினர், நான் இந்த பதிவில் சொல்ல விருப்பப்பட்டிருக்கும் மையக்கருத்து சரியானதாக இருந்தால் அதனை செயல்படுத்த ஆவணச் செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். தவறாக இருந்தால் சுட்டி காட்டுங்கள், இறைவனுக்காக என்னை மன்னிக்கவும் செய்யுங்கள்.

பதிவிற்குள் செல்வோம்...

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி (Greetings) கொள்ள முற்படும் போது "அனிம் சபாஹன்" என்றோ அல்லது "அனிமு சபாஹன்" என்றோ கூறுவார்கள். இந்த வார்த்தைகள் "அல்-நிமாஹ்" என்ற வார்த்தையிலிருந்து வந்தவை. இதற்கு கிட்டத்தட்ட "குட் மார்னிங்" என்பதாக அர்த்தம் கொள்ளலாம்.  "இந்த காலை பொழுது உங்களுக்கு நல்லதாக இருக்கட்டும்" என்பதாக அர்த்தம் வரும். காலை பொழுது நன்றாக இருந்தால் அந்த நாளின் மற்ற பொழுதுகளும் நன்றாக இருக்கும் என்பது தான் அந்த முகமனின் பின்னணி.

இறுதி தூதர் (ஸல்) வந்த பிறகு, அவர்களின் வாழ்க்கை மாபெரும் புரட்சிக்கு உட்படுத்தபட்ட போது அவர்களின் வாழ்த்தும் முறைகளும் மாற்றம் கண்டன. அவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்ததற்கும் மேலான மிக அழகிய முகமனை இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது, 
அஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)
என்னும் அற்புத முகமனாகும். "உங்கள் மீது அமைதி நிலவுவதாக" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம்  என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர்? அமைதி என்று பொருள்படும் ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியின் பிறப்பிடம் இறைவன் தானே?



அன்றிலிருந்து அந்த வார்த்தை இன்றியமையாத ஒன்றாக திகழ ஆரம்பித்தது. ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு என்று பல முறைகளில் சலாம் கூற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். 

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம் என்ன? 

அல்லாஹ்வின் தூதரிடம் ஒருவர் கேட்டார், "இஸ்லாத்தில் சிறந்த விசயம் எது?". அதற்கு இறுதித் தூதர் (ஸல்), "அடுத்தவருக்கு உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதுமே ஆகும்" என்று பதிலளித்தார்கள் --- Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494).  

ஆம், இஸ்லாத்தில் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அடுத்தவருக்கு சலாம் கூறுவது, இறைவனின் சாந்தி அவர் மீது நிலவ வேண்டுமென மனதார துஆ செய்வது. மேலே பார்த்த ஹதீஸை உற்று நோக்கினால் அழகான ஒரு விஷயத்தை உணரலாம். அதாவது, ஒருவருடைய வயிற்று பசியை போக்குவதும், அவருடைய மன அமைதிக்கு பிரார்த்திப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையென மிக அழகாக கூறியிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். 

ஏன் ஸலாம் கூற வேண்டும்? 

சகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கும் ஒரு உன்னத வழி என்பதால்...



பின்வரும் ஹதீசை கவனியுங்கள்.       

நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, "நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா? உங்களுக்குள்ளாக ஸலாத்தை பரப்புங்கள்" --- Muslim (54), Ahmad (2/391), and al-Tirmidhi (2513)   

சுபானல்லாஹ்...என்னவொரு அழகான வார்த்தைகள் !!!...நம்மிடையே அன்பை வளர்க்கும் ஒரு இடைமுகமாக ஸலாம் கூறுவது இருப்பதாக இறுதி தூதர் (ஸல்)  கூறியிருக்கின்றார்கள். 

ஸலாம் கூறுவதால் என்ன பயன்?

முஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா? ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு? 

ஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் "பத்து நன்மைகள்" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்தல்லாஹ்" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் "இருபது நன்மைகள்" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு " என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் "முப்பது நன்மைகள்" என்றார்கள் --- Al-Bukhaari in al-Adab al-Mufrad (586)      
       
ஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ்.

இப்போது, பின்னூட்டமிடும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பதிவர்களுக்கு...

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவத்தை விரிவாக மேலே பார்த்தோம். இவ்வளவு அழகான ஒரு முகமனை நம்மில் பலரும் நம் பதிவுகளின் ஆரம்பத்தில், பின்னூட்டங்களில் அடுத்தவருக்கு சொல்லாமல் கிடைக்கும் நன்மையை இழக்கின்றோம். 

"உங்கள் மீது சாந்தி உண்டாவதாக" என்ற இந்த முகமன் எவ்வளவு அழகானது, மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். முஸ்லிமல்லாதவரை நோக்கி  இதனை கூறினால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டுமல்லவா? (முஸ்லிமல்லாத தன் தந்தையை நோக்கி "உம் மீது ஸலாம் உண்டாவதாக" என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக குர்ஆனின் 19:47 வசனம் கூறுகின்றது). இஸ்லாம் கூறும் இந்த அற்புத விஷயத்தை நமக்குள் வைத்து கொண்டால் போதுமா? முஸ்லிமல்லாத நம் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?

முஸ்லிம்கள் நமக்குள்ளாக சகோதரத்துவத்தை வலுவாக வளர்க்கும் ஸலாத்தை ஒவ்வொருமுறையும் நாம் நம் சகோதரர்களுக்கு பின்னூட்டமிடும் போதும் சொன்னால் அழகாக இருக்குமல்லவா? நம்முடைய நன்மைகளும், நமக்குள்ளான அன்பும் கூடுமல்லவா? 

மற்றொரு அருமையான விசயத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஸலாம் கூறுவதற்கே இஸ்லாத்தில் இவ்வளவு முக்கியத்துவமென்றால் ஸலாத்திற்கு பதில் கூறுவதை பற்றி கேட்கவே வேண்டாம். அது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகின்றது.  "ஒருவர் உங்களுக்கு ஸலாம் கூறினால், அதனை விட சிறப்பான ஒன்றையோ அல்லது அதனையோ திரும்ப கூறுங்கள்" என்ற பொருளில் வரும் இறைவசனமும், நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றும் அதனை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நாம் மற்றொரு சகோதரருக்கு ஸலாம் கூறினால் அவர் நிச்சயமாக நமக்கு திரும்ப ஸலாம் கூறவேண்டும். நாம் ஸலாம் கூறியது போலவும் ஆகிற்று, அவரையும் பதில் ஸலாம் சொல்ல தூண்டியாகிவிட்டது. நமக்கும் நன்மை, அவருக்கும் நன்மை....சுபானல்லாஹ்.     

இதையெல்லாம் விட மேலாக...

சகோதரர்கள் சிலர் எனக்கு அனுப்பும் மெயில்களை கண்டு நான் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், தாவாஹ் செய்ய அவர்கள் எவ்வளவு ஆர்வப்படுகின்றார்கள் என்பதை எண்ணி பூரிப்படைந்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். 

ஆம், அடுத்தவருக்கு ஸலாம் கூறும் இந்த சிறு விஷயம் கூட ஒரு அழைப்பு பணிதான். நம்மிடையே தாவாஹ் செய்ய விரும்பாத சகோதர/சகோதரிகள் இருப்பனரா? நிச்சயமாக இருக்க மாட்டோமல்லவா? இஸ்லாத்தில் நாம் அறிந்த விஷயம் சிறியதாக இருந்தாலும் அது நமக்கு தெளிவாக தெரிந்திருந்தால் அதனை அடுத்தவருக்கு சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

பின்னூட்டங்களில், பதிவுகளின் துவக்கத்தில் ஸலாம் கூறுவோம்...சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்...நன்மைகளை அள்ளுவோம்...இன்ஷா அல்லாஹ்.

நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் --- (சூறா மாயிதா,02)

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து சரியெனபட்டால் செயல்படுத்த ஆவண செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். ஏக இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி நம்முடைய நற்காரியங்களுக்கு தகுந்த கூலி வழங்குவானாக, ஆமீன்.

தவறாக இருக்கும் பட்சத்தில் தயவுக்கூர்ந்து சுட்டி காட்டுங்கள். தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்... 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமீன். 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My sincere thanks to:
1. Islam-qa.com for Hadith references. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ